தென்றல் – 6

தாமரை செய்து வைத்த விஷயத்தைக் கேட்ட செல்வி நேரே அவரின் வீட்டுக்கு சென்றார். அவரைப் பார்த்ததும், எதுவுமே நடக்காதது போல், “இப்போ நான் என்னத்த செஞ்சிப்புட்டேன்னு, இங்கார வந்து இந்த குதி குதிக்கிறவ?” என்று ஈரக்கையை தன் சேலையில் துடைத்தப்படி கேட்டார் தாமரை.

“ஏன்? உமக்கு தெரியாதாக்கும்? இல்லத் தெரியாமத்தேன் கேட்கேன். உமக்குத்தேன் அவன் ஆகாதவனாகிப்புட்டான்ல, அப்புறம் என்னத்துக்கு நீ அவன் பிடனி பின்னாடி சுத்திட்டு இருக்கிறவ? உமக்கும் அவென் தம்பித்தான, அந்த நினப்பு இத்துனூண்டு உம்ம மனசுல இருந்திருந்தா, நீ இப்படி எல்லாம் செஞ்சிட்டு திரிவீயா?” என்று கோவமாக கேட்டார் செல்வி.

“எவெம்ல, எனக்கு தம்பி. அந்த உறவெல்லாம் அத்துப் போயி பல வருஷம் ஆச்சு" என்று கோவமாய் தன் முந்தி சேலையை உதறியப்படி எடுத்து சொருகினார் தாமரை.

“அத்துப் போடுறதுக்கு, அது ஒன்னும், இடுப்புல கட்டுன கயிறு இல்லடி, உடம்போட ஒட்டிக்கிட்டு கிடக்க ரத்த உறவு, அப்புடி எல்லாம் உன் இஷ்டத்துக்கு அவுத்து எறிஞ்சிட முடியாது” என்று கோவமாய் கூறினார் செல்வி.

“என் எச்சிப் பால் குடிச்சு வளந்த கழுத, எனக்கே பாடம் சொல்லிக் கொடுக்கிறீயோ?” என்று பதிலுக்கு தாமரையும் கத்தினார்.

“அந்த ஒத்த காரணத்துக்காண்டி மட்டும்ந்தேன், இப்ப வர நின்னு பேசிட்டு இருக்கேன். இல்லன்ன, எந்தம்பிய பத்தி தப்பா பேசுனவள இன்னேரம் ஆட்டுக்கல்ல போட்டு ஆட்டியிருப்பேன்னாக்கும். இல்ல தெரியாமத்தேன் கேட்கேன். நீயும் நானும், எந்த ஆத்தாக்கிட்ட பால்ல குடிச்சோம்மோ, அதே ஆத்தாக்கிட்டத்தாண்டி, அவனும் குடிச்சான். அப்படி என்னத்தடி அவென் உமக்கு பண்ணிட்டான்னு, இப்பிடி அவென் குடிய கெடுக்கிறவ?” என்று செல்வியும் விடாமல் கேட்டார்.

“அவென் என்னத்த செஞ்சான்னு, இந்த ஊருக்கே தெரியும். அதெ இந்த ஊர் மறந்தாலும், நான் மறக்க மாட்டேண்டி, என்னை மீறி அவெனுக்கு எப்படி நல்லது நடக்குதுன்னு நானும் பார்க்கிறேண்டி" என்றார் தாமரை.

“அடியே, இந்த நிறைஞ்ச வீட்டுக்கு முன்னாடி நின்னு சொல்றேன். நல்லா கேட்டுக்கோ, உன் கண்ணு முன்னாடியே, இந்த ஊர் மெச்ச, எந்தம்பிக்கு, ஊர்ல இல்லாத ராணியா பாத்து கட்டி வைப்பேன். அதப் பார்த்து, நீயே வாய் மேல கை வைப்படி" என்றார் செல்வி.

“ஆமா, அவென் பண்ண சோழிக்கு, எந்த சிறுக்கி பொண்ணு கொடுக்கிறான்னு நானும் பார்க்கேன்” என்று விடாமல் கத்தினார் தாமரை.

