தென்றல் – 13

ஊரையே காத்து நிக்கும் அந்த அம்மன் கோவில் வளாகத்தில் தான் மொத்த ஊரும் நின்றுக் கொண்டிருந்தது. ஆங்காங்கே பலூன், பொம்மை கடைகள், சிற்றுண்டி கடைகள், ஆயிரம் தான் தங்கத்திலேயே வளையல் அணிந்திருந்தாலும், என்றும் தீராத மோகமாய் கண்ணாடி வளையல் கடைகளை சுற்றிலும் பெண்கள் கூட்டம், கூட்டமாய் நின்றிருந்தனர். கொடியேற்றமே அத்தனை சீரும் சிறப்புமாய் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. வளக்கத்தை விட, இம்முறை திருவிழா அனைத்துமே சிறப்பாகவே இருந்தது.

“முதல் மூணு நாள் திருவிழா ரொம்ப சிறப்பா நடத்தியாச்சு. அப்படியே நல்லப்படியா எட்டு நாள் திருவிழாவையும் ஆத்தா நடத்திக் கொடுக்கனும்" என்று ஊர் தலைவர், அம்மனைப் பார்த்து விட்டு, பின் சங்கரேயனிடம் கூறினார்.

“அதெல்லாம் நல்லதே நடக்கும். அதான் கதிர் இருக்கான்ல. அவென் பாத்துப்பான்" என்று சற்று தூரத்தில், ஏதோ சில பெரியவர்களுடனும், கடைக்காரர்களுடனும் நின்று பேசிக் கொண்டிருந்த கதிரைப் பார்த்தார் சங்கரேயன்.

இந்த மூன்று நாளாய் கதிருக்கு அத்தனை அலைச்சல். அவன் தான் முன் நின்று அத்தனையும் பார்த்துக் கொண்டிருக்கிறான். இது பத்தாது என்று ரைஸ்மில்லும், புதிதாய் சில பிரச்சனைகள் வந்திருக்க, அனைத்தையும் ஒற்றை ஆளாய் பார்த்திருந்தான். ஆனாலும் முகத்தில் சிறு களைப்பைக் கூட காட்டாமல், அத்தனைப் பேருக்கும், என்ன செய்ய வேண்டும்? என்பதை அத்தனை பொறுமையாய் விளக்கிக் கொண்டிருந்தான்.

பாதி பேர் கதிரை ஆஹோ, ஓஹோ என்று சங்கரேசனிடம் புகழ்ந்து தள்ளினர். அதை எல்லாம் கேட்டவருக்கு அத்தனை பெருமிதமாய் இருந்தது.

அதே நேரம், இப்படிப்பட்ட ஒரு பையனுக்கு ஒரு திருமணத்தை நடத்தி பார்க்க முடியவில்லையே என்ற வேதனையும் அப்பட்டமாய் தெரிந்தது. மாலை கோவிலுக்கு கிளம்பும் போதே அதை நினைத்து தான் தன் மனைவியின் புகைப்படத்தின் முன் நீண்ட நேரம் நின்றிருந்தார்.

அதைப் பார்த்த செல்வித்தான். “தம்பிக்கென்ன முப்பது வயசா ஆகிடுச்சி. இருபத்தைஞ்சு தான ஆகுது. அதெல்லாம் அவெனுக்கு இருபத்தேழுக்குள்ள நல்லது நடந்துடும்னு ஜோசியர் சொல்லிருக்காரு. நீங்க அத நினைச்சி வெசனப்படாதீகப்பா” என்று சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்.

இப்போது அதையே நினைத்தப்படி, அம்மன் முன்னாடி நின்று கை கூப்பி, “நீதான் ஆத்தா என் புள்ளைக்கு நல்லதா ஒரு வழி காட்டனும்" என்று வேண்டிக் கொண்டு, அங்கிருந்து கிளம்பியிருந்தார்.

வழக்கமாய் செல்வி குழந்தைக்காகவும், தம்பி திருமணத்துக்கென்றும் மொழப்பாரி போடுவார். ஆனால் இம்முறை நிலா சடங்காகியிருக்க, அதை எல்லாம் செய்ய முடியாமல் போனது.

“சித்தி. எப்போ சித்தி நான் பள்ளிக்கூடம் போறது?” என்று சினுங்கியப்படி கேட்டாள் நிலா.

கிட்ட தட்ட பதிமூன்று நாட்களுக்கு மேலாக ஒரே இடத்திலேயே இருக்க, அவளுக்கு பிடிக்கவே இல்லை. 

