தென்றல் – 19

மார்கழி பனிப் பூவாய் பதிவிசாய் மேடையேறிய, அந்த நிலாப்பெண்ணின் மீது தான், மொத்த ஊரின் கண்ணும் இருந்தது. சுற்றி இருந்த ஊர் சனம் எல்லாம் சற்று மங்கலாகிப் போக, மேடையில் நின்றிருந்தவள் மட்டுமே கதிரின் கண்ணுக்கு பளிச்சென்று தெரிந்தாள்.

அதிலும் அவளுடைய முகச்சுணக்கமே, அந்த மாலையின் கனத்தை அவளால் தாங்க முடியவில்லை என்று சொல்லாமல் சொல்லியது.

அதற்குள் நிலாவோ செல்வியிடம் திரும்பி, “ரொம்ப கனமா இருக்கு சித்தி" என்றாள். அவள் அப்படி சொல்லவும், “இன்னும் செத்த நேரம்ந்தா. பொறவு எல்லாத்தையும் மாத்திக்கலாம். ஊறவுக்காரக எல்லாம் ஆசிர்வாதம் பண்ணனும்லத்தா” என்று அவளுக்கு ஆதரவு சொல்லி, மாலைக்குள் சிக்கியிருந்த அவள் முடியையும் தோதாக வெளியில் எடுத்து விட்டார்.

மற்ற சடங்கெல்லாம் ஆரம்பிக்க, “ஏப்பா கதிரு. போ, போயி உன் கையால புள்ளைக்கு, நீ வாங்கி வந்தத போட்டு வுடு" என்று அத்தை முறையில் இருந்த ஒருவர் கதிரிடம் கூறினார்.

அதில் செல்வியுமே கதிரை மேடைக்கு அழைக்க, அவனுக்கோ, ஏற்கனவே அவள் போட்டிருந்த நகையே அத்தனைக் கனம். இதில் இவன் வாங்கி வந்ததையும் போட்டால், என்னவாவது? என்ற சிந்தனைத்தான்.

அதற்குள் முருகேசன் கதிரின் அருகில் வந்து, “என்ன மாப்பிள்ள, உன் அக்கா ஏதாச்சும் சொல்லுவான்னு பாக்கீயா? இன்னிக்கு எல்லாம், அவுக பேச்சு எங்கையும் எடுபடாது. நீ வா மாப்பிள்ள" என்று அவனை பிடித்து இழுத்து சென்றார்.

“போட்டு வுடுய்யா” என்று செல்வி சொல்ல, அதற்குள் தூரத்து சொந்தத்தில் இருந்த ஒருவர் தாமரையிடம் பேசியப்படி, செல்வியையும் அழைத்தார்.

அதில் செல்வி மேடையில் இருந்து இறங்கி விட, முருகேசனும், “இந்தா வந்துடுறேன் மாப்பிள்ள" என்று அவரும் இறங்கியிருந்தார். இப்போது கதிரும், நிலாவும் மட்டுமே மேடையில் இருக்க, சங்கரேஸ்வரியின் கண்களோ, இருவருடைய ஜோடி பொருத்தத்தை பார்த்து “அடியாத்தே, எம் மருமகனும், எம் பேத்தியும் எம்புட்டு அழகா இருக்காக, எவெ கண்ணும் பட்டுடக் கூடாதுத்தா” என்று திருஷ்டி கழித்து முடித்தவர், அப்படியே “தாயே மீனாட்சி, நீத்தேன் எம்ம வேண்டுதல நிறைவேத்தி வைக்கனும்” என்று மனமார வேண்டிக் கொண்டார்.

மேடையில் நின்றிருந்த நிலாவோ, சிறு பயத்துடன் அங்கும், இங்கும் மிரண்டு பார்க்க, “இப்போ என்னத்துக்கு, இத்தன பதட்டம்?” என்று சற்று குரலைத் தாழ்த்திக் கேட்டான் கதிர்.

