தென்றல் – 40

நிலாவோ பயந்து கதிரின் கையை விடாமல் பிடித்திருக்க, அதைப் பார்த்து உறவுப் பெண்கள் எல்லாம் கிண்டல் செய்து பேசிக் கொண்டிருந்தனர். அதைப் பார்த்த தாமரை கோவமாய் அங்கு வந்து, “எம் மானத்த வாங்கனும்னே எனக்குன்னு வந்து பொறந்திருக்கீயா? அவென் கைய விடுடி" என்று கத்தினார்.

அவரின் சத்தத்தில், சற்று தள்ளி நின்றிருந்த பெரியவர்களும் என்ன என்று இவர்கள் பக்கம் திரும்ப, அடுப்பை கூட்டிக் கொண்டிருந்த செல்வியோ, “ஐயோ இவளோட" என்று வேகமாய் அங்கு வந்தார்.

இத்தனைப் பேரின் முன்னே தன் அன்னைத் திட்டவும், சட்டென்று கண் கலங்கி அழ ஆரம்பித்திருந்தாள் நிலா. அவளின் கண்ணீர் அவன் கரத்தை நனைக்க, “இன்னும் என்னத்தடி அங்க நிக்கிற, இங்கன வா” என்று நிலாவினை பிடித்து தன் பக்கம் இழுத்தார்.

அதற்குள் அவளின் கரத்தை இறுக்கிப் பற்றியவன், “என் கூடத்தேன்ன இருக்கா” என்று அழுத்திக் கூறினான் கதிர்.

அதில் செல்வியே ஒரு நொடி தன் தம்பியை ஆச்சர்யமாய் பார்க்க, அவனோ, தாமரையைப் பார்த்து, “அன்னிக்கு சொன்னதுத்தான்க்கா. எம் மேல கோவம்னா, அத என் மேல மட்டும் காமி. அத வுட்டுட்டு அவள ஏதாச்சும் சொன்னேன்னா, நான் என்னப் பண்ணுவேன்னே தெரியாது. அவெ என்ன விருப்பப்பட்டா என் கைய புடிச்சா? ஏதோ பயந்து புடிச்சிட்டா. அப்படியே விருப்பப்பட்டே புடிச்சாக் கூட, அதுல என்ன தப்பு இருக்கு. அவள நான் தான கட்டிக்கப் போறேன். நீங்களும் சம்மதிச்சுத்தான தட்ட மாட்டுனீங்க. பொறவு எதுக்கு அவகிட்ட சத்தம் போடுற?” என்றான் கதிர்.

“இப்போ மச்சான் கைய அவ புடிச்சதுலத்தேன். உங்க கிரீடம் இறங்கிருச்சாக்கும்? நாங்கத்தேன் வயசு புள்ளைங்க, ஏதோ கேலி பேசிட்டு நிக்கோம். இப்போ உங்களுக்கென்ன, போயி பொங்க வைக்க வேண்டிய வேலைய பாக்குறத வுட்டுட்டு, தேவையில்லாம பேசிக்கிட்டு" என்று துளசி தாமரையிடம் சீண்டலாய் கூறினாள்.

“வாடி என் அத்த பெத்த ரத்தினம். இப்போ உன்ன ஆரும் பஞ்சாயத்து பண்ண கூப்பிடல. வாய அடக்கி வச்சுக்க பழகு. இல்லன்னா” என்று தாமரை துளசியையும் திட்ட ஆரம்பிக்க, “ச் என்னக்கா நீ? கோவிலுக்கு வந்த இடத்துல, எதையாச்சும் பேசிக்கிட்டு. நிலா நீ வா. வந்து நீதான் முதப் படி போடனும்" என்று செல்வி நிலாவை அழைக்க, துளசியையும் தன்னுடன் அழைத்தார்.

அவளோ தன் கையை பிடித்திருக்கும் கதிரைப் பார்த்தாள். அவனும் அவளைத் தான் பார்த்தான். சற்று முன் அவன் ரசித்திருந்த அவள் விழிகள், இப்போது சிவந்து கலங்கியிருந்தது. ஏனோ மனம் ஆறவே இல்லை. கோவமாய் வந்தது. அதில் மீண்டும் தன் அக்காவைப் பார்த்தான்.

இப்போது செல்வியின் பக்கம் திரும்பியவன், “இங்க இருந்து கிளம்புற வர, அவ உன் பொறுப்பு. உன் கூடையே வச்சுக்கோ” என்று தான் பிடித்திருந்த நிலாவின் கரத்தை அவரிடம் ஒப்படைத்து விட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

செல்விக்கோ நிலாவை, கதிரைத் தவிர வேறு யாரும் பார்த்துக் கொள்ள முடியாது என்று தோன்றியது.

