தென்றல் – 16

“ஊர் தூங்கும் வேளையிலும்,

நான் தூங்க போனதில்ல 

உன்னாலத்தான் கண்ணே உன்னாலத்தான்”

ஊர் மொத்தமும் கோவிலில் திரண்டிருக்க, செல்வியுடன் படுத்திருந்த நிலாவுக்கு கதிரை நினைத்து உறக்கம் வரவில்லை. திடீரென்று கதிரின் வீட்டு முற்றத்தில் ஆள் புலங்கும் சத்தம் கேட்க, நிலா எழுந்து அங்கு சென்றாள். அவனோ அவள் வருவது தெரியாது, உடை மாற்றிக் கொண்டிருந்தான். சட்டையைக் கழட்டி, அங்கிருந்த கொடியில் போட்டவன், அங்கிருந்த துண்டு ஒன்றை எடுத்தப் படி, வேஷ்டியை அவிழ்க்க சென்றான்.

அதற்குள், கதிரின் பேச்சு சத்தத்தில் சற்றும் யோசிக்காமல், அவள் அவனை நெருங்கியிருக்க, வளவளப்பான எதிலோ கால்லை வைத்திருந்தாள். அதில், பயந்து “ஆ” என்று அவள் சத்தம் போட, அருகில் கேட்ட சத்தத்தில் கதிர் திரும்ப, “மாமா” என்றவள், அவனை ஓடி வந்து கட்டிக் கொண்டாள்.

சட்டென்று நடந்து விட்ட நிகழ்வில், ஒரு நொடி கதிருக்கு எதுவுமே புரியவில்லை. அங்கே அவளோ, பயத்தில் ஒரு ஆடவனின் வெற்று மார்பில் புதைந்திருக்கிறோம் என்ற நினைவையே மறந்திருந்தாள். அது தெரிந்தாலும் கூட, சுதாரித்து விலகும் அளவுக்கு பக்குவம் இல்லை என்பது வேறு கதை.

அவள் குரலிலேயே நிலா என்று உணர்ந்தவனுக்கு, இவள் ஏன் இங்கு வந்தாள்? என்ற யோசனைத்தான் ஓடியது. அதில் சட்டென்று தன்னில் இருந்து அவளைப் பிரிக்க முயன்றான் கதிர்.

ஆனால் அவளோ, பயத்தில் அவனை விலக மாட்டேன் என்று அடம்பிடித்தாள். இப்போது விளக்கை கூட போட முடியாது என்ற நிலை. அவனே சத்தம் போட்டு யாரையும் எழுப்பி விடக் கூடாது என்று தான் அமைதியாய் அங்கு வந்திருந்தான். இப்படி இவள் வந்து கட்டிப் பிடிப்பாள் என்று அவன் கனவாய் கண்டான்? ஆனாலும் அப்போதும் அவனுக்கு அது தவறாய் எல்லாம் தோன்றவில்லை.

சிறு பிள்ளை எதையோ பார்த்து பயந்து வந்திருக்கிறாள் என்று புரிந்தது. “நிலா இங்கனப் பாரு" என்று சிறு அழுத்தம் கொடுத்து அவளை தன்னில் இருந்து விலக்கி நிறுத்தினான்.

இருளில் நின்றிருந்ததால், இருவருக்குமே ஒருவரின் முகம் மற்றவருக்கு பெரிதாய் தெரியவில்லை.

அவன் குரல் சற்று அழுத்தமாய் ஒலிக்கவும், இங்கே நிலாவுடைய உடல் மேலும் நடுங்கியது. அதில், சற்று குரலை தாழ்த்தி “அக்கா எங்க? நீ தனியா இங்கன என்ன பண்றவ?” என்றவனுக்கு, அவள் எதுவும் தெரியமல் தனியே இந்தப் பக்கம் வந்து விட்டாளோ? என்ற சிந்தனைத்தான்.

“நான். அது. நீங்க" என்றவளுக்கு அவனிடம் பேசும் தைரியம் கூட இல்லை. மேலும் பயந்து தான் போனாள். “சரி.. சரி இரு” என்றவன் வேகமாய் கொடியில் போட்டிருந்த சட்டையை எடுத்து அணிய முயற்சித்தான். அப்போது, சட்டை, காயத்தில் பட்டுவிட, “ஸ்" என்றான் கதிர்.

