தென்றல் – 5

தோட்டத்து பிரச்சனையை முடித்து விட்டு கதிர் திரும்பும் வழியில் ஒரு ஓரத்தில் நிலா பதட்டத்தோடு நின்றிருந்தாள். அவள் பதட்டத்தைப் பார்த்த கதிரும், அவளிடம் என்ன என்று விசாரிக்க, அவளின் அருகில், அந்த புல்லட்டை நிறுத்தினான். அவனைப் பார்த்து பயந்து, வேகமாய் தன் கையை பின்னே மறைத்தாள் நிலா.

அவளின் செய்கையில் வெடுக்கென்று அவள் கரத்தைப் பிடித்து கதிர் பார்க்க, அதில் ஒரு ரோஜாவும், க்ரீட்டிங் கார்டும் இருந்தது. அதைப் பார்த்த கதிருக்கு கோவத்தில் கண் எல்லாம் சிவந்து விட்டது.

“என்னது இது?” என்று கதிர் கோவமாய், அவளிடம் கேட்க, அவளோ, “அத் அது" என்றவளுக்கு பயத்தில் வார்த்தை தொண்டைக்குழியை விட்டு வெளியில் வரவில்லை. பொதுவாகவே அவள் பயந்த சுபாபம். இதில் அவன் முகத்தில் தெரிந்த அந்த கோவம், இவளை இன்னும் பயமுறுத்தியது.

“எவென் கொடுத்தான்?” என்ற அடுத்த கேள்வி கதிரிடம் இருந்து கோவமாய் வந்தது. அக்கேள்வியில், தலையும் புரியாமல், வாலும் புரியாமல், “இல்ல, அது" என்றவளுக்கு முகமெல்லாம் வியர்க்க ஆரம்பித்தது.

“இன்னும் பத்தாங்கிளாஸ கூட தாண்டல. அதுக்குள்ள” என்று கதிர் வார்த்தையை விடப் போக, அதற்குள், “இல்ல டீச்சர் தான் கொடுத்து விட்டாக" என்று பட்டென்று கூறினாள் நிலா.

அவளின் வார்த்தையில், இங்கே கதிருடைய கோவம் இன்னும் கூடியது. “எவெம்ல அந்த டீச்சரு? பச்ச புள்ளைக்கு, லவ் லெட்டர் கொடுத்துருக்கான். எவனாச்சும் ஏதாச்சும் கொடுத்தா, உடனே வாங்கிட்டு வந்திடுவீயா நீயூ? கொடுத்தவன் கன்னத்துலையே ஒன்னு வுடுறதுக்கு என்ன? அவன இன்னிக்கு," என்றவன், கோவமாய் புல்லட்டில் ஏற சென்றான்.

“ஐயோ இல்ல. இது. டீச்சர் எனக்கு கொடுக்கல. உங்களுக்குத்தேன் கொடுத்தாக" என்றாள் நிலா.

அவளின் வார்த்தையில் புல்லட்டை எடுக்க நகர்ந்தவன், திரும்பி, “என்னல சொல்றவ? எமக்கு ஏன்ல கொடுக்கனும்?” என்றவனுக்கு, அந்த டீச்சர் ஒரு பெண்ணாக இருக்குமோ? என்ற எண்ணம் தோன்றவே இல்லை.

ஏனோ அவனுடைய குரலும், முறைப்பும், அவளுக்கு இன்னும் இன்னும் பயத்தைக் கொடுத்தது. கொஞ்சம் விட்டால் அழுதுவிடுவேன் எனும் நிலையில் தான் நின்றிருந்தாள். அதில் அவள் கரத்தில் இருந்த லெட்டரை வெடுக்கென்று பிடுங்கி படித்துப் பார்த்தான்.

