தென்றல் – 2

ஊர் திருவிழாவை பற்றி பேசுவதற்காக, ஊர் காரர்கள் எல்லாம், அந்த பெரிய வீட்டின் முன் கூடியிருந்தனர். சரியாக அன்னேரம் தன்னுடைய புல்லட்டை ஓரமாய் நிறுத்திவிட்டு, கோலத்தைப் பார்த்தப்படி இறங்கினான் கதிர் (எ) கதிர் முகிலன்.

மாநிறம் என்பதை விட சற்று அதிக நிறம். வெயிலில் சுத்தாமல், வீட்டின் உள்ளேயே இருந்தால், அவனுடைய உண்மையான வெண்மை நிறம், வெளியில் தெரியுமோ? என்னமோ? கலையான முகம். அவன் கண்களில் இருக்கும் கூர்மை, எதிராளி யார் என்பதை, அவனே ஒத்துக் கொள்ள வைக்கும் அளவுக்கு திறமைசாலி. மென்மை என்பது சுட்டுப் போட்டாலும் வராது. அவனுடைய ஒரு சொல், மொத்த ஊரையும் பேச்சிழக்க வைக்கும். உரத்த குரல் தான், மெதுவாய் பேசினாலும் கூட, அவன் குரலில் அழுத்தம் எப்போதும் இருக்கும். குடும்ப சொத்து கொட்டிக் கிடந்தும், தன் சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்ற எண்ணம் சற்று அதிகம். வீட்டில் உள்ளவர்களே, அவனிடம் பேச தயங்கித்தான் நிற்பார்கள். ஆனால் பாசக்காரன். அக்கா என்றால் உயிர். அப்பாவின் சொல்லுக்கு மறு சொல் பேச மாட்டான். ஆனால் அவர் மறுத்து சொல்ல முடியாத அளவுக்குத்தான் இவனின் செயல் இருக்கும். என்னத்தான் தனியே தொழில் செய்தாலும், தன் தந்தைக்கு அடுத்து உள்ள அத்தனைப் பொறுப்பையும் அவன் தான் பார்த்துக் கொண்டிருக்கிறான். ஆனால், அதன் வரவு செலவு அத்தனையும், கணக்காய் எழுதி, மாதம் ஒரு முறை அக்காவிடமோ? இல்லை தன் அப்பாவிடமோ ஒப்படைத்து விடுவான். கம்பீரத்தையும், அழகையும் ஒட்டு மொத்தமாய் குத்தகைக்கு எடுத்து வைத்திருப்பவனை, யாருக்குத்தான் பிடிக்காது. அவனை சுற்றி வரும் பெண்கள் பலர். அதிலும் இவனின் முறை பெண்களிடம் சிக்கினால், அவனையே வெட்கப்பட வைத்துவிடுவார்கள். உறவுகள் அதிகம். அத்தனையையும் இழுத்துப் பிடித்து பார்த்துக் கொள்வான். அதே நேரம் தவறாய் ஒருவன் ஒரு சொல் சொல்லிவிட்டாலும், அதன் பின் அவன் பேசவே முடியாத அளவுக்கு செய்துவிடுவான்.

இப்போது அவனின் மொத்த கவனத்தையும், வாசலில் இருந்த அந்த பெரிய கோலம் கவர்ந்தது. அதில் சில நொடிகள், அவன் அதையே பார்த்துக் கொண்டிருக்க, ஊர்காரர்களோ, அவனையே பார்த்திருந்தனர்.

“தம்பிட்ட பேசுங்க" என்று கூட்டத்தில் நின்றிருந்த ஒருவன் கிசுகிசுக்க, “வாசல்ல வச்சு எப்படி?” என்று ஒருவன் தயங்க, மீண்டும் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அந்த சத்தத்தில், கவனம் கலைந்து நிமிர்ந்துப் பார்த்தான் கதிர்.

அவன் கண்களில் தெரிந்த கூர்மையில், அத்தனைப் பேரும் அமைதியாய் அவனைப் பார்த்தனர். அவர்களைப் பார்த்தப்படியே கோலத்தை மிதிக்காமல், உள்ளே நுழைந்தவன், “என்ன விடியங்காட்டியும், அத்தனைப் பேரும், வூட்டு முன்னாடி வந்து நிக்கிறீங்க? ஐயா ஏதும் வர சொன்னாங்களா?” என்று கேட்டப்படி நடந்தான்.