நிலாவுடன் பல்லாங்குழி விளையாடிக் கொண்டிருந்த துளசியோ, “எவெடி இவ? அவ, அவ என்ன சாக்கு சொல்லி பள்ளிக்கூடத்துக்கு போகாம இருக்கலாம்னு பாத்துட்டு இருக்கா. இவெ என்னென்னா, என்னேரம் பாத்தாலும், ஸ்கூலு, ஸ்கூலுன்னு இழுவிட்டு இருக்கா” என்றார்.

அதில் நிலாவின் முகம் அப்படியே சுணங்கிப் போக, அதைக் கவனித்த செல்வி, “அடியே, எம் புள்ள என்ன உன்ன மாதிரியா? என் புள்ள படிச்சு, இந்த ஊருக்கே பெரிய அதிகாரியா வருவாளாக்கும்" என்று நிலாவை அணைத்தப்படி கூறினார்.

“க்கும், பெரிய அதிகாரியாகிட்டாளும், சும்மாவே, உங்களையும், உங்க தொம்பியையும் கையில பிடிக்க ஆகாது. இதுல அப்படியாயிட்டாலும்” என்று நீட்டி நெளித்தவள், “நீங்க செத்த நேரம் இவ கூட இருங்க. நான் ஒரு எட்டு வீடு வரைக்கும் போயிட்டு வரேன்" என்று சொல்லி விட்டு துளசி அங்கிருந்து எழுந்து சென்றார்.

அவள் சென்றதும், செல்வி நிலாவிடம், “என்னாச்சுடா? ஏன் புள்ள முகம் இப்படி வாடிக் கெடக்கு?” என்று முகம் வருடிக் கேட்டார்.

“ஊருல திருவிழால ஆரம்பிச்சிடுச்சில்ல சித்தி" என்றவளுக்கு, அங்கு செல்ல முடியவில்லையே என்ற வருத்தம் அப்பட்டமாய் தெரிந்தது. அதைப் பார்த்தவர், “இதுக்குத்தேன் இப்படி இருக்கீயாக்கும். இந்த வருஷம் போனா என்ன, அடுத்த வருஷம் போயி பார்த்துட்டா போச்சி. இல்லன்னா, அடுத்த மாசம், நம்ம மீனாட்சி அம்மன் கோவில் திருவிழா வருதுல்ல, அங்கன போவோம். அங்கன போயி ராட்டுலாம் சுத்தலாம்" என்று நிலாவை சமாதானப்படுத்த முயற்சித்தார்.

“நெசமாவா?” என்று நிலா கண்கள் மின்ன கேட்க, அதில் அவள் கன்னத்தை தாங்கியவர், “நெசமாத்தேன். சித்தி எப்பயாச்சும் பொய் சொல்லிருக்கேன்னா?” என்று கேட்டார் செல்வி.

“ம் போலாம்" என்று இப்போதே, அந்த திருவிழாக்கு செல்வதைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்திருந்தாள்.

ஆனால் செல்விக்குத்தான் மனம் பாரமானது. “இன்னும் சின்னப்புள்ளையா இருக்காளே. இவளுக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்து புரிஞ்சிப்பாளா?” என்ற எண்ணியவருக்கு, இந்த பெண் பிள்ளையை கயவர்களின் கண்ணில் இருந்து எப்படி காப்பாற்றுவது என்ற பயமே வந்திருந்தது.

அங்கே பாண்டியோ, கதிரை கடைசி திருவிழா அன்று அடிக்க ஆள் ஏற்பாடு செய்து வைத்திருந்தான். அதைப் பற்றிய திட்டத்தை தான் தோட்டத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தான்.

“எப்படியும், இந்த வருஷ கபடி போட்டிக்கு அவெந்தேன் வருவான். அங்க வச்சே நம்ம நினைச்ச மாதிரி பண்ணி விட்டுடனும். ஒருவேள அங்க அவென் தப்பிச்சிட்டா, அன்னிக்கு ராத்திரி முழப்பாரி கரைக்கிறதுக்கு, காவலுக்குன்னு அவென் அங்கப் போவான். போற வழியில, அந்த செவ்வந்தி தோட்டத்துல வச்சி முடிச்சு விட்டுடனும்" என்றான் பாண்டி.

“எங்ககிட்ட சொல்லிட்டல்லண்ணே, விடு. எல்லாத்தையும் நாங்க பாத்துக்கிறோம். நீ போய் திருவிழாவ பாருண்ணே” என்றான் ஒருவன்.

“இங்கப்பாரு உள்ளூர் காரனுங்க எவனும் சரிப்பட்டு வரலன்னுத்தேன், உங்கள அசலூர்ல இருந்து இறக்கியிருக்கேன். இதுல ஏதாச்சும் உளட்டுனீங்கன்னு தெரிஞ்சிது. என்னைப் பத்தி தெரியும்ல?” என்று மீசையை முறுவியப்படி கேட்டான் பாண்டி.

