வரம் – 1

அதிகாலைப் பொழுதின் அந்த தென்றல் காற்று அந்த ஊர் மொத்தத்தையும் குளிர்வித்துக் கொண்டிருந்தது. கிராமத்துக்கும், நகரத்துக்கும் இடையில் இருந்த அந்த ஊரின் அழகை சொல்ல, இன்னுமே கவிஞர்கள் பிறக்கவில்லை. வீடுகளுக்கு இடை இடையில் இருந்த மரங்கள், அந்த ஊரின் பசுமையையும், இயற்கை வளத்தையும் சொல்லியது. அந்த சின்ன ஊரின் அமைதியைக் கிழித்துக் கொண்டு, கோவில் மணியோசை மெதுவாக ஒலித்துக் கொண்டிருந்தது. அந்த அதிகாலை வேளையிலும், எண்ணற்ற பக்தர்களின் வருகையால் களைகட்டியிருந்தது. கோவில் வளாகத்தின் தூண்களிலும், கோபுரங்களிலும் இருந்த சிற்பங்கள், சூரியனின் மெல்லிய ஒளியில் தங்க நிறத்தில் மின்னின. வெளியில், சிலர் ஈரமான தரையில் கோலமிட்டுக் கொண்டிருந்தனர். வேறு சிலர், கையில் பூக்கூடையுடன் மெதுவாக உள்ளே சென்று கொண்டிருந்தனர். திருமணம் என்று சொல்ல முடியாத அளவுக்கு ஒரு திருவிழா கூட்டம்போல இருந்தது.

ஊரின் எல்லையில் அமைந்திருந்த அந்த பழமையான சிவன் கோவிலில், ஒரு பக்கம், "சாமிக்கு அபிஷேகம் பண்றதுக்கு எல்லாம் ரெடியா இருக்கா?" என்ற குரல் கேட்டது. இன்னொரு பக்கம், "புது தாலி கட்டுறதுக்கு நேரம் வந்துருச்சா?" என்று ஒரு பெரியவர் கேட்டுக் கொண்டிருந்தார்.

எந்தப் பக்கம் திரும்பினாலும், கோவில் திருவிழாவிற்கே உண்டான பரபரப்புடன், அந்த ஊரில் இருந்த அத்தனைப் பேரும், அந்த கோவிலில் தான் கூடியிருந்தனர்.

அதே நேரம், அங்கே கருவறைக்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த ஒரு மேடையில், கலசத்திற்கு அருகில் அமர்ந்திருந்தவனோ, அந்த கலசத்தில் இருந்த புனித நீரை விட அமைதியாக இருந்தான். அவன் அணிந்திருந்த பட்டு வேஷ்டியும், அவன் கழுத்தில் இருந்த மாலையும் மட்டுமே, அவனை மாப்பிள்ளையாய் அடையாளம் காட்டியது. மற்றபடி அவன் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. அவனின் பெயர் அர்ஜூன்.

பிரபல கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறான். பார்த்தவுடனே மனதில் பதிந்து போகும் முகம், அந்த கல்லூரி பெண்களின், கனவு நாயகன் என்ற பட்டத்தை வாங்கியிருந்தான். சிரித்தால் அத்தனை அழகாக இருப்பான். ஆனால் அவன் சிரித்து யாரும் பார்த்ததே கிடையாது. அந்த அளவுக்கு இறுக்கமானவன். அதிலும் படிப்பு விஷயத்தில், மிகவும் கண்டிப்பானவன். காதல், கல்யாணம் இதில் எல்லாம் சற்றும் ஈடுபாடு இல்லாதவன். அவனுடைய ஒரே இலட்சியம், சுயமாக சம்பாதித்து, யாருடைய உதவியும் இல்லாமல், வாழ்க்கையில் முன்னேறி காட்ட வேண்டும் என்பது மட்டும் தான். அப்படிப்பட்டவன் தான் இன்று கழுத்தில் மாலையோடு ஐயர் சொல்லிக் கொடுக்கும் மந்திரத்தை வேண்டா வெறுப்பாய் உச்சரித்துக் கொண்டிருந்தான்.

