ஆசை ஆசையாய், தான் போட்ட கோலத்தை செல்வியிடம் காட்ட வாசலுக்கு அழைத்து வந்தாள் நிலா. அக்கோலத்தைப் பார்த்த செல்வி, தன் அக்கா மகளை ஆசை தீர பார்த்து நெட்டி முடித்தார். அதற்குள், அந்த கோலத்தின் மீது ஒரு வாளி தண்ணீர் வந்து விழுந்தது. அதில், செல்வியும், நிலாவும் அதிர்ச்சியாய் திரும்பி பார்த்தனர்.
அங்கே கோவமாய் கையில் வெளக்கமாத்துடன், அவிழ்ந்த கொண்டையை முடிந்தப்படி நின்றிருந்தார் நிலாவின் அம்மா, தாமரை.
அன்னையைப் பார்த்ததும், அன்னிட்சையாகவே, நிலா, செல்வியின் பின்னே மறைய முயன்றாள்.
“அடியே, என் குடிய கெடுக்கன்னே பிறந்தீயா? விடிஞ்சதும், விடியாததுமா, எங்க வந்து நிக்கிற நீ? உன்னை” என்றவர் கையில் இருந்த வெளக்கமாத்தை எடுத்தப்படி நிலாவை நோக்கி கோவமாய் வந்தார் தாமரை.
“சித்தி" என்றவள், இப்போது மொத்தமாய் செல்வியின் பின்னே சென்று பயத்தில் ஒளிந்தாள்.
“ஏக்கா, உனக்கென்ன கோட்டியா பிடிச்சிருக்கு? இங்கன என்னாச்சுன்னு, பச்சப்பிள்ளைய இப்படி வையிறவ?” என்று செல்வி அவரை தடுத்து நின்று கேட்டார்.
“இதுக்கு மேலங்காட்டி என்னடி நடக்கனும். என் ஆத்தாவ கொண்ண கொலைகாரன் இருக்கிற வூட்டுல, கோலம் ஒன்னுத்தேன் குறைச்சல்” என்றவர் அழிந்துக் கெடந்த கோலத்தைப் பார்த்துக் கத்தினார்.
“ஏக்கா, வேணாம். என்ன பேச வைக்காத. சின்னப் புள்ள ஆசையா ஏதோ போட்டுச்சு. இது என்ன ஆறோ வீடா? நம்ம வீடுதானக்கா. கொஞ்சமும் ஈரம் இல்லாம பேசாத" என்றார் செல்வி.
“ஆறுக்குடி ஈரம் இல்ல. உங்க எல்லாத்துக்கும் தாண்டி, ஈரமும் இல்ல, ஒரு எளவும் இல்ல. என் நெஞ்சு கிடந்து கொதிக்குறது ஆறுக்குடி தெரியும். என் ஆத்தா, இந்த நிறைஞ்ச வீட்டுல என் மடியிலத்தான் செத்தா. ஆனா அவ சாவுக்கு காரணமானவன, நீங்க எல்லாம் தலையில தூக்கி வச்சி ஆடிட்டு திரியிறீக. எல்லாத்தையும் சாமியா நின்னு என் ஆத்தா பார்த்துட்டு தான் இருப்பா. அவ கண்டிப்பா, அவனுக்கு ஏத்த தண்டனைய கொடுப்பா. அத நான் பார்க்கத்தேன் போறேன்" என்று கத்தினார் தாமரை.
“ஆமா, உனக்குத்தான் அவ ஆத்தாப் பாரு. எனக்கு அவ ஆத்தா இல்லல்ல" என்று செல்வியும் பதிலுக்கு அவரிடம் சேலையை எடுத்து சொருகியப்படி பேச முன் எட்டு வைத்தார்.
“சித்தி" என்ற நிலாவின் நடுங்கும் கரங்கள், அவரை அதற்கு மேல் முன்னேற விடவில்லை. சத்தமாக பேசினாலே, பயந்து நடுங்குவாள். இப்படி ரோட்டில் நின்று சண்டையிட்டால், அவளும் என்னத்தான் செய்வாள்.
