மயக்கத்தில் இருந்த தேன் கவி தன் கழுத்தில் தொங்கிய தாலியைப் பார்த்து, அதிர்ந்து பின் அவன் செய்த அத்தனையும் நினைவுக்கு வர, கோவமாய் அவன் நெஞ்சில் ஓங்கி அடித்தாள். நிச்சயம் அவளின் தளிர் கரத்தின் அடி அவனுக்கு வலித்திருக்குமா? என்றால் நிச்சயம் கிடையாது. ஏதோ கொசு கடித்த உணர்வு கூட கிடையாது. அவள் என்னவோ அடித்துக் கொண்டிருந்தாள். இவன் என்னவோ புது மனைவியை பாரபட்சமே இல்லாமல் ரசித்துக் கொண்டிருந்தான்.
ஆனால் சுற்றி இருந்தவர்களுக்குத்தான், அது அத்தனைப் பேரதிர்ச்சியாய் இருந்தது. அமைச்சர் கூட அவனிடம் குரலை உசத்தி பேசிவிட மாட்டார். அத்தனைப் பேரையும் ஒரு பார்வையால், அடக்கி வைத்திருப்பவன், இன்று சிறு பெண்ணிடம் தயங்காது அடி வாங்கிக் கொண்டிருப்பதை வெறித்துப் பார்த்தனர்.
இத்தனை நேரம், அவன் இப்படி செய்து விட்டானே, என்ற ஆற்றாமையில் இருந்த பெற்றோருக்கு கூட, இப்போது தன் மகனை ஒரு பெண் அடிப்பதா? என்ற சிறு கோவம் எட்டிப் பார்த்தது.
“ஏம்மா நிறுத்து” என்று பெரியவர்களில் ஒருவர் கத்துவது கூட அவளுக்கு கேட்கவில்லை. பாவம் அவளும் என்னத்தான் செய்வாள்? இப்படி ஒரு சூழ்நிலையை அவளுக்கு எதிர்கொள்ளத் தெரியவில்லை. எதிரில் நிற்பவன் எத்தனைப் பெரிய ஆள். அவன் திருப்பி ஒரு அடி அடித்தால், தான் தாங்கிக் கொள்வோமா? என்ற நினைவு கூட அவளுக்கு இல்லை.
முடிந்த மட்டும் அவனை அடித்தவள், “ஏண்டா இப்படி பண்ண? உனக்கு நான் என்ன பாவம் பண்ணேன்?” என்று அப்படியே அங்கேயே தரையில் அமர்ந்து அழ ஆரம்பித்திருந்தாள்.
ஏனோ அவள் கோவத்தை சிரித்துக் கொண்டே கடந்தவனால், அவளின் அழுகையை பார்க்க முடியவில்லை. கீழே மடிந்து அமர்ந்தவளை ஒரு கரத்தால் தூக்கி நிறுத்தியவன், அவளுக்கு மட்டும் கேட்கும் தோணியில், “நான் இன்னும் உயிரோடத்தான் இருக்கேன். இப்போ நீ அழுகுற அப்படின்னா. நான் செத்துட்டேன்னு சொல்ல வர அப்படித்தான?” என்று அத்தனை அழுத்தமாய் கேட்டான்.
ஏனோ அவனுடைய வார்த்தையில், அவளின் கண்ணீர் அப்படியே உள்ளே செல்ல, அவனை வெறித்துப் பார்த்தாள். அதை தனக்கு சாதகமாய் மாற்றியவன். அவளை மீண்டும் தன் கை வளைவுக்குள் கொண்டு வந்து நிறுத்தி, “இப்போ நான் இங்க வந்தது, இங்கேயே இருக்கிறதுக்காக கிடையாது. எனக்கு கல்யாணம் ஆகிடுச்சி. இனிமே என்ன என் பொண்டாட்டி பாத்துப்பா. அத உங்க எல்லாருக்கும் சொல்லிட்டு போறதுக்குத்தான் வந்தேன். என் பொண்டாட்டிய என்னிக்கு நீங்க எல்லாரும் முழு மனசோட ஏத்துக்கிறீங்களோ, அப்பத்தான் இந்த வேந்தன் இந்த வீட்டு வாசல்ல காலடி எடுத்து வைப்பான்” என்று அழுத்தம் திருத்தமாய் சொல்லியவன், அங்கே ஓரமாய் நின்றிருந்த தன்னுடைய ஆட்களுக்கு கண் காமித்தான். அவர்கள் அவனின் காருக்கு முன்னே பின்னும் பாதுகாப்புக்கு வந்து நிற்க, தன் கை வளைவில் நின்றிருந்தவளின் கரத்தை அழுத்திப் பற்றி தன்னுடைய காருக்கு அழைத்து வந்து அமர வைத்தான். அவளோ ஏதோ கீ கொடுத்த பொம்மை போல் அமர்ந்திருந்தாள்.