கடமையே கண் என, அவன் அதை எல்லாம் செய்துக் கொண்டிருந்தாலும், அவனுடைய எண்ணம் முழுவதும், இரண்டு மாதங்களுக்கு முன் நடந்த நிகழ்வில் தான் இருந்தது.

(அப்படி ரெண்டு மாசத்துக்கு முன்னாடி என்ன நடந்திருக்கும்? சார் வேற ஆரம்பத்துலையே இவ்ளோ சூடா இருக்காரு. சரி வாங்க. அப்படியே நம்மளும் குட்டியா ஒரு பிளாஸ்பேக் போயிட்டு வருவோம்)

கல்லூரி மாணவர்களுக்கே உண்டான கலகலப்போடு, மாணவர்கள் அனைவரும் டீச்சர் வராத கிளாஸில், கத்தி ஆர்ப்பாட்டம் போட்டுக் கொண்டிருந்தனர். அந்த வகுப்பை கடந்து செல்லும் ஆசிரியர்களை கூட அவர்கள் கண்டுக் கொள்ளவில்லை. 

அன்னேரம் திடீரென வாசலில் இருந்து ஒரு மாணவி மெல்லிய குரலில், "அர்ஜூன் சார் வந்துட்டாங்க. எல்லாரும் அமைதியா உட்காருங்க" என்று சொல்லவும், வகுப்பறைக்குள் ஒரு நிசப்தம் பரவியது. 

ஒவ்வொருவரும் அவரவர் இருக்கைகளில் அமர்ந்து புத்தகத்தை திறந்தனர். அர்ஜூனின் கண்டிப்பான பார்வை மாணவர்களுக்குப் பரிச்சயமானது. அந்தக் கல்லூரியின் சிறந்த ஆசிரியர் என்ற புகழோடு, மாணவர்களின் மனதிலும் ஒரு தனி இடம் பிடித்தவன் அவன். அதே நேரம் கோவம் வந்துவிட்டால், யார் என்ன என்றெல்லாம் பார்க்க மாட்டான். 

அர்ஜூன் உள்ளே நுழைந்ததும் மாணவர்கள் எழுந்து நின்றனர். "குட் மார்னிங் ஸ்டூடண்ட்ஸ்" என்று பதிலளித்துவிட்டு, தன் மேஜை அருகே நின்றபடி பேசத் தொடங்கினான். வகுப்பறையில் இருந்த அத்தனை ஜோடி கண்களும் அவனை உற்று நோக்கின. சில மாணவிகளுக்கு அவன் ஒரு திரைப்பட நாயகனைப் போலத் தெரிந்தான்.

"வாவ்! இன்னைக்கு சார் வேற லுக்ல இருக்காருல?" என்று ஒருத்தி தன் தோழியிடம் கிசுகிசுக்க, "ஆமாண்டி. அவர் பேசுறது ஒரு ஃபீலிங்கா இருக்கே" என்றாள் இன்னொருத்தி. "சும்மா இருங்கடி. சார் கவனிச்சிட்டா அவ்வளவுதான்" என்று மூன்றாமவள் எச்சரித்தாள்.

ஒரு பக்கம் இப்படி கிசுகிசுக்கள் இருந்தாலும், இன்னொரு பக்கம் சிலர், "சார் கொடுத்த நோட்ஸ் எல்லாம் பார்த்தாச்சா? எனக்கு இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கு" என்று பேசிக்கொண்டிருந்தனர். "நான்லாம் நேத்தே படிச்சு முடிச்சிட்டேன்" என்று ஒருத்தி பெருமையாகக் கூறினாள். "முதல்ல இவங்கள சும்மா இருக்கச் சொல்லுங்க" என்று அடுத்தவள் எரிச்சலுடன் சொன்னாள்.