அதில், “சரி நீ சொல்ற மாதிரி, நாங்க எல்லாம் நன்றி மறந்தவகளாவே இருந்துட்டு போறோம். அதுக்காக, பிள்ளைய எங்க முன்னாடி வையிறதெல்லாம் வேணாம். நீ போ. அவ வருவா” என்றார் செல்வி.
“என் புள்ளைய நான் கூட்டிட்டு போறதுக்கு, நீ என்னடி சொல்றவ. அடியே நிலா வாடி" என்று அவளின் ஒரு கரத்தை பிடித்திழுத்தார் தாமரை.
அதில் பட்டென்று அவள் கண்கள் எல்லாம் கலங்கி விட, அதிலும் அன்னைப் பிடித்திருந்த கரம் வலியைக் கொடுக்க, “ம்மா. வரேன்ம்மா.. வலிக்கிம்மா” என்றாள்.
அதில் இப்போது செல்வியால் தாங்கவே முடியவில்லை. வேகமாய் தன் அக்காவின் கரத்தை விலக்கி, தனக்குள் நிலாவை பத்திரப்படுத்தியவர், “பத்து மாசம், இந்த புள்ளைய என் வயித்துல சுமக்காம இருக்கலாம். ஆனா, உன்னை விட எனக்கு உரிமை அதிகம்டி. வந்துட்டா பெரிய இவளாட்டம். அவள வளத்தது நானு. என் முன்னாடி என் புள்ளைய அழுக வச்ச, அக்கான்னு கூட பார்க்க மாட்டேன். நீ வாடா” என்று நிலாவை அழைத்துக் கொண்டு, வீட்டிற்குள் சென்றார் செல்வி.
அதற்கு மேல், தாமரையாலும் எதுவும் சொல்ல முடியவில்லை. அதுவும் போக அவருடைய கோவம் எல்லாம், அவர்களின் தம்பி மேல் தானே தவிர. தங்கையை என்றுமே அவர் பிரித்துப் பார்த்தது இல்லை. அதிலும், தன் பிள்ளை மேல், தன் தங்கை எத்தனை பாசம் வைத்திருக்கிறாள், என்று அறியாதவரும் இல்லை. அதனால், “ஒழுங்கா உன் ஐயன் வூட்டுக்கு வர்றதுக்கு முன்னாடி வூடு வந்து சேர்ற வேலையப் பாரு. உன்ன அங்க வச்சிப் பார்த்துக்கிறேன்" என்று மிச்சமிருந்த கோலத்தையும் காலால் அழித்து விட்டு, அங்கிருந்து கிளம்பினார் தாமரை.
செல்லும் போதே, அங்கே ஓரமாய் நின்றிருந்த கதிரைப் பார்த்து, “என் குடிய கெடுத்தவன காலங்காத்தால பார்க்கனும்னு விதி. எல்லாம், இந்த கிறுக்கிய சொல்லனும், எப்போ பாரு, தாத்தா வீடே கதின்னு கெடக்கால. இன்னிக்கு வீட்டுக்கு வரட்டும், கால் ரெண்டையும் உடைச்சி அனுப்புறேன்" என்று சத்தமாய் சொல்லியப்படியே அவர் வீட்டை நோக்கி சென்றார் தாமரை.
அதில் இப்போது கதிர் அந்த வாசலைப் பார்த்தான். சற்று முன் அவன் மனதை கவர்ந்திருந்த கோலம், இப்போது கலையிழந்து, அழிந்துக் கிடந்தது. அதில் ஆழ்ந்த பெருமூச்சை இழுத்து விட்டவன், வழக்கம் போல், அதை அப்படியே தூர வீசிவிட்டு, புல்லட்டில் ஏறி கிளம்பியிருந்தான்.
இங்கே தன்னறைக்கு நிலாவை அழைத்துச் சென்ற செல்வியோ, “அழாத புள்ள. இங்கப்பாரு. சித்தி நான் எதுக்கு இருக்கேன். அவ உன்னை என்னை மீறி அடிச்சுப்புடுவாளா? இல்ல, அத நான் பார்த்துட்டுத்தேன் சும்மா இருப்பேன்னா. நீ வெசனப்படாத தாயீ. என் கண்ணுல. என் மீனாட்சி தாயில்ல" என்று அவள் கன்னம் தாங்கி அவளை சமாதனப்படுத்த முயற்சித்தார்.