அவனின் தாயிற்குத்தான் உள்ளம் கொதித்தது. அவனின் மீது கோவம் தான். அந்தப் பெண்ணை எல்லாம் நிச்சயமாய் தன் மருமகளாய் ஏற்றுக் கொள்ள முடியாதுத்தான். ஆனாலும் கூட மகன் இனி இங்கு வர மாட்டேன் என்று சென்றது பெற்ற தாயாய் பொறுக்க முடியவில்லை.
அருகில் இருந்த தன் கணவரின் கரத்தை அழுத்திப் பற்றியவர், “ஏங்க நம்ம வேந்தன்” என்று அழுகையூடே சொல்ல, “அவனுக்கே அவ்வளவு இருந்தா, அவன பெத்தவன் எனக்கு எவ்வளவு இருக்கும். அந்தப் பொண்ன என்னிக்கு மொத்தமா கை கழுவிட்டு வர்றானோ, அப்பத்தான் அவனுக்கு இந்த வீட்டுல இடம்” என்று அத்தனை கோவமாய் சொல்லிவிட்டு வீட்டுக்குள் சென்று விட்டார். அதில் அவருக்கோ இன்னும் அழுகை அதிகரித்தது. அப்படியே வெளி திண்ணையிலேயே தூணைப் பிடித்தப்படி அமர்ந்துக் கொண்டார்.
இங்கே அதை எல்லாம் சற்றும் பொருட்படுத்தாது காரை ஓட்டிக் கொண்டிருந்தான் சுடர்வேந்தன். அவன் அருகில் அமர்ந்திருந்தவளோ, ஏதோ பித்து பிடித்தது போல் அமர்ந்திருந்தாள்.
கழுத்தில் கிடந்த தாலி மகிழ்ச்சியை கொடுக்கவில்லை. மாறாக மிகப்பெரிய பாறாங்கல்லை அவளுக்குள் தூக்கி வைத்தது போல் இருந்தது. ஒரு பெண்ணின் வாழ்க்கையில் இன்னும் எத்தனை துயரைத்தான் சந்திக்கப் போகிறாள்? என்று தெரியவில்லை. கண்ணீர் கூட வர மறுத்தது. ரோட்டைப் பார்த்திருந்தாலும், இவள் பக்கமும் ஒரு பார்வையை பதித்திருந்தான்.
இப்போது அவன் ஒரு வார்த்தை பேசினாலும், அவள் உடைந்து அழ ஆரம்பித்து விடுவாள். அதென்னவோ அவள் அழுகையை அவனால் பார்க்க இயலாது. அதனால் முகத்தை இன்னும் இறுக்கமாக்கிக் கொண்டு இரும்பாய் அமர்ந்திருந்தான்.
சில மணி நேர பயணத்துக்குப் பின் அந்த கார் மிகப்பெரிய பங்களா ஒன்றிற்குள் நுழைந்தது. இவன் காரைப் பார்த்ததும், அங்கிருந்த வேலைக்காரர்கள் எல்லாம் சிறு பயத்துடனும், மரியாதையுடன் எழுந்து நின்றனர். அது எதுவுமே இவளின் கருத்தில் படவில்லை. காரை நிறுத்தியவன் அவள் பக்க கதவைத் திறக்க, அவளோ கல்லென அமர்ந்திருந்தாள்.
அதில் எரிச்சலானவனோ, அவள் கையைப் பிடித்து ஏறக்குறைய தர தர வென இழுத்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தான். சுற்றி இருந்த வேலைக்காரர்கள் வேடிக்கைப் பார்த்தாலும் யாரும் எதுவும் கேட்கவில்லை. அங்கிருந்த யாருக்கும் எதுவும் தெரிந்திருக்கவுமில்லை.
அவன் வீட்டிற்குள் நுழைந்ததுமே, உள்ளே இருந்த வேலையாட்கள் எல்லாம் வெளியேறியிருக்க, இப்போது நேரே அவளை அழைத்துக் கொண்டு அவனுடைய அறைக்குள் சென்று நிறுத்தினான்.
இத்தனை நேரம் அவன் பிடியில் வந்திருந்தவள், அவன் சட்டென்று கரத்தை விலக்கவும், தடுமாறி அப்படியே அங்கிருந்த சோபாவில் பொத்தென்று விழுந்தாள்.
