தென்றல் – 17

மதியம் போல் தான் கதிர் வீட்டுக்கு வந்திருந்தான். வந்ததும் வராததுமாய், நிலாவுக்கென்று வாங்கிய வளையலை, தன் அக்காவிடம் கொடுக்க, அதை வாங்கியவரோ, “நீ போய் கை கால் அலும்பு. நான் போய் சாப்பாடு எடுத்துட்டு வரேன்" என்றார்.

“செரிக்கா” என்று சொல்லிய கதிர் அவன் வீட்டை நோக்கி செல்ல, தன் தம்பியை ஒரு நொடி குழப்பமாய் பார்த்தவர், நிலாவிடம் சென்றார்.

அங்கே அவளோ, அரை தட்டு உணவை கூட சாப்பிட முடியாமல், “சித்தி போதும்" என்று உதட்டை பிரித்தாள். அதைப் பார்த்து மெலிதாய் சிரித்தவர், “சரித்தா. கைய கழுவு. ஆனா அப்புறமா சித்தி உளுந்தக்களி கிண்டி கொடுப்பேன். அத சமத்தா சாப்புடனும்" என்றார்.

“அப்புறமா. சாயங்காலம் போல" என்று நிலா சொல்லியப்படி, கையைக் கழுவினாள்.

“செரித்தா, அப்புறமாத்தேன்" என்று நிலாவின் கன்னம் கிள்ளி கொஞ்சியவர், “இந்தா, உன் மாமன் உனக்காக வாங்கிட்டு வந்திருக்கான். தொறந்து பாரு" என்று கதிர் கொடுத்த வளையலை நிலாவின் கையில் வைத்தார்.

அதற்கு நிலா எதிர்வினை காட்டும் முன்னே, அவள் கையில் இருந்த அந்த வளையல் பாக்ஸை தட்டி விட்டிருந்தார் தாமரை. அதில் அந்த வளையல் பாக்ஸ், தரையில் விழுந்து, உள்ளிருந்த வளையல் எல்லாம் சிதறி உடைந்தது.

சட்டென்று நடந்து விட்ட நிகழ்வில், நிலாவின் கண்கள் கலங்கி விட, செல்வி கோவமாய், “உனக்கென்ன கிறுக்கா பிடிச்சுக் கெடக்கு?” என்றார்.

“ஆமாடி, எனக்கு கிறுக்குத்தேன். எவென் எவென் எம் புள்ளைக்கு வாங்கி கொடுக்கிறதுன்னு வேணாம்? கண்டவன் வந்து வளையல் வாங்கி போடனும்னுத்தேன், நானும், எம்புள்ளையும் காத்திருக்கோம் பாரு" என்றார் தாமரை.

“வரை முறை இல்லாம பேசாதக்கா, நாந்தேன், புள்ள ஆசைப்பட்டிச்சேன்னு வாங்கிட்டு வர சொன்னேன். நல்ல நாள் அதுவுமா, புள்ள கையில கொடுத்த வளையல தட்டி விடுறீயே. இது பெத்தாத்தா பண்ற வேலையா?” என்று கோவமாய் செல்வி கேட்டார்.

“எம் புள்ள ஆசைபப்ட்டிச்சின்னா, அத வாங்கிக் கொடுக்க, எம்ம வூட்டுக்காரரும், நானும் குத்துக்கல்லாட்டாம், இன்னும் உசுரோடத்தேன் இருக்கோம், எந்த ரோட்டுல போற நாயும், எம் புள்ளைக்கு வாங்கி கொடுக்க தேவல்ல" என்றார் தாமரை.

“வேண்டாம்க்கா, புள்ள இருக்குன்னு பார்க்குறேன். இல்லன்னா ஏதாச்சும் கேட்டுப் புடுவேன். இல்ல, ஆத்தாமத்தான் கேட்கேன். இப்போ அவனுக்கு என்ன முறை இல்லையா? உரிமை இல்லையா? இப்போ அவென் வாங்கிக் கொடுத்தா என்ன தப்பு?” என்று எரிச்சலாய் கேட்டர் செல்வி.