“என்ன மச்சான்? எப்போத்தேன் எம்ம காதலுக்கு சரி சொல்லப் போறீக? ஐயன்கிட்ட சொல்லி நான் வேணும்னா, உமக்கு பரிஷம் போட வர சொல்லட்டுமா? எப்போ பாத்தாலும், காரமாவே சுத்திட்டு இருக்கீறீக, நீங்க சரின்னு சொன்னா, நான் வேணும்னா இனிப்பா செஞ்சு போட வூட்டுக்கு வரேன். ஐ லவ் யூ” என்று எழுதப்பட்டிருந்தது.

அதைப் படித்துப் பார்த்தவனுக்கு, இன்னும் பயங்கரமாய் கோவம் ஏற, “எந்த டீச்சரு, இத உம்ம கிட்ட கொடுத்து வுட்டா?” என்று வேஷ்டியை மடித்துக் கட்டியப்படி கேட்டான் கதிர்.

அவனின் தோரணையில், இன்னும் பயந்து அழுதவள், “அத் அது. மலர் டீச்சர்" என்று திக்கி திணறிக் கூறினாள்.

“வண்டியில வந்து ஏறு" என்று கதிர் கோவமாய் சொல்ல, “இல்ல, நான் வூட்டுக்கு போறேன்" என்றவள், அழுதப்படியே அங்கிருந்து கிளம்ப முயன்றாள்.

“ச் ஏறுன்னு சொல்லுறேன்ல?” என்று கதிர் அழுத்தி சொல்ல, பயத்தில் வேகமாய், அவன் வண்டியில் ஏற சென்றாள். சட்டென்று அவளால், அந்த உயர்ந்த பைக்கில், ஏறக் கூற முடியவில்லை. அவள் கீழே விழப் போக, அதை முன் இருந்த கண்ணாடியில் பார்த்தவன், வண்டியை சரித்து நிறுத்தி, கால் மிதியையும் இழுத்து விட்டான்.

அதில் அவள் இன்னும் பயந்து அங்கேயே நிக்க, “இதுல மிதிச்சு ஏறு" என்றான் கதிர்.

“ம்" என்று தலையாட்டியவள், தன் தந்தை பைக்கில் கூட பெரிதாய் ஏறியது இல்லை. அவளுக்கு பைக்கில் செல்வது கூட பயம்ந்தேன். தந்தை பைக்கில் சென்றால் கூட தந்தைக்கும், அன்னைக்கும், இடையில் தான் அமர்ந்திருப்பாள். இப்போது, அந்த பெரிய பைக்கில், இவள் அமர்ந்தப் பின்னும் அத்தனை இடம் இருந்தது.

முன்னால் அமர்ந்து அவன் சட்டையைப் பிடிக்க கூட அவளுக்கு விரல் நடுங்கியது. அவன் பைக்கை ஸ்டார்ட் செய்யவும், அவள் தடுமாற, மீண்டும் பைக்கை நிறுத்தியவன், “ஒன்னு என்ன புடுச்சிக்கோ. இல்ல உங்க ஆத்தா மாறியே உமக்கும், நான் வேண்டாதவன்னு தோனுனா, இந்த கைப் பிடிய பிடிச்சிக்கோ. கீழ விழுந்து அடுத்த பிரச்சனைய கூட்டாத" என்று கடுப்பாய் சொல்லியவனின் வார்த்தையில், அவளின் மீதான அக்கறை மட்டுமே இருந்தது.

ஆனாலும் அதை புரிந்துக் கொள்ளும் வயதோ? பக்குவமோ அவளிடம் இல்லை. இருந்தும் அவன் சொல்லிய, ‘வேண்டாதவன்' என்ற வார்த்தை அவளுக்கு என்னமோ செய்ய, அவன் சட்டையைப் பட்டென்று பிடித்துக் கொண்டாள்.

அதன் பின்னே அவன் அந்த புல்லட்டை கிளம்பிக் கொண்டு, நேரே அவள் குறிப்பிட்டிருந்த அந்த டீச்சரின் வீட்டுக்கு வண்டியை விட்டான்.