“எண்ணே, அப்படில்லாம் நடக்காதுண்ணே. எங்க மேல வச்ச நம்பிக்கைக்கு, நாங்க தரமா செய்வோம்னே நம்புங்க" என்றான் மற்றொருவன்.

“ம் செரி. ஆறாச்சும், ஆறு எவருன்னு விசாரிச்சா, என்னெ சொல்லனும்னு தெரியும்தான. பாத்து சூதானமா இருந்துக்கோங்க” என்று சொல்லிவிட்டு பாண்டி அங்கிருந்து சென்றிருந்தான்.

அங்கே கோவிலில் இளைஞர் அணி உறுப்பினர்களிடம் கதிர், “இங்கப்பாருங்களே, நம்ம ஊர் பிள்ளைங்க, நம்ம ஊர் திருவிழா அப்பத்தேன் ஏதோ ரெண்டு எட்டு வெளிய வருங்க, அதனால, புள்ளைகளுக்கான பாதுகாப்பு மொத்தமும் நம்மளோடதுத்தேன். எவெனாச்சும், சல்லிப்பையன் புள்ளைக கிட்ட வம்பு இழுத்தா, உடனே அவென்ன நம்ம இடத்துக்கு இழுத்துட்டு வந்துடுங்க. இங்கன வச்சி எந்த வம்பும் தும்பும் வேண்டாம். புரிஞ்சிதா?” என்று கேட்டான்.

“புரியுதுண்ணே. அப்படி எல்லாம் நம்ம ஊருக்கு வந்து எவனாச்சும் வாலாட்டிட முடியுமா?” என்று கேட்டான் சிவா.

“அப்படி எல்லாம் அசால்டா இருக்க முடியாதுல, கவனமா இருக்கனும்” என்று கதிர் அவர்களிடம் சொல்லிவிட்டு தள்ளி வர, அவனுடனே வந்த சிவா, “ஏண்ணே, வம்புத்தேண்ன இழுக்க கூடாது? மத்தப்படி பேசலாம்தான்னே” என்று இழுத்தான்.

அதில் திரும்பி சிவாவைப் பார்த்தவனின் முகத்தில் அதுவரை இருந்த இறுக்கம் தளர்ந்தது.

“என்னலே? இன்னும் கன்னாலம் ஆகல, அந்த நெனப்பு இருக்கட்டும். இன்னமும் வயசு புள்ளைகள சைட் அடிக்கனும்னு சுத்திட்டு திரியிறவ. தஙக்ச்சிக்கிட்ட சொல்லட்டுமா?” என்றான் கதிர்.

“ஐயோ ஏண்ணே, நான் அப்படி எல்லாம் சொல்ல வரலண்ணே. நீங்க வேற" என்று சிவா பதற, அதைப் பார்த்து மெலிதாய் புன்னகைத்தவன், “எல்லாம் ஒரு எல்லைக்குள்ளத்தான்லே, புள்ளைகள பாக்குறது பிரச்சனை இல்ல. அதுக்கு மேல போகாம பாக்குறதுத்தேன் உம்ம வேலை” என்று சொல்லியப்படி கதிர் தன் புல்லட்டை எடுத்துக் கொண்டு கிளம்பியிருந்தான்.

அன்றைய இரவு ஆடல், பாடல் என்று அத்தனையும் அமைதியாகத்தான் சென்றது. அடுத்தடுத்த நாள் திருவிழாவும் வெகு விமர்சையாய் முடிந்து விட, கணக்கு புத்தகம் ஒன்றை எடுக்க அன்று தான் ஒரு வாரத்துக்கு பின் மீண்டும் கதிர் வீட்டுக்கு வந்தான்.

அதை எடுத்துக் கொண்டு திரும்பும் போது, சட்டென்று ஏதோ தோன்ற, அவனின் அருகில் நின்றிருந்த குமாரிடம், “அக்கா இன்னிக்கு கோவிலுக்கு வருதான்னு கேட்டுட்டு வா” என்றான்.

உடனே அவனும் உள்ளே சென்று விட, குமாருடன் செல்வியும் அங்கு வந்தார்.

“முப்பது நாள் முடியிற வரைக்கும், கோவில் வரக்கூடாதுல. மறந்துட்டீயா?” என்றார் செல்வி.

“இல்ல இன்னியோட திருவிழா முடியுது. ஏதாச்சும் வேணும்னா வாங்கிட்டு வரேன்" என்றான் கதிர்.

“ஆ..ங் ல. நல்ல வேளை கேட்ட. இந்த நிலாப்புள்ளைக்கு மட்டும் ஒரு ஜோடி கண்ணாடி வளையல் வாங்கிட்டு வந்துடுல. புள்ள ஆசையா கேட்டுச்சு" என்றார் செல்வி.