“ஆ..ங் இல்ல தம்பி. நாங்கத்தான் ஐயாவ பாக்க வந்தோம்" என்று ஒருவர் சற்று தயங்கி கூறினார். அதில் ஒரு நொடி நடையை நிறுத்தி, அவரை திரும்பி பார்த்தவன், “உள்ள போங்க. ஐயா உள்ளாரத்தான் இருப்பாரு" என்று சொல்லிவிட்டு, அவன் எப்போதும் தங்கும் பின் தோட்டத்து வீட்டுக்கு செல்ல முயன்றான் கதிர்.

“தம்பி” என்று மீண்டும் அந்தப் பெரியவர் அழைக்க, அவன் திரும்பி அவர்களைப் பார்த்தான்.

“ஐயாக்கிட்ட பேசுறதுக்கு முன்னாடி, உங்க கிட்டையும் ஒரு வார்த்தை பேசிடலாம்னு தான்" என்று சற்று தயங்கியப்படி கூறினார் அவர்.

“என்கிட்டையா?” என்று ஒரு நொடி புருவம் உயர்த்தியவன், “குமாரு" என்று சத்தம் கொடுத்தான் கதிர்.

அதில் ஓடி வந்த குமார், “சொல்லுங்கண்ணே” என்றான். “இவங்கள எல்லாம், நம்ம தோட்டத்துக்கு கூட்டி போயி, குடிக்க ஏதாச்சும் கொடு. நான் வந்துடுறேன்" என்று சொல்லிவிட்டு கதிர் அங்கிருந்து அவன் தங்கியிருக்கும், அந்த பின் பக்க வூட்டுக்கு சென்றான்.

அதைப் பார்த்த பெரியவர் ஒருவர், “அரண்மனைக்கனக்கா வூடு கெடக்கு. ஆனா பாரு, அதுல வாழ அவருக்கு கொடுத்து வைக்கல" என்று பரிதாபப்படுவது போல் உச் கொட்டினார்.

“ஹே, வந்தா, எதுக்கு வந்தீகளோ? அந்த சோழிய மட்டும் பார்த்து கெளம்புனா, நல்லது. சும்மா, ஏதாச்சும் கரைச்சல்ல கொடுத்துட்டு இருந்தீகன்னா, இருக்கிற குறைக் காதும் கேட்காம போயிடும்” என்று சத்தமாய் குரல் கொடுத்தான் குமார்.

“என்ன்ப்பா? இப்போ ஊர்ல பேசாததையா நான் பேசிபுட்டேன்" என்று அவர் சொல்ல வர, “எங்க? எங்கண்ணே முன்னாடி இப்படி ஒருத்தன பேச சொல்லு பார்ப்போம்" என்று எகிறிக் கொண்டு வந்தான் குமார்.

அதற்குள், “ஹேய் விடுப்பா. விடுப்பா, அவர் ஏதோ ஆதங்கத்துல பேசிபுட்டாரு. நாங்க தோட்டத்துல இருக்கோம். தம்பி வந்ததும் சொல்லுங்க" என்று பேசியவரையும் இழுத்துக் கொண்டு ஊர் காரர்கள், தோட்டத்துப் பக்கம் ஒதுங்கினர்.

“நீங்களாம் ஆதங்கப்படுற இடத்துல ஒன்னும் எங்க அண்ணே இல்ல. வந்துட்டாங்க. பெருசா, இவகத்தான், அப்படியே உடைஞ்சிக் கெடக்குறத கட்டி எழுப்புற மாதிரி" என்று பொறுமினான் குமார்.

“ஏலே குமாரு. அங்க என்னத்த சத்தம்" என்ற கதிரின் குரலில், கப் சிப்பென்று அமைதியாகி, அவனுக்கு தேவையானதை எடுக்க சென்றான் குமார்.

இங்கே, சமையற்கட்டில் இருந்த நிலாவோ, “நெசமாத்தான் சித்தி சொல்றேன். நீ வா. நான் காமிக்கேன்" என்று செல்வியின் கரத்தைப் பிடித்து இழுத்தாள்.

