தேன் – 8

வேந்தனின் கை மீது கை வைத்து அவன் கேட்ட சத்தியத்தை செய்துக் கொடுக்க, அவன் முகத்தில் மலர்ந்த புன்னகை, இவள் முகத்திலோ அப்பட்டமான வலி தெரிந்தது. அதை உணர்ந்தாலும், அதை பெரிதாய் கண்டுக் கொள்ளாது, “எனக்கு பசிக்குது” என்றான்.

அதில் தன் கன்ணீரை துடைத்தவள், எழுந்து சென்று கை கழுவி வந்தாள். பின் உணவை எடுத்து வந்து அவனிடம் நீட்ட, அவனோ, “வலது கையில அடிப்பட்டிருக்கு” என்றான்.

அதில் அவனை முறைத்தாலும், எதுவும் சொல்லாது அவனுக்கு உணவை எடுத்து ஊட்ட ஆரம்பித்தாள். அவனோ அதை வாங்காது, “நீ சாப்டீயா?” என்றான்.

ஐயோ அந்த ஒரு வார்த்தைக்குள்த்தான் எத்தனை அக்கறை நிரம்பி வழிந்தது? அதென்னவோ சிறு வயதில் இருந்தே அவளை அப்படி கேட்க யாரும் இல்லை என்று அவள் நினைத்ததே இல்லை. காரணம் அவன். அவள் மனதை கூட காயப்போட வைத்து விடுவான். ஆனால் அவள் வயிற்றை ஒரு நாளும் அவன் வாடவிட்டதில்லை.

அதில் அவள் கண்ணுக்குள் நீர் கோர்க்க, “சாப்டீயா?” என்று மீண்டும் அவன் அதையேத்தான் கேட்டான். “சாப்டேன்” என்று சொல்லியப்படி அவனுக்கு ஊட்ட, இப்போது சிறு சிரிப்புடன் அந்த உணவை வாங்கிக் கொண்டான்.

அவன் சாப்பிட்டு முடிக்கும் வரை அமைதியாய் இருந்தவள், அவன் கடைசி வாய் வாங்கும் முன், “உங்க வீட்ல சொல்ற நல்லப் பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோங்க” என்றாள்.

அவளின் வார்த்தையில். இங்கே இவனுடைய ஐம்புலன்களும் கோவத்தில் புடைத்தது.

“ஏற்கனவே நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். உனக்கு சந்தேகமா இருந்தா, வேணும்னா நீ போய் கண்ணாடியில பாரு” என்று கோவத்தை இழுத்துப் பிடித்து கூறினான்.

“இது கல்யாணமே கிடையாது சார். அது உங்களுக்கே தெரியும்” என்றாள். “உன்னோட பாலிசி படி. உன் கழுத்துல யார் தாலி கட்டுனாலும், அது உனக்கு கல்யாணம் தான. அப்போ இது மட்டும் எப்படி கல்யாணம் இல்லாம போயிடும்?” என்று அசராமல் கேட்டான்.

அவனின் வார்த்தையில், இங்கே இவளுடைய இதயத்தை யாரோ ஊசியால் நறுக்கென்று குத்தியது போல் அத்தனை வலித்தது.

அவள் கண்கள் கலங்க, இங்கே இவனோ, “இங்கப்பாரு. இந்த ஜென்மத்துல எனக்கு ஒரு கல்யாணம் தான். அது முடிஞ்சிருச்சி. இதுக்கப்புறம் இத பத்தி நீ இல்ல யார் கேட்டாலும், என்னோட பதில் இதுத்தான்” என்றான்.

“உங்களுக்குத்தான் இது முத கல்யாணம். ஆனா எனக்கு அப்படி கிடையாது” என்றாள்.

“சரி அப்படியே வச்சிப்போம். எனக்கு இதுத்தான் முத கல்யாணம். உனக்கு இதுத்தான் கடைசி கல்யாணம் போதும்மா?” என்று அலட்டிக் கொள்ளாமல் கூறினான்.

அவனின் வார்த்தையில் இங்கே அவளோ, “சொன்னா புரிஞ்சுக்கோங்க சார். இதெல்லாம் எப்பவும் சரிபட்டு வராது. பேசாம, உங்க வீட்டுல சொல்ற மாதிரி ஒரு நல்ல பொண்ண கல்யாணம் பண்ணிக்கோங்க. உங்களுக்காக இல்லன்னா கூட, நீங்க இருக்கிற பதவிக்கும், உங்க தங்கச்சிக்கும் அதுத்தான் நல்லது” என்றாள்.

