தென்றல் – 8

நீண்ட நாட்களுக்கு பின், அந்த பெரிய வீட்டில் அத்தனை உறவுகளும் கூடி நின்று சிரித்து பேசிக் கொண்டிருந்தனர். வீடே அத்தனைக் கோலாகலமாய் ஜொலித்தது. சங்கரேயனுக்கு எல்லாம் வாய் எல்லாம் பல்லாக, மீசையை நீவியப்படி அமர்ந்திருந்தார். ஏற்கனவே நிலா அத்தனை அழகு. இப்போது சொல்லவும் வேணுமா என்ன? தங்க நிற தாவணியில், பார்க்கவே தேவதையாய் மின்னினாள். தன் மகளின் அழகை பார்க்க, பார்க்க செல்விக்கு தெவிட்டவே இல்லை. தாமரையோ தன் கணவர் இன்னும் வரவில்லை என்று வாசலுக்கும், வீட்டுக்குமாய் நடந்துக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கிருந்த ஒரு முதியவர், “என்ன குச்சி கட்ட மாமன்ன வர சொல்லிட்டீகளா இல்லையா? இன்னும் சமைஞ்ச புள்ளைய எத்தன நேரத்துக்கு, இங்கனையே உக்கார வைக்கப் போறீக" என்று குரல் கொடுத்தார்.

“ஏலே ராணி, குமார்கிட்ட சொல்லி, கதிர் எங்கன்னு பாத்து கூட்டி வர சொல்லு" என்று செல்வி சொல்ல, “அவென் எம் புள்ளைக்கு குச்சி கட்டக் கூடாது" என்று அத்தனை சத்தமாய் கத்தினார் தாமரை.

அவருடைய கத்தலில், அத்தனை நேரம் சிரிப்பில் நிறைந்திருந்த இடம் சட்டென்று அமைதியானது. “ஏக்கா? செத்த நேரம் அமைதியா இருக்கா” என்றார் செல்வி.

“உன் ஒருத்திக்காண்டி மட்டும்ந்தேன், இவளுக்கு இந்த வூட்டுல முறை செய்ய சம்மதிச்சேன். அதுக்காக, கண்டவனும், எம் புள்ளைக்கு முறை செய்ய வரக் கூடாது" என்றார் தாமரை.

“ஏத்தா தாமரை நீ பேசுறது உமக்கே சரியா படுதா? மாமன் முறைய எந்த ஆம்பளடி விட்டுக் கொடுப்பான்” என்று பெரியவர் ஒருவர் சொல்ல, “அவன் எம்புள்ளைக்கு மாமன்னே கிடையாதுங்க்றேன். பொறவென்ன அவன் விட்டுக் கொடுக்கிறது" என்று சரிக்கு சரி நின்றார் தாமரை.

“அத நீரு சொல்லக் கூடாதுத்தா. ஆயிரந்தேன் சொன்னாலும், கூடப்பிறந்த பொறப்பு இல்லன்னாகாது" என்று ஒரு பாட்டி கூறினார்.

“அப்படி சொல்லுங்க மதினி. இவளுக்கு, என்னத்த சொன்னாலும் புத்திக்கு எட்டாது" என்று சங்கரேஸ்வரியும் தன் பங்குக்கு, மருமகளை இடித்துரைத்தார்.

“ஆறு வேணும்னாலும், என்னத்த வேணும்னாலும் சொல்லுங்க, எம்ம புள்ளைக்கு அவென் எதுவும் பண்ணக் கூடாது. நான் அதுக்கு ஒரு காலமும் சம்மதிக்க மாட்டேன்" என்றார் தாமரை.

“மாமன் சீர செய்றதுக்கு எவ சம்மதம்டி வேணும்? அது அவென் உரிமை” என்று கூட்டத்தில் இருந்த பெரியவர்கள் குரல் கொடுத்தனர்.

“என் உசுரு இருக்கிற வர அது நடக்காது" என்று தாமரை சொல்லிக் கத்த, அங்கே, நிலா பயத்தில் செல்வியின் கரத்தை இறுக்கிப் பிடித்தாள்.

அப்போதே நிலாவின் முக வாட்டத்தையும், பயத்தையும் கவனித்த செல்வி, “இப்போ என்னக்கா உன் பிரச்சன? எம் தம்பி முற செய்யக் கூடாது அதான? சரி" என்றார் அவர்.

