தேன் – 2

வெகு சாதாரணமாக, மயங்கி கிடந்தவளை தன் தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு, அவனுடைய காருக்கு சென்றான் சுடர் வேந்தன். சுற்றி இருந்த ஒருவருக்கு கூட அவனை எதிர்த்து கேள்வி கேட்க துணிச்சல் கிடையாது. ஆனால் அவன் தாலி கட்டுவான் என்று நிச்சயம் அவர்களில் ஒருவர் கூட எதிர்பார்த்திருக்கவில்லை.

இங்கே காரை முழு வேகத்தில் ஓட்டிக் கொண்டிருந்தவனின் மனமோ, “என்ன பண்ணியிருக்கேன்னு உனக்கு புரியுதா? “ என்று கேள்வி கேட்டது.

“முடிவெடுத்ததுக்கப்புறம் அத பத்தி யோசிக்கவோ, தயங்கவோ எதுவும் கிடையாது” என்று அழுத்தமாய் சொல்லியவன், பின் சீட்டில் மயக்கத்தில் இருந்த தேன் கவியைப் பார்த்தான். அவன் செய்த காரியத்துக்கு, நிச்சயம் அவன் வீட்டில் மிகப்பெரிய எதிர்ப்பு வரும். ஆனால் அவனுக்கோ மயக்கத்தில் இருப்பவள் எழுந்தால் அவள் கேட்கப் போகும் கேள்விக்கு என்ன பதில் சொல்வது? என்ற சிந்தனை மட்டும் தான் அவனுக்குள் ஓடிக் கொண்டிருந்தது.

சில நொடி அது குறித்து சிந்தித்திருப்பான். ஆனால் அடுத்த கணமே, அதை உதறியவன், “அவளுக்கு எதுக்கு நான் பதில் சொல்லனும்?” என்று சாதாரணமாய் தோளைக் குலுக்கிக் கொண்டு, காரை ஓட்டினான்.

அவன் அப்படித்தான். செய்வதற்கு முன் ஆயிரம் முறை யோசிப்பான். ஆனால் ஒன்றை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தப் பின், அது குறித்து சிறிதாய் கூட சிந்திக்கவோ, பின் வாங்கவோ நினைக்கவே மாட்டான். அவனுடைய இந்த குணம் தான், அவனை 28 வயதிலேயே சட்ட மன்ற உறுப்பினராக மாற்றியுள்ளது. அதுவும் அவனுடைய தொகுதியில் அவனுக்கு இருக்கும் ஆதரவுக்கு நிச்சயம் அடுத்த தேர்தலில் அமைச்சரானால் கூட ஆச்சர்யப்படுவதற்கில்லை. ஆனால் இப்போது வரை அவன் அது குறித்து சிந்தித்திருக்கவில்லை.

கட்சி விஷயமாக சென்னை சென்றிருந்தவன், இப்போது ஒரு பெண்ணை திருமணம் செய்து அழைத்து வருவான் என்று நிச்சயம் ஒருவரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் அவன் அவனுடைய வீட்டுக்கு செல்லும் முன்னே, இந்த செய்தி அவர்கள் வீட்டை எட்டியிருந்தது. அது தெரிந்ததாலோ என்னவோ, நேரே அவனுடைய வீட்டுக்கு செல்லாது மருத்துவமனைக்கு சென்று காரை நிறுத்தினான்.

காரில் மயக்கத்தில் இருந்தவளை தூக்கி சென்று, அவளுக்கு குளுக்கோஸ் ஏற்றும் படி சொல்லியவன், அவளை மயக்கத்தில் இருந்து எழுப்ப வேண்டாம் என்றும் சொல்லியிருந்தான்.

ஏனெனில், நிச்சயம் இப்போது அவள் கண் விழித்தால், அங்கு நடக்கப் போகும் அனைத்தையும் அவள் கேட்க வேண்டி வரும். அது அவளுக்கு வேண்டாம் என்று நினைத்தான்.

அவளுக்கு சிகிச்சை நடந்துக் கொண்டிருக்க, அவனுடைய பிஏ அருள் முருகனுக்கு கால் செய்தான்.