அவளுக்குத் தெரியும். அவனுக்கு அவனின் தங்கை என்றால் எத்தனை உயிர் என்று. அதனால் தான் அவளை இழுத்துப் பேசினான்.

“ஓ என் தங்கச்சி மேல உனக்கு ரொம்ப அக்கற இல்லையா?” என்று நக்கலாய் கேட்டான். அவனின் அந்த நக்கல் பதிந்த பார்வையில், அவளின் உடல் அத்தனை அதிர்ந்தது.

அவளைப் பார்த்தப்படியே, தன் தங்கைக்கு நீண்ட மாதங்களுக்குப் பின் கால் செய்தான் வேந்தன். அவன் யாருக்கு கால் செய்கிறான்? என்று புரிந்ததும் வேகமாய் அவள் அங்கிருந்து செல்ல முயற்சித்தாள். ஆனால் அதற்குள்ளாக அவள் கரத்தை அழுத்திப் பற்றியவன், “உன்ன ஓட விட்டுட்டே இருப்பேன்னு நினைக்காத” என்று அத்தனை கோவமாய் கத்தினான்.

அவனின் கோவத்தில் அவள் வேறு வழியின்றி அங்கேயே இருக்க, அந்தப் பக்கம் அழைப்பு ஏற்கப்பட்டது.

இங்கே இவனோ, “உன் அண்ணிக்கிட்ட பேசுறீயா குட்டிமா?” என்று கேட்க, இவளுடைய இதயத்துடிப்பு எகிறியது. ஆனால் அந்தப் பக்கம் அவள் என்ன சொன்னாளோ? இங்கே இவன் நக்கலாய் சிரித்தப்படி, “ஆமா உன் மேல ரொம்ப அக்கறப்படுறா. ஈவன் உனக்காக நான் வேற ஒரு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கனுமாம்” என்று படு நக்கலாய் கூறினான்.

அவன் பேசும் தோரணையிலேயே, அந்தப் பக்கம் அவனின் தங்கை என்ன சொல்லியிருப்பாள் என்பதை இவளால் புரிந்துக் கொள்ள முடிந்தது.

“இல்லடா. இன்னும் ஒரு வாரத்துக்கு என்னால எந்தப் பக்கமும் நகர முடியாது. சோ இப்போ வேண்டாம்” என்றான். அதில் இங்கே கவியோ எச்சிலைக் கூட்டி விழுங்கினாள்.

அவளைப் பார்த்தப்படியேத்தான் பேசினான். 

அவள் முகத்தில் எழும் ஒவ்வொரு உணர்வுகளையும், அவன் படமெடுத்துக் கொண்டிருக்க, கவியின் மனதிலோ, அவன் தங்கையின் முகம் மட்டுமே முழுதாய் வந்து நின்றது.

“உனக்காக, நான் என் என்ன வேணும்னாலும் பண்ணுவேன்” என்று கவி சொல்ல, “அப்போ என் அண்ணாவ கல்யாணம் பண்ணிக்கோ கவி. லைப் லாங் நீயும், நானும் ஒரே வீட்டுல சந்தோஷமா இருக்கலாம். நீயே எனக்கு அண்ணியா வந்துடேன் ப்ளீஸ். ப்ளீஸ்” என்று செல்லம் கொஞ்சினாள் அவள்.

“ச் லூசு மாதிரி பேசாத. உன் அண்ணாவ நான் எப்படி கல்யாணம் பண்ணிக்க முடியும்? அதுவும் போக” என்று கவி சொல்லத் தயங்க, “என் அண்ணாவ உன்னைத் தவிர வேற யாராலையும் சந்தோஷமா வச்சிக்க முடியாது” என்றாள்.

“ம்ஹூம் இல்ல. அதெல்லாம் நடக்காது” என்று சொல்லியப்படி அவள் அங்கிருந்து எழுந்து செல்லப் போக, அவள் கையைப் பிடித்து இழுத்து, “பின்ன எதுக்கு என் அண்ணா பேரை உன் கையில டாட்டூ போட்டு வச்சிருக்க?” என்று நக்கலாய் கேட்டாள்.

அதில் வேகமாய் தன் கையில் இருந்த டாட்டூவைப் பார்த்த, கவியோ, “இது உன்னோட பேரு விழி” என்றாள் கவி.

