தேன் – 7

நூலக அறையில் இருந்த கவியின் மனமோ, “ஏன் கவி இப்படி இருக்க?” என்று கேள்வி கேட்டது. மனதின் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லும் மன நிலையிலா அவள் இருக்கிறாள்?

அதை பொருட்படுத்தாது, கஷ்டப்பட்டு மீண்டும் கையில் இருந்த புத்தகத்துக்குள் மூழ்கினாள். அவள் இங்கு வந்ததில் இருந்து அவளுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் இந்த புத்தகங்கள் தான். சிறு வயதில் இருந்தே அவளை, உயிர்ப்புடன் வைத்திருப்பது இந்த மாதிரியான புத்தகங்கள் தான். ஆனால் கடந்த ஒரு வருடமாய் அதை கூட அவளால் செய்திருக்க முடியவில்லை.

இப்போது அந்த புத்தகங்களின் வாசனை சற்று இளகுவாக்க முயற்சித்தது. ஆனால் அதற்குள், அவளை சாப்பிட அழைக்க செல்லம்மா வர, அவளோ, “அங்க வச்சிடுங்க. நான் அப்புறமா சாப்டுக்கிறேன்” என்றாள்.

அவரும் அதை செய்துவிட்டு, “தம்பியும் இன்னும் சாப்பிடலம்மா” என்பதை மட்டும் சொல்லிவிட்டு, அங்கிருந்து சென்றிருந்தார். அதில் அவளோ, “அதுக்கு நான் என்ன பண்றது?” என்றவள் சாப்பிட்டு விட்டு மீண்டும் புத்தகத்துக்குள் புகுந்துக் கொண்டாள். அங்கே அவனோ மாத்திரையின் வீரியத்தில் சற்று அசந்து படுத்து விட்டான். அதில் கை, கால்களை சுருக்கி அவன் படுத்திருக்க, உறக்கத்தில் அவனுக்கு அதெல்லாம் பெரிதாய் தெரியவில்லை.

இங்கே இரவு வேளைக்குத்தான் கவி வெளியில் வந்தாள். பசிக்குதோ? இல்லையோ, மூன்று வேளையும் அவள் சாப்பிட்டாக வேண்டும். அவள் சாப்பிட்ட பின் தான் செல்லம்மா சாப்பிடுவார். அந்த ஒரு காரணத்துக்காகத்தான், அவளும் இன்று வரை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாள்.

இப்போதும் அவள் சாப்பிட்டு விட்டு எழ, “அம்மா தம்பி இன்னும் தூங்குறாங்க போல. அவருக்கு சாப்பாடு மத்தவங்க கொண்டு போனா” என்றவர் வெகுவாய் தயங்க, அவளும், “சரி நான் எடுத்துட்டு போறேன். நீங்க வேலைய முடிச்சிட்டீங்கத்தான கிளம்புங்க” என்றாள்.

ஏனெனில், அவனுக்கு அவள் தான் எடுத்து வைப்பாள். அவனின் வேலையை அவள் தானே பார்ப்பாள். ஏதோ, இங்கு சாப்பிடும் சாப்பாட்டுக்கான வேலையாய் அவள் அதை எடுத்துக் கொண்டாள்.

இப்போது உணவுடன் அவள் அவனின் அறைக்கு செல்ல, அங்கே படுத்திருந்தவனைப் பார்த்து அப்படியே அங்கேயே ஒரு நொடி அதிர்ந்து நின்று விட்டாள்.

பின்னே கட்டில் இருந்து இரத்தம் கசிந்துக் கொண்டிருப்பதை கூட உணராது அவன் உறங்கிக் கொண்டிருக்க, அதுவரை எப்படியோ, இரத்தத்தைப் பார்த்ததும் “அச்சோ இரத்தம்” என்றவள் அவனிடம் வேகமாய் ஒடி சென்று அவன் கையைப் பார்த்தாள்.

இவள் தொட்டதும், அவனின் தூக்கம் கலைந்திருக்க, “ச்” என்று சாதாரணம் போல் அவன் கையை உதற, வலியில் உயிர் போக, “அம்மா” என்று கத்தியே விட்டான். அவனின் கத்தலில், இங்கே கவியின் இதயமும் சேர்ந்து துடிப்பை நிறுத்தியிருந்தது.

அத்தனை எளிதில் வலியை காட்டுபவன் அவன் இல்லை என்று அவளுக்கு நன்றாகவே தெரியும்.

