மலரின் வீட்டில் இருந்து கோவமாய் கிளம்பிய கதிருக்கு, பின்னே நிலா அமர்ந்திருக்கிறாள் என்ற சிந்தனைக் கூட இல்லை. அதில் முழு வேகத்தில், பைக்கை ஓட்ட, இங்கே நிலாவுக்கோ, அடி வயிற்றில் சுள்ளென்று ஒரு வலி, உயிர் வரை சென்று துடித்தது. அதில் ஒரு கரத்தில் அடிவயிற்றைப் பற்றியவள், இன்னொரு கரத்தால் கதிரின் சட்டையை இறுக்கிப் பிடித்தாள்.
அவன் சட்டை இழுக்கப்பட்ட நொடி சட்டென்று அவன் வேகத்தைக் குறைக்க, அவனோ அவள் பக்கம் திரும்பாமல், “இன்னொரு வாட்டி, எவளாச்சும் என்கிட்ட எதையாச்சுக் கொண்டு வந்து கொடுக்க சொன்னான்னு, வந்து நீட்டுன. அம்புட்டுத்தேன்" என்று திட்டினான்.
அவளோ வலியில் உதட்டை அழுந்தக் கடிக்க, அதிலும் அவன் திட்டியதில் கண்ணீர் வேறு சட்டென்று வந்து தொலைக்க, அவனோ, “எதுக்கும் வாய திறக்காத" என்று அவன் சொல்லி முடிக்கும் முன்னே, இங்க வலி தாங்காமல், “மா…மா” என்று தன் பலம் மொத்தமும் திரட்டி சத்தமாய் அவனின் சட்டையைப் பிடித்திழுத்தாள் நிலா.
“பச்சோல கீத்துக்குள்ள,
பதுங்கி நிக்கிற பசுங்கிளிக்கு,
மறைஞ்சிருக்கிற பருவம் வந்திருச்சு
மாமனுக்கு சீரு செய்ய
செலவு வந்திருச்சு”
அதில் சட்டென்று புல்லட்டை நிறுத்தியவன், தன் பின்னே அமர்ந்திருந்தவளை பார்க்க, அவள் கண்ணெல்லாம் சிவந்து கண்ணீர் பொள பொளவென்று கொட்டியது. அதைப் பார்த்து பதறி இறங்கியவன், “என்னத்தா பண்ணுது?” என்றவனுக்கு ஒரு நொடியில், அவனுடைய உயிர் அவன் கையில் இல்லை.
“வலிக்குது" என்று அவள் அடிவயிற்றை அழுந்தப் பிடித்து சொல்ல, அவனுக்கோ ஏதோ புரிந்தும், புரியாத ஒரு நிலை. அந்த ஆறடி ஆண்மகன், அந்த நொடி என்ன செய்ய என்று தெரியாமல் தேங்கி நின்றான்.
சட்டென்று சுதாரித்தவன், புல்லட்டில் இருந்த தண்ணீரை எடுத்து அவளுக்கு குடிக்க கொடுத்தான். அவளோ தண்ணீரை வாங்காமல், “வூட்டுக்கு போணும்" என்று சிறுமியாய் அழுதாள்.
அதில் இதுவரை இருந்த அவனுடைய பொறுமை காற்றில் பறக்க, “ஏன்? இதுல விஷம் கிஷம் கலந்து வச்சிருப்பேன்னு, உம்ம ஆத்தா மாரியே நினைக்கிறீயாக்கும்" என்று கேட்டான் கதிர்.
அவன் குரலே கணீரென்று தான் ஒலிக்கும். அதிலும் அவன் கோவத்தில் பேசும் போது சொல்லவே வேண்டாம். இப்போது அவனுடைய வார்த்தையில், அவள் உடல் மேலும் நடங்கியது.
பயத்தில் வேகமாய் அந்த தண்ணீரை வாங்கி கடகடவென்று குடித்தாள். தண்ணீரை குடித்ததும் சற்று தெம்பு கிடைக்க, “வீட்டுக்கு போணும்" என்றாள். அவளுக்கோ, அவள் உடலில் புதிதாய் ஏதோ ஒரு மாற்றம் நிகழ்கிறது என்று மட்டும் புரிந்தது. ஆனால், என்ன? ஏது என்று தான் புரியவில்லை. தாயை தேடும் பிள்ளையாய், அன்னேரம் அன்னையை மனம் தேடியது.
