தென்றல் – 11

“அரைச்ச சந்தனம், மணக்கும் குங்குமம்

அழகு நெத்தியிலே

ஒரு அழகு பெட்டகம், புதிய புத்தகம்,

சிரிக்கும் பந்தலிலே”

“என் ராசாத்தி. ஊர் கண்ணே பட்டுடும்த்தா. எம்புட்டு அழகா இருக்கா” என்று சங்கரேஸ்வரி தன் பேத்தியின் முகத்தை வருடி திருஷ்டி கழித்தார்.

“ஊர் கண்ணுல்லத்தா, முதல்ல உம்ம கண்ண சொல்லி சுத்திப் போடு" என்று கூட்டத்தில் இருந்த ஒருவள், வேண்டுமென்றே வம்பிழுத்தாள்.

“எவெடி அவ, எம்பேத்திக்கு, எம்ம கண்ணு பட்டுடும்னு சொன்னவ?” என்று சண்டைக்கு சென்றார் சங்கரேஸ்வரி.

“இந்த கெழவிக்கு கண்ணு மட்டுமில்ல, காதும் நல்லாத்தேன் கேட்குது" என்று இன்னொருத்தி கேலி பேசினாள். 

அவளின் பேச்சில், “என்னத்தடி கெழவி, கெழவின்னு கூவிட்டு இருக்கீக. இன்னேரம் என் வூட்டுக்காரக மட்டும் இங்கன இருந்திருந்தா, கெழவின்னு சொன்ன உம்ம வாய எல்லாம் கிழிச்சு விட்டிருப்பாக" என்று சொல்லிய பாட்டியின் முகத்தில், அந்த எழுபது வயதிலும் வெட்கத்தின் சாயல் படர்ந்தது.

“பாத்தியாடி, கெழவிக்கு குசும்ப. இன்னும் லவ்ஸு பண்ணிட்டு சுத்துது" என்று இன்னும் சிலர் பேச, அதைக் கேட்டு சுற்றி இருந்தவர்கள், அத்தனைப் பேரும் சிரிக்க ஆரம்பித்தனர்.

அவர்கள் என்ன பேசினார்கள்? எதற்கு சிரிக்கிறார்கள் என்று தெரியாமல், நிலா அப்போது தான் இவ்வுலகுத்துக்கே வந்து சேர்ந்தாள். ஏனோ இப்போது தான், அந்த இடம் கரைச்சல் இல்லாமல் மகிழ்வாய் இருப்பது போல் தோன்றியது.

சுற்றி நின்ற சொந்தத்தின் பேச்சிலும், சிரிப்பிலும் நிலாவின் முகம் அழகாய் மலர்ந்தது. அதில் தேவதையாய் இருந்தவளின் அழகு முகம், தேவலோக அழகியாய் மின்னியது. அவள் முகத்தில் தெரிந்த மலர்ச்சியில், இங்கே செல்வியின் மனமும் நிறைந்தது.

“எத்தன அழகா இருக்கா? தாயே மீனாட்சி, நீத்தேன் எம்புள்ளைய எப்பவும் கூட இருந்து பாத்துக்கனும்த்தா” என்ற செல்விக்கு அப்போதே, அவளுடைய எதிர்கால வாழ்க்கையை குறித்து சிறு அச்சமும், கலக்கமும் உருவாகியிருந்தது. 

அன்னேரம் அங்கே வந்த கதிரி, “ஏக்கா நானும், மாமனும் கெழம்பட்டுமா?” என்றான். இப்போதும் அவனுடைய பார்வை நிலாவின் மீது பட வில்லை. ஏனோ இப்போதும் அவள் கலங்கி தவித்த முகம் மட்டுமே அவன் நினைவடுக்கில் இருந்தது.

அதில், “என்னல? இன்னும் சடங்கு எதுவும் முழுசா முடியல, அதுக்குள்ல எங்கென கிளம்புறீக?” என்று கேட்டப்படி செல்வி கதிரின் அருகில் வந்தார்.

செல்வியின் கேள்வியில் சற்று தயங்கியப்படி, தன் பெரிய அக்காவைப் பார்த்தான்.

