முப்பொழுதும் உன் கற்பனைகள் ❤️

அந்திமழை... பொழிகிறது... ஒவ்வொரு துளியிலும், உன் முகம் தெரிகிறது...

என்ற பாடல் வரிகளை ரசித்துக் கொண்டே, அந்தி வானத்தை வெறித்து பார்த்து கொண்டிருந்தவன், மழை துளிகளின் நடுவே தன்னவளின் முகம் தெரிய, அவன் கடந்த காலத்தை நோக்கி சென்றான்.

“டேய்... எவ்ளோ டைம் சொல்றது? எனக்கு உன்னை பிடிக்கல..பிடிக்கல.. தயவு செஞ்சு என் பின்னாடி வராத” என சற்று கோபத்தோடு சொல்லி சென்றாள்... அனு என்ற அனுஸ்ரீ

“உனக்கு பிடிக்கலனா என்ன? எனக்கு பிடிச்சிருக்கு... நான் உன் பின்னாடி தான் வருவேன்,” என வீம்பாய் அவளை தொடர்ந்து சென்றான்... பிரபா என்ற பிரபாகரன்...

“உனக்கு லாம் ஒரு தடவ சொன்னா புரியாதா?” என அனு சொல்ல

“அதே தான்... உனக்கும் ஒரு தடவ சொன்னா புரியாதா? ஐ லவ் யூ.. ஐ லவ் யூ... ஐ லவ் யூ” என பிரபா கூறினான்.

“ஐ ஹேட் யூ... ஐ ஹேட் யூ... ஐ ஹேட் யூ” என அவனிடம் சொல்லிவிட்டு அவள் பேருந்தில் ஏற சென்றாள்.

வேகமாக, அவளை கை பிடித்து தடுத்து, “வா நான் கார் ல விடுறேன்... மழை மேகமா இருக்கு” என உரிமையாக கூறினான் பிரபா.

“கைய விடு இல்லன்னா பொது இடம்ன்னு கூட பார்க்க மாட்டேன். அடிச்சிடுவேன்” என அனு கோவமாக கூறினாள்.

“ஒழுங்கா என் கூட வா” என அவன் வழுக்கட்டாயமாக அவளைப் பிடித்து இழுத்தான் பிரபா.

அதை, அந்த பேருந்து நிலையத்தில் நின்றுக் கொண்டிருந்தவர் பார்த்து, அவர்கள் அருகில் கூட்டம் கூடினர்.

“ஏம்பா.. பார்த்தா படிச்ச பையன் மாதிரி இருக்க.. இப்படியா ஒரு பொண்ணுகிட்ட நடுரோட்டுல வச்சு வம்பு பண்ணுவ? முதல்ல அந்த பொண்ணு கைய விடுப்பா” என ஒரு பெரியவர் சொல்ல

“நடு ரோட்டில நின்ணு இப்படி பொண்ணுகிட்ட வம்பு பண்றான். அவன் கிட்டலாம் இப்படி சொல்லக் கூடாது. நாலு அடி அடிச்சு போலீஸ் ஸ்டேசன் ல கொண்டு போயி விட்டா தான் சரியா வரும்” என ஒருவன் அவனை அடிக்க கை ஓங்கினான்.

அந்த நொடி, அடிக்க கை ஓங்கியவனுக்கும், பிரபாக்கும் நடுவில் திரையாக வந்து நின்றாள் அவனின் அன்பு காதலி அனு.

“இப்ப நான் உங்களை எல்லாம் ஹெல்ப் க்கு கூப்டேனா?” என அனு சலிப்பாக கேட்டாள்.

“என்னம்மா... ரோட்ல நின்னு வம்பு பண்ணிட்டு இருக்கான்... உனக்காக நாங்க வந்தா நீ அவனுக்கு சப்போட் பன்ற?” என அவர்கள் கோவமாக கேட்க,

“அவன் என்கிட்ட வம்பு பண்ணிட்டு இருக்கிறதாலதான் வந்தீங்க அப்படித்தான?” என சொல்லியவள், அதற்கு மேல் எதுவும் பேசாமல், பிராபாவின் பக்கம் திரும்பி, அவன் விழியோடு விழி நோக்கி, அவனை மேலும் நெருங்கி அவன் கன்னத்தில் சட்டென்று முத்தமிட்டாள் அவள்.

அதைப்பார்த்து சுற்றி இருந்தவர்கள் அனைவரும் வாயைப் பிளக்க, அவளோ வெகு சாதாரணமாக “அவன் என்கிட்ட வம்பு பண்ணான், நான் அவனை கிஸ் பண்ணேன். எங்க பிராபளம் முடிஞ்சிருச்சி. இப்ப உங்களுக்கு எங்களை பார்க்கறதை விட வேற வேலை எதுவும் இருந்தா நீங்க தாராளமா போயி பார்க்கலாம்” என கூறினாள்.