அது அவனுக்கும் புரிய, “செத்த இரு. ரெண்டு நிமிஷத்துல வூட்டுக்கு போயிடலாம்" என்றவன் அவன் சொல்லியது போலவே அவளை அடுத்த ரெண்டாவது நிமிடத்தில், அந்த பெரிய வீட்டிற்கு அழைத்து வந்திருந்தான்.
ஏனெனில், இவன் அவளின் வீட்டு முன் சென்று பைக்கை நிறுத்தியிருந்தால், அவளுடைய அம்மா, என்ன ஏது என்று கூட கேட்காமல், நிலாவை அடித்து வெளுத்து விடுவார் என்று அவனுக்கும் தெரியும். அதனால் தான் இங்கு அழைத்து வந்திருந்தான்.
அவளுக்கோ அன்னையை விட சித்தி மேல் எப்போதுமே பிரியம் அதிகம். அதில் வேகமாய் பைக்கில் இருந்து இறங்கப் போக, “ஒத்த நிமிஷம்" என்றவன், தன் சட்டையை சட்டென்று கழட்டி, அவளுக்கு போட்டு விட்டான். அதில் அவனுக்கே உண்டான வாசம், அவளின் நாசியில் நுழைய, சட்டென்று வலி எல்லாம் பறந்தது போல் ஒரு மாயை.
அதற்குள், வாசலுக்கு வந்திருந்த செல்வி, இருவரும் நிற்கும் கோலத்திற்கான காரணம் புரியாமல், “என் கண்ணு” என்றவர் வேகமாய் நிலாவிடம் ஓடி வந்தார்.
அவருக்கோ, தன் அக்கா, எதுவும் நிலாவை அடித்துவிட்டாளோ? அதனால் கதிர் அவளை சமாதானப்படுத்த அழைத்து வந்தானோ? இல்லை இடைவெளியில் யாரும் நிலாவிடம் வம்பு செய்தார்களோ? என்று ஏதேதோ ஒடியது. அதெல்லாவற்றையும் தாண்டி, நிலாவுடைய கண்ணீர் வடிந்த முகம், செல்விக்கு என்னவோ, ஏதோ என்ற படபடப்பை கூட்டியது.
“என்னத்தா ஆச்சு. ஆரும் எதுவும் சொல்லிட்டாகளா? டேய் என்னடா?” என்று கதிரைப் போட்டு கேள்வி மேல் கேட்டு தொடுக்க, “ச் முதல்ல அவள உள்ளார கூப்டு போக்கா” என்றான் கதிர்.
“என்னலே, இவ ஆத்தா எதுவும்" என்று செல்வி மீண்டும் கேள்வி கேட்க முயன்றாள். “ஏக்கா சொன்னா உமக்கு புரியாதா. முதல்ல புள்ளைய வூட்டுக்குள்ள கூட்டிப் போயி அவ கிட்ட என்னான்னு விசாரி. வயித்த புடிச்சிட்டு நிக்குறா” என்றவனுக்கு, அதற்கு மேல் அதை எப்படி அக்காவிடம் சொல்ல என்றே புரியவில்லை.
அப்போதே செல்விக்கு மூளையில் அவன் சொன்ன விஷயம் புரிய, “ஆத்தே. என்ற வூட்டு மகாராசி. அம்மா மீனாட்சி தாயே” என்றவருக்கு மகிழ்ச்சியில் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை.
நிலாவின் முகம் வழித்து திருஷ்டி கழிக்க, நிலாவோ பேந்த பேந்த விழித்தாள். “சித்தி வலிக்குது" என்று சிறுமியாய் அவள் சொல்ல, “வாத்தா. வா” என்றவர் நிலாவை உள்ளார அழைத்து சென்றார்.
சில நொடி அங்கேயே நின்ற கதிருக்கு, அடுத்து என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ? என்ற யோசனைத்தான். அதே நேரம், நிலா, “மாமா” என்று சத்தமாய் அழைத்த நொடி, அவளின் மாமன் தான் என்ற எண்ணம் வேரூன்றியது.
அதுவரை அக்கா மவளாய் மட்டுமே தெரிந்தவள், இப்போது அவளின் சொந்தமாய் தெரிந்தாள். தான் ஆடா விட்டாலும், தன் அசை ஆடும் என்பதை அவன் அறிந்துக் கொண்டான். அதில் ஒரு மாமனாய், அவளுக்கு செய்ய வேண்டியதை தான் செய்தே தீருவேன் என்ற எண்ணமும் சேர்ந்தே வந்தது.