“ஏத்தா, அவ தான் கூறுகெட்டு போய் பேசிட்டு இருக்கான்னா, நீயும் என்னத்தா அவ கூட சேர்ந்து பேசிக்கிட்டு" என்று சங்கரேஸ்வரி ஆதங்கமாய் கேட்டார்.

“நில்லுத்த. அதான் அவ சொல்றாள்ள, நம்மளும் அவ என்னத்தான் மனசுல நெனச்சிட்டு இருக்கான்னு கேப்போம்" என்றார் செல்வி.

அதில் அத்தனைப் பேரும் தாமரையைப் பார்க்க, “என்னத்தடி சொல்றது. எம்புள்ளைக்கு, அவன் குச்சி கட்ட கூடாது" என்று விடாப்படியாக நின்றார்.

“சரிக்கா, எம் தம்பி கட்டல. அப்போ யார வச்சி நீ குச்சி கட்டப் போற?” என்றார் செல்வி.

“எம் புள்ளைக்கு முறைக்கா பஞ்சம், என் மதினி மகங்கே, ஒன்னுக்கு மூணு பேரு இருக்கானுங்க. அவனுங்க கட்டுவானுங்க" என்றார் தாமரை.

“ஏத்தா, உமக்கு கூறு கீறு கெட்டுப் போச்சா, உம் புருஷன் வழி சொந்தம் எப்படிடி, மாமன் முறை செய்ய முடியும். இரத்த சொந்தம் தாண்டி கட்டனும்" என்றார் பெரியவர் ஒருவர்.

“இப்போ அவென் உசுரோட இல்லன்னா, என்னப் பண்ணிருப்பீக?” என்று தாமரை கேட்டு முடிக்கும் முன்னே, “தாமரை” என்று கத்தியிருந்தார் சங்கரேயன்.

அப்பாவின் குரலில், அன்னிட்சையாய் தாமரை சட்டென்று வாயை மூட, அங்கே பெரியவருக்கோ, “உம்ம புள்ளைக்கு, எம் புள்ள முற செய்யக் கூடாது அவ்வளவுத்தான, சரி.. உம்ம இஷ்டத்துக்கு என்னப் பண்னனுமோ பண்ணிக்கோ. ஆனா நான் செத்தாக் கூட என் முகத்துல முழிச்சிடாத" என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று வீட்டுக்குள் சென்றிருந்தார்.

ஏனோ அவருக்கும், மகிழ்ச்சிக்கும் கொஞ்சம் கூட கொடுத்து வைக்கவில்லையோ? என்று தான் தோன்றியது.

அவர் சென்றதும், செல்விக்கோ, அப்பாவை பார்ப்பதா? இல்லை அக்காவை சமாளிப்பதா? என்றே தெரியவில்லை. தன் தம்பியையும், கணவரையும் எதிர்பார்த்து தான் நின்றிருந்தார்.

ஆனால் அதற்குள், இங்கே தாமரையை அத்தனைப் பேரும் மாறி, மாறி பேச ஆரம்பிக்க, அவரோ அப்போதும் இறங்கிவிடாமல் அப்படியே நிற்க, நிலாவோ அழ ஆரம்பித்திருந்தாள்.

அதில் அத்தனைப் பேரின் கவனமும், நிலாவின் பக்கம் செல்ல, “அடியே கிறுக்கி, நல்ல நாள் அதுவுமா, புள்ளைய கலங்கடிக்கிறீயே, உமக்கே இது அடுக்குமா?” என்று சங்கரேஸ்வரி பேத்தியின் கண்ணீரை துடித்தார்.

“ஆத்தா. நீ என்னத்துக்கு வெசனப்படுற. இதெல்லாம் ஒன்னும் இல்லையா. சும்மா பெரியவக பேசுறதுத்தேன்" என்றார் செல்வி.

“இப்போ நீ என்னெத்துக்குடி, கண்ணைக் கசக்குறவ” என்று தாமரை தன் மகளை முறைத்தார்.

அவளுக்கோ, இது எதுவுமே வேண்டாம் என்று சொல்லும் மன நிலைத்தான். அதற்குள் இங்கு நடக்கும் கலவரம் தோட்டத்துக்கு சென்றிருந்த கதிர் மற்றும் முருகேசன் செவியில் விழுந்தது.

அதில் தென்னை மரத்தின் மீது ஏறியிருந்த கதிர், கீழே நிற்கும் தன் மாமனைப் பார்த்தான்.

“நீ கீத்த வெட்டுள்ளே. எவென் உம்ம முற செய்ய விடாம தடுக்கியான்னு, நானும் பாக்கென்" என்று வேஷ்டியை மடித்துக் கட்டியப்படி கூறினார் செல்வியின் கணவன் முருகேசன்.