“அவெ கெடக்கா. நீ இருல. இன்னிக்கு அவள விட நீத்தேன் சபையில நிக்கனும்" என்று சங்கரேஸ்வரியும் சற்று தள்ளியிருந்து குரல் கொடுத்தார்.

“ஏத்தா நீ வேற செத்த நேரம் சும்மா கிட" என்ற முருகேசன், செல்வியிடம் “உமக்குத்தான், உன் அக்கா பத்தியும், என் அண்ணென் பத்தியும் தெரியும்ல, நாங்க இங்கன இருக்க வர அவென் வர மாட்டான். அவென் வராம, மதினியும், புள்ளைக்கு ஆசிர்வாதம் பண்ண வராது" என்றார்.

அது அவளுக்கும் தெரியும் தான். ஆனாலும், கதிர் செய்ய வேண்டிய சடங்குகள் மிச்சம் இருக்கே. என்று செல்வியும் யோசிக்க, அதற்குள் தாமரை எழுந்து வந்து தன் மகளை ஆரத் தழுவி. அங்கிருந்த சந்தனத்தை எடுத்து அவள் கன்னத்தில் தடவி, “நீ நல்லா இருப்பத்தா” என்றார்.

ஏனெனில், செந்தில் பாண்டியுடன் சேர்ந்து குடித்துக் கொண்டிருக்கிறான் என்ற செய்தி, தாமரையை வந்தடைந்திருக்க, நிச்சயம் அவர் வரமாட்டார் என்பதை அறிந்து தான், தன் மகளுக்கு தன்னுடைய ஆசிர்வாதமாவது கிடைக்கட்டும் என்று உள்ளே வந்திருந்தார்.

அதில் செல்வியும், முருகேசனும், மெலிதாய் புன்னகைத்துக் கொள்ள, கதிர் தான் அப்படியே நின்றிருந்தான். இதற்கே இப்படி இன்னும் முப்பதாவது நாள் சடங்கு என்ற ஒன்று உள்ளதே. அதில் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ? என்று யோசித்தப்படி நின்றிருந்தான்.

அதற்குள் கதிரின் அருகில் நின்றிருந்த முருகேசன், செல்வியிடம், “பொறவென்ன அதேன் மதினியே ஆசிர்வாதம் பண்ணிட்டாகத்தான. போயி மாமாவ அழைச்சிட்டு வா” என்றான்.

அதில் செல்வி சென்று தன்னுடைய அப்பாவை அழைத்து வர, அவரும் தன் மூத்த மகளை முறைத்தப்படியே, தன் பேத்திக்கு தன்னுடைய ஆசிர்வாதத்தையும், தன் மனைவியுடைய பொன் சங்கிலி ஒன்றையும் பேத்திக்கு போட்டு விட்டார்.

அதன் பின், மற்றவர்களும் ஆசிர்வாதம் செய்ய, “ஏல கதிரு இங்கன வா” என்று செல்வி சத்தமாய் அழைத்தார்.

அதில் முருகேசனிடம் பேசிக் கொண்டிருந்த கதிர், அங்கே வர, “ஏன் மதினி. மச்சான்ன கட்டிக்கனும்னா, அதுக்கு நான் என்னத்தேன் பண்றது? நானும் சமஞ்சி ஐஞ்சு வருஷம் ஆகுது. மச்சான் கண்ணுல நானெல்லாம் படமாட்டுறேன்னே” என்று கேலி பேசினாள் முறைப் பெண்.

“அடியே, என்னடி எனக்கு போட்டியா வந்து நிக்கிறவ, உமக்கு முன்னாடியே, நான் இருக்கேன். அந்த நெனப்பு கொஞ்சம் இருக்கட்டும்" என்று இன்னொருத்தி தாவணி முந்தானையை சுழற்றிக் காட்டினள்.

“எம் பேரன்ன கட்டிக்கனும்னா, அதுக்கு அவ நாட்ட ஆள்ற ராணியா இருக்கனும்ல. அப்படி எல்லாம் எம் பேரன்ன, உங்களால மயக்கிட முடியாது" என்று சங்கரேஸ்வரி நீட்டி முடித்தார். அதற்குள், “ஏக்கா, எதுக்கு வர சொன்ன?” என்ற கதிரின் பார்வை சுற்றி யார் மீதும் தெரியாமல் கூட படவில்லை.