கால்லையும் நீட்ட இயலாது, கையையும் மடக்க இயலாது, அவன் பல்லைக் கடித்து வலியை அடக்க முயற்சித்தான்.

அவனின் முயற்சியைப் பார்த்தவளோ, “ச் என்னப் பண்ணிட்டிருக்கீங்க நீங்க?” என்று சிறு கோவத்துடன் கேட்டவள், அவனைத் தாங்கி அமர வைத்தாள். பின் மேலும் அவனை நெருங்கி, கிட்ட தட்ட அணைப்பது போல், அவனின் கையை மிக மெதுவாய், மடக்கி, தோள்பட்டையில் போடப்பட்டிருந்த கட்டிற்குள் திணித்தாள்.

அவளின் தொடுதலிலும், நெருக்கத்திலும் அவனின் வலி சற்று பின் தங்கியிருந்தாலும் கூட, வலி உச்சத்தை தொட்டிருந்தது. அவன் கண்கள் எல்லாம் சிவக்க, வலியில் அவள் இடையை அழுத்திப் பிடித்தான்.

முதலில் விலக்க நினைத்தவள், பின் அவன் படும் வேதனையை பார்க்க இயலாது, அதை பொறுத்துக் கொண்டாள். “கொஞ்சம் பொறுங்க” என்று கெஞ்சலாய் சொல்லியவள், கிட்ட தட்ட அவள் மேனி மொத்தமும் அவன் மீது உரசும் அளவுக்கு நெருங்கி, அவன் மடக்கியிருந்த கால்லை மெதுவாய் இழுத்து விட முயற்சித்தாள். அதில் அவனோ இன்னும் அழுத்தமாய் அவளை இறுக்கிப் பிடிக்க, அவளோ, “கொஞ்சம் கோ ஆப்ரேட் பண்ணுங்க வேந்தன்” என்றாள்.

அதில் அவனுமே முடிந்த மட்டும் தன் கால்லை நீட்ட முயற்சிக்க, கண்ணை இறுக்க மூடினான். அவன் கரத்தின் மீது தன் கரத்தைப் பதித்து, “என்னை பாருங்க” என்றாள்.

அதில் அவனோ விழியை மெல்ல திறக்க, “என்ன மட்டுமே பாருங்க” என்று சொல்லியவள், அவனின் கவனத்தை திசை திருப்ப, அவனோ தன்னையும் மறந்து அவளை மட்டும் தான் பார்த்தான்.

ஒரு வழியாய் அவள், அவன் கால்லை நீட்டி, கீழே தலையணையை வைத்தவள், அப்போதே, அவன் வயிற்றில் இருந்த காயத்தையும் கவனித்தாள்.

அதில் அவளோ, “இப்படித்தான் தூங்குவீங்களா?” என்று சிறு கோவத்துடன் கேட்டவள், மேஜையில் இருந்த அவனின் ஹெல்த் ரிப்போர்டை எடுத்துப் பார்த்தாள். பின் அதில் இருந்த மருத்துவர் நம்பருக்கு, அவனின் மொபைலில் இருந்து கால் செய்து வர கூறினாள்.

அவனோ எதுவுமே சொல்லாது அவளையே பார்த்தப்படி இருந்தான். இன்னும் கூட அவன் அவள் இடையில் இருந்த கரத்தை விலக்கியிருக்கவில்லை.

அதை உணர்ந்தவள், அவசரமாய் அவனை விட்டு விலகி எழ, அவனோ, “நான் ஒன்னும் தப்பாலாம் எடுத்துக்க மாட்டேன்” என்றான்.

அவனின் வார்த்தையில், “முன்ன பின்ன தெரியாதவங்களுக்கு கூட உதவி செஞ்சுத்தான் எனக்கு பழக்கம்” என்று சொல்லியப்படி செல்ல, அவனோ, “அப்படியா? அப்போ யாரு உன் இடுப்ப பிடிச்சாலும், ஒன்னும் சொல்ல மாட்டீயா?” என்று அத்தனை வலியிலும் அவளிடம் விளையாட, அவளுக்கோ அத்தனைக் கோவம்.

“ச் உங்களுக்கு போயி உதவி பண்ணனும்னு நினைச்சேன் பாருங்க என்ன சொல்லனும்” என்றப்படி அவள் நகரப் போக, “அம்மா” என்று கால்லை மேலும் இறுக்கிப் பிடித்தான்.