அப்போது அர்ஜூன் தன் கம்பீரமான குரலில், "எல்லோரும் கொஞ்சம் அமைதியா இருக்கீங்களா?" என்றான். அவன் குரலில் அந்த வகுப்பறை அமைதியாகி அவனைப் பார்த்தது. 

“கிளாஸ்ல இப்போலாம் படிக்கிறத விட மீதி எல்லா வேலையும் நடக்குது போலையே” என்றான். அவன் முகத்தில் மெல்லிய கோவம் தெரிந்தது. அதில், அங்கிருந்த பலருக்கு வியர்த்தது.

“இங்க எல்லாரும் படிக்கிறதுக்குத்தான வந்திருக்கீங்க?” என்று அங்கே இருந்த ஒரு ஜோடியினைப் பார்த்தப்படி கேட்டான். அது இருபாலர்கள் படிக்கும் கல்லூரி. பசங்க, பெண்கள் என்ற பாகுபாடின்றி, கலந்துத்தான் அமர்ந்திருப்பார்கள்.

அர்ஜூனும் அதை எல்லாம் பெரிதாய் எடுத்துக் கொள்ள மாட்டான். ஆனால் இப்போது அங்கே அருகருகே அமர்ந்திருந்த இருவரை சிறு கோவத்துடன் பார்த்தான். பார்த்தப்படியே மீண்டும் கேட்டான்.

“என்ன படிக்கத்தான வந்திருக்கீங்க?” என்று சற்று கோவமாய் கேட்டான்.

"எஸ் சார்" என்று எல்லோரும் தலையசைத்தனர். "இந்த காலேஜ் நம்ம வாழ்க்கையில ஒரு முக்கியமான கட்டம். இங்க நாம கத்துக்கிற ஒவ்வொரு விஷயமும் நம்மள அடுத்த லெவலுக்கு கொண்டு போகும். ஆனா சில பேர் இங்க வேற விதமான இண்ட்ரஸ்ட்ல மூழ்கி இருக்கிறதா கேள்விப்பட்டேன். ஞாபகம் வெச்சுக்கோங்க, இது படிக்கிறதுக்கான நேரம். இந்த நேரத்தை நல்ல விஷயங்களுக்காக செலவு பண்ணுங்க. மத்த விஷயங்களுக்கு நிறைய டைம் இருக்கு" என்று அர்ஜூன் சற்று அழுத்தமாய் கூறினான். அவன் பேசும்போது, வகுப்பிலிருந்த ஒரு ஜோடி ஒருவரை ஒருவர் சிறுவர் பதட்டத்துடன் பார்த்துக் கொண்டனர்.

அர்ஜூன் அவர்களை நேராகப் பார்க்காவிட்டாலும், அவன் கவனம் அவர்கள் மீதுதான் இருந்தது. "ஒருத்தரோட முழு கவனமும் வேற விஷயத்துல இருந்தா, அவங்க படிக்க வந்த விஷயத்துல எப்படி கான்சன்ட்ரேட் பண்ணுவாங்க? அது சரியா?" என்று கேட்டான் அர்ஜூன்.

"இல்ல சார்" என்று மாணவர்கள் கோரஸாக பதிலளித்தனர். "அப்போ, படிக்கிறப்ப, கவனம் சிதறுனா, அவங்க என்ன செய்யணும்?" என்று இப்போது அந்த ஜோடியை பார்த்துக் கேட்டான் அர்ஜூன்.

அந்த மாணவரும் மாணவியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். "சாரி சார். இனிமே இப்படி நடக்காது" என்று அந்தப் பையன் தாழ்ந்த குரலில் சொன்னான்.

"இது முதல் தடவை இல்லைன்னு எனக்குத் தெரியும்" என்று அர்ஜூன் அழுத்தமாகச் சொன்னான். அந்த இருவரும் அமைதியாக இருந்தனர். "சரி. இது தான் கடைசி. இனிமே கிளாஸ்ல உங்க கவனம் வேற எங்கேயாச்சும் போச்சின்னா, விளைவுகள் மோசமா இருக்கும்.” என்று கடைசி வார்னிங் கொடுத்து விட்டு, மற்றவர்களின் பக்கம் திரும்பினான்.