“நீ ஒருத்தன் தான் இன்னும் புள்ளைக்கு ஆசிர்வாதம் பண்ணல. வா வந்து பண்ணு" என்றார் செல்வி. கதிர் வந்தவுடனே தாமரை வெளியில் சென்றிருக்க, அவனும் ஒரு பெருமூச்சை இழுத்துக் கொண்டு நிலாவின் அருகில் வந்தான். அங்கிருந்த சந்தன கிண்ணத்தில் கதிர் கையை வைக்க, “மாமோய், உங்க அக்கா மவளுக்கு சந்தனம் கூடவா வலிச்சிடப் போது. கொஞ்சம் அதிகமாத்தேன் எடுத்தா என்னவாம்?” என்று அதற்கும் கேலி பேசினாள் ஒருவர்.

மற்ற நேரமாக இருந்திருந்தால், அவனுமே பதிலுக்கு பதில் கொடுத்திருப்பான். இப்போது, அவன் முகத்தில் மெல்லிய புன்னகை மட்டுமே.

“பாருல என் மச்சான் முகத்த" என்று இன்னொருவள் பேச, அதற்குள் சந்தனத்தை எடுத்து நிலாவின் கன்னத்தில் பூசி அவள் நெற்றியில் திரூநீறையும் பூசி விட்டிருந்தான். அவன் அவளைப் பார்க்கவில்லை. ஆனால் நிலாவுடைய பார்வை மொத்தமும், அவனுடைய காயத்தின் மீது மட்டும் தான்.

இப்போது அவனின் இரத்தக் கறையோடு சேர்ந்து, அவள் கன்னத்தில் இருந்த சந்தனமும் அதனுடன் கலந்திருந்தது. அதையே அவள் பார்த்துக் கொண்டிருக்க, “மாமன்ன பாத்தது போதும். இனிமேல் முப்பது நாளைக்கு, உன் மாமன்ன இல்ல எந்த ஆம்பளையும் பாக்க கூடாது புள்ள" என்று நிலாவின் அக்கா முறையில் இருந்த ஒருவள் கூறினாள்.

அப்போதே கதிர் நிலாவின் பக்கம் திரும்ப போக, அதற்குள் அவளை அழைத்துக் கொண்டு சென்றிருந்தனர். செல்லும் நிலாவையே அவன் பார்த்தப்படி நிற்க, “ஏலே போ. போய் குச்சிய முழுசா கட்டு" என்று முருகேசன் சொல்ல, அவனும் அவர்கள் சொல்லியதை செய்தான்.

அந்த ஓலையில் இருந்த இடைவெளியின் வழியே நிலாவுடைய அந்த அழுது சிவந்திருந்த கண்கள் மட்டுமே கதிரின் பார்வையில் விழுந்தது. நிலாவின் பார்வையோ, அவனுடைய கைக்காயத்தின் மீது மட்டுமே இருந்தது.

“வெங்காட்டு பக்கக்கள்ளி, 

சட்டென்று மொட்டு விட.

செங்காட்டு சில்லிச்செடி, 

சில்லென்று பூவெடுக்க.

தென்மேற்கு பருவக்காற்று

தேனீப் பக்கம் வீசும் போது

சாரல், இன்ப சாரல்.”

சடங்கு எல்லாம் முடிந்து அனைவரும் வீடு திரும்ப, செந்தில் முழு போதையில் அங்கு வந்து தன் மனைவி தாமரையை மட்டும் இழுத்து சென்றிருந்தான். 

கிட்டதட்ட ஒரு வாரத்துக்கு, அங்கு நடந்த சண்டைத்தான், அந்த ஊரில் முக்கிய பேச்சு செய்தியாய் ஒலித்தது. அப்படியே அடுத்தடுத்த நாட்கள் ரெக்கைக் கட்டி பறக்க, கோவில் திருவிழாவுக்காக, கொடியேற்றம் அன்று நடைபெற இருந்தது.