அதில் அவளோ திரும்பி அவனைப் பார்க்க, அவன் நடிக்கிறானா? இல்லை உண்மையை சொல்கிறானா? என்று கூட தெரியவில்லை. ஆனாலும் கூட காயத்தில் இரத்தம் கசிவதை உணர்ந்தவள், “கொஞ்சம் நேரம் பொறுங்க டாக்டர் வந்திடுவாங்க” என்றாள்.

அவள் சொல்லியது போலவே அடுத்த சில நிமிடங்களில் வந்த மருத்துவர், அவனை பரிசோதித்துப் பின், “இதுக்குத்தான் சார். உங்களுக்கு ஒரு ஹோம் நர்ஸ் அரேஞ் பண்ணலாம்னு சொன்னேன்” என்றார்.

அதில் அவனோ, “நோ நீட்” என்று அவன் சொல்ல, அந்த மருத்துவரோ, இப்போது கவியைப் பார்த்தார். அவன் பார்வையை உணர்ந்த வேந்தனோ, “இவங்களத்தான் என்னப் பாத்துக்க அப்பாயிண்ட் பண்ணிருக்கேன். ரொம்ப சின்சியர். சோ, எனக்கு என்ன கொடுக்கனும்? எப்படி பாத்துக்கிடனும்னு இவங்க கிட்ட சொல்லிடுங்க” என்று சொல்லியப்படி சாய்ந்துப் படுத்தான்.

“என்ன?” என்று தேன் கவி அதிர, அதற்குள் மருத்துவரோ, “நீங்க மெடிக்கல் படிச்சிருக்கீங்களா?” என்று கேட்க, “ஆ..ங் இல்ல” என்றாள். அதில் மருத்துவரோ வேந்தனைப் பார்க்க, அவன் பார்வையிலோ, நான் சொன்னதை மட்டும் செய் என்ற அர்த்தம் பொதிந்திருந்தது. அதனால் மருத்துவரும், வேந்தனை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதை சொல்லியிருந்தார்.

பின்பு, மாத்திரைகளை எல்லாம் காட்டி, அவன் சற்று அதிகமாகவே விளக்கம் கொடுக்கப் போக, “இவ்வளவு விளக்கம்லாம் தேவை கிடையாது. அவங்க ஏற்கனவே இது மாதிரி நிறையா ஒர்க் பார்த்திருக்காங்க. அதனால, ஷார்ட்டா சொல்லுங்க புரிஞ்சிப்பாங்க” என்று நக்கலாய் கூறினான்.

அதில் அவளோ அவனை முறைக்க முயல, இருந்தும் மருத்துவர் இருப்பதால் அமைதியாய் இருந்தாள். மருத்துவருமே அவனுடைய அந்த பேச்சை கேட்டதும், ஒரு வேள ஹாஸ்பிடல்ல ஒர்க் பண்ணிருப்பாங்களா இருக்கும். என்று யோசித்தப்படி அவரும் அதை சொல்லிவிட்டு சென்றார்.

அவர் சென்றதும் கவியோ, “என்னால எல்லாம் உங்கள பார்த்துக்க முடியாது” என்று அவள் வெடுக்கென்று சொல்ல, இங்கே இவனோ, “கவலைப்படாத அதுக்கும் சேர்த்து, நல்ல அமெளண்ட் கொடுத்துடுறேன்” என்று நக்கலாய் கூறினான்.

அவனின் வார்த்தையில் இங்கே இவளுக்கோ கண்களில் நீர் கோர்த்தது. ஆனால் அதற்கெல்லாம் அவன் அசரவே இல்லை. “என்ன? நீ தான முன்ன பின்ன தெரியாத யாருக்குனாலும் உதவி பண்ணுவத்தான? ஆனா எனக்கு எந்த உதவியும் இலவசமா தேவை கிடையாது. சோ, நீ பாக்குற இந்த வேலைக்கு சம்பளம் எவ்வளவு வேணுமோ கேட்டு வாங்கிக்கோ” என்றான்.