அப்போதே அவனை நிமிர்ந்துப் பார்த்தாள். எப்போதுமே பயத்தை மட்டுமே கொடுப்பவன், இப்போது சிறு தைரியத்தையும் சேர்த்துக் கொடுத்திருந்தான்.

“சித்தி" என்று செல்வியைப் பார்த்து நிலா மெதுவாய் அழைக்க, “நீ கூப்டது, உன் பக்கத்துல நிக்கிற எனக்கே கேக்கல. அவுகளுக்கு எப்படி கேட்கும்?” என்று கேட்டவன், “அக்கா” என்று சத்தமாய் அழைத்தான்.

அவனுடைய அந்த உரத்தக் குரல் கூட அருகில் நின்றிருந்தவளை திகிலூட்டியது. அதில் மேலும் அவள் பயந்து நிற்க, அதற்குள் செல்வியும், “என்னல, இன்னும் நீ எதையும் போட்டு விடலையா?” என்றார்.

“ம் நீயே போட்டு விடுக்கா” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து இறங்கியிருந்தான் கதிர். அதில் இப்போது நிலா கதிரையைப் பார்த்துக் கொண்டிருக்க, செல்வி கதிர் வாங்கி வந்திருந்ததை அவளுக்கு போட சென்றாள்.

“சித்தி, ஏற்கனவே ரொம்ப கனமா இருக்கு" என்று உதட்டைப் பிதுக்கினாள். “மாமன் கொண்டு வந்தத செத்த நேரமாச்சும் போடனும்த்தா. செரி, போட்டிருக்கிற நகைய கழட்டிட்டு இத போட்டு வுடவா?” என்றார் செல்வி.

“ம்" என்று நிலா தலையாட்ட, அதற்குள் பெரியவர் ஒருவர் ஆசிர்வாதம் பண்ண மேடையேற, வந்தவர், அவர் வாங்கி வந்ததையும் அவள் கழுத்தில் போட்டு விட்டு, புகைப்படம் எடுத்துக் கொண்டு சென்றார்.

அதன் பின் வரிசையாய் உறவுக்காரர்கள் எல்லாம் தங்கள் பலத்தை காட்டுகிறேன் என்று அத்தனைப் பேருமே தங்க நகைகளை வாங்கி வந்திருக்க, செல்வியாலும் எதுவும் செய்ய முடியவில்லை.

ஒரு பக்கம் பந்தி விமர்சையாய் நடந்துக் கொண்டிருக்க, விழா நிறைவடையும் நேரம், சங்கரேயனைப் பார்த்து வள்ளி அவளுடைய பெண்ணுக்கு, வரன் பார்ப்பதாகவும், கதிரை பிடித்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார். அவரும் இப்போதே எதையும் பேச முடியாது என்பதால், “வூட்டுல பேசிட்டு, ஒரு நாள் உங்க வூட்டுக்கு வறோம்ந்த்தா” என்றிருந்தார்.

சிறு சிறு சலசலப்பு, சண்டை இருந்தாலும் எப்படியோ, நிலாவுடைய சடங்கு நல்லப்படியாக முடிந்திருந்தது.

சடங்கு முடிந்தவுடனே தாமரை நிலாவை தங்கள் வீட்டுக்கு அழைத்து சென்றிருந்தார். அடுத்த நாளே நிலா பள்ளி செல்கிறேன் என்றாள். ஆனால் தாமரைத்தான் முடியவே முடியாது என்று சொல்லியிருந்தார். அதன் பின்னான தினங்கள், வழக்கமான தினமாய் கடந்திருந்தது.

கிட்ட தட்ட பத்து நாள் கழித்து அன்று தான் நிலா பள்ளிக்கூடம் கிளம்பிக் கொண்டிருந்தாள்.

