தினமும் சரியாக ஒன்பது மணிக்கெல்லாம், அவளுக்கு முன்னதாகவே வந்து காலதாமதமாய் வரும் அவளை திட்டிவிட்டு தன் வேலையை தொடர்பவன், இன்று மணி பத்தாகியும் வராமல் இருந்தான்.
கையில் கட்டியிருந்த மணிகாட்டியையும் கைபேசியில் தெரிந்த மணியையும் மாறி மாறி பார்த்தவள், அருகில் இருந்த தன் தோழியின் வாட்ச்சை பார்த்தும், மணியை உறுதி செய்து கொண்டாள். அவன் இன்னும் வராமல் இருக்க அலுவலகத்தின், வாசல் படியை பார்த்தவாறே தன் வேலையை வேண்டா வெறுப்பாக பார்த்து கொண்டிருந்தாள் அவள்.
"வாடி கேண்டீன் போயிட்டு வருவோம்" என அவள் அலுவலக தோழி அழைக்க, அப்போதே மணியை கவனித்தாள். மணி பதினொன்று. வேகமாக அவன் அறையை எட்டிப் பார்த்தாள். வழக்கமாக கேண்டீன் செல்வதற்கு அவன் அறையை கடந்து செல்லும் நொடியில், அவன் அறையை எட்டிப் பார்ப்பாள். அவன் தேநீர் இடைவேளையை கூட அவன் அறையில் மடிக்கணினியின் முன்பு அமர்ந்து கையில் ஒரு தேநீர் கோப்பையுடன் தன் வேலையை செய்து கொண்டே ஒரு சிப் குடிப்பான்.
அதை பார்க்கும் போதே மனதில் "சரியான உராங்குட்டான், ப்ரேக் டைம் ல கூட நாலு மனுஷ மக்களை பார்த்து பேசி சிரிக்க கூடாதா? அப்பவும் இப்படியா லேப்டாப்பை பார்த்து முறைச்சிட்டு இருக்கணும்? என்ன பிறவியோ?" என அவனை கொஞ்சம் திட்டியும், அதே நேரம் "ஆனாலும் கொஞ்சம் சிரிச்சா அழகாதான் இருக்கும்" என அவனை சைட் அடித்து கொண்டும் கடந்து செல்வாள்.
ஆனால் இன்று அந்த அறை வெறிச்சோடி கிடந்தது, அவன் அறை மட்டுமல்ல அவள் மனமும்.
தோழியின் கத்தலில் தன்னிலைக்கு வந்தவள், "இல்லடி நீ போயிட்டு வா, எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நான் வரல" என சொல்லிய தோழியை குழப்பமாய் பார்த்தாள் அவள்.
"என்னடி வழக்கமாக நான் வரலன்னா கூட நீ இழுத்துட்டு போவ? இன்னிக்கு என்னாச்சி" என அவள் தோழி கேட்க, அவள் கேள்வியை கூட காதில் வாங்காமல் அவன் அறையையும் வாசலையையும் பார்த்து கொண்டிருந்தாள் இவள்.
இப்படியே நேரம் போக, ஆபிஸ் பாய் ஒருவன் வந்து "மேம், சார் உங்க கிட்ட இந்த பைல்ல கொடுக்க சொன்னாரு" என சொல்ல, "என்ன சார்ரா? வந்துட்டாரா?" என அவள் மனம் துள்ளிக் குதித்தது. அவள் விழிகள் அவனை தேடி அலைய, "நேத்தே உங்ககிட்ட கொடுக்க சொன்னாரு மேம், நான் மறந்துட்டேன், என" அந்த ஆபிஸ் பாய் சொல்லவும், ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்தவள், பொத்தென்று அப்படியே கீழே விழுந்தாள்.
அவள் முகம் வாட்டத்தை சொல்லியும் அதை காட்டிக் கொள்ளாமல், "ஓகே நான் பார்த்துக்கிறேன்" என அவள் அந்த பைலை வாங்கி ஓரமாக வைத்தாள்.