அவன் வழக்கத்தை விட வேகம் கம்மியாய் தான், ஓட்டினான். ஆனால் பின்னே அமர்ந்திருந்த நிலாவுக்குத்தான், ஏதோ ராக்கெட்டில் பறப்பது போன்ற பிரம்மை. அந்த ஐந்து நிமிட பயணத்தில், ஒரு ஆயிரம் தெய்வத்தை வேண்டியிருப்பாள்.

அந்த டீச்சர் வீட்டின் முன் புல்லட்டை நிறுத்தியவன், “இறங்கு" என்றான். உடனே அவள் இறங்கப் பார்க்க, ஏறும் முன் இருந்ததை விட, இப்போது இன்னும் உயரமாய் தெரிந்தது.

அதில் பயத்தில், அவள் இறங்காமல் இருக்க, பைக்கை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தியவன், “என் கைய புடிச்சிட்டு கீழ இறங்கு" என்று பல்லைக் கடித்தான். அவன் வாழ்க்கையிலையே, பொறுமையாய் இருக்க முயன்ற தருணம் இது.

ஆனால் நிலாவுக்கோ, அதுவே அத்தனை பயமாக இருந்தது. அவன் கரத்தை மெல்ல பிடித்தப்படியே பைக்கில் இருந்து இறங்கினாள்.

அதைப் பார்த்த கதிருக்கோ, “ச் என்னத்தேன் புள்ளைய வளர்த்தாளோ? இப்படி தொட்டதுக்கெல்லாம் பயந்து சாவுறா. இதுல இவ கையில ஒருத்தி, கண்டத கொடுத்தணுப்பியிருக்கா” என்றவனுக்கு, அந்த மலர் என்பவளின் மீது அத்தனைக் கோவம் வந்தது.

நிலா எல்லாம் அத்தனை எளிதாய், டீச்சர் கொடுத்ததை வாங்கிக் கொண்டு கதிரின் முன் வருபவள் இல்லை. அப்படி இருக்க, அவளே வந்திருக்கிறாள் என்றால், அந்த மலர், இவளிடம் எத்தனை மிரட்டியிருப்பாள், என்று கதிருக்கு நன்றாக புரிந்தது.

அதில் கோவமாய் புல்லட்டில் இருந்து கதிர் இறங்க, இவனைப் பார்த்ததும், அந்த வீட்டில் இருந்து வெளியே வந்த மலரின் அப்பா, இவனைப் பார்த்ததும் “வாங்க, வாங்க மருமவனே, அடியே ராக்காயி, ஆரு வந்துருக்கான்னு வந்துப் பாரு" என்றவருக்கு, கதிரை அங்கே பார்த்ததில் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை.

கணவரின் சத்தத்தில், வெளியே வந்த ராக்காயியும், “அடியாத்தி, மருமவனா எங்க வூட்டுக்கு வந்துருக்காக?” என்று கன்னத்தில் கை வைத்து ஆச்சர்யமானார்.

“அடியே கூறுகெட்டவளே, இப்படித்தேன், வாசல்ல நிக்க வச்சு பேசுவீயாக்கும், உள்ள கூப்புடுடி" என்றார் மலரின் அப்பா.

“ஐயா என் ராசா. உள்ளார வாரும்" என்று ராக்காயி கதிரை அழைக்க செல்ல, அப்போதே அவனின் பின்னே பயந்து நின்றிருந்த நிலாவையும் பார்த்தார்.

அவளைப் பார்த்ததும், “அய்ய எம்ம ராசாத்தியும்ல வந்துருக்கா. வா தாயீ" என்றவர் நிலாவின் கையையும் பிடித்து வீட்டுக்குள் அழைத்தார். அவளோ, கதிரைப் பார்த்து தயங்கி நிற்க, “கூப்புடுறாகல்ல. உள்ளாரப் போ” என்று கதிர் அழுத்தி சொல்லவும், பயத்தில் வேகமாய் அவருடன் சென்றாள் நிலா.