“இங்கப்பாரு நிலா. இனிமேல் நீ ஒன்னும் சின்னப் புள்ள கிடையாது. பெரிய புள்ளையாயிட்ட. ஸ்கூல் வுட்டா, வூடு. வூடு வுட்டா ஸ்கூல்ன்னு இருக்கனும். எந்த பையன் கிட்டையும் பேச கூடாது. உம்ம சித்தி அம்புட்டு தூரம் சொன்னான்னுத்தேன், உன்ன பள்ளிக்கூடத்துக்கே அனுப்புறேன். ஏதாச்சும், அங்க நின்ன, இங்க நின்னன்னு பேச்சு வந்திச்சு, எம்ம பத்தி தெரியும்ந்தேன்ன, கரண்டி கனைய அடுப்புல வச்சி சூடு வச்சிடுவேன்" என்று மிரட்டலும், அக்கறையுமாய் நிலாவின் தலையை பின்னி முடித்தார்.

ஏற்கனவே அவள் பயந்த சுபாவம். செல்வியைத் தவிர்த்து அவள் வேறொருவரிடம் வாய் திறப்பது அபூர்வம். பள்ளியிலும் சரி. வீட்டிலும் சரி அத்தனை அமைதி. இப்போது தாமரை இத்தனை சொல்லவும், இன்னும் பயம் கூடியது. செந்தில் தான் நிலாவை அவளுடைய பள்ளிக்கூடம் சென்று விட்டு வந்தார்.

அவர் எதுவும் சொல்லவில்லை என்றாலும் கூட, தந்தையுடைய இறுக்க முகமே அவளை மேலும் பயமுறுத்தியது.

“ஆத்தா சொன்னதெல்லாம் நினப்புல இருக்கட்டும்” என்று அழுத்தி சொல்லி விட்டு அவரும் சென்றிருந்தார்.

அங்கே அப்படி என்றால், இங்கே சங்கரேயன், செல்வியிடம், “நீ என்னத்தா சொல்ற?” என்று கேட்டார்.

“புள்ள பாக்க அழகா லட்சணமாத்தேன் இருக்கா. ஆனா பட்டணத்துக்காரப் புள்ள, இங்கன சரிபட்டு வருமான்னுத்தேன் யோசிக்கேன்" என்றார் செல்வி.

“அவுகளேத்தான வந்து கேட்டாக, அப்போ அவுகளுக்கு விருப்பம் இல்லாம அப்படி கேட்க மாட்டாகத்தேன்ன?” என்றார் சங்க்ரேயன்.

அவருக்கோ எப்படியாவது தன் மகனுக்கு, இந்த வருடத்துக்குள் திருமணம் முடித்து விட வேண்டும் என்ற வேகம். 

“செரிப்பா. உங்களுக்கு விருப்பம்னா, எனக்கும் சம்மதம்ந்தேன்பா. இந்த முறை எந்த தடங்கலும் இல்லாம நல்லப்படியா நடந்தா செரி" என்று செல்வி சொல்லிவிட, முருகேசனோ, அப்போதும் சிறு யோசனையுடன் தான் அமர்ந்திருந்தார்.

“என்ன மருமகனே? நீங்க என்ன சொல்றீக?” என்றார் சங்கரேயன் கேட்டார். அவனுக்குமே இந்த சம்பந்தம் பிடித்திருந்தது தான். இந்த பத்து நாளாய், அவரும் கூட, அந்தப் பென்ணைப் பற்றியும், அந்த குடும்பத்தைப் பற்றியும் விசாரித்துத்தான் இருந்தான்.

நேற்றிரவு சங்கரேஸ்வரி வந்து அவர் மனதை சிறிதாய் குழப்பியிருந்தார்.

“ஏம்பா, நம்ம கதிருக்கு எதுக்கு வெளிய பாக்கனும். அத்தேன் நம்ம நிலா பெரிய மனுஷியாகிட்டாள்ளா. அவள பேசலாம்த்தான்ன. இப்படி ஏதாச்சும் நடந்தா, அக்காவும், தம்பியும் பேசிப்பாகளா” என்று சங்கரேஸ்வரி கூறினார்.

