தென்றல் – 15

கோவிலில் இருந்து மொழப்பாரி கோவில் சுற்றி கிளம்புவதற்கு தயாராக இருக்க, பெண்கள் அனைவரும் மொழப்பாரியை சுற்றி வட்டமாய் நின்று கும்மி அடித்துக் கொண்டிருந்தனர். அதனால் இப்போது இளம் பெண்களின் கூட்டம், வளையல் கடையில் இருந்து கலைந்திருந்தது. அப்போது அங்கே வந்த கதிர், “வியாபாரம்லாம் எப்படிண்ணே போகுது?” என்று கேட்டப்படி அங்கிருந்த வளையல்களைப் பார்த்தான்.

“ஆத்தா புண்ணியத்துல இந்த திருவிழாவுலையும் நல்லா வியாபரம்தேன்யா” என்றார் அவர்.

“ம்" என்றவன், “நல்ல வளையல் இருந்தா காட்டுங்க" என்றான் கதிர். “உனக்கு இல்லாததையா? இந்தா காட்டுறேன். அளவு என்னையா?" என்றவர் அவரிடம் இருந்த அத்தனை வளையல்களையும் அவனிடம் கடைப் பரப்பினார்.

“நீங்க எடுத்து போடுங்க. நான் பார்த்துக்கிறேன்” என்றவன் அங்கிருந்த வளையல்களைப் பார்க்க ஆரம்பித்தான்.

அதை எல்லாம் பார்த்தவன், ஒவ்வொரு வளையலாய் எடுத்துப் பார்க்க, அவனுக்கோ எதுவுமே மனதுக்கு பிடிக்கவில்லை. “இவ்வளவுத்தான்னா” என்று சொல்லும் போதே, அங்கே வரிசையாய் அடுக்கி வைத்திருந்த கல்யாண வளையல் கண்ணில் பட்டது. அதில் அதை கையில் எடுத்துப் பார்த்தான்.

அதெல்லாம் பெரிதாய் இருக்க, தன் விரலால், அந்த வளையலை அளந்து பார்த்து, “இதுல சிறுசு இருக்கா?” என்று கேட்டான்.

அவன் கல்யாண வளையலை கையில் எடுத்து வைத்திருக்கவும், அந்த வளையல்காரரோ, “ஆறுக்குய்யா, உன் வருங்கால பொஞ்சாதிக்கு வாங்குறீயாய்யா? ஐயன் கையால எடுத்து தரேன் அடுத்த மாசமே மாலையும் கழுத்துமா அந்த பொண்ணோட நிப்பையா” என்று கூறினார்.

அதைக் கேட்டவன், “ஐயா. அப்படி எல்லாம் இல்லைங்க. நீங்க தப்பா நினைச்சிட்டீங்க. நான் வீட்டுல சின்ன புள்ளைக்கு வாங்கலாம்னு வந்தேன்" என்று வேகமாய் பதிலளித்தான். அடுத்த நொடி, அந்த வளையலை ஓரமாய் வைத்திருந்தான்.

“இல்லப்பா, கன்னால வளையல பார்த்துட்டு இருந்தீகளா? அத்தேன் அப்புடி நினைச்சிட்டேன். அதே மாதிரி சின்ன புள்ளைங்க போடுற வளையலும் இருக்கு. எடுத்துக் காட்டுறேன்" என்றார் அவர்.

“ஆ.ங் இல்ல இல்ல. நீங்க சின்ன புள்ள போடுற மாதிரி வேற வளையலே காட்டுங்க" என்றான் கதிர். ஏனோ அவர் சொன்ன வார்த்தையை கேட்டவனுக்கு ஒரு நொடியில் உயிர் உருகிப் போயிருந்தது.

“பச்ச புள்ளைய போய் ஆறு கூட சேர்த்து வச்சு" என்றவருக்கு, தன்னை நினைத்தே கோவம் வந்தது.

அதன் பின் அவர் வளையல்கள் காட்ட, அதில் ஒரு மாடல் அவன் மனதை கவர்ந்திருக்க, “இத எடுத்துக்கிறேன். என்ன விலை?” என்றான் கதிர்.