“இப்ப உள்ள பசங்க இருக்காங்களே. காலம் கலிகாலமாயிருச்சு. அப்புறம் எப்படி மழை பெய்யும் பெருமாளே” என பெரியவர் ஒருவர் தலையில் அடித்துக் கொண்டு சொல்ல,

அவர் சொல்லி முடிக்கும் முன்னே, அவர் வலுக்கைத் தலையில் வந்து விழுந்தது அந்த மழைத் துளி.

அதைப்பார்த்து இன்னும் நக்கலாக சிரித்த அனு “மழை வருது. சும்மா பரக்க பார்க்காம பார்த்து பத்திரமா வீடு போயி சேருங்க” என கூறினாள்.

அதற்குள் அந்த கூட்டம் அவசரமாக கலையத் தொடங்கியது.

அவர்களிடம் பேசிவிட்டே திரும்பி பிரபாவை பார்த்தாள். அவனோ? அவள் கொடுத்த ஒற்றை முத்தத்திலேயே சிலையாக நின்றிருந்தான்.

“டேய் மழை வருது. சீக்கிரம் வா. இல்லன்னா நாளைக்கு காய்ச்சல் கன்பார்ம்” என அவன் கையைப் பிடித்து இழுத்தாள் அனு.

அவளை தடுத்து நிறுத்தி “ஐ லவ் யூ டி” என காதலை சொன்னான் பிரபா.

“ஐ ஹேட் யூ. ஐ ஹேட் யூ” என சிரித்துக் கொண்டே கூறினாள் அனு.

அவள் சிரிப்பதையே அசையாது பார்த்துக் கொண்டிருந்தான் பிரபா.

அதற்குள் மழை சரசரவென பெய்ய ஆரம்பித்தது. அதில் தன்னிலை பெற்றவர்கள் அவசரமாக அவர்கள் காரில் ஏறினர்.

“இந்தா அனு டவல், துடைச்சிக்கோ” என காரில் இருந்த டவலை அவளுக்கு துடைக்க கொடுத்தான்.

“சாரி அனு... நான் நேத்தே உங்க வீட்டுக்கு வந்து பேசலாம்-னு தான் இருந்தேன்... ஆனா அர்ஜன் ட் மீட்டிங் ல மாட்டிகிட்டேன் அதான் முடியல” என பிரபா மன்னிப்பு கேட்டான்.

“நம்ம மூணு வருசமா லவ் பண்ணிட்டு இருக்கோம். ஒரு வருசமா நானும் பார்க்கிற பையனை எல்லாம் வேணாம் வேணாம்னு சொல்றத வச்சே அப்பாக்கு டவுட் வந்திருச்சு. சரின்னு அப்பாவே யார் அந்த பையன் வந்து பேச சொல்லுன்னு சொல்லிருந்தாங்க... ஆனா நீ வழக்கம் போல இதுலையும் சொதப்பிட்ட” என கோபமாய் ஆரம்பித்த அனு சோகமாய் முடித்தாள்.

“சரி சரி விடு பேபி.. இளையராஜா முத முதல்ல, ரெக்கார்டிங் தியேட்டர் போனப்ப கரண்ட் கட் ஆயிடுச்சாம்... அதுக்காக அவர் என்ன மியூசிக்  டைரக்டர் ஆகாமலையா போயிட்டாரு” என தத்துவம் பேசினான் பிரபா.

“யாரு?.. நீயும்.. அந்த இளைய ராஜாவும் ஒன்னா? இதுவரைக்கும் ஒரு வேலை கரெக்டா சொன்ன டைம்-க்கு பண்ணிருக்கியா? உன்னை போயி லவ் பண்ணேன் பாரு. என்னை சொல்லனும். உன்னை எல்லாம் அவங்ககிட்ட அடி வாங்க விட்டுருக்கணும்” என அனு கோவமாக சொல்ல..

அவனோ அவள் சொல்வதை கொஞ்சமும் காதில் வாங்காமல், வெளியில் பெய்ந்து கொண்டிருந்த மழையை ரசனையாய் பார்த்துக் கொண்டே, திரும்பி தன்னவளின் மேல் தெளித்த மழைத்துளியை ஆசையாய் பார்த்து கொண்டிருந்தான்.