மாணவர்களோ தங்களுக்குள் என்னவாக இருக்கும் என்று கிசுகிசுக்க, “இப்போ எல்லாரும் பாடத்த கவனிக்கலாம்" என்று சொல்லிவிட்டு தன்னுடைய புத்தகத்தை எடுத்தான் அர்ஜூன்.

"என்ன ஆச்சு சார்?" என்று சில மாணவர்கள் கேட்க, "ஒவ்வொருத்தருக்கும் அவங்களுக்கு என்ன தேவ, எது முக்கியம்னு புரிஞ்சு நடந்துக்கணும். இனி நடந்துப்பாங்கன்னு நினைக்கிறேன். சோ எல்லாரும் பாடத்த கவனிங்க" என்று சொல்லிவிட்டு அன்றைய பாடத்தை ஆரம்பித்தான் அர்ஜூன்.

அடுத்த அரை மணி நேரமும், மாணவர்கள் அனைவரும் அவன் கற்றுக் கொடுத்த பாடத்தில் முழு ஈடுபாட்டுடன் இருந்தனர். அந்த ஜோடியும் வேறு வழியின்றி பாடத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினர்.

வகுப்பு முடிந்ததும், "ஓகே ஸ்டூடண்ட்ஸ். மீதியை அடுத்த கிளாஸ்ல பார்க்கலாம்" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான் அர்ஜூன். அவன் போனதும், அந்த வகுப்பு மீண்டும் கலகலப்பானது.

லைப்ரரியில் அமைதியாக அமர்ந்து குறிப்பெடுத்துக் கொண்டிருந்தான் அர்ஜூன். அந்த அமைதியான இடம் அவனுக்கு அத்தனைப் பிடிக்கும், அதென்னவோ அவனை யாரும் தொல்லை செய்யக் கூடாது என்றாலே அங்குத்தான் வந்து வேலையை தொடர்வான். ஆனாலும் அவனது முகத்தில் தீவிரமான சிந்தனை ரேகைகள் ஓடிக் கொண்டிருந்தது. அப்போது அங்கே வந்த மாதவன், மெதுவாக அவன் அருகில் அமர்ந்தான்.

அவன் வந்ததை உணர்ந்தாலும், அவன் திரும்பி பார்க்க வில்லை. அதனால் "அர்ஜூன்..." என்று அழைத்தான் மாதவன்.

நிமிர்ந்து பார்த்த அர்ஜூன், "என்ன சார்? ஏதாவது வேலையா?" என்று மிக மெதுவாய் கேட்டான்.

"அது வந்து... உன்கிட்ட கொஞ்சம் பர்சனலா பேசணும்" என்று மாதவன் தயக்கத்துடன் ஆரம்பித்தான்.

ஆனால் அவன் சொல்லி முடிக்கும் முன்னே, "மாதவன் சார், இது லைப்ரரி. இங்க பர்சனல் விஷயத்த கொண்டு வர கூடாது. உங்களுக்கு ஏதாவது முக்கியமான விஷயம் பேசனும்னா, அத வெளிய வச்சி மட்டும் பேசுங்க" என்று சற்று கோவமாக கூறினான்.

"ஆனா இது கொஞ்சம் முக்கியமான விஷயம் அர்ஜூன். அதான்" என்று சொல்ல முயல, ச் எதுவா இருந்தாலும், இது பேசற இடம் இல்ல. வெளியில போ" என்று அர்ஜூன், கோவமாய் தன் நோட்டை மூடிவிட்டு எழுந்தான். 

அப்போதும் மாதவன் அங்கேயே நிற்கவும், “ச்” என்றவன் கடுப்பாய் அங்கிருந்து வெளியில் சென்று விட்டான். 