அவனின் சத்தத்தில் நிலா, ஒரு வித பதட்டத்துடன், அவனுடைய இடையில் கரம் பதித்தாள். அவள் அணைத்திருந்தப் போதே, அந்த இடத்தில் ஏதோ ஈரம் பதிந்திருப்பதை உணர்ந்திருந்தாள்.

சட்டென்று அவளின் மென்விரல், ஆடவனின் மேனியில் பட, ஜில்லென்ற உணர்வு, வந்து அவனை என்னமோ செய்தது. அதில் கோவமாய், “என்னப் பண்றவ?” என்று அவள் கரத்தை விலக்கிப் பிடித்தான்.

“அடிப்பட்டிருச்சா?” என்று கேட்டாள் நிலா. அதில் கோவத்தை தணித்தவன், “அதெல்லாம் ஒன்னும் இல்ல. முதல்ல நீ போ” என்றான் கதிர்.

“நான் சித்திய கூட்டி வரவா, அவுக மருந்து போட்டு விடுவாக" என்று அதிலேயேத்தான் நின்றாள் நிலா.

அவனுக்கோ சத்தம் போட்டே பழக்கம். இப்போது சத்தம் போட்டு, யாரேனும் வந்து விட்டால் பெரிய சிக்கல் ஆகிவிடும். அதனால், “அதெல்லாம் வேண்டாம். பெருசாலாம் ஒன்னுமில்ல. நானே மருந்து போட்டுப்பேன்" என்று மெதுவாய் கூறினான்.

ஆனால் ஏனோ அதுவே அவளை மிரட்டுவது போல் தான் அவளுக்கு தோன்றியது. அதில் அவள் மிரண்டு விழிக்க, அந்த இருட்டிலும், அவளுடைய மீன் விழிகள், பளிச்சென்று அவன் கண்ணில் விழுந்தது.

எப்போது வேண்டுமானாலும் அழுதுவிடுவேன் எனும் நிலையில் அவள் விழிகள் இருக்க, “இன்னேரத்துல இப்படி தனியா இங்கலாம் வரக் கூடாது" என்றான் கதிர்.

“ம்” என்று அவள் தலையாட்ட, “தனியா போயிடுவீயா? இல்ல கூட வரனுமா?” என்றான் அவன்.

அதில் இப்போது வந்த இடத்தைப் பார்க்க, இன்னும் பயம் கூடியது. நன்றாக இருந்தால் ஒரு நாப்பதில் இருந்து ஐம்பது அடி தூரம் தான் இருக்கும். அதுக்கே அவளுக்கு அத்தனை பயம்.

“சரி வா” என்றவன், அவளை அழைத்துக் கொண்டு, அங்கே கட்டபப்ட்டிருந்த குச்சிலுக்கு வந்தான். அந்த இடத்தில் சற்று வெளிச்சம் இருக்க, நிலாவோ, அவன் வயிற்றில் இருந்த காயத்தைத் தான் பார்த்தாள். அதிலும் அவன் சட்டை முழுவதும், சேரும் சவதியுமாய் வேறு இருந்தது.

அவனுக்கோ அப்போதே, அவளுக்காக வாங்கி வந்த வளையல் நினைவுக்கு வர, “உள்ளப் போ” என்று அவள் முகம் பார்க்காமல் சொல்லியவன், அங்கிருந்து அவன் வீட்டை நோக்கி நடந்தான்.

இங்கே அவளுக்குமே அவனுக்கு பெரிதாய் எதுவும் இல்லை என்ற நிம்மதியில் செல்வியின் அருகில் சென்று படுத்துக் கொண்டாள். அதன் பின், கதிர் அந்த வளையலை எடுத்துக் கொண்டு வர, “ச் இந்த நேரத்துல கொடுத்தா அக்கா என்ன நினைப்பாக? காலையில கொடுத்துக்கலாம்" என்றவன், அங்கிருந்து சென்றிருந்தான்.

மீண்டும் சட்டையைக் கழட்டப் போக, “ம்ஹூம் வூட்டுக்குள்ள போயே மாத்திக்கலாம்" என்றவன் வீட்டுக்குள் சென்றே வேறு உடை மாற்றி விட்டு, காயத்துக்கு மருந்தும் போட்டுக் கொண்டு அங்கிருந்து கோவிலுக்கு கிளம்பி சென்றான்.

விடியற்காலையில் மொழப்பாரி அத்தனையையும் கரைத்து விட்டு அனைவரும் வீடு நோக்கி வந்தனர். சங்கரேயனும் விடியற்காலையில் தான் வீடு வந்து சேர்ந்திருந்தார்.