“ஹேய். ஹேய் நில்லுப் புள்ள. ஊர் காரக எல்லாம் வர்றதா சொன்னாக, இன்னேரத்துல நம்ம போய் நின்னா நல்லா இருக்காது. அவக பேசி முடிச்சிட்டு போனப்புறவு நம்ம போய் பார்க்கலாம். அதுக்கு முன்னாடி, இந்த காபி தண்ணிய குடி" என்று அவளுக்கு என்று ஆத்திய, பூஸ்ட் காபியை நீட்டினார் செல்வி.

அதற்குள், அங்கு நின்றிருந்த ராணியும், “ஆமம்மா, நம்ம நிலா சொன்ன மாதிரி” என்று பேச ஆரம்பிக்க, “அடியே, எப்போ பார்த்தாலும் பேச்சுத்தானா? சோழிய பார்க்குறதே இல்ல. ஊர் காரக எல்லாம் வந்துருக்காக. வந்து காபி தண்ணிய கொடு" என்று உறுமியப்படி அங்கு வந்தான் குமார்.

“என்னலே குமாரு? காலையிலையே உஷ்ணம் கொஞ்சம் தூக்கலா இருக்கு. இப்போ ஆறு மேல இருக்கிற கோவத்த, இவ மேல வந்து கொட்டிட்டு இருக்கவ?” என்று செல்வி சற்று காட்டமாய் கேட்டார்.

அப்போதே அவரைப் பார்த்தவன், தூக்கி கட்டியிருந்த கைலியை கீழே இறக்கிவிட்டப்படி, “இல்லங்க்கம்மா, நீங்களும் இருக்கிறத கவனிக்கல" என்று குரலை தாழ்த்தினான்.

அதில், “போ. காபிய கொடுத்து விடுறேன். ஆமா கதிரு வந்துட்டான்னா?” என்றார் செல்வி.

“ஆச்சுமா. இப்போத்தான் வந்தாக" என்று குமார் சொல்ல, அவசரமாய், தன் தம்பிக்கு என்று ஆசையாய் போட்டு வைத்திருந்த ஏலக்காய் டீயை, கப்பில் ஊற்றி அவனிடம் நீட்டினார்.

“ம்மா. அது" என்று அவன் தயங்கி நிற்க, “என்னலே? செல்வி அக்கா கொடுத்தாகன்னு சொல்லு. ஒன்னும் சொல்லாம வாங்கிப்பான்" என்று அழுத்தி சொல்ல, குமாரும் வேறு வழியின்றி, அவர் கொடுத்த காபியை வாங்கிக் கொண்டு, அங்கிருந்து சென்றிருந்தான்.

செல்லும் போதும் ராணியை முறைத்த்து விட்டே குமார் செல்ல, ராணி அப்படியே செல்வியின் பின்னால் மறைந்தாள். 

“என்னடி என் பின்னாடி பம்முறவ, என்னமோ, என் மாமன், மாமன்னு உருகுவ. இப்போ என்னமோ? ஆரையோ பார்க்குற மாதிரி ஒதுங்குறவ" என்று கிண்டலாய் கேட்டாள் செல்வி.

“அதெல்லாம் ரவையிலத்தான்ம்மா. அப்போலாம் சிரிச்சிட்டே இருக்காரு. இங்கன வந்தாத்தான், எந்தப் பேய் பிடிக்குதோ தெரியல” என்று ராணி வாய் விட்டே புலம்பினாள்.

அதில் சிரித்த செல்வியோ, “ஆம்பளைங்கன்னா அப்படித்தேன். ராவுலத்தான் பொண்டாட்டி தெரிவா” என்று ஏதோ சொல்ல வந்தவர், அப்போதே அங்கு நிலா என்ற ஒருவள் இருப்பதைக் கவனித்து அப்படியே பேச்சை பாதியிலேயே நிறுத்தியிருந்தார்.

“ஆமம்மா. ராத்திரி பூரா என்ன தூங்க வுடாம படுத்தி எடுத்துட்டு, விடியங்காட்டியும்" என்று ராணி அவர் நிறுத்தியதை கவனிக்காமல், மீதியை துவங்கினாள்.

அதில், “அடியே கோட்டிக்காரி. அமைதியா இரு" என்று நிலாவை கண் காட்டினாள் செல்வி.