மாதவன் எதுவும் பேசாமல் அர்ஜூனைப் பின் தொடர்ந்தான். லைப்ரரியின் அமைதியான சூழலில், அர்ஜூனின் கண்டிப்பான வார்த்தைகள் சற்று சத்தமாகவே ஒலித்தது. அங்கிருந்தவர்கள் சிலரின் பார்வை அவர்கள் பக்கமும் சென்றது. அர்ஜூன் அதை எல்லாம் கண்டுக்கொள்ளவில்லை. 

மாதவன் அவனுடைய ஒரே நண்பன். கல்லூரியில் இருந்து இருவரும் நண்பர்கள். அர்ஜூனுக்கு பெரிய பெரிய கேங் எல்லாம் கிடையாது. படிக்கும் காலத்திலேயே சற்று அமைதித்தான். என்னேரமும் புக்குடன் சுற்றித் திரிபவன் அதனாலையே யாரும் அவனுடன் பெரிதாய் நட்பு கரம் நீட்டவில்லை. அவனுக்குமே அதற்கு நேரம் இருந்திருக்கவில்லை. அவனின் குணத்திற்கு தகுந்தப்படியே புரோபசர் வேலையும் கிடைக்க, தன்னை இறுக்கமானவனாகவே காட்டிக் கொண்டான்.

மாதவனிடம் மட்டும் எப்போதாவது இறுக்கம் தொலைத்து பேசுவான். அதுவும் எல்லை எல்லாம் மீறாது. அதற்கு அவனுடைய வாழ்க்கையில் சிறு வயதில் நடந்த சில கசப்பான சம்பவங்கள் கூட காரணமாக இருக்கலாம்.

கல்லூரி முடிந்ததும், இருவரும் அந்த பரபரப்பான நகரத்தின் ஒதுக்குப்புறத்தில் இருந்த ஒரு பூங்காவில் அமர்ந்திருந்தனர். சூரியன் மறையத் தொடங்கியிருந்த அந்தி வேளை, சூழலுக்கு ஒருவித அமைதியைக் கொடுத்திருந்தது. ஆனால் மாதவனுக்கோ எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. ஆனாலும் கேட்டாக வேண்டுமே. அதனால் மெதுவாய் ஆரம்பித்தான்.

“என்ன யோசிச்சு வச்சிருக்க அர்ஜூன்?” என்று கேட்க. அர்ஜூன் தன் கையில் இருந்த இலையை நொறுக்கியபடி, “இன்னும் எதுவும் யோசிக்கல” என்றான்.

“என்னடா நீ இவ்ளோ ஈஸியா சொல்ற? அது ஒன்னும் கம்மி அமெளண்ட் கிடையாது. நம்மகிட்ட டைமும் இல்ல. அதுவும் போக வீட்டுல வேற டென்சன்?” என்ற மாதவனின் குரலில் பதட்டம் அப்பட்டமாய் தெரிந்தது.

அவனை அழுத்தமாய் பார்த்த அர்ஜூன், “ம் அப்புறம் அதான் உனக்கே எல்லாம் தெரியுதே. தெரிஞ்சும் எதுக்காக நீ அந்த ரிஸ்க் எடுத்த?” என்று கடுப்பாக கேட்டான் அர்ஜூன்.

“மச்சான், உனக்கு ஒரு நல்ல வாய்ப்பு வந்திருக்கறதா தோணுச்சு. நீ யார்கிட்டயும் உதவி கேட்க மாட்டன்னு எனக்குத் தெரியும். நீயே சொல்லவும் எனக்குத் தயக்கமா இருந்தது. அதான்... உன்கிட்ட சொல்லாம முடிவு பண்ணிட்டேன்” என்று மாதவன் தன் செயலை நியாயப்படுத்தினான்.