“ஒரு டஜன்னா 150 ரூபாய்" என்றார் கடைக்காரர். “இல்ல இந்த பாக்ஸ் மொத்தமா எடுத்துக்கிறேன்” என்றான் கதிர். “அப்படின்னா, 350 குடுய்யா” என்றார் அவர்.

அதில் தன் சட்டைப் பாக்கெட்டில் இருந்த 500 ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுத்தவன் மீதியையும் அவரையே வைத்துக் கொள்ள கூறினான்.

“அளவு பத்தலன்னா கொண்டு வாய்யா மாத்தி தரேன்" என்று அவர் சொல்ல, “இல்ல இது சரியா இருக்கும்" என்று மீண்டும் அந்த வளையலைப் பார்த்து சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பியிருந்தான் கதிர்.

அப்போது அங்கு வந்த சிவா, “எங்கண்ணே போன? உன்ன எங்கெல்லாம் தேடுறது?” என்றான். “என்னலே?” என்று கதிர் கேட்க, “மொழப்பாரி கிளம்ப போதுன்னே, ஊர் தலைவரு உன்னை அழைச்சிட்டு வர சொன்னாரு" என்று சிவா சொல்ல, கதிரோ வாங்கிய வளையலை யாரிடமாவது கொடுத்து விடலாம் என்று குமாரை தேடினான்.

“என்னாச்சுன்னே? யாரையாச்சும் தேடுறீகளா?” என்று சிவாவும் சுற்றிப் பார்க்க, “இல்ல இந்த குமார் பையல பாத்தீயா?” என்றான் சிவா.

“தங்கச்சி மொழப்பாரி போட்டிருக்குல்ல, அதேன் அவுக கூட நிப்பான். கூட்டி வரவாண்ணே” என்றான் சிவா.

“ஆ..ங் இல்ல. இல்ல நானே பாத்துக்கிறேன்" என்றவன் சிவாவுடன் செல்ல, அங்கே மொழப்பாரி ஊர்வலம் ஆரம்பம் ஆனது. கதிரோ அவருடைய அணிகளிடம், “போற வழியெல்லாம் லைட்டு கட்டியாச்சித்தான்னே குடிச்சிட்டு எவனும் ஆட்டம் காமிக்காம பார்த்துக்கோங்க. நான் பின்னாடி பைக்ல வரேன்" என்று தெளிவாய் சொல்லி அனுப்பினான்.

அங்கே பாண்டியுடைய ஆட்கள், ஆங்காங்கே கதிர் செல்லும் பாதையை நோட்ட்மிட்டு, பதுங்கி இருக்கும் ஆட்களுக்கு தகவல் கொடுத்தனர்.

“பேசாம வளையல்ல வூட்டுல கொடுத்துட்டு வந்திருக்கலாமோ?” என்ற கதிரின் கவனம் மொத்தமும் வளையலின் மீது தான் இருந்தது. அதில் சட்டென்று அவன் முகத்தில் லைட் வெளிச்சம் அடிக்க நிமிர்ந்துப் பார்க்கும் முன்னே, பைக் சக்கரத்தில், கம்பை யாரோ விட்டிருக்க, அப்படியே புல்லட்டில் இருந்து சரிவில் விழுந்திருந்தான் கதிர்.

இங்கே ஊர் மொத்தமும் மொழப்பாரி பின்னே செல்ல, சங்கரேயன் மட்டுமே வந்திருந்தார். அவரின் பார்வை கதிரைத் தேட, சிவாவிடம், “கதிர் எங்கன ஆளையே காணும்?” என்றார்.

“அண்ணே மொழப்பாரி பின்னாடி வரேண்னு சொன்னாங்கய்யா” என்றான் சிவா.

“சரிலே நீ போ” என்றவருக்கு ஏனோ மனம் பிசைந்தது. அங்கே உறங்கிக் கொண்டிருந்த நிலாவுமே, “மாமா” என்றப்படி அதிர்ந்து எழுந்தாள்.

அவளின் சத்தத்தில், கண் விழித்த செல்வி, “என்னாச்சுடா? முதல்ல இந்த தண்ணிய குடி" என்றவர் அவள் தலையை தடவி கொடுத்தார்.

அவளோ தண்ணீரை வாங்காமல், “சித்தி…. மா..” என்றவளுக்கு எப்படி சொல்ல என்றே தெரியவில்லை.