முன்பாக இருந்திருந்தால் கூட, அக்காவின் குணம் அறிந்து சற்று விலகி நின்றிருப்பான். ஆனால் இப்போது, தன்னுடைய உறவையோ, முறையையோ விட்டுக் கொடுக்கும் எண்ணம் அவனுக்கு சுத்தமாய் இல்லை.
அதில் தன்னுடைய புல்லட்டை எடுத்து அவன் கிளம்பப் போக, அவசரமாய் அவனிடம் ஓடிவந்தார் ராணி.
அதில் அவன் பைக்கை நிறுத்தி, “அக்கா ஏதும் சொன்னாகளா?” என்று கேட்டான் கதிர். “உங்கள பின்பக்கம் போய் குளிச்சிட்டு வெளிய போக சொன்னாக" என்றார் ராணி.
“சரி" என்றவன் நேரே அவன் தங்கியிருக்கும் வீட்டுக்கு சென்றான். அடுத்த சில நொடிகளில், அந்த விஷயம் தாமரையின் காதுக்கு செல்ல, “எங்கனப் போயி சொல்லியிருக்கா பாத்தீகளா? ஆத்தா உசுரோட இருக்கேன்ற நினைப்பாச்சும் அவளுக்கு கெடக்கா” என்று பொறுமியப்படி தான் பெரிய வீட்டை நோக்கி ஓட்டமும், நடையுமாய் சென்றார்.
“அட கூறு கெட்டவளே, புள்ள எம்புட்டு பெரிய நல்ல சேதி சொல்லிருக்கு. இன்னேரமும் தொன தொனன்னு புலம்பிட்டு இருக்கிறவ.. ஏன் நீயு, நானு எல்லாம் அந்த வூட்டுலத்தான சமைஞ்சோம். இப்போ என் அண்ணன் வீட்டுலத்தான இருக்கா” என்று தன் மருமகளை திட்டியப்படி அந்த முதியவரும் அவரின் பின்னாலையே வந்தார்.
தன் பேத்தி பூத்த செய்தி கேட்ட நொடியில் இருந்து சங்கரேயனுக்கு இருந்த கலக்கம் எல்லாம் மறைந்து புன்னகை மட்டுமே முகத்தில் வீற்றிருந்தது.
“எத்தன வருஷத்துக்கு பின்னாடி, இந்த வூட்டுல ஒரு நல்லது நடந்திருக்கு. ஆத்தா, எம்ம பேத்திக்கு எந்த குறையும் இல்லாம நீ தான் தாயீ பாத்துக்கிடனும்” என்று அங்கிருந்த மீனாட்சி படத்தின் முன் நின்று மனதார வேண்டினார் சங்கரேயன்.
“அண்ணே” என்றப்படி சங்கரேஸ்வரி ஓடி வர, அவரோடே, “எங்கன இருக்கா அவ" என்றப்படி தாமரையும் வீட்டுக்குள் வந்தனர்.
இருவரையும் பார்த்தவருக்கு, தன் மகள் மேல் இருந்த வருத்தம் எல்லாம் எங்கோ சென்றிருக்க, “வாத்தா” என்று அத்தனை மகிழ்ச்சியாய் இருவரையும் அழைத்தார்.
தன் தந்தையின் மீது இன்னமுமே அவருக்கு கோவம் இருக்க, “இங்கன எம்ம புள்ளைய பார்த்து கூட்டிட்டு போகத்தேன் வந்தேன்" என்றவர் நேரே தன் மகளை தேடி உள்ளே சென்றார் தாமரை.
செல்லும் மகளையே ஒரு நொடி பார்த்தப்படி அவர் நிற்க, “ஏண்ணே, வெசனப்படாதீக. அவ கெடுக்கா, இனி எல்லாம்மே நல்லதாத்தேன் நடக்கும்ன்னே. அதான் வீட்டு மகா லட்சுமி பூத்துட்டாள்ள” என்று தன் அண்ணனை கெட்டியாய் பிடித்தார் சங்கரேஸ்வரி.
ஆனால் அந்த நொடியும் கூட, கதிருக்கு நிலாவை பேச வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் சங்கரேயனுக்கோ, செல்விக்கோ சுத்தமாக இல்லை. கதிரைப் பற்றி எல்லாம் சொல்லவே வேண்டாம். அவனைப் பொறுத்தவரை அவள் சிறு பிள்ளைத்தான்.
அங்கே தாமரையைப் பார்த்த நிலாவுக்கோ இன்னும் பயம் கூடியது. தன்னை திட்டத்தான் வந்திருக்காரோ என்று நினைத்து செல்வியின் கரத்தை இறுக்கிப் பிடித்தாள்.