“என்ன? இப்போ என்ன எப்படி கூப்ட?” என்று படு நக்கலாய் அவள் கேட்க, “ச், உன் பேரையும், என் பேரையும் சேர்த்துத்தான் டாட்டூ போட்டிருக்கேன்” என்று விடாது கூறினாள்.

“தேன் உன் பேர் தான். ஆனா அதுல இருக்கிற சுடரோட அர்த்தம். சுடர் விழி இல்ல சுடர் வேந்தன்” என்று அவள் கையைப் பிடித்து அதை வருடியப்படி கூறினாள் வேந்தனின் தங்கை சுடர் விழி.

அந்த நினைவில் இருந்தவளின், கையில் இருந்த அந்த டாட்டூவில் மெதுவாய் இதழ் பதித்தான் சுடர் வேந்தன்.

அதில் தீ சுட்டது போல் அவள் தன் கரத்தை விலக்கிக் கொள்ள, அங்கே அவனோ, “நான் கூட பேரை அழிச்சிருப்பீயோன்னு நினைச்சேன்” என்று நக்கலாய் உதட்டை சுழித்தான்.

“இது உங்க பேர் கிடையாது” என்று அவள் இம்முறை அழுத்தமாகவே சொல்ல, “சரி. இருக்கட்டும். நானும் அது என் பேருன்னு சொல்லவே இல்லையே. சுடர் இட்ஸ் ஏ குட் நேம். பட் என்ன யாரும் அப்படி கூப்டதும் கிடையாது. இனி கூப்ட போறதும் கிடையாது” என்று அசராது கூறினான் வேந்தன்.

“இல்ல நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் என் மனசுல எதுவுமே கிடையாது. ப்ளீஸ். இதுக்காக உங்க வாழ்க்கையையும் சேர்த்து அழிச்சுக்காதீங்க” என்று அவனுக்கு புரிய வைக்க முயற்சித்தாள்.

புரியாதவனுக்கு புரிய வைக்கலாம். ஆனால்,  எல்லாம் புரிந்தும் புரியாதது போல் இருப்பவனுக்கு எப்படி புரிய வைக்க முடியும்?

அதைக் கேட்டவனோ, “நான் எதுக்கு உனக்காக என் வாழ்க்கைய அழிச்சிக்க போறேன். இந்த வேந்தன், அவனுக்காக மட்டும் தான் எதுனாலும் செய்வான். இப்போ உன் கழுத்துல நான் கட்டியிருக்கிற தாலி எதுக்குன்னு உனக்கே நல்லா தெரியும்” என்று கேலியாய் உதட்டை சுழித்தான்.

அவனின் கேலியில் இங்கே இவளுக்கோ கோவம் தான் வந்தது. “இந்த தாலியால உங்களுக்கு, எதுவும், எப்பவும் கிடைக்கப் போறது இல்ல. அப்படியே கிடைச்சாலும் கூட அது நிச்சயமா உங்களுக்கு சந்தோஷத்த கொடுக்காது. அவமானத்தையும் அசிங்கத்தையும்தான் கொடுக்கும்” என்று அழுத்தம் திருத்தமாய் கூறினாள்.

“அவமானத்த எப்படி வெகுமானமா மாத்திக்கனும்னு எனக்குத் தெரியும் மிசஸ் கவி வேந்தன்” என்று நக்கலாய் சொல்லியவன், அவளைப் பார்த்து, “எனக்கு கிடைக்க வேண்டியத எனக்கு தேவைப்படுறப்ப, நானே எடுத்துப்பேன்” என்று சொல்லி கண்ணடித்தான்.

அவனின் அந்த செயலில், இங்கே இவள் உடல் குப்பென்று வேர்த்தது. அதை உணர்ந்தவனோ, “எனக்கு கை சரியானதும், பர்ஸ்ட் நைட் பத்தி டிஸ்கஸ் பண்ணலாம்” என்றான்.

அதில் இவளுக்குள்ளோ அத்தனைப் பதட்டம். உடனே வேகமாய், “உங்களுக்குத்தான் அது பர்ஸ்ட் நைட்” என்று இதயத்தை கல்லாக்கி அவள் சொல்ல, “சரி எனக்கே பர்ஸ்ட் நைட்டா இருந்துட்டு போகுது. அப்போ நீயே எல்லாத்தையும் கத்துக் கொடு. நான் தெரிஞ்சிட்டு போறேன்” என்று அசராது அவன் சொல்ல, இவளோ கையில் கிடைத்த பில்லோவை எடுத்து அடித்தாள்.