இப்படியே மதிய உணவு இடைவேளை வர வழக்கமாக அந்த கேண்டீனே, அலரும் அளவுக்கு பேசி சிரித்து அரட்டையடித்து கொண்டும், தோழியின் உணவை ருசி பார்த்து கொண்டும், தான் கொண்டு வந்த உணவை அனைவருக்கும், கொடுத்து விட்டு அவர்கள் உணவை வாங்கி என ஒரு ரகளையையே செய்பவள், இன்று அமைதியாக சாப்பிட்டு விட்டு அவள் சீட்டிற்கு சென்றாள்.
வழக்கமாக லஞ்ச் பிரேக் முடிந்தும் வேலையை பார்க்காமல், அரட்டை அடித்து கொண்டிருப்பவள், அவனிடமிருந்து சில பல திட்டுகளை வாங்கி கொண்டு அவனையே மனதினுள் திட்டிக்கொண்டே தான் தன் வேலையை ஆரம்பிப்பாள்.
ஆனால் இன்று அவன் திட்டுக்களை, மனம் தேடியது. வேலையில் விளையாட்டாக இருந்தாலும் ஒரு நாள் கூட அவள் அந்த அலுவலகத்திற்கு விடுப்பு போட நினைத்ததில்லை.
வீட்டில் யாராவது லீவ் எடுக்க கூறினால் கூட, "லீவ் போட்டுட்டு யார் அந்த சார் கிட்ட திட்டு வாங்குறது? சரியான சிடுமூஞ்சி, அவன்கிட்ட ரீசன் சொல்றதுக்கு பதிலா லேட்டா போயி திட்டே வாங்கிப்பேன்" என அலுவலகம் வந்து விடுவாள்.
ஆனால் இன்று, 'ஏன் வேலைக்கு வந்தோம்? வீட்டிலேயே இருந்திருக்கலாம்' என அவளையே நினைக்க வைத்தது அவனின் காலி அறை.
ஒரு வழியாக ஆபிஸ் முடியும் நேரமும் வந்தது, ஆனாலும் அவளின் விழிகள் அவன் அறையிலிலும் வாசலிலுமே இருந்தது.
எவ்வளவு நேரம் வேலை பார்த்தாலும் அவள் முகத்தில் சோர்வு என்பது துளி கூட தெரியாத அளவுக்கு அவள் முகத்தில் புன்னகை பூ மலர்ந்தே இருக்கும். ஆனால் இன்று அவள் முகமே களையிழந்து அவன் வருகைக்காக காத்திருந்த சோர்வு, அவள் கண்களிலும், அவன் இல்லாத அந்த தனிமை அவள் மனதில் வெறுமையையும் சொல்லாமல் சொல்லியது.
உன்னுடன் நான் இருந்த காலங்களில், உணராத என் காதலை , உன் ஒரு நாள் பிரிவில் உணர்ந்தேனடா!
உன் கோப பார்வையின் தீண்டலில், என்று நான் என் காதல் பார்வையை கண்டேன். என்று நான் அறியேன்?
உன்னை திட்டிக்கொண்டிருக்கிறேன், என்று நினைத்த எனக்கு, என்னையே அறியாமல்
உன்னிடம் என்னை தொலைத்து கொண்டிருக்கிறேன்! என்று இன்று தான் அறிந்தேன்.
உன் பிரிவில், என் காதலை உணர்த்திய நீயே, உன் வருகையை தந்து
என் உயிர் மீட்டு விடு!.."
இரவு முழுவதும் அவனை பற்றிய சிந்தனையில் தாமதமாகவே கண்விழித்தவள், வழக்கம் போல் இன்றும் தாமதமாகவே அலுவலகம் சென்றாள்.
"வாங்க மேடம் ஆபிஸ்க்கு வர்ற நேரமா? கம் டூ மை ரூம்" என்ற அவனின் கோப வார்த்தைகளில் புத்துணர்ச்சி அடைந்தவள், வேகமாய் திரும்பினாள்.