“எம்ம தம்பிக்கு பொண்ணு கொடுக்கிறவ, போன ஜென்மத்துல புண்ணியம் பண்ணிருப்பாடி கிறுக்கி. எம்ம தம்பியோட அருமை ஒரு நாள், இல்ல ஒரு நாள் உமக்கு தெரிய வரும். அன்னிக்கு நீயே என் தம்பி முன்னாடி வந்து நிப்ப. அப்போ பார்த்துக்கிறேண்டி உன்னை” என்று எடுத்து சொருகிய முந்தி சேலையை எடுத்து உதறினார் செல்வி.

“அப்படி ஒரு நிலமை வந்திச்சின்னா, நான் என் ஐயனுக்கு பொறக்கலன்னு ஒத்துக்கேன். அதுலையும், அவென் முன்னாடி வந்து நிக்கிறதுக்கு, இந்த வீட்டுல ஒரு கயித்த போட்டு தொங்கிடுவேண்டி” என்று விடாமல் தாமரையும் சபதம் விட்டார்.

அக்காவின் வார்த்தையில் செல்வியின் இதயம் படபடத்தது. “அவசரப்பட்டு வார்த்தைய விடாத. அப்புறம் வெசனப்படப் போறவ நீத்தேன். அப்பயும், உம்ம, நானும் எம்ம தம்பியும் தான் வந்து பாக்கனும்" என்று சொல்லிய செல்வி விறுவிறுவென்று அங்கிருந்து கிளம்பியிருந்தார்.

ஏனெனில், இதற்கு மேல் தாமரை ஏதாவது பேசினால், அதை தாங்க செல்வியால் முடியாது. அம்மாவுடன் இருந்ததை விட அக்காவிடம் இருந்தது தான் அதிகம். அதே போல், தன் தம்பிக்கு அன்னையாய் இருந்து வளர்த்தது செல்வி. இதில் பிள்ளையா, அன்னையா என்று அவர் தான் நடுவில் நின்று தவித்துப் போனார். ஆனாலும், இந்த விஷயத்தில் தன் அக்காவை ஜெயித்துக் காட்ட வேண்டும் என்ற வெறியே வந்திருந்தது.

அதே நேரம் அங்கே, மலரின் வீட்டு திண்ணையில் கதிர் அமர்ந்திருக்க, நிலாவோ, ராக்காயியின் கை வளைவுக்குள் ஒதுங்கி நின்றிருந்தாள்.

இவர்களைப் பார்த்த மலர், “அடியாத்தி, இங்கன நேராவுல வந்துருக்காக. நாம் பண்ணி வச்ச சேதி மட்டும், என்ற ஐயன் காதுல விழுந்திச்சு, என்னைய கொண்ணே புடுவாரே” என்று மனதிற்குள் சொல்லியவள், வெளியில் எதுவுமே நடக்காதது போல் ஸ்கூட்டியை விட்டு இறங்கினாள்.

அவளைப் பார்த்ததும், இங்கே கதிருடைய கை முஷ்டிகள் எல்லாம் இறுகியது. அதைப் பார்த்து உள்ளுக்குள் உதறினாலும், அதை முகத்தில் காட்டாமல், “வாங்க மச்சான். எப்போ வந்தீக? ஏம்மா, வந்தவகளுக்கு காபித் தண்ணி ஏதும் கொடுத்தீயா? நில்லு நான் போய் எடுத்துட்டு வரேன்" என்று சொல்லியப்படி வீட்டுக்குள் செல்ல முயற்சித்தாள்.

“ஏத்தா கொஞ்சம் நில்லு" என்று அவளின் அப்பா சொல்ல, கதிரை கெஞ்சும் பார்வை பார்த்தாள். அவனோ கொஞ்சமும் கோவம் குறையாமல் தீயாய் முறைக்க, “ஐயோ, மச்சான் வேற இப்படி முறைக்காகளே, சொல்லிருப்பாகளோ?” என்று குழம்பியப்படி தன் அப்பாவின் பக்கம் பார்வையை திருப்பினாள்.