அவனோ எடுத்த எடுப்பிலேயே, “சார். உங்க அப்பா, நீங்க எங்க இருக்கீங்கன்னு, கட்சி ஆபிஸுக்கு அடுத்தடுத்து கால் பண்ணிட்டு இருக்காரு சார்” என்றான்.

“அடுத்த தடவ கால் பண்ணா, என் பொண்டாட்டியோட ஹனிமூன்ல இருக்கேன்னு சொல்லு” என்றான்.

“சார்” என்ற அருள் பதற, இங்கே நக்கலாய் சிரித்தவனோ, “நான் சொல்ற மாதிரி எல்லாத்தையும் செஞ்சு முடிக்கனும்” என்றான். “ஆனா சார் இது மேலிடத்துக்கு தெரிய வர்றப்ப” என்று தடுமாறினான்.

“இப்போதைக்கு அவங்களுக்கு எதுவும் தெரிய வேண்டாம். எப்படியும் நான் திரும்பி வர்றதுக்கு ஒரு மூனு நாளாச்சும் ஆகும். அதனால, புரியுதுத்தான” என்று அழுத்திக் கூறினான்.

“சரி சார்” என்று சொல்லிவிட்டு அவன் அழைப்பை கட் செய்ய, அவனிடம் வந்த மருத்துவரோ, “சார் அவங்க த்ரீ டேய்ஸ்க்கு மேல சாப்பிடவே இல்லன்னு நினைக்கிறேன். அவங்க ரொம்ப வீக்கா இருக்காங்க. இட்ஸ் பெட்டர் அவங்க இங்க ஒரு டேயாச்சும் ஸ்டே பண்ண வேண்டி வரும்” என்றார்.

அதில் நெற்றியை நீவியவனோ, “ஒகே ஒரு ஸ்பெஷல் நர்ஸ் வேனும்னு கேட்டிருந்தேன் இல்லையா?” என்று அழுத்திக் கேட்டான். “எஸ் சார். அரேஞ் பண்ணிருக்கேன்” என்ற மருத்துவர் ஒரு செவிலியரை அறிமுகப்படுத்தினார்.

அந்தப் பெண்ணைப் பார்த்தவன், “இந்தப் பொண்ண என் கூட வெளிய கூட்டிட்டுப் போறேன். அதுவரைக்கும், நீங்க இருந்து பார்த்துக்கோங்க” என்று மருத்துவரிடம் அழுத்தி சொல்ல, “சரி சார்” என்று தலையாட்டுவதை தவிர அந்த மருத்துவருக்கு வேறு வழி இருக்கவில்லை.

இந்த நர்ஸுக்கோ மெலிதாய் ஒரு அச்சம். ஆனாலும் அவனை பற்றி தெரியும். அவனை எதிர்த்து ஒருவராலும் பேச இயலாது. அதில் சிறு நடுக்கத்துடன் அந்த நர்ஸ் அவனுடன் நடக்க, சட்டென்று அவள் பக்கம் திரும்பினான்.

அவளோ மேலும் பயந்து பின்னே செல்ல, “உன்ன மாதிரித்தான் என் தங்கச்சியும் இருப்பா. ஆனா, என்ன அவ என்ன பார்த்து இப்படி பயப்பட மாட்டா” என்று சாதாரணமாய் சொல்ல, ஏனோ சட்டென்று அவளுக்குள் இருந்த பயம் பின்னே சென்றது.

அதில் அவன் காரில் ஏறிக் கொள்ள, நேரே ஒரு பெரிய மாலுக்குத்தான் அழைத்து சென்றான். தன்னுடைய கார்டையும், அதற்குறிய பின் நம்பரையும் கொடுத்தவன், “ஹாஸ்பிடல்ல பார்த்தத்தான, அவங்களுக்கு என்னெல்லாம் தேவைப்படுமோ அது எல்லாத்தையும் வாங்கிக்கோ. அந்தப் பொண்ணோட சைஸ்” என்றவன் அதையும் சொல்லி, அவளை வாங்கி வர சொன்னான்.