“லூசாய்யா நீ. சொன்னா உனக்கு புரியவே புரியாதா? உனக்கென்ன குறைன்னு, எவனோ சாப்ட எச்சி இலையில சாப்பிடனும் ஆசைப்பட்டு, இப்படி எவன் கூடவோ படுத்த ஒருத்திக் கூட, வாழனும்னு நினைக்கிற” என்று அத்தனை ஆதங்கமாய் அவள் கேட்க, இங்கே இவனோ அவள் கழுத்தை இறுக்கிப் பற்றி “ச் இனி ஒரு தடவ இப்படி பேசுன, உன்ன கொன்னுடுவேன்” என்றான்.

அவன் கரத்தை வேகமாய் விலக்கியவளோ, “பேசாம அதையாச்சும் பண்ணுங்க. நிம்மதியா போய் சேருவேன்” என்று அவள் சொல்ல, “நானும் சேர்ந்து வருவேன் பரவாயில்லையா? அப்புறம் என் தங்கச்சியும் என் பின்னாடியே வருவா. ஈவன் அவ என்ன விட எல்லாத்துலையும் ரொம்ப பாஸ்ட். சோ நீ செத்துட்டன்னு தெரிஞ்சா அவளும் செத்துடுவா” என்றான்.

அவனின் வார்த்தையில், “ப்ளீஸ் சார் என்ன விட்டுடுங்க” என்று மீண்டும் அவள் அந்த இடத்திலேயேத்தான் வந்து நின்றாள்.

ஒரே நாளில் எதுவும் மாறிடாது என்று அவனுக்கும் தெரியும். அதனால், “என்னால அது முடியாதுன்னு உனக்கே தெரியும்” என்றான்.

இப்போது அவளின் கோவம் மொத்தமும் அவனின் தங்கையின் மீதுத்தான் வந்து நின்றது.

அது அவள் முகத்திலேயே தெரிய, அவனோ, “கவலைப்படாத ரொம்ப சீக்கிரமே அவ உன் முன்னாடி வந்து நிப்பா. பட் அவ என்ன மாதிரி ஸ்மூத்தெல்லாம் கிடையாது. என்கிட்ட பேசுன மாதிரி எல்லாம் அவ கிட்ட பேசிடாத. அடுத்து, அவ என்னப் பண்ணுவா? சொல்லுவான்னு உனக்கே தெரியும்” என்றான்.

இப்படி மனதில் நினைப்பதுக்கும் சேர்த்து, அவன் விளக்கம் கொடுக்க, அவளுக்கோ பல்லைக் கடிப்பதைத் தவிர வேறு வழியே இருக்கவில்லை. ஒரு வித எரிச்சலுடன் சாப்பாட்டு தட்டை எடுத்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டாள்.

செல்பவளைப் பார்த்து சிரித்தவனின் கண்கள், அவள் சொல்லிய “எவனோ சாப்ட எச்சி இல” என்ற வார்த்தை அவனை உஷ்ணப்படுத்தியது.

அடுத்த நொடியே இதற்கு காரணமாய் இருந்த அத்தனைப் பேரையும் வெட்டி வீழ்த்தும் கோவம். அவனால், அந்த நொடி அவளை தன் மனைவியாய் மட்டுமே பார்க்க முடிந்தது. ஒரு பேச்சுக்காக கூட அப்படி எல்லாம் அவனால் யோசிக்க முடியாது. அது உண்மையாகவே இருந்தாலும் கூட, அவனால் அதை ஏற்க முடியவே முடியாது. அவளைத் தவிர்த்து இப்படி ஒரு வார்த்தையை வேறு ஒருவர் சொல்லியிருந்தால், இன்னேரம் பேசியவனின் தலை மண்ணில் விழுந்திருக்கும். ஆனால் அவளே அதை சொல்லியிருக்க, அவனுக்கோ அப்படி ஒரு ஆங்காரம். அது அங்கே சிலரை சாட்டையால் அடி வாங்க வைத்துக் கொண்டிருந்தது.

(கவியின் இந்த பிடிவாதத்தை, வேந்தன் சரி செய்வானா? இல்லை சுடர்விழி வந்து தான் கவியின் விழியை திறந்து வைப்பாளா? என்பதை எல்லாம் அடுத்தடுத்த அத்தியாயங்களில் காணலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

தித்திக்குமா?..

Comments   1

*** தேன் – 8 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***