செல்லும் கதிரையே நிலா பார்த்திருக்க, “சும்மா சொல்லக் கூடாது மதினி. மச்சானுக்கு, நிலா மேல பாசம் அதிகம்ந்தேன். ராசிக்காரித்தான். வாடி. பொங்கல் வைக்கப் போலாம்" என்று நிலாவை அழைத்துக் கொண்டு துளசி சென்றாள்.

அவள் சென்றதும், செல்வி தாமரையிடம் வந்து, “அவ சின்னப் புள்ளக்கா. கண்டதையும் பேசி புள்ள மனச நோகடிக்காத. நீ ஆறையோ அசிங்கப்படுத்துறேன்னு, உன் சொந்த இரத்தத்தத்தேன் கலங்கடிச்சிட்டு இருக்க. சாமி சொன்னத கேட்டத்தேன்ன, இது நீயோ, இல்ல நானோ எடுத்த முடிவு கிடையாது. சாமி எடுத்த முடிவு. அதுக்காகவாச்சும் செத்த பொறுமையா இரு. உனக்கு பிடிக்குது. இல்ல பிடிக்கல. இதுலத்தேன் நம்ம புள்ள வாழ்க்க அடங்கியிருக்கு. வார்த்தைய அள்ளி வீசிட்டா, அப்புறமா அள்ளி எடுக்க முடியாது" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார்.

இங்கே கதிருக்கோ, அங்கு நிற்கவே முடியவில்லை. கோவமாய் அங்கிருந்த மரத்தில் ஓங்கி குத்தினான்.

“ஏல மாப்புள்ள. என்னப் பண்ணிட்டு இருக்க. கையில காயமாகிடப் போது" என்று அவன் கரத்தைப் பிடித்தார் முருகேசன்.

“ஏன் மாமா, அக்கா இப்படி இருக்கு. அதென்ன நாக்கா? இல்ல தேள் கொடுக்கா. எப்போ பாத்தாலும், அந்தப் புள்ளைய ஏதாச்சும் சொல்லிக்கிட்டு. அவங்களுக்கு நான்த்தேன்ன ஆகாதவன். ஏதாச்சும் சொல்லனும்னா, என்ன சொல்ல வேண்டித்தான. தேவை இல்லாம சின்னப் புள்ளைய கண்டதும் பேசிட்டு. படிக்கிற புள்ள மனசு வாடிப் போகாதா. கொஞ்சம் கூட அறிவே இல்ல" என்று தன் அக்காவை திட்டினான் கதிர்.

இதை விட மோசமாய் எல்லாம் கதிரை அவர் பேசியிருக்கிறார். அப்போதெல்லாம் அவன் கவலைப் பட்டதே இல்லை. ஏன் அதை பற்றி யோசித்ததும் இல்லை. ஆனால் நிலாவை திட்டியதைத் தான் அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அதில் முருகேசனோ, “இப்பயாச்சும் ஒத்துக்கிறீயா? நிலாவ உன்னாலத்தேன் பத்திரமா பாத்துக்க முடியும்னு" என்றார்.

அவரின் வார்த்தையில் அவரை முறைத்தவர், “என்னாலத்தேன், இப்போ அவ திட்டு வாங்கிட்டு நின்னா” என்றான் கதிர்.

“கோழி மிதிச்சு குஞ்சு சாகாது. ஆத்தா காரி வையாம, புள்ள கரை சேர்ந்ததா எந்த கதையும் இல்ல. அதனால அத வுட்டுட்டு, இங்க வா. வந்து உன் கையால, சாமிக்கு கெடாவ வந்துக் கொடு" என்று அவனை கையோடு இழுத்து சென்றிருந்தார் முருகேசன்.

ஒரு பக்கம் ஆத்தா கோவில் முன்னே பொங்கல் பொங்கி வர, மறுபக்கம் அய்யனார் கோவிலின் முன்னே கதிர் தன் கையால், கிடாவை சாமிக்கு விட்டான்.

“படையல் போட்டுட்டு பொறவு பலி கொடுக்கலாம்" என்று பூசாரி சொல்ல, அனைவரும் மீண்டும் கோவிலின் முன்னே வந்து நின்றனர்.

நிலா தெரியாமல் கூட கதிரின் பக்கம் திரும்பவில்லை. ஆனால் கதிரோ நிலாவைத்தான் பார்த்திருந்தான். காலையில் அவள் முகத்தில் இருந்த அந்த மலர்ச்சி இப்போது சுத்தமாய் இல்லை. முகம் கழுவி வந்திருந்தாள். ஆனாலும் அழுத கண்ணீர் தடம் அவள் கன்னத்தில் மெல்லிய கோடாய் இருந்தது.