“இப்போ, நான் என்னத்த பண்ணிட்டேன்னு, ஆத்தா இப்புடி வையுறாக? கோலம் தான போட்டேன்" என்று அழுதவளுக்கு ஏங்கி, ஏங்கி மூச்சு வாங்கியது.
“அச்சோ என் ராசாத்தில. நீ அழுதா என் மனசு தாங்குமா? இங்கப்பாருடா. அதுக்கு கிறுக்கு பிடிச்சிருக்கு. அதான் அப்படி பேசிட்டா. அதுவும் போக, உன் மேலலாம் அவளுக்கு கோவம் இல்லத்தா” என்று செல்வி அவளை தேற்ற முயன்றார்.
ஆனால் எத்தனை சொல்லியும், நிலாவுக்குள் இன்னமும் அந்த படபடப்பு குறையவே இல்லை. அவர் மடியில் சாய்ந்து அழுது, அழுது ஒரு கட்டத்தில் அப்படியே உறங்கியும் போயிருந்தாள்.
அங்கே வண்டியை எடுத்துக் கொண்டு, வயலுக்கு வந்த கதிரோ, “என்னலே, இன்னும் ஆட்க யாரையும் காணும்" என்று ரோட்டில் செருப்பை கழட்டி விட்டு, வயலுக்குள் இறங்கினான்.
கதிரைப் பார்த்ததும், மோட்டார் ரூமில் நின்றிருந்த சிவா மூச்சு வாங்க ஓடி வந்தான்.
“ஏலே பார்த்து வா. இப்போ எதுக்கு இப்படி ஓடி வர்றவ?” என்றவன், நெல்லின் பதத்தை மெல்ல விரலால் தொட்டு வருடினான்.
“இல்லண்ணே, இப்போ ஆட்க எல்லாம் வந்துடுவாக" என்று கையை பனியனில் துடைத்தப்படி கூறினான் சிவா.
“ம் வெயில் கூடுறதுக்குள்ள, வேலைய வெரசா முடிக்க சொல்லு” என்று சொல்லியவன், அங்கிருந்த பம்ப் செட்டின் பக்கம் சென்றான் கதிர்.
அவன் அப்படி சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “ஏ புள்ள, உனக்கு சேதி தெரியுமா, அந்த முருகேசன் இருக்கான்ல" என்று ஏதோ பேசியப்படி, வேலை ஆட்கள் வந்தனர்.
“ஏன் அந்த முருகேசனுக்கு என்ன, தினம் குடியும் குடித்தனமும் தான கெடக்கான்” என்று ஒருவர் ஏதோ கேட்க, “ஆமா ரொம்ப வெரசா வந்துட்டீகளா. பொறுமையா நின்னு ஊரு கத பேசிட்டு நில்லுங்க" என்று சிவா குரல் உயர்த்தினான்.
அப்போதே சிவாவையும், ரோட்டில் நின்றிருந்த கதிரின் புல்லட்டையும் பார்த்தவர்கள், “அடியாத்தி, மருமவனே வந்துட்டான் போலையே. வாங்கடி சீக்கிரம் போயி வரப்புல இறங்குவோம்” என்று ஒருவர் சொல்ல, மற்றவர்களும் வேகமாய் வரப்பில் இறங்கினர்.
“குத்துக்கல்லாட்டம் ஒருத்தன் நின்னு கத்துறவன், அதெல்லாம் உங்களுக்கு கேட்காதே. அண்ணே வண்டிய பார்த்தாத்தான் மண்டையில உரைக்குது. போங்க. போயி வெரசா வேலைய முடிங்க” என்று சிவா திட்டினான்.
“ஏன் கொளுந்தனாரே? இப்படி எங்க கிட்ட கொதிக்கிற மாதிரி வர போற என் தங்கச்சிக்கிட்டையும் குதிக்காதீக, அப்புறம், கொளுந்தனையும் சேர்த்து நான்தேன் பார்க்க வேண்டி கிடக்கும்" என்று நெட்டி முறித்தாள், சிவாவின் உறவு முறைப் பெண்.