உடனே அவளும், அது எல்லாவற்றையும் சென்று வாங்க, இங்கே இவனோ மொபைலில் கேண்டி கிரஸ் கேம்மை விளையாடிக் கொண்டிருந்தான்.

அவள் அனைத்தையும் வாங்கி வர, அந்த நர்ஸை அழைத்துக் கொண்டு மீண்டும் மருத்துவமனைக்கு வந்தான். வந்தவன், “அவங்களுக்கு ட்ரஸ் சேஞ் பண்ணி விட்டுடுங்க” என்றான்.

“ஒகே சார்” என்று சொல்லிய நர்ஸும், அவளுடைய பழைய உடையை கலைந்து புது உடையை மாற்றினார். பின், சில நகைகளையும் எடுத்து அந்தப் பென்ணிடம் கொடுத்தவன், “இதையும் போட்டு விட்டுடு” என்றான்.

இதை எல்லாம் ஒரு ஆள் வைத்து செய்ய வேண்டிய அவசியமே இல்லை. அவளை எழுப்பினால், அதை அவளே செய்வாள். இல்லை இல்லை அவனே செய்ய வைப்பான். ஆனால் இப்போது அவனுக்குள் வேறு விஷயம் ஓடிக் கொண்டிருந்தது. அதற்காகத்தான் இத்தனையும் செய்தான்.

அன்றிரவு முழுவதும் அவன் அந்த மருத்துவமனையில் தான் இருந்தான். அதிகாலைப் போல் அவளுக்கு சற்று விழிப்புத் தட்ட மெல்ல கண்ணைத் திறக்க முயற்சித்தாள். ஆனால் அது முடியவில்லை. அதற்குள் அவளிடம் அசைவு தெரியவும், அருகில் இருந்த நர்ஸ், “மேடம். இங்கப்பாருங்க” என்றவள் மருத்துவரை அழைக்க சென்றாள்.

இங்கே அந்த நர்ஸ் பேசியது கூட இவளுக்கு ஏதோ பாதாளத்தில் இருந்து பேசியது போல் அத்தனை மெதுவாய் கேட்டது. கஷ்டப்பட்டு கண்ணைத் திறக்க முயற்சிக்க அதற்குள் அவளை வந்து பரிசோதித்த மருத்துவரோ, “ரிலாக்ஸ் மேடம். யுவார் ஒகே நவ்” என்றார்.

அதன் பின்னே நன்றாக கண்ணைத் திறந்தவள், மருத்துவரைப் பார்த்து, “நான் இங்க. நீங்க” என்றவளுக்கு எதுவுமே புரியவில்லை.

ஏனெனில் கடந்த மூன்று நாளாய், மருத்துவமனையில் தானே கிடந்திருந்தாள். இப்போது கண்டது கனவா? எனும் நிலையில் தான் இருந்தாள். அதற்குள் மருத்துவர் தான், வேந்தனின் சொல் படி அவள் உறக்க ஊசியை போட்டார். அதில் அவள் மீண்டும் உறக்கத்திற்கு சென்றிருந்தாள்.

வெளியில் வந்த மருத்துவர் விஷயத்தை சொல்ல, “ஒகே” என்றவனின் மொபைல் அடித்தது. அந்தப் பக்கம் சொன்ன செய்தியை கேட்டவனுக்கோ சிறு எரிச்சல் முகத்தில் பரவியது. அவன் எதிர்பார்த்தது தான். ஆனால் காலையிலேயே இப்படி ஆகும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. இப்போது அவன் உடனே சென்றாக வேண்டும்.

அதில், “அந்த பொண்ணுக்கு எப்போ மயக்கம் தெளியும்?” என்றான். அதில் அவனை வினோதமாக பார்த்தவரோ, “எப்படியும் ஒரு த்ரீ ஹவர்ஸாச்சும் ஆகும்” என்றார்.