அதைப்பார்த்து கடுப்பாகி “டேய் நான் எவ்ளோ சீரியஸா பேசிட்டு இருக்கேன்... நீ என்ன ரொமாண்டிக் லுக் விட்டுக்கிட்டு இருக்க. உன்னை என்னை பண்றது?” என அனு அவனை கடிந்து கொண்டாள்.

“கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம், மழையில நீ என்கிட்ட இப்படிலாம் பேச முடியாது” என அவன் சம்பந்தமே இல்லாமல் பேசினான்.

“நான் என்ன சொல்றேன். நீ என்ன சொல்லிட்டு இருக்க?” என அவள் புரியாமல் அவனைப் பார்த்து கேட்டாள்.

அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டே அவளை நெருங்கி காதோரம் ஈரத்தில் நனைந்திருந்த முடியை மெல்ல விலக்கி, “மாமனார் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டார்” என மிக கூலாக கூறினான்.

அதைக்கேட்ட அவளின் விழிகள் ஆச்சர்யமாக மின்னியது.

“ஏய் என்ன சொல்ற? உண்மையாவா? எப்போ? எப்படி?” என அவள் ஆச்சர்யமாக கேட்டாள்.

“ஹேய் கூல் பேபி. ரிலாக்ஸ்” என காரில் நன்றாக சாய்ந்து கொண்டு கூறினான்.

“ஏய் சொல்லு பிரபா” என அவனைப் அவசரப்படுத்தினாள் அனு.

“செல்லக்குட்டி எல்லாம் சொல்றேன் டா.அதுக்கு முதல்ல மாமாக்கு அப்ப கொடுத்த மாதிரி, ஒரு கிப்ட் தந்தா தெம்பா சொல்லுவேன்” என அவன் அவளை வம்பிழுத்தான்.

“ம், உனக்கு கிப்ட் இல்ல. கன்னத்துல பளார்னு நாலு விட்டாதான் சரி வரும்-னு நினைக்கிறேன்” என அனு கோவமாக கூறினாள்.

“அப்போ போ. நான் சொல்ல மாட்டேன். நீயே போய் என் மாமனார்கிட்ட கேட்டுக்கோ” என பிகு செய்தான் பிரபா.

“ச். என்ன பிரபா. என் செல்லம்-ல பிளீஸ் பிளீஸ் சொல்லு டா” என கெஞ்சினாள் அனு.

“ம் அப்போ ஒன்னு கொடு” என பிரபா தன் கன்னத்தை நீட்டினான்.

“அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் ஒன்னு இல்ல ஓராயிரம் தாரேன். இப்ப விசயத்த சொல்லு டா” என அவள் கெஞ்சினாள்.

அவள் கெஞ்சலை சிறிது நேரம் ரசித்துவிட்டு “பிராமிசா?” என அவன் கையை நீட்ட, அவள் கையை வெளியில் நீட்டி “அந்த மழை மேல ப்ராமிஸ்” என வாக்கு கொடுத்தாள்.

“அதெப்டி செல்லம் இந்த உலகத்துல எனக்கு ரொம்ப முக்கியமானது நீ தான். உன்னை அவ்வளவு சீக்கிரம் மிஸ் பண்ணிடுவேனா? அதான் நேத்து நைட்டே மாமாவ மீட் பண்ணி கரெக்ட் பண்ணிட்டேன்” என அவன் கூலாக கூறினான்.

“அடப்பாவி. அப்புறம் அதை ஏண்டா முதல்லயே சொல்லல” என அவள் வேகமாக கேட்க,

“முன்னாடியே சொல்லியிருந்தா எனக்கு இந்த கிப்ட் கிடச்சிருக்குமா?” என தன் கன்னத்தை தடவிக்கொண்டே சொல்ல, அதில் அவள் கொடுத்த முத்தம், நினைவு வர செங்காந்த மலாராய் முகம் சிவந்தாள்.

அவள் வெட்கத்தை ரசித்துக் கொண்டே அவன் காரை ஸ்டார்ட் செய்தான். பின் அவளை வீட்டில் விட்டுவிட்டு, மழையை காட்டி “ப்ராமிஸ் பண்ணிருக்க. மறந்திடக்கூடாது” என அவன் சொல்ல அவளும் சரியென சொல்லிவிட்டு உள்ளே சென்றாள்.

அந்த நினைவில்(சிரிப்பில்) மூழ்கி இருந்தவனை, “என்னங்க” என்ற தன் மனைவியின் குரல் நிகழ் காலத்திற்கு கொண்டு வந்தது.

அப்போதே மழையைப் பார்த்துக் கொண்டிருந்த அவன் திரும்பினான்.