“என்னாத்தா? எல்லாம் தெரிஞ்சும் நீ இப்படி பேசுற. தண்ணி ஊத்துலையே, மதினி என்ன ஆட்டம் ஆடுனாகன்னு பாத்தத்தான்ன? அப்புடி இருக்கிறப்ப, அது பொண்ண கட்டிக் கொடுக்கிடாக்கும். அதுவும் போக, நிலா பச்ச புள்ளைத்தா” என்றார் முருகேசன்.

“பச்ச புள்ளைன்னாலும், என்னிக்கா இருந்தாலும் வேற வூட்டுக்கு கட்டிக் கொடுத்து அனுப்பத்தேன்ன போறோம். அதுவே என் அண்ணன் வூடுன்னா, எம் பேத்தி ராசாத்தியா இருப்பாள்ள” என்றார் சங்கரேஸ்வரி.

அப்போதுமே முருகேசன், “ச், இதெல்லாம் சரிபட்டு வராதுத்தா, அப்படி உம் மனசுல ஆசை எதுவும் இருந்தா அழிச்சிடு. உம் மருமகளே சம்மதிச்சாலும், உன் மகன் நிச்சயம் சம்மதிக்க மாட்டான். இதுவே இன்னும் பெரிய பிரச்சனையத்தான் உருவாக்கும். அதுலையும் ஸ்கூல் போற புள்ளைய கட்டிக்க மாப்பிள்ளையும் சம்மதிக்க மாட்டியான்” என்று சொல்லிவிட்டு கிளம்பியிருந்தான்.

அவரிடம் நடக்காது என்று சொல்லிவிட்டான் தான். ஆனாலும் இப்போது அவர் மனதிலும் மெலிதாய் அந்த யோசனை ஓடியது. ஆனால் சட்டென்று தாமரையின் முகமும், இன்று காலையில் கூட, கதிர் அந்த வழியாய் பைக்கில் சென்றதுக்காக, அந்த கிழி கிழித்துக் கொண்டிருந்தார். 

“ம்ஹூம்" என்று நீண்ட பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவர், “செரி மாமா. பொண்ணு பாக்க போகலாம்" என்றிருந்தான் முருகேசன்.

“அப்புறம் என்னய்யா. நாள் தள்ளிப் போடாம நாளைக்கே போய் பாத்துடலாம்" என்று சொல்லிவிட, முருகேசன் கதிரிடம் இது குறித்து பேச அவனைத் தேடி வயலுக்கு சென்றார்.

அவனோ ரைஸ்மில் கிளம்ப தயாராக வெளியில் வந்தான்.

“வாங்க மாமா” என்று கதிர் பைக்கில் இருந்து அவரிடம் வர, “என்னய்யா? கெளம்பிட்டீயாக்கும்?” என்று கேட்டார் முருகேசன்.

“ஆமா மாமா, கொஞ்சம் வயலுக்கும், மில்லுக்கும் கொஞ்ச பொருள் எல்லாம் வாங்க வேண்டிக் கெடக்கு. அத்தேன் டவுன் வரைக்கும் போலாம்னு கெளம்புனேன். ஏதும் பேசனுமா மாமா?” என்றான் கதிர்.

“பேசனும்த்தேன். செரி நீ உன் வேலைய முடிச்சுட்டுவா, ராத்திரி பேசிக்கலாம்" என்றார் முருகேசன்.

“பரவாயில்ல மாமா சொல்லுங்க" என்றவன், அவருடன் அருகில் இருந்த தோட்டத்து வீட்டுக்கு சென்றான்.