அவன் தோளைப் பற்றியஅர்ஜூன். “சரி விடு. கவலைப்படாதே. நாளைக்கு நம்ம தெரிஞ்ச பினான்ஸ் கன்சல்டன்ட் கிட்ட பேசலாம். உனக்கு அந்தப் பணம் எதுக்காகத் தேவைப்பட்டதோ, அத சொல்லி சமாளிக்க பாக்கலாம்.. தேவைப்பட்டா அந்த முழுப் பொறுப்பையும் நானே ஏத்துக்கிறேன்” என்றான் 

“ச் இதுல உன் மேல எந்த தப்பும் இல்லையே. அந்த காச நான் தான மிஸ் பண்னிட்டேன்” என்று மாதவன் வருத்தத்துடன் கூறினான்.

“அந்த பிசினஸ் உன் பேர்ல இல்லாம என் பேர்லதானே ஆரம்பிக்கலாம்னு இருந்த. அப்போ அந்த முழுப் பொறுப்பையும் நான் தான ஏத்துக்கனும்? எந்த விஷயத்துலயும் நான் என் பொறுப்ப தட்டிக்கழிக்க மாட்டேன்” என்று அர்ஜூன் அழுத்தமாகச் சொன்னான்.

“மன்னிச்சிடு மச்சான். எல்லாம் என்னாலத்தான்” என்று மாதவன் குனிந்த தலை நிமிராமல் கூறினான்..

“ச் விடு. பாத்துக்கலாம். அம்மாக்கு இப்போ பிரச்சன இல்லத்தான. அவங்கள பாத்துக்கோ. இந்த பண பிரச்சனைய நான் பார்த்துக்கிறேன்” என்றான் அர்ஜூன்.

இப்படி கடந்த கால நினைவில் இருந்தவனின் செவியில், “நாழி ஆகுது பொண்ணை அழைச்சிட்டு வாங்கோ” என்ற ஐயரின் குரல் கேட்டது. அதில் கடந்த காலத்தில் இருந்து நிகழ்காலத்துக்கு வந்து நிமிர்ந்தான் அர்ஜூன்.

நிச்சயம் அங்கே அவனுக்கருகே வந்து அமரப் போவளின் தரிசனம், அவனை இன்னுமே இறுக்கமாய் மாற்றப் போகிறதா? இல்லை அவளின் வருகை, அவனின் முகத்தில் இளக்கத்தை தத்தெடுக்கப் போகிறதா?

(இந்த ஸ்ட்ரிக்ட் ப்ரோபசர், அப்புறம் எதுக்கு இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிருப்பாரு. சரி அது என்னென்னு நம்மளும் கொஞ்சம் வெயிட் பண்ணிப் பார்ப்போம். அடுத்து என்னோட சைட்ல, இதுத்தான் என்னோட பர்ஸ்ட் நாவல். சோ மறக்காம, லைக் பண்ணிட்டு, உங்களோட கருத்தையும் வாழ்த்தையும் கமெண்ட்ல சொல்லுங்க. அப்புறம் மறக்காம ரிஜிஸ்டர் பண்ணிக்கோங்க. அப்படியே ரேட்டிங்-ம் கொடுத்திடுங்க. பெஸ்ட் கமெண்ட்ஸ, பேனர்ல போஸ்ட் பண்ணுவேன். இங்க நம்மளோட ரைட்டர் ரீடர் ரிலேசன்சிப் பெஸ்டா இருக்கும்னு நம்புறேன். சோ மறக்காம உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க. இன்னும் நிறையா நாவல் அண்ட் பன் செக்மெண்ட்ஸ். கேம்ஸ் எல்லாம் இங்க வரும். சோ கீவ் இன் டச். இப்பவே சைட்ட உங்க ஹோம் ஸ்கீர்ன்ல ஆட் பண்ணிக்கோங்க. அப்படிப் பண்ணா, ஆப் மாதிரி நீங்க டைரக்டா யூஸ் பண்ணலாம். அது எப்படின்னு சீக்கிரமே ஒரு வீடியோ போஸ்ட் பண்றேன்.)

தொடரும்…

Comments   24

*** வரம் – 1 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***