பூசாரி வந்து தீபாரதனை தட்டு காட்டும் போதும் கூட அவள் முகத்தில் வருத்தம் மட்டுமே இருந்தது. அதன் பின் அனைவரும் கெடா வெட்ட செல்ல, நிலாவுக்கோ, இரத்தக்கறை என்றாலே பயம். அதனால் துளசியுடன், வேனுக்கு சென்றிருந்தாள்.

வழக்கமாய், கதிர் தான் இந்த கெடா வெட்டில் எல்லாம் முதல் ஆளாய் நிற்பான். ஆனால் இப்போது அவன் கல்யாண மாப்பிள்ளை என்பதால், காளியை வெட்ட சொல்லியிருந்தனர். குடும்பம் மொத்தமும், அங்கு நிற்க, கதிர் அங்கிருந்து நிலாவைத் தேடி வந்தான்.

அவளோ அமைதியாய் வேனில் அமர்ந்திருக்க, உள்ளே நுழைந்தவன் துளசியிடம், “உன்ன அக்கா கூப்டிச்சு" என்றான்.

“ஏன் மச்சான்? இவ கிட்ட பேசனும்னு நீங்க வந்தீங்கன்னு சொன்னா, இப்போ நான் என்னத்த சொல்லப் போறேன். நீங்களே இவ கூட இருங்க. நான் வரேன். ஆனாலும் நீங்க பாவம் மச்சான். வாழ்க்கப் புள்ளா நீங்கத்தேன் பேசிட்டே இருக்கனும். அந்தப் பக்கம் ஒன்னும் ஆகாது. செத்த நேரம் அவ கூட உட்கார்ந்ததுக்கே எனக்கு பேச்சு மறந்துப் போச்சு. ஒத்த வார்த்த வர மாட்டேங்கிது" என்று சொல்லிவிட்டே சென்றாள்.

அப்போதே நிலா நிமிர்ந்து கதிரைப் பார்க்க, அவனைப் பார்த்ததும் ஒரு வித பதட்டம். வேகமாய் இருக்கையில் இருந்து எழ சென்றாள்.

அதற்குள் அவளுக்கு அருகே இருந்த இருக்கையில் அமர்ந்தவன், “உட்காரு" என்று அழுத்தம் திருத்தமாய் சொல்ல, அவள் அப்படியே அமர்ந்தாள். ஆனாலும் பார்வை தன் அன்னை எங்கும் இருக்கிறாரா? என்று தான் தேடியது. ஏனெனில் தன்னால் தானே தேவையில்லாமல், கதிருக்கும், தாமரைக்கும் பிரச்சனை என்ற எண்ணம் அவளுக்கு.

அவள் பார்வை செல்வதை வைத்தே கணித்தவன், “நீ தனியா என் கூட இருந்தா, உன்னை நான் கடிச்சி முழுங்கிடுவேன்னா?” என்றான்.

“ஆ..ங் இல்ல. அது அம்மா” என்று அவள் தடுமாற, அதில் பொறுமையை இழுத்துப் பிடித்தவன், “உங்கம்மாக்கு என்னைப் பிடிக்காது. என் மேல உள்ள கோவத்த தான் உன் மேல காட்டுனாங்க" என்றான் கதிர்.

அதில் அவளோ வேகமாய், “எனக்கு உங்கள பிடிக்கும்" என்றாள். ஏனோ கிளிப் பிள்ளையாய் அதையேத்தான் திரும்ப திரும்ப சொன்னாள். அவளின் வார்த்தையில், இப்போது அவனின் இறுக்கம் தொலைந்திருக்க, “சரி உனக்கு பிடிக்கும். ஆனாலும் உங்கம்மாக்கு பிடிக்காதுத்தான?” என்றான் கதிர்.

“அது நான் உங்கள கட்டிக்கிட்டா, அம்மாக்கும் உங்கள பிடிக்க ஆரம்பிச்சிடும்" என்றாள் நிலா.

“அப்படின்னு யாரு சொன்னா?” என்று கதிர் கேட்க, “சித்தி" என்று அவள் கூறினாள். “அதெல்லாம் கிடையாது. எப்பவுமே உங்கம்மாக்கு என்னைப் பிடிக்காது. என் மேல இருக்கிற கோவத்த உன் மேல காட்டிக்கிட்டேத்தான் இருப்பாங்க. இது உனக்கு தேவையா?” என்று அவன் ஏதோ சொல்ல வர, அதற்கு முன்னே, “அதெல்லாம் நான் பிடிக்க வச்சிடுவேன்” என்றாள் நிலா.

அதில் இப்போது அவனுக்கு சிரிப்புத்தான் வந்தது. ஆனாலும் சிரிப்பைக் காட்டிக் கொள்ளாமல், “எப்படி? இப்படி நீ அழுதுட்டே இருந்தா, உங்கம்மாக்கு என்னை பிடிச்சிடுமா?” என்றான்.