வழக்கத்திற்கு மாறாக இன்று அவள் கண்ணுக்கு அந்த சிடுமூஞ்சி பாஸ், அதீத பேரழகனாக தெரிந்தான். ஏதோ இன்று தான் அவனை புதிதாக பார்ப்பது போல் அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவனோ வழக்கமான முறைப்புடன், அவளை தன்னறைக்கு வரும் படி கண்காட்டி விட்டு விறுவிறுவென்று நடந்தான். அவன் கண்ணசைவில், தாய் பசு பின்பு ஓடும் கன்றுக்குட்டி போல் அவன் பின்னாலேயே அவன் அறைக்குள் சென்றாள்.
அவன் வழக்கம் போல் அவளை திட்ட ஆரம்பிக்க, அவளோ அவள் புன்னகையை அவனுக்கு பரிசாக வழங்கினாள்.
அவள் சிரிக்கவும், இவன் ஒரு நொடி புருவம் உயர்த்தி "ஹலோ மேடம் நான் உங்கள திட்டிட்டு இருக்கேன், நீங்க என்ன சிரிச்சிட்டு இருக்கீங்க?" என்று கடுப்பாய் கேட்டான்.
அவன் கேள்வியில் சுதாரித்து, தன் கனவு உலகில் இருந்து நிஜ உலகுக்கு வந்தாள்.
அதற்குள் அவனோ, "ஏன் இவ்லோ லேட்? லேட்டாகும்னா ஒரு கால் பண்ணி இன்பார்ம் பண்ணனும்னு உங்களுக்கு தெரியாதா?" என கோவப்பட்டான்.
"ஏன் இதெல்லாம் உங்களுக்கு தெரியாதா?" என கேட்டு அவனை சட்டென்று அணைத்தவள், "ரூல்ஸ் எல்லாம் எங்களுக்கு தானா? உங்களுக்கு இல்லையா? உங்களால தான், நான் இன்னிக்கு லேட். நேத்து நீங்க ஏன் வரல? ஒரு வார்த்தை என்கிட்ட சொல்லிட்டு போனீங்களா? உங்களுக்கு என்ன ஆச்சி? நீங்க ஏன் வரலன்னு, யோசிச்சி, யோசிச்சி நான் நைட் புல்லா தூங்காம காலையில லேட் ஆயிடுச்சி. இனிமேல் இப்படி பண்ணன்னா அவ்ளோதான்" என அவன் சட்டை காலரை பிடித்து கோவமாய் கேட்டாள்.
அவளின் செயலிலும், வார்த்தையிலும், அவன் ஒரு நொடி அதிர்ந்து அப்படியே சிலையாய் நின்றிருந்தான். அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தவள் அப்போதே தான் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என யோசித்து, வேகமாய் அவனை விலக முயற்சித்தாள். ஆனால் அதற்குள் அவள் இடையை சுற்றி வளைத்து விலக விடாமல் அணைத்துப் பிடித்தான்.
அவனின் செயலில், இப்போது அவள் அதிர்ச்சிக்கு செல்ல அவனோ "ஹலோ மிஸ் ஸ்வேதா, என்னை கொஞ்சம் பேச விடுறீங்களா?" என கேட்டு புருவம் உயர்த்தினான். அவனின் புருவ சுழிப்பில், அவனையே அவள் இமைக்காமல் பார்க்க, அவள் நெற்றியில் அழுத்தி முத்தமிட்டு "ஐ லவ் யூ ஸ்வேதா. இப்பவாச்சும் என் லவ்வ மேடம் அக்சப்ட் பண்ணிப்பீங்களா?" என்று கேட்ட மறு நொடி, அவனை வேகமாய் அணைத்து, "லவ் யூ டூ சிவா" என்றப்படி கட்டிக் கொண்டாள் ஸ்வேதா.
முற்றும்🫶🏻
Jebaselvi Jeba
cute ♥
Ammu Sathish
சூப்பர்
Santhanalakshmi S
🥰🥰😍😍😍achoooo sema cute ❤❤❤❤😍😍😍😍