“அடியே, எம்ம பார்த்தா உமக்கு கொடுமைக்காரியா தெரியிதா? இங்கன வந்து சொல்லிருக்கவ" என்ற தாமரைக்கு மனம் ஆறவே இல்லை.
“இப்போ என்னத்த நடந்திருச்சின்னு, இப்படி பொலம்பிட்டு இருக்கிறவ, என்ற புள்ள எம்மகிட்ட வந்து சொல்றதுல உமக்கு என்னடி வந்துச்சு? ஏன் இந்த ஊர்க்காரக சொல்ற மாதிரி, ஒரு மலடிக்கிட்ட உம் புள்ள" என்று செல்வி சொல்லி முடிக்கும் முன்னே, தன் தங்கை கன்னத்தில் பளாரென்று அடித்திருந்தார் தாமரை.
“இவ உம் புள்ளத்தேன். இப்போ ஆரு இல்லன்னா? உம் புள்ள உம்மகிட்ட இருக்கிறப்ப, எந்த சிறுக்கிடி என் தங்கச்சிய அப்படி சொல்லுவா?” என்று தாமரை முந்தி சேலையை உதறி சண்டைக்கு வந்தார்.
அந்த நொடி அக்காவாய் இல்லாமல், அவள் அன்னையாய் தெரிய, பட்டென்று தன் அக்காவை கட்டிக் கொண்டார் செல்வி.
இருவர் கண்ணிலுமே கண்ணீர் உருண்டோடியது. நிலாவோ, அறியா புள்ளையாய், அங்கு நடப்பவைகளை புரிந்துக் கொள்ள முடியாமல் மலுங்க மலுங்க விழித்தாள்.
அடுத்த ஒரு மணி நேரத்தில், அத்தை முறைக்கென்று ஒரு மிகப்பெரிய கூட்டமே வீட்டு வாசலில் வந்து நின்றிருக்க, அங்காளி, பங்காளி முறைப் பெண்களும், நிலாவை சுற்றி நின்று அவர்கள் சம்பிராதாயத்தை ஆரம்பித்திருக்க, செல்வி சொல்லிய ஒற்றை வார்த்தையில், நிலாவுக்கு அங்கு வைத்தே சடங்கு செய்ய சம்மதித்திருந்தார் தாமரை.
ஆனால் அவர் மனதில் கதிரின் மீதிருந்த வெறுப்பு மட்டும், சிறிதும் குறையவில்லை. தன் மகளுக்கு மாமன் முறைக்கு அவன் எதுவுமே செய்யக் கூடாது என்பதில் மட்டும் அத்தனை குறியாய் இருந்தார் தாமரை.
பெண்கள் எல்லாம் சேர்ந்து அவளை குளிப்பாட்டி, புது தாவணி கொடுத்து, அவளை கட்டி அழைத்து வந்து அனைவரும் தங்கள் வாழ்த்தை சொல்ல, நிலாவோ, செல்வியையும், தாமரையும் தான் மாறி மாறி பார்த்தாள். அவளுக்குத்தான் கூட்டத்தைப் பார்த்தாலே பயமாயிற்றே. இப்போது இவர்களுடைய பேச்சு எல்லாம் அவளுக்கு இன்னும் திகிலைத்தான் கொடுத்தது.
நீண்ட நாட்களுக்கு பின், அந்த பெரிய வீட்டில் அத்தனை உறவுகளும் கூடி நின்று சிரித்து பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கிருந்த ஒரு முதியவர், “என்ன குச்சி கட்ட மாமன்ன வர சொல்லிட்டீகளா இல்லையா? இன்னும் சமைஞ்ச புள்ளைய எத்தன நேரத்துக்கு, இங்கனையே உக்கார வைக்கப் போறீக" என்று குரல் கொடுத்தார்.
“ஏலே ராணி, குமார்கிட்ட சொல்லி, கதிர் எங்கன்னு கூட்டி வர சொல்லு" என்று செல்வி சொல்ல, “அவென் எம் புள்ளைக்கு குச்சி கட்டக் கூடாது" என்று அத்தனை சத்தமாய் கத்தினார் தாமரை.
(அதான. அடுத்த பிரச்சனை ஆரம்பிச்சிருச்சில்ல. சரி அடுத்து என்னாகப் போதுன்னு அடுத்த எபிசோட்ல பார்க்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே இந்த கதை உங்களுக்கு பிடிச்சிருந்தா லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க.)
தென்றல் தீண்டுமா?
0 Comments
No comments yet.