“அவென்னே தப்புத்தாங்க்றேன். அப்புறம் என்ன, அவென் எம்புள்ளைக்கு நல்லது பண்ண வேண்டிக்கெடக்கு" என்று செல்வியிடம் எகிறியவர், அப்படியே நிலாவிடம் திரும்பி, “அடியே கிறுக்கச்சி. இப்படித்தேன் எவென் எத கொடுத்தாலும், கை நீட்டி வாங்குவீயா? கொஞ்சமாச்சும் கூறு வேணாம். உன்னை என் வயித்துலத்தான பெத்தேன். எனக்கு இருக்கிற ரோஷம் உமக்கு கொஞ்சமாச்சும் வேண்டாம். இன்னொரு தடம் இப்படி ஏதாச்சும் கிறுக்குத்தனம் பண்ணுனேன்னு தெரிஞ்சிது. கரண்டிக்கனைய சூடு பண்ணி ஒரு இழுப்பு இழுத்து விட்டுடுவேன்" என்று கத்தினார் தாமரை.

ஏற்கனவே நடுங்கிக் கொண்டிருந்தவளுக்கு, இப்போது அன்னையின் பேச்சில் உடல் ஜில்லிட்டது. மனமோ, கீழே உடைந்து சிதறிய வளையலைத் தேடி பார்வை அலைமோதியது.

“என்னெடி? உம்மகிட்டத்தேன்ன பேசிட்டு இருக்கேன். ஒரு வார்த்தை செரின்னு சொல்லாம, அங்க என்னடி பார்வை வேண்டிக் கெடக்கு?” என்று அடிக்கவே கை ஓங்கியிருந்தார் தாமரை.

அதில், “சித்தி" என்று செல்வியின் கைக்குள் நிலா மறைய, அவரின் கையை தடுத்துப் பிடித்த செல்வி, “புள்ளைய கை ஓங்காதன்னு, உமக்கு பல தடவை சொல்லிட்டேன். இன்னொரு தடம் கை ஓங்குனன்னா, அம்புட்டுத்தேன். அதான் வேணாம்னு அள்ளி வீசிட்டத்தான்ன, இடத்த காலி பண்ணு" என்றார்.

“உன் ஒருத்திக்காண்டி மட்டும்ந்தேன். என் வூட்டுக்காரையும் பகைச்சிட்டு, இவள இங்கன இருக்க சம்மதிச்சேன். கண்டவென் பார்வை எல்லாம் எம்புள்ள மேல பட்டிச்சு. நான் மனுஷியா இருக்க மாட்டேன். அப்புறம் இந்த தாமரை ஆறுன்னு, மொத்த ஊரும் பார்க்கும்" என்று சத்தமாய் சொல்லியவர், அவர் கையோடு கொண்டு வந்த பலகாரத்தையும் அங்கே ஒரு ஓரத்தில் வைத்தார்.

செல்விக்கோ தன் அக்காவின் மீது அத்தனைக் கோவம் எழுந்தது. இன்னும் பேச வார்த்தையும் வந்தது. ஆனாலும் இதற்கு மேல் அதை வளர்க்க மனமின்றி, “செத்த நில்லு. ஒரு வாய் சாப்டு போக வேண்டியதுத்தேன்னே, அப்புடி என்னடி உமக்கு ரோஷம்" என்று கடுப்பாய் கேட்டார்.

“ஆகாதவக, இந்த வூட்ட விட்டு என்னிக்கு போறாகளோ? அன்னிக்குத்தேன் இது என் வூடு. அதுவர, பச்சத் தண்ணீ இந்த வூட்டுல வாங்கிக் குடிக்க மாட்டேன். புள்ளைக்கு புடிக்கும்னு பனியாரம் சுட்டு எடுத்து வந்தேன். உமக்கும் கருப்பட்டி பலகாரம்னா புடிக்கும்ல அதான் கூட கொஞ்சம் எடுத்துட்டு வந்தேன். அதனால எம் மேல இருக்கிற கோவத்த வயித்துல காட்டாம எடுத்து சாப்பிடு. நான் வரேன்" என்று சொல்லிவிட்டு தாமரை அங்கிருந்து சென்றார்.

“ஆமா இவளுக்கு மட்டும் நாங்க ஆகாதவக, ஆனா நாங்க மட்டும், இவ கொடுத்தா ரோஷமில்லாம சாப்பிட்டுக்கனும்" என்று முனுமுனுத்தாலும், அக்கா செய்த பனியாரத்தின் வாசம் அவர் நாசியை தழுவி கோவத்தை குறைத்தது.

பாசக்காரித்தான். ஆனால் தம்பி மீதான இந்த குரோதத்துக்கான காரணம் தான், செல்விக்கு அத்தனை வருத்தமாய் இருந்தது.

“இந்தா. பனியாரம் வேணும்னு நேத்தே கேட்டத்தேன்ன எடுத்து சாப்பிடு" என்று செல்வி நிலாவுக்கு எடுத்து கொடுத்தார்.