கதிர் சொன்னது போலவே, சங்கரேயனும், “எம் மவென் சொன்ன மாதிரி பண்றதா இருந்தா, நான் இந்த திருவிழாவ தலைம தாங்குறேன். இல்லன்னா, எம்ம வீட்டு வரிப்பணம், நீங்க கேட்காமலே வந்து சேரும் கெழம்பளாம்" என்று முடிவாய் சொல்லியிருக்க, ஊர் தலைவர்களும் கதிருடைய பேச்சைக் கேட்டு நடக்க வேண்டிய நிலை.

அதனால் வழக்கமாய் திருவிழா கடைகள், மற்றும் அலங்காரத்துக்கான ஒப்பந்தத்தை இம்முறை பாண்டிக்கு கொடுக்கவில்லை. அதற்கு பதிலாய், அதை சிவாவுடைய தம்பி விவேக்கிற்கு கொடுக்க சொல்லியிருந்தான்.

ஏற்கனவே கதிரின் மேல் கொலை வெறியில் இருந்த பாண்டிக்கு, இது எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியது.

“வருஷக்கணக்கா, நம்ம எடுத்த காண்ட்ரக்ட, நேத்து வந்த பொடி பையனுக்கு கொடுக்க சொல்லிருக்கான். அவென்ன வெட்டி போடாம, இன்னும் என்னத்தல யோசிச்சிட்டு இருக்க" என்று பாண்டியுடைய அப்பா கோவமாய் அவனிடம் வந்து கத்தினார்.

அதில், “வெட்டி போடு. போடுன்னா, ஏன் நீ எத்தன வாட்டி அவனுக்கு எதிரா என்னென்னவோ பண்ணிருப்ப. எதாச்சும் நடந்துச்சா. வட்ட வட்டோம், நம்ம ஆத்திரத்துல உடனே உடனே பண்ணப் போயி தான் எதுவும் நடக்கல. இந்த தடவ நமம் பொறுமையா இருந்துத்தேன் ஏதாச்சும் பண்ணனும். திருவிழா முடியிறதுக்குள்ள, அந்த கதிருக்கு நான் ஆறுன்னு காமிக்கிறேன்” என்று கோவமாய் தன்னுடைய அப்பாவை பார்த்து கத்தி விட்டு அங்கிருந்து சென்றிருந்தான் பாண்டி.

இப்படி இவனுக்கு எதிரே ஒரு பக்கம் சதி நடந்துக் கொண்டிருக்க, கதிரோ அதைப் பற்றிய சிந்தனை ஏதும் இன்றி, ரைஸ்மில்லில் அமர்ந்து, அன்றைய வாரத்துக்கான வரவு, செலவு கணக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அப்போது அங்கே வந்த குமார், “ஏண்ணே. உங்கள அக்கா உடனே வூட்டுக்கு வர சொன்னாக" என்று மூச்சு வாங்கியப்படி வந்து கூறினான்.

அதில், “வூட்டுக்கா? இன்னேரத்துலையா? என்ன எதுவும் பிரச்சனையா?” என்றவன் பார்த்துக் கொண்டிருந்த கணக்கு நோட்டை மூடி வைத்தான்.

“ஆ..ங்  அக்கா, உங்கள கையோட கூட்டி வர சொன்னாக" என்று அதையே குமார் திருப்பி சொல்ல, “என்னல?” என்றவன் தன்னுடைய மொபைலை எடுத்துப் பார்த்தான்.

அப்போதே அவனுடைய மொபைல் சார்ஜ் இல்லாமல் அணைந்திருப்பதே அவனுக்கு தெரிந்தது.

“சார்ஜ் இல்லையா? அதான் அக்கா கால் பண்ணாம, இவன அனுப்பிருக்கோ?” என்று யோசித்தவனின் முகத்தில் சிந்தனைக் கோடுகள் பரவியது. சட்டென்று, நிலாவுடைய அழுத முகம் நினைவடுக்கில் மின்னலென வந்து மறைந்தது. 

(இப்போ என்ன பிரச்சனைன்னு தெரியலையே. சரி அது என்னென்னு அடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி, இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

தென்றல் தீண்டுமா?

Comments   0

*** தென்றல் – 11 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***