“சரி உடனே டிஸ்சார்ஜ் பண்ணுங்க” என்று அவன் சொல்லிவிட, “இல்ல சார். அவங்க இப்போ” என்று சொல்ல முயற்சிக்க, “நான் சொன்னத செய்யுறதுதான் உன் வேலை” என்று அழுத்திக் கூறினான். அதற்கு மேல் அவனிடம் பேசுவது வேலைக்காகது என்பது புரிந்து உடனே அவளை டிஸ்சார்ஜ் செய்தார்.

பின்னே இவனே அவளை மீண்டும் தூக்கிக் கொண்டு தன்னுடைய காருக்கு வந்தான். அவளை முன் பக்கமாய் அமர வைத்து சீட் பெல்டை மாட்டியவன், அவளை ஒரு நொடி பார்த்தான்.

அழகாய் தெரிந்தாள். இந்த நேரத்தில் அவனின் மனம் அதை யோசிக்க கூடாதுத்தான். ஆனாலும் அவளுடைய அந்த ஆர்ப்பாட்டமே இல்லாத அந்த அழகில், இவனுடைய மனம் ஆர்ப்பரிக்கும் கடலாய் மாறியது.

அவன் கார் வீட்டிற்குள் நுழையும் போது, அவனுடைய சொந்தக்காரர்கள் அத்தனைப் பேரும் குவிந்திருந்தனர். பற்றாக்குறைக்கு கட்சிக்காரர்கள் சிலரும் இருந்தனர். காரை விட்டு இறங்கும் போதே அவன் மற்றவர்களைப் பார்த்த பார்வையில் அவர்கள் அங்கிருந்து சென்றிருந்தனர்.

இப்போது மயக்கத்தில் இருந்தவளை மெல்ல கை தாங்கலாய் தன் வீட்டுக்குள் அழைத்து செல்ல முடிவெடுத்து அடி எடுத்து வைத்தான்.

“அங்கேயே நில்லு” என்ற அவனுடைய அப்பாவின் குரல் கோவமாய் வந்து விழுந்தது. அதில் அவனோ அதை கொஞ்சமும் சட்டை செய்யாமல், மேற்கொண்டு நகர முயற்சித்தான்.

“கல்யாண வயசுல தங்கச்சிய, வீட்டுல வச்சிட்டு, ஒரு அண்ணன்காரன் பண்ற காரியமாடா இது?” என்று தன் கோவத்தைக் கூட முழுதாய் தன் மகனின் மீது காட்ட இயலாது, முந்தி சேலையால் வாயை மூடி ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தார் அவனின் அம்மா.

“அதெல்லாம் யோசிச்சிருந்தா, இப்படி ஒரு வேலைய பார்த்துட்டு வந்து நிப்பானா? என் நெஞ்செல்லாம் எரியுது? இனிமே நான் எந்த மூஞ்ச வச்சிட்டு வெளிய நடப்பேன்.” என்று ஆங்காரமாய், அங்கிருந்த பூந்தொட்டியை எட்டி உதைத்தார் அவனின் அப்பா.

சுற்றி இருந்த அத்தனைப் பேருமே, ஒரு வித இறுக்கத்தில் நின்றிருக்க, அது அத்தனைக்கும் காரணமானவனோ, “இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே கத்திட்டு இருக்கப் போற. போ. போயி எனக்கும், உன் மருமகளுக்கும் ஆரத்தி கரைச்சி எடுத்துட்டு வா” என்று சொல்லியவன், அத்தோடு விடாது, சுற்றி இருந்தவர்களைப் பார்த்து, “இன்னிக்கு அத்தன பேருக்கும் நம்ம வீட்டுலத்தான் கல்யாண விருந்து. அதனால யாரும் கிளம்ப கூடாது” என்று கூறினான்.

“புருஷன முழுங்கி, முழுசா மூனு நாளு முடியல. அதுக்குள்ள, இன்னொரு புருஷன தேடிட்டு வந்து நிக்கிற இவ என் மருமகளா?” என்று அவனின் தாய் கோவமாய் அவன் கைவளைவில் மயக்கத்தில் இருந்தவளை அடிக்க பாய்ந்தார்.