“இல்ல வேண்டாம்" என்றவள் ஓரமாய் சென்று அமர்ந்துக் கொண்டாள். “செரி அப்புறமா சாப்பிடு" என்றவர், கதிருக்கு சாப்பாடு கொடுக்க வேண்டுமே என்று அவசரமாய் செல்ல, அதற்குள் கதிர் அங்கிருந்து, சிவாவை வர சொல்லி கிளம்பியிருந்தான்.

வாசலைத் தாண்டுப் போதே செல்வி அதைக் கவனிக்க, தான் கொண்டு வந்த உணவைப் பார்த்தார்.

“நல்ல நாள் அதுவுமா, புள்ளைய ஒரு வாய் நிம்மதியா சாப்பிட விடுறாளா இவ?” என்ற செல்விக்கு மீண்டும் தாமரையின் மீது கோவமாய் வந்தது.

இங்கே பைக்கில் சென்றுக் கொண்டிருந்த கதிருக்கோ, பசியை விட, அக்கா பேசிய வார்த்தைகள் தான் மனதில் ரணமாய் அறுத்துக் கொண்டிருந்தது. அவனாய் ஒன்றும் நிலாவுக்கு வாங்கி வரவில்லை. செல்வி சொல்லியதால் மட்டுமே, வாங்கி வந்திருந்தான். இனிமேல் யார் சொன்னாலும், இப்படி செய்யக் கூடாது என்று குறித்துக் கொண்டான்.

இங்கே சிவாவோ ரைஸ்மில்லுக்கு செல்லாமல் தோட்டத்து பக்கம் சென்றுக் கொண்டிருந்தான்.

அதைக் கவனித்த கதிர், “ஏல்ல? உன்ன நான் மில்லுக்குத்தேன்ன போ சொன்னேன். இப்போ எதுக்கு, இங்கன போயிட்டு இருக்க?” என்றான்.

“நேத்து, உம்ம அடிக்க கட்டம் போட்டானுங்கள்ள, அவனுங்கள நம்ம பசங்க கட்டி தூக்கி வந்திருக்கானுங்க" என்றான் சிவா.

அதில், அவன் தலையில் தட்டிய கதிர், “அதேன். நேத்தே, அவனுகள, போலீஸ்ல புடிச்சி கொடுங்கன்னு சொல்லிட்டுத்தேன்ன போனேன். இப்போ எதுக்கு, இங்கன அடைச்சி போட்டிருக்கீக" என்றான்.

“அதெப்டின்னே, நம்ம ஊருக்கு வந்து, உமக்கே ஸ்கெட்ச் போடுவானுங்களா? அவனுகளுக்கும், அவென்ன அனுப்புனவுகளுக்கும், நம்ம யாருன்னு காமிக்க வேணாம்" என்றான் சிவா.

அதற்குள் அவர்கள் வர வேண்டிய இடம் வந்திருக்க, ஊர் வாலிப கூட்டமும் அங்கே தான் இருந்தனர். அவர்களைப் பார்த்ததும், பைக்கில் இருந்து இறங்கிய கதிர், சிவாவை பார்த்து, “எல்லாம் நீத்தேன்ன, நீத்தேன்ன இவனுங்கள உசுப்பேத்தியிருக்க" என்றான்.

“எண்ணென்னே, ஆறு சொல்லியோ எதுக்குண்ணே செய்யனும். எங்களுக்கே” என்று ஒருவன் பேசப் போக, “ஸ்.. திருவிழா முடிஞ்சிருச்சு. அவென் அவென் பொழப்ப போயி பாருங்கன்னு காலையிலையே சொல்லிட்டுத்தான்ன போணேன். அதையும் மீறி என்ன பண்ணி வச்சிருக்கீக?” என்றான் கதிர்.

“இல்லண்ணே” என்று இன்னொருவன் பேசப் போக, “போதும். அதென், உம்ம மனசு போல அவனுகள அடிச்சு உதைச்சாச்சுத்தேன்ன? எல்லாரும் வூட்ட பார்த்து கிளம்புங்க. ஆத்தா அப்பன் எல்லாம், தேடிட்டு இருப்பாக. போயி நல்ல நாள்ல அவுக கூட உட்கார்ந்து சாப்பிட்டு, அவங்கவங்க சோழிய பார்க்க ஆரம்பிங்க. இந்த விஷயம் ஆறுக்கும் தெரிய கூடாது கிளம்புங்க" என்று கதிர் அழுத்தி சொல்லி விட, அதற்கு மேல் அவர்களும் எதுவும் சொல்லாமல் கிளம்பியிருந்தனர்.