அவனோ, அதைப் பார்த்து கொஞ்சமும் கவலைக் கொள்ளாது, “இதுக்கப்புறம் இது தான் உன் வீடு. இனி இங்கத்தான் நீ இருக்கப் போற. சோ இத தாண்டி உனக்குள்ள வேற ஏதாச்சும் இருந்திச்சின்னா, அத இப்பவே இந்த செகண்டே நீ மறந்துடனும். அழுகுறதா இருந்தாக் கூட, அது இந்த ரூம்மோட முடிஞ்சு போயிடனும்” என்று தாடை இறுக அழுத்திக் கூறினான்.
அவன் சொல்லியது எல்லாம் அவள் செவியில் விழுந்ததா? என்று கூட தெரியவில்லை. அப்படியேத்தான் உணர்வற்று இருந்தாள்.
ஒரு நொடி நின்று அவளைப் பார்த்தவன், அடுத்த நொடி அந்த அறையில் இருந்து வெளியில் வந்தான். அவனைப் பார்த்ததும், அவனுடைய ட்ரைவர் ஓடி சென்று அவனுக்கான கார் கதவை திறந்து விட, அவனுடைய ஆட்கள் எல்லாரும் அவரவர் காரில் ஏறிக் கொண்டனர்.
காரில் ஏறும் நொடி, “செல்லம்மா” என்று சத்தமாய் அழைத்தான். அதில் வீட்டில் சமையல் வேலைப்பார்ப்பவர் ஓடி வந்து, “சொல்லுங்க தம்பி” என்றார்.
“அந்தப் பொண்ணுக்கு சாப்பாடு கொண்டு போய் கொடுங்க. ஆனா யாரும் ஒரு வார்த்த அவ கிட்ட பேசக் கூடாது” என்று அழுத்தி சொல்லிவிட்டு காரில் ஏறியிருந்தான். அவருக்கோ அவன் சொல்வதை செய்வதுத்தானே வேலை. அவன் சொல்லியது போலவே, அவளுக்கு சாப்பிட சாப்பாடும் குடிக்க ஜூஸும் கொண்டு போய் கொடுத்தார். அவள் அதை உணரவே இல்லை. அவளிடம் பேச கூடாது என்று சொல்லிவிட்டான் தான்.
ஆனாலும் அந்தப் பென்ணைப் பார்க்கவே இவருக்கு பாவமாய் தோன்றியது. அதனால், “ஏம்மா, அழுகுறதுக்காச்சும் தெம்பு வேணாம்மா. சாப்டும்மா” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றிருந்தார். அவளோ அந்த உணவையும், அந்த அறையையும் மீண்டும் வெறித்துப் பார்த்தப்படி அமர்ந்து விட்டாள்.
கழுத்தில் கிடந்த தாலியை தூக்கி வீசி விட்டு அங்கிருந்து ஓடி விடு என்று அவள் மூளை சொல்ல, அவள் கரமோ அதை தொட கூட நடுங்கியது. பின்னே, அவளால் என்னத்தான் செய்ய முடியும். ஒரு கயிறை மாற்றியதுக்கே, அதனால் தான் அந்த உத்தமபுத்திரன் இறந்து விட்டதாக சொல்லும் சமுதாயத்தில், இப்போது இந்த தாலியை கழட்டிவிட்டால், அதுவும் அந்த ஒருவன் கட்டிய தாலி அது. அவளால் எப்படி அதை செய்து விட முடியும்? சோர்ந்துத்தான் போனாள். முழங்காலைக் கட்டிக் கொண்டு அந்த சோபாவிலேயே முடங்கிவிட்டாள்.
இங்கே காரை எடுத்துக் கிளம்பியவனோ, நேரே சென்றது ஒரு பழைய ரைஸ்மில்லிற்கு. அங்கே இவனுடைய ஆட்கள் சிலரை கட்டிப் போட்டு வைத்திருக்க, அவர்களை எல்லாம் புழுவை போல் பார்த்தவன், அங்கே இருந்தவனின் கழுத்தை நெறித்தான். அவனுடைய கை நரம்புகள் புடைத்துக் கொண்டு வெளியில் வந்தது. கண்ணெல்லாம் சிவக்க, தன் ஆத்திரம் தீரும் வரை அவனை தன் கையாலையே இறுக்கினான். அவன் மூச்சுக்கு திணறுவதை ஒரு வித சந்தோஷத்துடன் ரசித்தவன், அவன் துடி துடித்து சாவதை இமைக்காது பார்த்தான்.
அவனை தடுக்க அங்கே எவருமே இல்லை. ஆனால் இங்கே அவனுடைய ஆத்திரம் மட்டும் குறையவே இல்லை. அவன் உயிர் முற்றிலும் சென்ற பின் அவனை அலட்சியமாய் அவன் உடலை உதறி எறிந்தான்.