“என்னடா? கெட்டக் கணா ஏதும் கண்டீயா?” என்று கேட்டவர், அங்கிருந்த திருநீறை எடுத்து அவளுக்கு பூசிவிட்டார்.

“ஆ..ங் இல்ல" என்றவளுக்கு ஏனோ இரத்தக் கறையுடன் இருந்த கதிர் மட்டுமே நினைவில் வந்து நின்றான்.

அவள் முகத்தில் தெரிந்த பதட்டத்தைப் பார்த்த செல்வியோ, “ஒன்னும் இல்லடா. நீ சித்தி மடியில படுத்து தூங்கு" என்றார்.

“இல்ல. நான். மா. மாவ" என்றவளுக்கு அடுக்கடுத்த வார்த்தை வரவில்லை. அவள் சொல்ல வருவது புரியாமல், “அம்மாவ பாக்கனுமாடா?” என்றார் செல்வி.

“ம்ஹூம்" என்று தலையாட்டியவள், வேகமாய் கதிர் தங்கியிருக்கும் வீட்டைப் பார்த்தாள்.

“அங்க என்னம்மா இருக்கு?” என்று செல்வியும் குழப்பமாய் அங்கே பார்க்க, “இல்ல மாமா வந்துட்டாங்களா?” என்று கேட்டாள்.

“ஆறு கதிரா?” என்று கேட்டார் செல்வி. “ம்" என்று அவள் தலையாட்ட, செல்வியோ குழப்பமாய் நிலாவைப் பார்த்தார். அவள் அவனிடம் பேசிக் கூட பார்த்தது இல்லை. அதிலும் மாமா என்று அழைத்துக் கூட இவள் கேட்டதில்லை. திடீரென்று அவள் அப்படி கேட்கவும், “கோவில்ல இருப்பான். எப்படியும் மொழப்பாரி கரைச்சு விடியங்காட்டித்தான் வருவான்" என்றார்.

அவளோ அப்போதும் அங்கேயே பார்க்க, “வந்திருவான்மா. நீ உறங்கு" என்றவர் அவளை மடியில் போட்டு தட்டிக் கொடுத்தார்.

“புள்ளைக்கு என்னாச்சு? திடீர்னு தூக்கத்துல இருந்து எழுந்து அவன கேட்கிறா?” என்று யோசித்தவரின் மூளையில் அப்போதே நிலாவிடம், கதிர் வளையல் வாங்கி வருவான் என்று சொல்லியது நினைவுக்கு வந்தது.

“அதான் அத நினச்சிட்டே படுத்திருப்பா போலா. அச்சோ புள்ள வேற, இப்படி நினைச்சிட்டு இருக்கே. இவன் வேற வாங்கிட்டு வருவான்னா? இல்லையான்னு தெரியலையே” என்று நினைத்த செல்வி தன் மொபைலை எடுத்தார்.

“எதுக்கும் இன்னொரு தடவை மறக்காம வாங்கிட்டு வர சொல்லிடுவோம்" என்று யோசித்த செல்வி கதிருக்கு கால் செய்தார். அங்கே அழைப்பு சென்றதே தவிர, அவன் எடுக்கவில்லை.

“சரி திருவிழா கவனத்துல இருப்பான்" என்று நினைத்தவர், நிலாவை அணைத்தப்படி படுத்துக் கொண்டார்.

ஆனால் நிலாவுக்குத்தான் உறக்கம் சுத்தமாய் வரவில்லை. கண்ணை மூடினாலே, கதிர் இரத்த காயத்துடன் நிற்பது போலே தோன்றியது. இயற்கையிலேயே பயந்த சுபாவம், இப்போது அவளுக்கு அங்கு இருப்பதே மூச்சு முட்டியது. அதனால் முழித்தே கிடந்தாள்.

ரோட்டில் வண்டி சத்தம் கேட்கும் போதெல்லாம், எழுந்து எழுந்து பார்த்தவள் ஒரு கட்டத்தில் அசந்து உறங்கியிருந்தாள்.