அதற்குள் ராக்காயியோ, “என்னங்க நீங்க? ஏத்தா, ஆத்தான்னு அவள கொஞ்சிட்டு இருக்கீக, அடியே பொம்பள புள்ளன்னு கூட பாக்காம, உம்ம படிக்க வச்சதுக்கு என்ன சோழிடி பாத்து வச்சிருக்க" என்று கத்தினார்.

அவருடைய கத்தலில், நிலா மேலும் பயந்து சுவரோடு பம்மினாள். அதில் கதிர் சட்டென்று திண்ணையில் இருந்து எழுந்து, “அத்தே, எனக்கு கொஞ்சம் குடிக்க தண்ணி கொடு" என்றான்.

“அடியே கிறுக்கி, வூட்டுக்கு வந்த மருமவெனுக்கு குடிக்க ஏதும் கொடுக்காம, என்னத்தடி வாசல்ல அளந்துக்கிட்டு இருக்கிறவ. ஏத்தா நீயு போயி மருமவனுக்கும், தங்கச்சிக்கும் குடிக்க கலரு வாங்கிட்டு வா” என்றார் வேலய்யா.

“இவ போயிட்டு வர்றதுக்குள்ள, பொழுது சாஞ்சு, விடிஞ்சிடும். மருமவனே நீங்க உள்ளார போயி உட்காருங்க” என்று சொல்லியவர், மகளிடம் தண்ணீரை கொடுக்க சொல்லிவிட்டு கடைக்கு சென்றார் ராக்காயி.

“மாமா, நிலாக்கு பாடத்துல ஏதோ சந்தேகம்னா. அது என்னென்னு உங்க மவ கிட்ட கேட்டுக்கிறேன்" என்றான் கதிர்.

அதிலேயே தன் மகள் ஏதோ வேண்டாத வேலையை இழுத்து விட்டு வந்திருக்கிறாள் என்று அவருக்கு புரிந்தது. அதில், “அத்தேன் மருமவென் கேட்கிறாகளா? போ” என்று மகளை உள்ளே அனுப்ப, கதிர் நிலாவின் கரத்தை இறுக்கிப் பிடித்தான். அதில் அவள் இன்னும் பயந்து நிற்க, “வா” என்று அவளை இழுத்துக் கொண்டு அந்த வீட்டின் பின் பக்கம் சென்றான் கதிர்.

மலரோ சற்று தயங்கி பின், ஒரு வித தைரியத்தோடே அவர்களின் பின் சென்றாள். நிலாவுக்கோ, அத்தனைப் பயமாக இருந்தது. அதிலும் கதிருடைய அந்தப் பிடி அவளுக்கு வலியைக் கொடுத்தது. அவன் சாதாரணமாகத்தான் பிடித்திருந்தான். இவளுக்குத்தான், அவன் கோவமாக பிடித்திருப்பது போல் தோன்றியது. 

மலர் வந்த உடனே, “நீ எல்லாம் என்னத்த படிச்சு கிழிச்ச?” என்று கோவமாய் திட்டினான் கதிர்.

“என்ன மச்சான்? இப்போ நான் என்னத்த பெருசா பண்ணிட்டேன்னு இப்படி வைறீக? எனக்கு நீங்க முறைத்தான. முறைப் பையன் கிட்ட மனசுல கெடக்க ஆசையத்தான சொன்னேன்" என்றாள் மலர். அவளுடைய பயம் எல்லாம் அவளின் அப்பாத்தானே ஒழிய, தனியாக வந்ததும் தானாகவே தைரியம் வந்திருந்தது.

“என்னத்தல முற? பச்ச புள்ள கிட்ட எத கொடுக்கனும்னு தெரிய வேணாம். இதத்தேன் உம்ம காலேஜ்ல கத்துக் கொடுத்தாகளோ, அதுவும் பார்க்குற உத்யோகத்துக்கு ஒரு மருவாத வேண்டாம். எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு உம்ம" என்றவன் கொஞ்சம் விட்டால், மலரை அடித்திருப்பான்.