துளசி காலையிலேயே நிலாக்கு துணைக்கு வந்திருக்க, செல்வி வாசல் தெளித்து கோலம் போட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு வந்த முருகேசன், “மாப்புள வீட்டுல இருக்கானா?” என்றார். அப்போதே கணவரை நிமிர்ந்துப் பார்த்த செல்வி, “இல்லையேங்க. இன்னும் வரலையே” என்றவர், காலையிலேயே தன் கணவர் கதிரை தேடி வரவும் சற்று அச்சம் தான்.

அது அவள் முகத்திலேயே தெரிய, அதைப் பார்த்த முருகேசன், “அடியே இப்போ நான் என்னத்த கேட்டுட்டேன்னு, இப்படி நிக்கிறவ? மாப்புள வந்தான்னான்னு தான கேட்டேன்" என்றார்.

“இல்ல, அங்க ஏதும் பிரச்சனை இல்லையே” என்றாள் செல்வி. “அடியே, காலையிலையே புருசன்காரன் வூட்டுக்கு வந்திருக்கான். கூப்டு ஒரு வாய் காபி தண்ணி கொடுக்கனும்னு தோணல. அப்படியே தம்பி பாசத்துல உருகுறவ" என்று வேண்டுமென்றே சீண்டினார் முருகேசன்.

அதில் தன் கணவரை முறைத்தவரோ, “பொழுது சாய வந்திருந்தாவது ஏதாவது கவனிச்சிருக்கலாம். இப்படி விடியாங்கட்டி வந்தவருக்கு என்னத்த கொடுக்கிறதாம்?” என்று செல்வியும் சீண்டினார்.

அவரின் பேச்சில் பைக்கை ஓரம் நிறுத்தி விட்டு, “ஏத்தம் கூடிப்போச்சுடி உனக்கு" என்று சொல்லியப்படி அவரின் அருகில் வந்த முருகேசன், அவளின் கையில் ஒரு பொட்டலத்தை திணித்தார்.

“என்னவாம்?” என்று செல்வி கேட்க, “ஏன் என் மாம மக அத பிரிச்சு கூட பாக்க மாட்டாளாக்கும்" என்று கேலி பேசினான் முருகேசன்.

“க்கும் ரொம்பத்தேன்" என்று சினுங்கியவர், அவர் கொடுத்ததை பிரித்துப் பார்க்க, அதில் ஒரு ஜோடி கம்மலும், அதற்கு பொருத்தமாய் வளையலும் இருந்தது.

அதைப் பார்த்ததும் முகம் மலர்ந்தவர், “புள்ளைக்கு வாங்கி வந்தீகளா?” என்றார் செல்வி.

“எதே? அந்த வளையல்காரன் கிட்ட சண்டைப் போட்டு என் பொண்டாட்டிக்கு வாங்கிட்டு வந்திருக்கேனாக்கும்" என்றார் முருகேசன்.

“என்ன பொண்டாட்டி மேல புதுசா பாசம் எல்லாம் ஜாஸ்தியா இருக்கு?” என்று செல்வி கேட்க, அதற்கு அவனோ, “புதுசா என்ன பாசம் வேண்டி கெடக்கு. அதெல்லாம் பொறந்ததுலையே இருந்து இருக்கு" என்றப்படி செல்வியின் கரத்தைப் பிடிக்க சென்றார்.

அதற்குள், “என்ன மருமவனே வாசல்லையே நின்னுட்டு உள்ளார வாங்க" என்று சங்கரேயன் அழைக்க, அதில் செல்வி சட்டென்று முருகேசனை விட்டு விலகி நின்றார்.

“ஐயோ இவரு ஒருத்தரு. மருவாத கொடுக்கிறேன்னு மனுஷன் நிலைமை புரியாம பண்றது" என்று தன் மாமனாரை திட்டியப்படியே செல்வியைக் கடந்து உள்ளே சென்றார் முருகேசன்.

அதைக் கேட்டு உள்ளே சிரித்தாலும் வெளியே காட்டாதவாறு, “நான் போயி காபி போட்டு எடுத்துட்டு வாரேன்" என்று அப்பா, கணவர் இருவருக்கும் பொதுவாய் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார்.