அதைப் பார்த்து அங்கே கட்டில் இருந்தவர்கள் பயந்து, “எங்கள விட்டுடுங்க. இனிமே நாங்க அந்த பொண்னு இருக்கிற பக்கமே தல வச்சி படுக்க மாட்டோம்” என்று கதறினர். ஆனால் அதை எல்லாம் அவன் சற்றும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. “வீரா” என்று சத்தமாய் அவன் அழைத்த அழைப்புக்கு ஓடி வந்தவன், ஒரு முள் கம்பி சுத்திய கட்டையைக் கொடுத்தான்.
அதை வாங்கியவன் அடுத்த நொடி, அங்கே கட்டில் இருந்த மூவரையும் அடித்து விலாசினான். அவர்கள் உடலில் ஒரு சொட்டு இரத்தம் கூட இருக்க கூடாது என்று நினைத்தானோ என்னவோ? அவர்கள் இறந்தப் பின்னும் அவனிடம் இரக்கம் வரவில்லை. மாறாக இன்னும் இன்னும் குரோதம் தான் கூடியது. அவனுடைய முகம், சட்டை எல்லாம் இரத்தம்.
அதில் சட்டையை அப்படியே கிழித்து தூர வீசியவன், அங்கே இருந்த வெந்நீரால் முகத்தை அடித்து கழுவினான். மின்னலென பெண்ணவளின் வெறித்த முகம் நினைவுக்கு வந்து அவனை சற்று சாந்தப்படுத்தியது.
அதன் பின் வீராவிடம் அடுத்து செய்ய வேண்டிய விஷயங்களை பார்த்துக் கொள்ள சொல்லியவன், மீண்டும் தன்னுடைய காரில் ஏறி அமர்ந்தான்.
“வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி ஹெஸ்ட் ஹவுஸ் போங்க” என்று சொல்லியப்படி சீட்டில் சாய்ந்தமர்ந்தான். இது வரை எப்படியோ. ஆனால் இதன் பின், அந்த வீட்டிற்குள் இந்த அடிதடியை கொண்டு செல்ல அவன் நினைக்கவில்லை. அதனால் நேரே ஹெஸ்ட் ஹவுசிற்குள் சென்று அலுப்பு தீரும் மட்டும் குளித்தான். அவன் சரியாக சாப்பிட்டு, உறங்கி முழுதாய் நான்கு நாட்கள் இருக்கும். இப்போது சற்று உறக்கம் அவனை இழுத்துப் பிடிக்க, சாப்பிட மனமின்றி அங்கிருந்த படுக்கையில் அப்படியே படுத்து விட்டான்.
அதன் பின் அவன் எழும் போது கிட்ட தட்ட நள்ளிரவைக் கடந்திருந்தது. பசி என்ற உணர்வே இன்றி எழுந்தவனின் கண்ணுக்குள் மீண்டும், அவளின் வெறித்த பார்வையே வந்து இம்சித்தது.
அதில் நேரத்தையும் பொருட்படுத்தாது, சட்டை ஒன்றை எடுத்து அணிந்துக் கொண்டு வெளியில் வந்தான். வந்தவன் ட்ரைவரை அழைக்காது அவனே காரை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு சென்றான். அங்கே ஹால் சோபாவின் கீழே செல்லம்மா படுத்திருந்தார். வழக்கமாய் கிளம்பி விடுவார். ஆனால் இன்று அந்தப் பெண் இருக்கவும், ஒரு பாதுகாப்புக்கு என்று அப்படியே படுத்திருந்தார். அவனின் காலடிச் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தவருக்கோ அவனைப் பார்த்து ஒரு வித அச்சம். ஏனெனில் அவனுக்கு இப்படி அவன் வீட்டிற்குள் இருப்பது பிடிக்காது.
ஆனால் அவனோ அதை பெரிதாய் எடுத்துக் கொள்ளாது, “போயி தூங்குங்க” என்றப்படி படியேற ஆரம்பித்தார். “தம்பி அந்தப் பொண்னு சாப்பிடவே இல்ல” என்றார்.
அதில் ஒரு நொடி நின்றவன் அடுத்த நொடி பதில் எதுவும் சொல்லாது மேலேறியிருந்தான். அதற்கு மேல் அவராலும் அங்கு இருக்க முடியாதே கிளம்பி விட்டார். இவனோ கோவமாய் அவளைத் தேடி அவனின் அறைக்கு சென்றான். அங்கே அவள் இருந்த நிலையில் அப்படியே ஒரு கனம் தேங்கி நின்று விட்டான்.
(அப்படி இவனே நிக்கிற அளவுக்கு என்னவாயிருக்கும்? அது என்னென்னு அடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)
தித்திக்குமா?..
Shree Ram
enna aachu 🤔💞💞💐💕💞💞💞💞💞💞💞💞💞💞