அதற்குள், அன்னிட்சையாய் பயத்தில் நிலா கதிரின் சட்டையைப் பிடிக்க, அதில் ஓங்கிய கரத்தை கீழே போட்டவன், “உம்ம புத்தி எங்க புல்லு மேய போயிடுச்சா” என்றான் கதிர்.

“புல்லு மேயல, உம்ம மேலத்தேன்" என்று மலர் ஏதோ சொல்லப் போக, “அடிச்சு மூஞ்சு முவரைய உடைச்சிப் புடுவேன். நீ பண்ண சோழிய, உம்ம வீட்டுல சொல்றதுக்கு ஒரு நொடி ஆகாது. ஆனாலும் பொட்டப்புள்ளையா போயிட்டியேன்னு இத்தோட விடுறேன். இன்னொரு தடம், பச்சப் புள்ள கிட்ட கண்டத தூக்கி கொடுத்த, தடம் தெரியாம தட்டி விட்டுடுவேன்" என்றான் கதிர்.

அதில் மலர் எல்லாம் கொஞ்சம் கூட அசையவில்லை. ஆனால் கதிரின் கோவத்தில் இங்கே நிலாத்தான் பயந்து நடுங்கியிருந்தாள். 

“ஆமா பொல்லாத பச்ச புள்ள. இன்னேரம் அவ சமஞ்சிருந்தா, அவளையே உமக்கு கன்னாலம் பேசியிருப்பாக. ஏதோ நான் ஊர்ல நடக்காதத பண்ண மாதிரி" என்ற மலருக்கு இப்போது ஒட்டு மொத்த கோவமும் நிலாவின் மீது தான்.

“என்ன முனங்கிட்டு நிக்கிறவ?” என்று கதிர் கோவமாய் கேட்க, “என் தங்கச்சிட்ட நான் கொடுத்துவுட்டேன். இதுல என்னத்த பெரிய தப்ப கண்டுட்டீரு? அடியே நிலா, இங்க வா, நான் உன்ன எதுவும் மிரட்டுனேன்னா? இல்ல அடிச்சேன்ன, ஒரு உதவியாத்தான கேட்டேன்" என்று நிலாவைப் பார்த்துக் கேட்டாள் மலர்.

ஏற்கனவே கதிரின் கோவத்தில் நின்றிருந்தவளுக்கு, இப்போது மலர் அப்படி சொல்லவும், இன்னும் பயம் தான் கூடியது.

“ஆ..ங் இல்ல. அத் அது" என்றவளுக்கு பேச்சுக் கூட பாதி தான் வந்தது. அதில், “இங்கன பேசிட்டு இருக்கிறப்ப, அங்கன என்ன உமக்கு கேள்வி. எம்ம பார்த்து பேசு" என்று நிலாவுக்கு முன் வந்து நின்றான் கதிர்.

“உங்க அக்கா மவள இப்போ நான் என்னத்த பெருசா கேட்டுட்டேன். இல்ல தெரியாமத்தேன் கேட்கேன் அவுகத்தான் உம்ம ஒட்டும் வேணாம், ஒன்னும் வேணாம்னு போயிட்டாகத்தான, இன்னும் என்ன இருக்குன்னு இப்படி உருகிட்டு நிக்குறீக, அவகத்தேன், உங்க மானத்தையும், உம்ம வீட்டு மானத்தையும் வாங்குறதத்தான சோழியா பாக்குறாக. பொல்லாத அக்கா. சொந்த தம்பி கன்னாலம் பண்ணி சந்தோசமா இருக்க கூடாதுன்னு நினைக்காத பெரிய அக்கா" என்று மலரும் சண்டைக்கு வர, பட்டென்று அவள் கன்னத்தில் ஓங்கி அடித்திருந்தான் கதிர்.

“இன்னும் ஒரு வார்த்த என் அக்காவப் பத்தி பேசுன, நீயும் உன் ஐயன் ஆத்தாவும், ஊருலையே இருக்க முடியாது பாத்துக்க" என்று சொல்லியவன், நிலாவையும் அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பியிருந்தான்.