அதில், “நில்லு மதினி. போறப்ப என் அண்ணேன் கிட்ட உன்ன பார்த்துக்க சொல்றேன். இப்போ போயி நீங்க சோழிய பாருங்க" என்று சற்று சிரித்தப்படியே கூறினான் சிவா.
“பாரேன் பவுனு. உன் தங்கச்சியப் பத்தி சொன்னதும், பேரன் அப்படியே பம்முறான். கொடுத்து வச்சவ தான் உன் தங்கச்சி" என்று வயதானர் ஒருவர் கூறினார்.
“கன்னாலத்துக்கு முன்னாடிலாம் இப்படித்தான் கெழவி பம்முவாக. அதுக்கப்புறத்தேன் இவுக சுயரூபமே தெரியும். இவக அண்ணன் என்கிட்ட காட்டாத பவுசா?” என்று அவள் அப்போதும் நெட்டி முறித்தாள் அவள்.
“ஐயோ மதினி. நீங்க வேலை கூட பார்க்க வேணாம். செத்த நேரம் செவனேன்னு இருங்க" என்ற சிவாவுக்கு முகமெல்லாம் சிவக்க ஆரம்பித்திருந்தது.
“பாருங்கடி இந்த கூத்த, வரப் போற பொண்டாட்டிக்கு சலுகை கொடுத்தா கூட பரவாயில்ல, இங்க என்னென்னா, பொண்டாட்டியோட அக்காக்கே, சலுகை பெருசாவுல கெடக்கு. அப்போ, என் தங்கச்சியையும் சேத்து கட்டிக்கோயேண்டா” என்றார் இன்னொருவர்.
“க்கும். பொண்ணு தேடி சுத்துறப்ப, பொண்ணு போட்டோவ கூட கண்ணுல காமிக்க மாட்டீக. அப்புறம் இப்ப வந்து, என் பொண்ண கட்டிக்க, என் தங்கச்சிய கட்டிக்கன்னு என்கிட்ட அலும்பல கொடுத்துட்டு இருக்கீக. செவனேன்னு வேலைப் பாத்தா கணக்கு முடிச்சு சம்பளத்த உங்க கையில கொடுப்பேன். இல்லன்னா, காச என் கணக்குல எழுதிப்பேன். வேலைய பாருங்க" என்று சொல்லிவிட்டு சிவா அங்கிருந்து சென்றான்.
செல்பவனைப் பார்த்து அப்போதும், “இப்பவே வரப் போற பொஞ்சாதிக்கு சேர்த்து வைக்கியாக்கும்" என்று விடாமல் கேலி பேசினர். இன்னும் மூன்று மாதத்தில் அவனுக்கு திருமணம். இப்போதில்லை அவனுடைய திருமணம் உறுதியான தினத்தில் இருந்து, அங்கே அவன் தலை தான் உருண்டுக் கொண்டிருந்தது.
அதில் தன்னவளின் நினைவும் வந்து விட, மொபைலைப் பார்த்தப்படியே பம்ப் செட்டின் அருகே வந்தான் சிவா.
“என்னலே சிவா, அங்கன என்ன சத்தமா கெடக்கு?” என்று கதிர் முகத்தை துடைத்தப்படி வந்தான். கதிரைப் பார்த்ததும் சிவா வேகமாய் மொபைலை மறைக்க, “என்னலே மறைக்கிற?” என்றான் கதிர்.
“ஆ..ங் அத் அது" என்று தடுமாறிய சிவா, சட்டென்று, “உங்க முகம் ஏன்னே ரோசனையா கிடக்கு" என்று கதிரின் முகத்தைப் பார்த்தப்படி கேட்டான்.
அதில் காலையில் வீட்டின் முன் நடந்த சேதி எல்லாம் கண் முன்னே வந்து செல்ல, கலங்கிய விழியுடன் நின்றிருந்த நிலாவின் பிம்பத்தில் தலையை சிலுப்பிக் கொண்டான் கதிர்.
“என்னாச்சுன்னே, அக்கா ஏதும் மறுபடியும் ஏழரைய இழுத்திருச்சா?” என்று சற்று கவலையாக கேட்டான் சிவா.