அதில் அழகாய் சிரித்தவன், கையில் இருந்த அரிவாளால், அங்கிருந்த குருத்து ஓலையை வெட்டி சர சரவென்று கீழே போட்டவன், அடுத்த நொடி, அங்கிருந்து கீழே குதித்திருந்தான்.

“ஏலே பார்த்து" என்று முருகேசன் சொல்ல, “அதெல்லாம் நிறையா பாத்தாச்சு மாமா” என்றான் கதிர்.

அவன் முகத்தில் உதயமாகியிருக்கும் புதிய புன்னகையைப் பார்த்ததும், “என்னலே, இந்த வாட்டியும், உம்ம அக்காக்காரிக்கு எதுவும் விட்டுக் கொடுக்கப் போறீயா?” என்றார் முருகேசன்.

“மாமன் முறைய விட்டுக் கொடுத்துட்டு, என்ன சேலைய கட்டிட்டு திரிய சொல்றீகளா மாமா? அதுவும் போக, இந்த வாட்டி, நானா, என் அக்காவான்னு ஒரு கை பாத்துடலாம்" என்றான் கதிர்.

“அப்படி சொல்லுலே. வா, அங்க உன் அக்காகாரியப் போய் என்னென்னு கேப்போம்” என்ற முருகேசன் கதிரில் தோளில் கரத்தைப் போட்டார். அதன் பின் இருவருமாய் வெட்டி வைத்திருந்த குருத்தோலையுடன், புல்லட்டில் கிளம்பியிருந்தனர்.

இங்கே, தாமரையோ, “இந்த மனுஷன் வேற, இன்னேரத்துக்கு எங்கப் போனாருன்னு தெரியல" என்று தன் கணவரையும் திட்டியப்படித்தான் அங்கே நின்றிருந்தார்.

“இங்கப்பாருத்தா. உமக்கு மனுஷன் மக்க வேணும்னு நினைக்கிறீயா? இல்லையா? உன் இஷ்டத்துக்குலாம் முறைய மாத்த முடியாது” என்றார் ஊர் பெரியவர் ஒருவர்.

“இங்க அப்படியே எல்லாம் முறைப்படித்தான் நடக்குதோ? இல்ல தெரியாமத்தேன் கேட்கேன். எமக்கே அவன் தம்பி இல்லன்னு ஆனப் பொறவு, அவென் எப்படி எம்புள்ளைக்கு மாமனாவான்" என்றார் தாமரை.

“குடும்பம்னா, கோபம் தாபம் இருக்கிறதுதான், அதுக்குன்னு சொந்தம் இல்லன்னு ஆகிடாது. கொஞ்சம் பொறுமையா போ” என்று ஒரு பாட்டி கூறினார்.

“சொந்தம் இல்லன்னா, இல்லத்தான்” என்று தாமரை சொல்லி முடிக்கும் முன்னே, “அத முடிவு பன்றதுக்கு நீங்க ஆறு மதினி?” என்று கேட்டப்படி அங்கு வந்து சேர்ந்தான் முருகேசன்.

“என் புள்ள வந்துட்டான்ல, இனிமேல், இவ எப்படி பேசுதான்னு நான் பாக்கேன். நீ வெசனப்படாதத்தா, உன் சித்தப்பேன் எல்லாத்தையும் பார்த்துப்பான்" என்று சங்கரேஸ்வரி நிலாவின் கண்ணீரை தன் சேலையால் துடைத்து விட்டார்.

“இங்கப்பாருங்க கொளுந்தனாரே. இதுல நீங்க தலையிடாதீக" என்றார் தாமரை.

“என்ன? ஆறும் தலையிடக்கூடாதுன்னா, அப்போ உமக்கு நாங்களும் வேண்டாம்னு நினைக்கிறீகளோ? அதான், உம்ம அக்கா சொல்லிட்டாத்தாகத்தான, இன்னும் ஏண்டி அங்க நிக்கிறவ. கிளம்பு” என்று செல்வியைப் பாத்து கூறினார் முருகேசன்.

அதில், செல்வி அங்கிருந்து தன் கணவரின் அருகில் செல்லப் போக, “சித்தி" என்று நிலா செல்வியின் கையைப் பிடித்தாள்.