“இந்தாங்க... நம்ம பையன் இன்னிக்கு உங்களை ஆபிஸ் வர  வேணாம்னு சொன்னான்” என அவள் சொல்ல

“எதுக்கு?” என அவன் கேட்க...

“இல்ல மழை ஓவரா இருக்குல. டாக்டர் ஏற்கனவே உங்களுக்கு குளிர் செட் ஆகாதுன்னு சொல்லி்ருக்காங்க அதான்” என அவன் மனைவி சொல்லிக் கொண்டிருந்தாள்.

அந்நேரம் “அத்தை... இந்தாங்க உங்களுக்கும் மாமாக்கும்” என அவர்கள் மருமகள் காபியை நீட்ட, அவர்கள் இருவரும் எடுத்துக் கொண்டனர்.

“சரிங்க அத்தை... அம்மா வீடு வரைக்கும் போயிட்டு வரேன். தங்கச்சி வந்திருக்கா. ஒரு எட்டு பார்த்திட்டு வரேன்” என அவள் சொல்ல...

“பிரணிவ் மா?” என அவர் கேட்க..

“நான் உங்க பேரணையும் கூப்டு போறேன் அத்தை... அம்மாவும் பார்க்கணும்னு சொன்னாங்க” என கூறினாள். அதன் பின் அவர்கள் அனுமதியை பெற்றுக் கொண்டு அங்கிருந்து சென்றாள். அவர்களின் மருமகள் ஸ்வேதா.

மருமகள் சென்ற பின் இருவரும் பால்கனியில் அமர்ந்து காபி குடிக்க ஆரம்பித்தனர்.

பிரபா மட்டும், காபியை குடிக்காமல், தன் எதிரில் அமர்ந்து காபி குடித்துக் கொண்டிருக்கும் தன் மனைவியை பார்த்துக் கொண்டிருந்தான்.

ஆனால், அவன் மனைவியோ வெளியில் பெய்து கொண்டிருந்த மழையைப் பார்தது கொண்டிருந்தாள்.

“அனு மா” என்று அவன் அழைக்க, அப்போதே அவள், இவன் முகம் பார்த்தாள்.

“உனக்கு வயசாயிடிச்சில அனு மா” என அவன் சொல்ல

“ஆமா எனக்கு மட்டும் தான் வயசாகுது.. உங்களுக்கு இல்ல பாருங்க” என சலித்துக் கொண்டாள் அனு.

“உனக்குத்தான் இப்பலாம் ரொம்ப நியாபக மறதி வருது... அதான் சொன்னேன்” என பிரபா கூறினான்.

“இப்ப நான் என்ன மறந்தேன்? உங்களுக்கு காலையில மாத்திரை போட நியாபக படுத்துறதே நான் தான்” என தன் நியாபாக சக்தியை பற்றி அனு விளக்கினாள்.

அதைக்கேட்டு தலையில் அடித்த பிரபா, அவள் அருகில் சென்று அவள் கையை எடுத்து மழையை காட்டி, “நீ செஞ்ச ப்ராமிஸ் நியாபகம் இருக்கா?” என்று ஆசையாக கேட்டான் அவன்.

அவன் கேட்டவுடனே, அந்த வயதிலும், அவள் முகம் அன்று போலே இன்றும் செங்காந்த மலராய் சிவந்தது. அதை மறைக்க, வேகமாக முகத்தை திருப்பினாள் அனு.

“என்ன அனு மா? நியாபகம் இருக்கா? இல்ல நான் வேணும்னா நியாபக படுத்தவா?” என அவளை நெருங்கி சீண்டினான் அவன்.

“என்னங்க... நீங்க... நம்ம வயசென்ன? இப்ப போயி. என்னை பேசிட்டு இருக்கீங்க” என அவள் வேகமாக கூறினாள்.

“எந்த வயசுலையும் நீ தான என் பொண்டாட்டி” என காதலாக பிரபா சொல்ல,

அவன் மார்பில் சாய்ந்து அன்று போல் இன்றும் அவன் கன்னத்தில் முத்தமிட்டாள் அவனின் நிரந்தர காதலி அனு.

"அவர்கள் காதல் தீயும் அணைந்த பாடில்லை.. அந்த கொட்டி தீர்க்கும் மழையும் நின்ற பாடில்லை... "

காதலில் அறுபதுக்கும் இருபதுக்கும் பெரிதாய் ஒன்றும் தூரம் இல்லை... காதல் வாழ்க... காதல் கொண்ட நெஞ்சம் வாழ்க...

Comments   3

*** முப்பொழுதும் உன் கற்பனைகள் ❤️ - படைப்பை ரேட் செய்யுங்கள் ***