சிவா கதிருக்கு தூரத்து சொந்தம். படித்த படிப்புக்கு வெளியூரில் வேலைக் கிடைத்தும், கதிருடன் சேர்ந்து விவசாயம் தான் பார்ப்பேன் என்று அடம்பிடித்து இங்கேயே இருந்துக் கொண்டான். அதனாலையே, அவனுக்கு பெண் கிடைப்பதில் அத்தனை சிக்கல் அதை எல்லாம் கடந்து தான், இப்போது இந்த திருமணம் முடிவாகியிருந்தது.
“ஆ..ங் அப்படி ஏதும் இல்ல. நான் ரைஸ்மில்லுக்கு கிளம்புறேன். நீ இங்கன இருந்து பார்த்துக்கோ” என்று சொல்லிவிட்டு கதிர் அங்கிருந்து கிளம்பியிருந்தான்.
அங்கே சங்கரேயனோ, செல்வியிடம், “என்னத்தா புள்ள கிளம்பிட்டாளா?” என்றப்படி காலை உணவில் கரத்தைப் பதித்தார்.
“ஆ..ங்ப்பா. இப்பத்தேன் பள்ளிக்கூடம் கிளம்புனா” என்று கூறினார் செல்வி. அதில் எதையோ யோசித்தவர், பின், “அப்புறம் உன் தம்பி என்னத்தேன் சொல்றான். இந்த வார இறுதில பொண்ணு பார்க்க வறோம்னு அவுக வூட்டுல சொல்லிடலாமா?” என்றார்.
“எங்கப்பா? பொண்ணு பார்க்கனும்னு சொன்னாலே பிடி கொடுக்க மாட்டேங்கிறான். ஆனா நம்மளும் அப்படியே விட முடியாதே. நீங்க வர்றதா சொல்லிடுங்க. என் வீட்டுக்காரர் கிட்ட சொன்னா, அங்க நேரா கூட்டிட்டு வந்துடுவாரு. அங்க வச்சி பொண்ண பார்க்க வச்சிடலாம். எப்படியும் ஜோதிய பார்த்த, அவனுக்கு பிடிக்கும்" என்றார் செல்வி.
“ம் சரித்தா. நீ சொல்ற. நானும் அவுக கிட்ட சொல்றேன். எப்படி கொடியேத்திட்டா, அதுக்கப்புறம் திருவிழா முடியிற வரைக்கும் இதப் பத்தி பேச முடியாது. அதனால நாள் தள்ளி போடாம, நாளை மறு நாளே போயி பார்த்துடலாம்" என்றார் சங்கரேயன்.
“சரிங்கப்பா. அக்கா கிட்ட ஒரு வார்த்தை” என்று செல்வி தயங்க, அதில், “அவதேன், என்ற புள்ளைக்கு நல்லதே நடக்க கூடாதுன்னு கங்கணம் கட்டிட்டு திரியிறாளே. அவகிட்ட சொல்லி, இதுவும் நடக்காம போறதுக்கா? நிச்சயத்துக்கு சொல்லிக்கலாம்" என்று சொல்லியவருக்கு அதற்கு மேல் சாப்பிட மனம் வரவில்லை. பாதி சாப்பாட்டில் எழுந்திருந்தார்.
(இப்பவே இப்படின்னா? இன்னும் எவ்வளவு இருக்கு? சரி அடுத்து என்ன? இவ்ளோ கோவமா இருக்கிறவக, எப்படி நம்ம கதிருக்கு நிலாவ கட்டிக் கொடுக்க முடிவு பண்ணுவாக? அதெல்லாம் என்னென்னு அடுத்தடுத்த எபிசோட்ல பார்க்கலாம். அதுக்கு முன்னாடி, இன்னிக்கு எபிசோட் பத்தி நீங்க என்ன நினைக்கிறீக? உங்களுக்கு எந்த சீன் பிடிச்சிருக்குன்னு கமெண்ட்ல மறக்காம சொல்லிருங்க. அப்படியே இந்த ஸ்டோரி உங்களுக்கு பிடிச்சிருந்தா லைக் பண்னிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)
தென்றல் தீண்டுமா?
0 Comments
No comments yet.