அவனின் வார்த்தையில், அவனை முறைத்தவளோ, “அப்படி ஒரு வேல எனக்கு தேவை கிடையாது. அந்த சம்பளத்த வேற யாருக்காச்சும் கொடுத்து, வச்சுக்கோங்க” என்றப்படி அங்கிருந்து நகரப் போக, அதற்குள் அவள் கையைப் பிடித்து தன் பக்கம் இழுத்தவன், “உன் கழுத்துல தொங்குறதே நான் உனக்கு கொடுத்த சம்பளம் தான். சோ நீ நான் சொல்றத செஞ்சித்தான் ஆகனும்” என்று கோவமாய் கூறினான்.

அதில் இவளோ, “அப்போ அத கழட்டி தந்திடுறேன்” என்று விடாது சொல்ல, “உன்னால முடிஞ்சா அத பண்ணு பாப்போம்” என்றான்.

அவன் வார்த்தை தந்த கோவத்தில், அவள் வேகமாய் அதை கழட்டப் போக, “நான் உயிரோட இருக்கிறப்பையே கழட்ட முடிவு பண்ணிட்ட. ம் சரி கழட்டி தா” என்று நக்கலாய் கூறினான்.

அவனின் வார்த்தை, அவளுக்குள் ஒரு வித அச்சத்தை உருவாக்க, அவள் உடல் ஒரு வித அதிர்வை உணர்ந்தது.

அவள் கரம் நடுங்குவதை கவனித்து நக்கலாய் சிரித்தவன், “குயிக்” என்றான். இவன் சீண்டவும் ஒரு வேகத்தில் அவள் தாலியில் கையை வைத்து அழுத்த, இங்கே வேந்தனோ சிரித்தப்படி, தன் கையில் இருந்த கட்டை அவிழ்த்துக் கொண்டிருந்தான்.

அவனின் செயலில் அவளோ, “என்னப் பண்றீங்க” என்று அவன் கையை தடுக்க முயல, அவனோ, “நீ என்னப் பண்ணனுமோ நீ பண்ணு. நான் என்னப் பண்ணனுமோ அத நான் பண்றேன்” என்றவன், இப்போது தன் காயத்தை பொருட்படுத்தாது, எழ முயற்சித்தான்.

அவள் பசியில் இருக்கும் போது முதல் வாய் உணவு ஊட்டியவனின், உடலில் கசியும் இரத்தத்தை அவளால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. 

அதில் அவளோ, “சரி நான் நீங்க சொன்ன வேலைய பாக்கிறேன்” என்று சம்மதித்தாள். அவனோ, அப்போதும் கண்டுக் கொள்ளாது, தன் கட்டை அவிழ்க்கப் போக, அவன் கரத்தின் மீது தன் கரத்தைப் பதித்து, “நீங்க சொல்றத கேட்கிறேன்” என்றாள்.

அவளுடைய இந்த இரக்க குணம் தானே, அவளை இந்த நிலைமைக்கு இழுத்து வந்துள்ளது. இப்போதும் அதே அவளுடைய அந்த குணம், அவனின் அதிகாரத்துக்கு கட்டுப்பட்டு நிற்கும்படி செய்துள்ளது.

“அப்போ சத்தியம் பண்ணி கொடு” என்று தன் கரத்தை அவன் நீட்ட, அவளோ அவனை வலி நிறைந்த பார்வை பார்த்தாள். அந்த பார்வையில் நீயும் என்னை கடைசியில் உன் வழிக்கு உபயோகப்படுத்த, என் பலவீனத்தை உபயோகப்படுத்திக் கொண்டாயே” என்ற கேள்வி நிச்சயம் இருந்தது.

அதை அவன் உணர்ந்தாலும் கூட, அதை கண்டுக் கொள்ளாது, “நான் அரசியல்வாதி. அதனால என் வாக்கு மேல உனக்கு நம்பிக்க இல்லாம போகலாம். ஆனா உன்னோட சத்தியத்து மேல எனக்கு முழு நம்பிக்க இருக்கு. சோ சத்தியம் பண்ணு” என்றான்.

அதில் அவளோ கண்ணீரோடு அவனின் கையில் தன் கையை வைத்து, “செய்றேன். நீங்க சொல்றத செய்றேன்” என்று சத்தியம் செய்துக் கொடுத்தாள் கவி.

(இந்த சத்தியத்தால் கவி மீண்டும் காயப்படுவாளா? இல்லை இந்த சத்தியம் கவியின் வலியை தீர்க்குமா? என்பதை எல்லாம் அடுத்தடுத்த அத்தியாயங்களில் காணலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

தித்திக்குமா?..

Comments   1

*** தேன் – 7 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***