செல்லும் தன் மனைவியையே பார்த்தப்படி இருந்த முருகேசனிடம், சங்கரேயன் ஊர் கதை பேச, அவரும் வேண்டா வெறுப்பாய் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். அதன் பின், செல்வி வந்து இருவருக்கும் காபி கொடுக்க, அதை குடித்தவர், “சரி மாமோய், நான் கிளம்புறேன் ரெண்டு நாளா கடைப்பக்கம் போகல. இனிமேல் தான் போயி பாக்கனும்" என்றப்படி முருகேசன் எழ, அவர் கையில் இருந்த காபி கப்பை செல்வி வாங்கிக் கொண்டார்.

“ஒரு நிமிஷம்” என்று சங்கரேயன் அழைக்க, முருகேசன் அவரைப் பார்க்க, “அவெத்தேன் புரியாம, இங்கனையே இருக்கான்னா, நீங்களாச்சும் அவளுக்கு புத்தி மதி சொல்லி, உங்க வூட்டுக்கு கூட்டி போக வேண்டியதுத்தேன்ன மருமவனே” என்று சிறு ஆதங்கத்தோடு தன் மகளைப் பார்த்துக் கூறினார்.

“அப்பா” என்று செல்வி பேசும் முன்னே, “என் பொண்டாட்டி கொடுத்த வாக்க, நானும் காப்பாத்தனும்ல மாமா. முதல்ல கதிருக்கு ஒரு நல்லது நடக்கட்டும். அப்புறம் எல்லாத்தையும் பாத்துக்கலாம். அதுவரைக்கும், எம்ம பொஞ்சாதி, உங்க பொண்ணா உங்க வூட்டுலையே இருக்கட்டும்" என்று சொல்லிய முருகேசனை, நேசம் பொங்க பார்த்தார் செல்வி.

அதற்கு மேல் எதுவும் சொல்ல முடியாமல், சங்கரேயன் சென்று விட, “என்னடி மாமன் மகளே! போயிட்டு வரவா?” என்று மீசையை நீவியப்படி, செல்வியைப் பார்த்து கண்ணடித்துக் கேட்டான் முருகேசன்.

அதில் வெட்கப்பட்டு முகம் மலர்ந்தவர், “ம்" என்று தலையாட்ட முருகேசன் அங்கிருந்து சென்றிருந்தார்.

அவர் சென்றதும், வீட்டு வேலைகள் இழுத்துக் கொள்ள, கதிர் சிவாவுடைய பைக்கில் மதியம் போல் வீடு வந்து சேர்ந்தான்.

அதைப் பார்த்த குமார், “உங்க வண்டி என்னாச்சுன்னே” என்றான். அதில், “ச் அமைதியா இருல" என்றவன் சிவாவை அனுப்பி விட்டு வீட்டுக்கு வந்தான்.

இவன் செல்வதை பார்த்த செல்வி, “ஏல கதிரு நில்லுய்யா” என்றார். கதிர் திரும்பி அவரிடம் வர, “இன்னிக்கு நம்ம வீட்டுலத்தேன் சாப்பாடு. அது இதுன்னு எதுவும் சொல்லக் கூடாது" என்றார்.

“அக்கா” என்று அவன் அழைக்க, “ச் அக்காத்தேன் சொல்லுதேன்” என்று செல்வி அழுத்தி சொல்ல, “இந்தாக்கா. இத கொடுத்துடு” என்று நிலாவுக்கென்ற வாங்கிய வளையலை அவரிடம் கொடுத்தான்.

அதற்குள் நிலா “சித்தி" என்றழைக்க, “நீ போயி ஓய்வு எடுல. நான் இப்போ சாப்பாடு எடுத்துட்டு வரேன்" என்று செல்வி நிலாவிடம் சென்றார்.

அவளோ, “எனக்கு சாப்பாடு போதும்" என்று உதட்டை பிதுக்கினாள். அதற்குள், “சரித்தா. இந்தா உன் மாமன் உனக்காக வாங்கிட்டு வந்திருக்கான்" என்று அந்த வளையல் பாக்ஸை செல்வி நிலாவின் கரத்தில் கொடுப்பதற்கும், தாமரை அதை தட்டி விடுவதற்கும் சரியாக இருந்தது.

(க்கும். அதான.. ஒரு மாதிரி ப்ளோல போகுதேன்னு நினைச்சேன். சரி அடுத்து என்னென்னு அடுத்த எபிசோட்ல பார்க்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

தென்றல் தீண்டுமா?

Comments   0

*** தென்றல் – 16 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***