அவர்கள் சென்றதும் சிவாவின் பக்கம் திரும்பியவன், “ஏன்ல, அவனுங்கத்தேன் வயசு வேகத்துல பாயுறானுங்கன்னா, உமக்கெங்கல்ல போச்சு புத்தி. இன்னும் ஒரு மாசத்துல கல்யாணத்த வச்சிட்டு இதெல்லாம் உமக்கு தேவையா?” என்றான் கதிர்.

“எல்லாம் அந்த பாண்டியோட வேலைண்ணே” என்று சிவா சொல்ல, “ச் எல்லாம் எமக்குத் தெரியும். அவனுக்கும், எனக்கும் முடிக்க வேண்டியது ஒன்னு இருக்கு. அத நான் பார்த்துக்கிறேன். அதுக்குள்ள ஆறும் வர வேணாம். முதல்ல, இவனுகள, ஊர் காரக கண்ணுல படாமல் போலீஸ்ட்ட ஒப்படைச்சிடு" என்ற கதிர் அங்கிருந்து சென்றான்.

“எண்ணே. பைக்க எடுத்துக்கோண்ணே” என்றான் சிவா. “இல்ல, பக்கத்துல அப்படியே வயல்ல பார்த்துட்டு போறேன். நீ நான் சொன்னத பாரு" என்று சொல்லிவிட்டு கதிர் நடந்தே அங்கிருந்து சென்றிருந்தான்.

அங்கே செல்வியோ, கதிர் சாப்பிடாமல் சென்றதை நிலாவிடம் சொல்லி புலம்பி தள்ளிவிட்டார். அவளுக்குமே அவளுடைய அன்னையின் மீது சிறிதாய் கோவம் துளிர்த்தது. ஆனால் அதை எல்லாம் அவளுக்கு காட்டி பழக்கம் கிடையாதே.

அதில், செல்வியிடம், “ஏன் சித்தி? அவுக போனா என்ன? நீங்க, அவருக்கு சாப்பாடு கொடுத்து விடலாம்த்தான?” என்றாள் நிலா.

அப்போதே செல்விக்கும் அது தோன்ற, “அட ஆமால்ல. நான் ஒரு கிறுக்கச்சி. பாரேன் எமக்கு இது தோணல. என் ராசாத்தி" என்று நிலாவின் கன்னம் வழித்து கொஞ்சியவர் அடுத்த நொடி குமாரை அழைத்து கதிருக்கு உணவைக் கொடுத்தனுப்பியிருந்தார். அதன் பின்னே செல்விக்கு மனம் அமைதியானது.

ஊர் மொத்தமும் குடும்பமாய் ஒற்றுமையாய் இருக்க, அங்கே கதிர் மட்டும், ரைஸ்மில்லில் அவனுடைய அறையில் தலைக்கு கைக் கொடுத்து படுத்திருந்தான். மனம் ஏனோ ஒரு வித வெறுமையை உணர்ந்தது. கரம் அன்னிட்சையாய் இடையோரம் இருந்த காயத்தை வருடியது.

அப்போது, “அடிப்பட்டிருச்சா?” என்று கேட்ட நிலாவின் குரலும், அவள் விரலின் பரிஷமும் நினைவுக்கு வந்து நிற்க, பட்டென்று எழுந்து அமர்ந்தான் கதிர்.

“ச் என்னல்ல நீ? அந்தப் புள்ளைய பத்தி யோசிச்சா கூட, உம்ம அக்காக்கு மூக்கு வேர்த்திடும். அந்தப் புள்ள அங்கன இருக்கிற வரைக்கும், நீ அந்தப் பக்கம் போகாம இருக்கிறதுத்தேன் நல்லது" என்று தனக்குத்தானே அழுத்தமாய் சொல்லிக் கொண்டான். அதில் மனம் ஏனோ மீண்டும் சோர்ந்துத்தான் போனது.

(பார்க்காம இருந்துட்டா, நடக்கப் போறத மாத்திட முடியுமா என்ன? சரி அடுத்து என்னத்தேன் நடக்கப் போதுன்னு அடுத்த எபிசோட்ல பார்க்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு எந்த சீன் பிடிச்சிருந்திச்சுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

தென்றல் தீண்டுமா?

Comments   1

*** தென்றல் – 17 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***