மொழப்பாரி ஊர் சுத்தி மீண்டும் கோவிலுக்கே வந்து சேர்ந்திருந்தது. ஆனால் கதிர் மட்டும் வரவில்லை. “சிறப்பா ஆத்தா காரியம் எல்லாம் நடத்தி முடிச்சாச்சுய்யா. காலையில மொழப்பாரிய கரைச்சிட்டு காப்ப கழட்டிலாம்" என்று பூசாரி சொல்ல, சங்கரேயன் அங்கு நடக்கும் அன்னதான விழாவை பார்வையிட சென்றார்.

விடிய விடிய கோவிலில் தான் மொத்த ஊரும் இருக்க, ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் கலைக் கட்டியது.

சங்கரேயன் சிவாவிடம், “என்னலே இன்னும் கதிர காணும்?” என்றார். “நான் போய் பார்க்கிறேன்யா” என்று சொல்லிய சிவாவும், குமாரிடம் விசாரித்தான். அவனும் தெரியவில்லை என்று சொல்ல, உடனே சிவா தன்னுடைய பைக்கை எடுத்துக் கொண்டு கதிரை தேடி சென்றான்.

கிட்ட தட்ட நள்ளிரவைத் தாணி மணி இரண்டை தொட்டிருந்தது. நிலா அவளையும் மீறி கண் அசந்திருக்க, ஏதோ பாத்திரம் உருட்டும் சத்தம் கேட்டது. அதில் திடுக்கிட்டு நிலா எழ, கதிருடைய வீட்டின் முன் யாரோ நிற்பது போல் தோன்றியது.

அதில் ஒரு நொடி அதிர்ந்து, செல்வியை எழுப்ப நினைத்து, “சித்தி" என்று சொல்ல சென்றாள். அதற்குள், கதிருடைய பேச்சுக் குரல் கேட்கவும், வேகமாய் திரும்பி பார்த்தாள்.

வண்டி சத்தம் கூட கேட்கவில்லை. அதனால், அவள் இருந்த இடத்தை விட்டு வெளியில் எட்டிப் பார்த்தாள். சுற்றி இருட்டாய் இருக்க, அவளுக்கு அத்தனைப் பயம் தான். ஆனாலுமே, ஏனோ கதிருக்கு என்னவானது என்று பார்க்க சொல்லி மனம் உந்தியது.

அதில் சத்தம் போடாமல், மெல்ல செல்வியை விட்டு எழுந்து வெளியில் வந்தாள் நிலா. கதிரின் வீட்டு முன்பு யாரோ நிற்பது போல் தோன்ற, தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அங்கு சென்றாள்.

“இன்னும் செத்த நேரத்துல வந்துடுறேன்ல. அதுவரைக்கும் சமாளில்ல" என்று கதிர் யாரிடமோ பேசிக் கொண்டிருக்க, அவன் பேச்சுக் குரல் கேட்டவுடனே, அவளுக்கு மேலும் தைரியம் கிடைத்தது. அதில் சற்றும் யோசிக்காமல் அவனை நெருங்க, அவனோ அப்போதே திரும்பி நின்று சட்டையைக் கழட்டிக் கொண்டிருந்தான்.

அந்த இடம் இருளில் மூழ்கியிருக்க, நிச்சயம் அவளுக்கு அது தெரிந்திருக்க வாய்ப்பில்லைத்தான். அவனோ, சட்டையைக் கழட்டிவிட்டு, வேஷ்டியை அவிழ்க்க கை வைக்க, அங்கே நிலாவோ, எதையோ மிதித்து, “ஆ” என்று அலறியிருந்தாள்.

சட்டென்று வெகு நெருக்கத்தில் கேட்ட குரலில், கதிர் திரும்ப, “மாமா” என்று ஓடிப் போய் அவனை இறுக்கிக் கட்டிக் கொண்டாள் நிலா.

“அடி உன்னோட வாசம், 

அது என் மேல வீசும்

நேரம் இப்போ, நெருங்கி வந்திருச்சு"

(வெரி குட், சரி அடுத்து என்னாகப் போதுன்னு கண்டிப்பா அடுத்த எபிசோட்லத்தான் பார்க்க முடியும். அதுக்கு முன்னாடி, இன்னிக்கு எபிசோட் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

தென்றல் தீண்டுமா?

Comments   1

*** தென்றல் – 15 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***