ஆனால் நிலாவோ, அவர்கள் பேச்சை எதுவும் காதில் வாங்காமல், அவளுக்கு என்று கொடுத்த பூட்ஸ் காபியை ஊதி, ஊதி குடித்துக் கொண்டிருந்தாள்.

அதே நேரம் இங்கே குமார் காபி கப்புடன், கதிரின் முன்னே வந்து நின்றான். அதில் அவன் புருவத்தை நெறித்தான்.

“நான் வேண்டாம்னுதேன் சொன்னேன். செல்விம்மாத்தான் போட்டுக் கொடுத்தாங்க” என்றான் குமார்.

அதில் எதுவும் சொல்லாமல், அந்த காபியை வாங்கிக் குடித்தவன், “இதுக்கப்புறம் இப்படி எல்லாம் பண்ண வேண்டாம்னு சொல்லு" என்று குடித்து முடித்த காபி கப்பை குமாரின் கையில் கொடுத்தான்.

வழக்கமாய் நடக்கும் ஒன்று தான். தினமும் எல்லாம், இது நடக்காது. எப்போதாவது செல்வி அங்கிருந்து கொடுத்தனுப்புவார். இல்லை என்றால் அவரே அவன் தங்கியிருக்கும் வீட்டுக்கு வந்து அவனுக்கு பிடித்ததை செய்துக் கொடுப்பார். அவன் மறுத்தாலும், அவன் அக்காவால் அதை செய்யாமல் இருக்க முடியாது.

அதில் எப்போதுமே சிறிதாய் கர்வம் கூட இருக்கும். தன் அக்காவை ஒரு நொடி யோசித்தவன், அடுத்த நொடி சட்டையை மாற்றிக் கொண்டு, தோட்டத்தை நோக்கி நடந்தான். குமாரும் கப்பை ஓரமாய் வைத்து விட்டு, அவனின் பின்னே சென்றான்.

அங்கே பெரியவர்கள் எல்லாம் அமர்ந்திருக்க, இவனைப் பார்த்ததும், எழ முயற்சிக்க, “இருங்க" என்று சொல்லியப்படி அவனும் அவர்களுக்கு முன் இருந்த இருக்கையில் வந்தமர்ந்தான்.

“சொல்லுங்க என்ன சேதி?” என்று கதிர் கேட்க, “உங்களுக்கே தெரிஞ்சிருக்கும். ஊர் திருவிழா வருது. அதான். என்னெல்லாம் பண்ணலாம். எப்படி பண்ணலாம்னு" என்று ஒருவர் ஆரம்பித்தார்.

அப்படியே வரிசையாய், அவர்கள் என்ன செய்ய நினைக்கிறார்கள், என்பதையும் சொல்ல விட்டு அவன் பொறுமையாய் கேட்டுக் கொண்டிருந்தான்.

அனைவரும் பேசி முடிக்கும் தருவாயில், “இதெல்லாம் ஏற்கனவே முடிவு பண்னிட்டீகளா? இல்ல?” என்று கொக்கி போட்டு நிறுத்தினான் கதிர்.

அதில், “இல்ல எப்பவும் இப்படித்தான" என்று ஒருவர் தலையை சொறிந்தார்.

அதில், “எப்பவும் இப்படித்தான்னா? நீங்களாம், இங்க வந்திருக்க வேண்டிய அவசியம் இல்லையே” என்றவன் திரும்பி குமாரிடம் கண் காமித்தான்.

உடனே குமாரும் ஓடி சென்று, அவன் கேட்ட நோட்டை எடுத்து வந்து கதிரின் கையில் கொடுத்தான்.

அதில் அத்தனைப் பேரும் அவனைப் பார்க்க, அவனோ, “இந்த தடம் காண்ட்ரக்ட பாண்டிக்கு கொடுக்க முடியாது. அதுவும் போக, என்னெல்லாம் பண்றீங்க? பண்ணல அப்படின்றது அத்தனையும் ஊர் காரக எல்லாருக்கும் தெரியனும். அப்புறம் போன தடம் மாதிரி ஏதாச்சும் சிக்கலாச்சுன்னா” என்றவனுடைய கை நரம்புகள் புடைத்தது.

“அதெப்டி தம்பி, வருஷா வருஷம், நடக்கிறத மாத்துனா, அவுக பிரச்சனைப் பண்ணுவாகளே” என்று ஒருவர் குரல் கொடுத்தார்.