“அம்மா” என்று அந்த இடமே அதிரும் அளவுக்கு கத்தியவன், “அவ புருஷன் நான்த்தான். உன் கண்ணு முன்னாடி நான் உயிரோடத்தான நின்னுட்டு இருக்கேன். உனக்கு கோவம்னா, அத என்கிட்ட காட்டு. அத விட்டுட்டு, அவள ஒரு வார்த்த பேசுன, அப்புறம் உனக்கு மகன்னு ஒருத்தன் இருக்க மாட்டான்” என்று சொல்ல, அவனின் அம்மாவோ, அப்படியே அதிர்ந்து நின்று விட்டார்.

“அவன் என்ன சொல்றது? நான் சொல்றேன். இன்னியல இருந்து நீ என் புள்ள கிடையாது. இப்பவே நீ இந்த வீட்ட விட்டு போயிடு” என்று அவனைப் பார்த்து கத்தியவர், அதிர்ந்து நின்றிருந்த தன் மனைவியைப் பார்த்து, “ஒரு செம்புல தண்ணிய மோந்துக் கொடு, இவன இப்பவே, இங்கேயே தல முழுகிடுறேன்” என்றார்.

“அட என்ன சித்தப்பா, நம்ம வீட்டு புள்ள மனச கெடுத்த, அவள வெட்டி விடுறதுக்கான வேலைய பாக்காம, இப்புடி நம்ம வீட்டு புள்ளைய போக சொல்லிட்டிருக்கீங்க. விசயம் வெளிய தெரியிறதுக்குள்ள, அந்தப் புள்ளைக்கு காசு பணத்த கொடுத்து அனுப்புற வழிய பாருங்க” என்று ஒருவன் சொல்லி முடிக்கும் முன்னே, தன் மனைவியை ஒரு கையில் தாங்கியிருந்தவன், மறு கையால் அவன் கழுத்தை நெறித்திருந்தான்.

அத்தனைப் பேரும் அதிர்ந்து அவனைப் பார்க்க, “உங்க எல்லாருக்கும் ஒரு தடவ சொன்னா புரியாதா? அவ என் பொண்டாட்டி. அவளுக்கு இந்த வீட்டுல இடம் இல்லன்னா, எனக்கு இந்த வீடு தேவை கிடையாது. இன்னும் ஒரு வார்த்த என் பொண்டாட்டிய பத்தி பேசுனீங்க, அப்புறம் பேசுறதுக்கு வாய் இருக்காது” என்று சொல்லியப்படி கர்ஜித்தான்.

அவனின் சத்தத்தில், மயக்கத்தில் இருந்த தேன்கவி மெதுவாய் கண் திறக்க, அவனை அத்தனை நெருக்கத்தில் பார்த்து திடுக்கிட்டு விலக முயன்றாள். அவனோ அவளை விடாது, இறுக்கிப் பிடிக்க, அப்போதே அவள் கழுத்தில் தொங்கி கொண்டிருந்த தன் தாலியைப் பார்த்தாள். பார்த்தவளுக்கு நடந்த அத்தனையும் கண் முன்னாடி வர, கோவமாய், “ஏண்டா இப்படி பண்ண? உன்ன நான் உயிரோடவே விட மாட்டேன்” என்று அவனை தன் ஆத்திரம் தீறும் மட்டும் அடிக்க ஆரம்பித்தாள் அவள். 

“உன்னால முடிஞ்சா என்ன கொன்னுக்கோ” என்று புன்னகை முகமாய் தன் இரு கையையும் விரித்து அவள் அடிக்கும் அடியை சுகமாய் தாங்கிக் கொண்டான் அவளின் சுடர் வேந்தன். அதை அங்கிருந்த அத்தனைப் பேரும் அதிர்ச்சியாய் பார்த்தனர்.

(இதன் பின் இவர்களுடைய வாழ்க்கையில் என்ன நடக்கப் போகிறது? வேந்தன் ஏன் கவியை திருமணம் செய்தான்? என்ற கேள்விக்கான பதிலை அடுத்தடுத்த அத்தியாயங்களில் காண்போம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்னிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

தித்திக்குமா?..

Comments   1

*** தேன் – 2 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***