அவர் அவனுக்கு பெண் பார்க்கும் விசயத்தை சொல்ல, அவனோ ஒரு நொடி எதையோ யோசித்து விட்டு, “செரி மாமா. நீங்க போய் பாத்துட்டு வாங்க. உங்க எல்லாருக்கும் சம்மதம்னா, எனக்கும் சம்மதம்ந்தேன்" என்றான்.

அதில் கதிரை யோசனையாய் முருகேசன் பார்க்க, “என்ன மாமா? பொண்ண பாக்க போக சொன்னா, என்னைய நின்னு பாத்துட்டு இருக்கீக" என்று சிறு சிரிப்புடன் கேட்டான்.

“ஏன்லே, எமக்காக எதுவும் யோசிச்சு அப்படி சொல்றீயா?” என்றார் முருகேசன்.

“என்னிக்கா இருந்தாலும், நான் கன்னாலம் பண்ணத்தான்ன மாமா போறேன். அத கொஞ்சம் சீக்கிரமா நடத்திப் பாக்கனும்னு ஆசைப்படுறாக. சரி அப்படியே நடக்கட்டும்" என்று சொல்லியவன் அத்துடன் பேச எதுவுமே இல்லை என்பது போல் கிளம்பியிருந்தான்.

கதிர் சம்மதித்ததே பெரியவர்களுக்கு அத்தனை மகிழ்ச்சியாய் இருக்க, கதிர் இல்லாமலே அடுத்த நாள் பெண் பார்க்கும் படலம் இனிதே நடந்து முடிந்திருந்தது.

பார்த்த வுடனே செல்விக்கும் பிரியாவை பிடித்திருந்தது. அவர்கள் வீட்டிலும் அனைவருக்கும் கதிரை பிடித்திருக்க, அன்றே நிச்சயம் செய்து விட்டுத்தான் வீட்டுக்கே வந்திருந்தனர்.

உள்ளூர் என்றிருந்தால் தாமரை எதையாவது பேசி கெடுத்து விட்டிருப்பார். அவர்கள் வெளியூர் என்பதால், அந்த சம்பந்தத்தில் தாமரையாய் எந்த பிரச்சனையையும் இழுத்து விட முடியவில்லை. அப்படியே ஒரு மாதம் கடந்திருந்தது. குல தெய்வ கோவிலில் குறி கேட்டு விட்டு கல்யாண தேதியை வைத்து விட முடிவெடுத்திருந்தனர். அதன் பின் ஊரறிய ஒரு நிச்சயமும் வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லியிருந்தனர். ஆனால் கதிர் தான். அதுவே போதும் திருமணத்துக்கு ஒரு நாள் முன்பு வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டான்.

செல்வி பிரியாவின் புகைப்படத்தையும், அவளுடைய மொபைல் நம்பரையும் அவனிடம் கொடுத்தும் ஒரு வாரம் ஆகியிருந்தது. புகைப்படத்தைப் பார்த்தான். குறை சொல்வதற்கு ஒன்றும் இல்லை. அழகாகவே இருந்தாள். மறுக்கவும் அவனிடம் எதுவும் இல்லை. வீட்டில் அனைவருக்கும் பிடித்திருந்தது. ஏனோ பேசிப் பார்க்க தோன்றவில்லை.

நிச்சயமும் முடிந்திருக்க, இதன் பின்னும் பேசாமல் இருப்பது நன்றாக இருக்காது என்று யோசித்தப்படி, பிரியாவுடைய நம்பருக்கு கால் செய்ய மொபைலைக் கையில் எடுத்தான்.

சரியாக அன்னேரம், அழுது வடிந்து சிவந்தப்படி அவனின் முன் நின்றிருந்தாள் நிலா.

(இப்போ இந்தப் புள்ள எதுக்கு இங்கன வந்து நிக்குது? சரி அடுத்து என்னென்னு அடுத்த எபிசோட்ல பார்க்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

தென்றல் தீண்டுமா?

Comments   0

*** தென்றல் – 19 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***