“இல்லன்னாங்காட்டியும் அவுக பிரச்சனை பண்ணாமத்தான் இருக்காகளா?” என்று நக்கலாய் கேட்டான் குமார்.

அதில் கதிர் திரும்பி குமாரைப் பார்த்தான். உடனே குமார் அமைதியாகிவிட, “இது என்னோட விருப்பம். அதைப் பண்றதும். இல்ல பண்ணாததும் உங்களோட முடிவு. ஏலே குமாரு. வரிப் பணம் எவ்வளவுன்னு கேட்டு கொடுத்துடு" என்று சொல்லியப்படி அங்கிருந்து எழுந்திருந்தான் கதிர்.

அதில் பெரியவர்கள் எல்லாம் அதிர்ச்சியாய் அவனைப் பார்க்க, அவனோ எதுவும் சொல்லாது, குமாரை அழைத்துக் கொண்டு கிளம்பியிருந்தான்.

அவ்வளவுத்தான். அவன் சொல்வதை சொல்லியாயிற்று. அதன் பின் அதில் அவன் கலந்துக் கொள்ள மாட்டான். இப்போதும் அப்படித்தான்.

“என்ன தம்பி இப்படி சொல்லிட்டு போறாக?” என்று ஒருவர் கேட்க, “ம் பெரியய்யா என்ன சொல்றாகன்னு கேட்டுட்டு என்னப் பண்ணலாம்னு பார்க்கலாம்" என்று சொல்லியப்படி சங்கரேயனைப் பார்க்க அனைவரும் எழுந்தனர்.

உள்ளே சென்றவர்கள், அடுத்த ஐந்து நிமிடத்திலேயே வீட்டை விட்டு கிளம்பியிருக்க, கதிர் தன் புல்லட்டை எடுத்தப்படி அவர்களைப் பார்த்தான்.

அவனுக்குமே உள்ளே என்ன நடந்திருக்கும் என்று புரிந்தது. ஆனால் அதை எல்லாம் பெரிதுப் படுத்தாமல், கடக்க சென்றான். அதற்குள் அவனுக்கு அழைப்பு வர, மீண்டும் புல்லட்டை அந்த மரத்தின் அடியில் நிறுத்திவிட்டு, பேச ஆரம்பித்தான்.

இங்கே நிலா, செல்வியிடம் தன் கோலத்தை காட்ட, இழுத்து வந்தாள். “இருடி ஆத்தா வரேன்" என்ற செல்வியும் அங்கு வந்து அவள் போட்டிருந்த கோலத்தைப் பார்த்தாள்.

வீடு மட்டும் அல்ல, அந்த ரோடே நிறையும் அளவுக்கு அழகான மயில் கோலம் ஒன்றை போட்டு வைத்திருந்தாள். அத்தனை அழகாய் இருந்தது. பார்க்க பார்க்க தெவிட்டவே இல்லை.

அவளின் செய்கையில், தன் அக்கா மகளை, கண் நிறைய சில நொடிகள் பார்த்தார். அவள் அழகை கை நீட்டி நெட்டி முறித்தவர், “என் அக்கா மக மேலத்தேன் ஊர் கண்ணே இருக்கு" என்று சொல்லி முடிக்கும் முன்னே, அந்த கோலத்தில் ஒரு வாளி தண்ணீர் வந்து விழுந்தது.

அதில் செல்வியில் ஆரம்பித்து நிலா வரை அதிர்ச்சியாய் திரும்ப, அங்கே அவிழ்ந்த முடியை கொண்டைப் போட்டப்படி தன் முன்னே இருந்த வெளக்கமாத்தை கையில் எடுத்தார் நிலாவின் அம்மா, தாமரை.

(அடியாத்தி! இத்தன கோவக்கார அம்மாவுக்கா, இப்படி ஒரு பச்சை மண்ணு பொறந்துச்சு? சரி, இதுக்கடுத்து என்னாகப் போதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பார்க்கலாம். அதுக்கு முன்னாடி, இன்னிக்கு எபிசோட் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? உங்களுக்கு எந்த சீன் பிடிச்சிருந்திச்சுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே உங்களுக்கு பிடிச்சிருந்தா லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

தென்றல் தீண்டுமா?

Comments   0

*** தென்றல் – 2 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***