“ஆ..ங் அத் அது" என்றவளுக்கு என்ன சொல்ல என்றே தெரியவில்லை. அதில் மூச்சை இழுத்துப் பிடித்து, “செரி அவங்களுக்கு பிடிக்குது. பிடிக்கல. அதெல்லாம் விடு. இங்க என்ன நடக்குதுன்னு உனக்கு கொஞ்சமாச்சும் புரியுதா?” என்று கேட்டான்.

“கோவிலுக்கு பொங்கல் வைக்கிறோம்" என்று அவளுக்கு தெரிந்த பதிலைக் கூறினாள்.

அவளின் பதிலில், அவள் நெற்றியில் இருந்த குங்குமத்தை சுட்டிக் காட்டி, “இந்த குங்குமத்த அந்த சாமியார் எதுக்கு உன் நெத்தியில என்னை வைக்க சொன்னாருன்னு தெரியுமா?” என்று பொறுமையாய் கேட்டான் கதிர்.

“ம்" என்று அவள் தலையாட்ட, “எதுக்கு?” என்று அவன் புருவம் உயர்த்தினான். “அத் அது. வந்து" என்று அவள் திக்கி திணற, “ம் சொல்லு" என்றவன் அவள் பக்கம் சற்று நெருங்கி அவள் விழியை கூர்ந்துப் பார்த்தான்.

“அது நான் உங்க பொண்டாட்டின்னு" என்று அவள் சொல்ல முயற்சிக்க, “நீ இப்போ சின்ன பொண்ணு நிலா” என்றான் கதிர்.

“ஆ..ங். ஆனா அம்மா, என் கிட்ட இனிமேல் நீ பெரிய பொண்ணுன்னு சொன்னாங்க" என்று அதற்கும் சிறுமியாய் தான் பதிலளித்தாள்.

அதில், “சரி நீ பெரிய பொண்ணுத்தான். ஆனா ரொம்ப பெரிய பொண்ணு கிடையாது. அதாவது, கல்யாணம் பொண்டாட்டி இப்படி எல்லாம் நீ யோசிக்கிறதுக்கு இன்னும் வயசு இருக்கு. அதுவரைக்கும், நீ படிப்ப மட்டும் தான் யோசிக்கனும். உன்னை சுத்தி இருக்கிறவங்க. என்ன சொன்னாலும் அத நீ பெருசா எடுத்துக்க கூடாது" என்றான் கதிர்.

ஏனோ அவளை சுற்றி இருக்கும் அத்தனைப் பேரும், அவளை பெரிய பெண் என்று சொல்ல, அவன் மட்டும் தன்னை சிறிய பெண் என்று சொல்ல, அவளுக்குப் பிடித்தது. 

“ம்" என்று அவள் தலையாட்ட, “அப்புறம் இப்படி தொட்டதுக்கெல்லாம் அழுக கூடாது" என்று அவள் கன்னத்தில் இருந்த கண்ணீர் தடத்தை, தன் கையில் இருந்த கர்ஷீப்பால் துடைத்து விட்டான்.

“ம்" என்று அவள் அதற்கும் தலையாட்ட, அவளைப் பார்த்தவன், “இந்த தாவணியில அழகா இருக்க. சிரிச்சா இன்னும் அழகா இருப்ப. அழுதா நல்லாவே இல்ல" என்றான்.

அதில் சட்டென்று அவள் முகம் மலர்ந்து விட, அழகாய் அவள் கன்னத்தில் மெல்லிய புன்னகை பூத்தது.

ஏனோ அவள் முகத்தில் புன்னகையைப் பார்த்தப் பின்னே இவனுக்கு நிம்மதியாய் இருந்தது.

“ம் இப்படி சிரிச்சிட்டேத்தான் இருக்கனும். உனக்கு ஏதாச்சும் கஷ்டம்னா, என்கிட்ட சொல்லு. இல்லன்னா உன் சித்தி, சித்தப்பா கிட்ட சொல்லு. நாங்க இருக்கோம். நீ எப்பவும், எதுக்காகவும் கவலைப்படக் கூடாது. சரியா?” என்று சொல்லிவிட்டு அவன் எழப் போக, அவன் கரத்தைப் பற்றி “நீங்களும் இந்த சட்டையில அழகா இருக்கீங்க. சிரிச்சா இன்னும் அழகா இருப்பீங்க" என்றாள் நிலா.

(ம் நிலா நீ பொழைச்சிப்ப. சரி அடுத்து என்னென்னு அடுத்த எபிசோட்ல பார்க்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு எந்த சீன் பிடிச்சிருந்திச்சுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

தென்றல் தீண்டுமா?

Comments   2

*** தென்றல் – 40 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***