அப்போது அங்கு வந்த ராக்காயி, “இந்தா ராசா. குடியா” என்று கலரை நீட்ட, அதை தட்டிவிட சென்றான். ஆனால் அதற்குள் நிலா அவன் சட்டையை அழுத்திப் பிடிக்க, “வேண்டாம்த்தே. இன்னொரு நாள் வரேன்" என்று இழுத்து பிடித்த பொறுமையுடன் சொல்லிவிட்டு அங்கிருந்து புல்லட்டை எடுத்துக் கொண்டு கிளம்பினான் கதிர்.

அதில் ராக்காயியும், சங்கரேயனும் தன் மகளை தேடி சென்றனர். அங்கே ஏதோ மந்திரித்து விட்டது போல் நின்றிருந்தாள் மலர். இப்படி எல்லாம் பெண்ணை கை நீட்டி அடிப்பவன் அவன் கிடையாது. இதை விட, அதிகமாய் எல்லாம் அவனிடம் முறைப் பெண்கள் வாலாட்டியிருக்கிறார்கள். ஏன் மலரே நிறைய அவனிடம் சீண்டியிருக்கிறாள். இப்போது அவன் அடித்தது, அவனின் அக்காவுக்காக, அவர்களுக்குள் ஆயிரம் இருக்கட்டும். அது அவனின் அக்கா. அதை யாராலும் மாற்ற முடியாது என்பது அவனுடைய திடமான எண்ணம்.

அதே நேரம் இங்கே தாமரை வீட்டில், “அடியே இவளே? ஒன்னா மண்ணா கெடக்க வேண்டிய உறவ எதுக்குடி, இப்படி தூக்கி நடுத்தெருவுல வீசுறவ” என்று உள்ளிருந்து குரல் கொடுத்தார் தாமரையின் பாட்டி/அத்தை.

“வேண்டாம் கெழவி. எம்ம வாய கழுவாம, உம்ம புள்ள வர்றதுக்குள்ள போட்ட சாப்பாட சாப்டு, ஓரமா போயி கெடக்க வழியப் பாரு" என்று கடுப்பாய் சொல்லிவிட்டு தாமரை அங்கிருந்து சமையற்கட்டுக்குள் சென்றார்.

“இன்னேரம் எம் பேத்தி மட்டும் சமஞ்சிருந்தா, எம்ம பேரனுக்குத்தேன் கட்டி கொடுத்திருப்பேன். அப்போ என்னடி பண்ணுவ?” என்று சத்தமாக சொல்ல, அந்த கெழவிக்கும் ஆசைத்தான். ஆனால் மருமகள் தேளாய் கொட்டிவிடுவாளே, அதில் அப்படியே சொல்ல வந்ததை வாயிற்குள்ளே முனங்கிக் கொண்டு வெத்தலையை இடித்தார்.

அவரின் வாய் முகூர்த்தம் அந்த நொடியே பலித்துப் போகும் என்று, அவரே அறியவில்லை. இங்கே கதிர் கோவத்தில் வேகமாய் வண்டியை ஓட்டிக் கொண்டிருக்க, பின்னே அமர்ந்திருந்த நிலா, வலி தாங்காமல் வயிற்றைப் பிடித்தாள். ஒரு கரம் அவன் சட்டையைப் பிடித்திருக்க, இன்னொரு கரம், அவள் அடி வயிற்றை இறுக்கமாய் பற்றியது.

(ஓ ஹோ.. அப்புடி, தாமரை மேடம் கெட் ரெடி பார் தி மாமன் சீர். சரி அடுத்து என்னென்னு அடுத்த எபிசோட்ல பார்க்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே கதைப் பிடிச்சிருந்தா எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க. கருத்து சொன்ன எல்லாருக்கும் ரொம்ப நன்றி.)

தென்றல் தீண்டுமா?..

Comments   0

*** தென்றல் – 6 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***