“ஏங்கா? வூட்டுல வளையலே இல்லையாக்கும்” என்று கேலியாய் சொன்னாலும், “செரிக்கா பார்க்கேன்" என்று சொல்லிவிட்டு கிளம்பியிருந்தான்.

அவனைப் பார்த்ததுமே, கோவில் பூசாரி, சில விவரங்களை கேட்க, அதற்கெல்லாம் பதில் சொல்லிவிட்டு, அடுத்து அங்கே நடக்க வேண்டிய அத்தனையும் சரியாக இருக்கிறதா? என்று மேற்பார்வை பார்க்க சென்றான்.

அப்போது அங்கே வந்த சிவா, “எண்ணெண்ணனே, கபடி போட்டி ஆரம்பிக்கப் போது. நீ என்ன இன்னும் இங்கன இருக்க” என்றான்.

“இல்லல்ல. நான் அங்கன வர்றது சரியா இருக்காது. போன வருஷம் மாதிரி அவனுங்க இந்த தடவையும் ஏதாச்சும் ஏழரை இழுக்கனும்னே வருவானுங்க. அப்புறம் எல்லாருக்கும் நிம்மதித்தேன் கெட்டுப் போகும். நம்ம பசங்க இருக்கானுங்கள்ள, அவனுங்க பாத்துப்பானுங்க" என்றான் கதிர்.

“அதுக்குன்னு நீ இல்லாம்ம எப்படிண்ணே?” என்று கேட்டான் சிவா. “அடுத்த தலைமுறைக்கு வழிவிடுவோம்ல" என்று கிண்டலாய் சொல்லிவிட்டு, “ஆமா, தங்கச்சி வந்திருக்கா?” என்று கேட்டான் கதிர்.

“எண்ணண்ணே, நீயா இப்படி எல்லாம் பேசுறது?” என்று சிவாவுக்கு அத்தனை ஆச்சர்யம். ஒரு மூன்று வருடங்களுக்கு முன் இருந்த கதிரையும், இப்போது இத்தனை பொறுப்பாய் பேசும் கதிரையும் சிறு ஆச்சர்யத்தோடு பார்த்தான்.

“ஏல? கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு" என்று கதிர் கேட்க, “இங்கனத்தான் அவ தோழிகளோட சுத்திட்டு இருப்பா” என்றான் சிவா.

“உன் கூட சுத்தத்தேன்ன புள்ள வந்திருக்கு. கூட்டிட்டு சுத்த வேண்டியதுத்தேன்ன” என்று சொல்லிய கதிரின் மனமோ, நிலாவுக்கு வளையலை எப்படி வாங்குவது என்று தீவிரமாய் யோசித்துக் கொண்டிருந்தது.

“எதுக்கு? கன்னாலம் நிக்கவா? சும்மாவே எம்ம மாமன், அருவாளத்தோடத்தான் சுத்துவான். இதுல அவளோட இப்பவே சுத்துனது தெரிஞ்சுது அப்புட்டுத்தேன்" என்று சிவா சொல்ல, “சரில்ல, நீ மைதானத்துக்கு போ, நான் வரேன்" என்று சொல்லிவிட்டு வளையல் கடையை தேடி சென்றான் கதிர். கடை மொத்தமும், பெண்கள் கூட்டமாய் நிற்க, சட்டென்று அதற்குள் செல்ல முடியவில்லை.

அதிலும் அவனுடைய முறைப் பெண்கள் வேறு நின்றிருக்க, “ம்ஹூம், இப்போ நம்ம உள்ளாரப் போனா, வீண் சிக்கல்த்தேன்" என்று தனக்குள்ளே சொல்லியவன், “பொறவு வாங்கிக்கலாம்" என்றப்படி விலக நினைத்தான்.

சட்டென்று, “ஆசையா கேட்டாள்ள? மறந்துடாத" என்று செல்வி மீண்டும் அழுத்தி சொல்லியது நினைவுக்கு வரவும், அடுத்த அடி எட்டு வைக்காமல், மீண்டும் அந்த வளையல் கடையைப் பார்த்தான் கதிர்.

(ஆமா, ஆமா கதிரு. அப்புறம் ஒரு வளையல் கூட வாங்கி கொடுக்கலன்னு, இந்த உலகம் தப்பா பேசும். அதனால அந்த அவப்பேர்லாம் நமக்கு வேணுமா? சரி அடுத்து என்னாகப் போதுன்னு அடுத்த எபிசோட்ல பார்க்கலாம். அதுக்கு முன்னாடி, இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

தென்றல் தீண்டுமா?

Comments   0

*** தென்றல் – 13 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***