“எம்ம மன்னிச்சிடுத்தா. உம்ம எம் புள்ளையாத்தேன் நினைச்சேன். ஆயிரம் சொன்னாலும், பெத்தவளுக்குத்தான் எல்லா உரிமையும்னு அவ சொல்லாம சொல்லிக் காமிச்சிட்டா. இதுக்கு மேல நான் எந்த உரிமையில நான் நிக்கிறது. உம்ம ஆத்தா சொல்ற மாதிரி நடந்துக்கத்தா” என்று நிலாவின் கன்னம் தாங்கி சொல்லிவிட்டு, தன் கண்ணீரை துடைத்தப்படி எழுந்தார் செல்வி.

அதில் தாமரையின் உள்ளம் சுருக்கென்று தைக்க, “கூட பொறந்தவளுக்கே உரிமை இல்லன்னப்புறம், நமக்கென்ன" என்று சுற்றி இருந்தவர்களும் அங்கிருந்து கெளம்ப போக, “ஆறும் எங்கேயும் போக கூடாது. “என் அக்கா மவளுக்கு என்னை மீறி எவென் குச்சி கட்டுறான்னு நானும் பார்க்கிறேன்" என்று சொல்லியப்படி முன் வந்து நின்றான் கதிர்.

வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டையில், அத்தனை கம்பீரமாய் வந்து நின்ற கதிரைப் பார்த்த அங்கிருந்த வயசுப் பெண்கள் எல்லாம் அவனை கண்ணிமைக்காமல் பார்த்தனர்.

அவனைப் பார்த்ததும், தாமரைக்கு கோவம் பொத்துக் கொண்டு வர, “போகனும்னா போங்க. எம் புள்ளைக்கு எப்படி முற செய்யனும்னு எமக்கு தெரியும். மதினி. நீங்க போயி, நம்ம வீராவ வர சொல்லுங்க. அவென் வந்து குச்சி கட்டட்டும்" என்றார்.

அதில் அவரோ தயங்கியப்படி, முருகேசனைப் பார்க்க, தன் ஒன்று விட்ட அக்காவை தீயாய் முறைத்தான்.

 

“அதான் சொல்றாகுளத்த போ. போய் உம்ம புள்ளைய வர சொல்லு. அவென் எப்படி கட்டுறான்னு நான் பார்க்கேன்” என்று அவரிடம் சொல்லியவன், முருகேசனிடம் திரும்பி, “என்ன மாமா? உம்ம அக்கா பையன் குச்சி கட்ட வராணாம்” என்று மீசையை நீவியப்படி முருகேசனைப் பார்த்துக் கேட்டான் கதிர்.

“முறைய மீறுறதும், உறவு வேணாம்ன்றதும் ஒன்னுத்தேன்ல. எம்ம மாப்பிள்ளைய பகைச்சா, அவன் எமக்கும் எதிராளித்தான்லே, நீ என்ன வெட்டுறது. உம்ம மீறி வேற ஒருத்தன், ஓலையில கையை வைக்கட்டும் அவென் கைய நான் வெட்டிட்டு ஜெயிலுக்கு போறேன்ல" என்றார் முருகேசன்.

அவர்களின் பேச்சை எல்லாம் கேட்ட தாமரையின் மதினியோ, “தாமர செத்த பொறுத்தா. அதான் எல்லாரும் சொல்றாகல்ல" என்றவர் கதிரின் கண்ணில் தெரிந்த அந்த கோபம் மனதை பிசைந்தது. கிராமத்தில் இதெல்லாம் சாதாரண விசயம் கிடையாதே. கொலை செய்யும் அளவுக்கு கூட சென்று விடும்.

“அப்போ, நீங்களும் இவுக மாதிரியே ஒதுங்கிக்கிறீகளோ, சரி அப்போ பாண்டி வந்து குச்சி கட்டட்டும். அவெனும் எமக்கு தம்பி முறைத்தான?” என்று சொல்லி முடிக்கும் முன்னே தாமரையின் கன்னத்தில் பளாரென்று அடித்திருந்தார் தாமரையின் கணவன் செந்தில்நாதன்.

(அட அடுத்த எண்ட்ரீயா? தாமரைக்கே அடியா? இவர் யார் பக்கம்னு தெரியலையே. சரி அடுத்து என்னென்னு அடுத்த எபிசோட்ல பார்க்கலாம். அதுக்கு முன்னாடி, இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு ரொம்ப பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே உங்களுக்கு இந்த கதைப் பிடிச்சிருந்தா எப்பவும் போல லைக் பண்னிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

தென்றல் தீண்டுமா?

Comments   0

*** தென்றல் – 8 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***