“ஏன் ராசா, பச்ச புள்ளைக்கிட்ட போயி இத்தன சத்தம் போடுற. பாரு புள்ள முகமே வாடிக் கெடக்கு" என்றவர் தன் முந்தி சேலையால் நிலாவின் முகத்தை துடைத்து விட்டார்.

“உள்ள வாங்க மருமவனே” என்று மலரின் அப்பா அழைக்க, அந்த வீட்டின் திண்டில் சென்றமர்ந்தான். அமர்ந்தவனின் பார்வை, அங்கே ராக்காயியின் சேலை முந்தானைக்குள் சிறுமியாய் பதுங்கியிருந்த நிலாவின் மீது தான் இருந்தது.

“எங்கத்த உங்க மவ?” என்று கோவமாய் கேட்டான் கதிர். அவன் குரலில் தெரிந்த கோவத்தில், மலரின் அப்பா வேலய்யா, எங்கே தன் மகள், பள்ளியில் வைத்து நிலாவை எதற்கும் திட்டி விட்டாளோ? அதனாலத்தான், கதிர் கோவமாய் இருக்கானோ என்ற எண்ணம் சட்டென்று தோன்றியது.

ராக்காயியோ, “அவ எங்க மருமவென்னே இன்னேரம் இங்கன இருக்கப் போறா. ஏதோ தைக்க பழகுறாளாம். அதனால அங்கத்தேன் போயிருக்கா” என்றவர், வீட்டின் உள் சென்று, நிலாவுக்கு சாப்பிட நொறுக்குத் தீணியை எடுத்து வந்துக் கொடுத்தார்.

அதற்குள் வேலய்யா, “என்னாச்சு மருமவனே? பள்ளிக்கூடத்துல வச்சு, நம்ம புள்ளய எதுவும் வஞ்சிட்டாளா?” என்று நேரடியாக கேட்டார்.

அதைக் கேட்ட ராக்காயி, “அடியாத்தி. நம்ம புள்ளைய வைஞ்சிட்டாளா? அவ இன்னிக்கி வூடு வரட்டும். வைஞ்ச நாக்க, அம்மில வச்சு அரைக்கிறேன். ஏங்க, இவ இனி சோழிக்கும் போ வேண்டாம். எங்கேயும் போ வேண்டாம். எவன் கையிலையாச்சும் புடுச்சி கொடுங்க. எங்கப் போயி பிரச்சன பண்ணிருக்கா. பெரிய ஊட்டு மகாலட்சுமிய போய்” என்று தன் மகளை திட்டியவர், நிலாவிடம், “அதான் என் புள்ள முகமே சரி இல்லையா” என்று மீண்டும் அவள் கன்னத்தைப் பற்றினார்.

இப்படி இவர் பேசிக் கொண்டிருக்கும் போதே, தன்னுடைய ஸ்கூட்டியில் வந்து சேர்ந்தாள் மலர். கதிரையும், நிலாவையும் பார்த்த மலருக்கு, என்ன நடந்திருக்கும் என்பது புரிய, “அடியாத்தி” என்று நெஞ்சில் கை வைத்தாள்.

அதே நேரம் இங்கே, தாமரை வாசலில் அமர்ந்து பாத்திரத்தை கழுவிக் கொண்டிருக்க, கோவமாய் வந்து நின்றார் செல்வி.

அவளைப் பார்த்ததும் எதுவுமே நடவாதது போல், “என்ன பெரிய வூட்டுக்காரவக, இந்த ஆகாத வூட்டுக்கு வந்திருக்காக?” என்று சொல்லியப்படி பாத்திரத்தை கழுவ ஆரம்பித்தார்.

அதில் வேகமாய், அந்த வீட்டின் கதவை திறந்துக் கொண்டு உள்ளே வந்த செல்வி, “நீ ஆகாத காரியம் எல்லாம் செஞ்சி வச்சா, நியாயம் கேட்டு வரத்தேன் செய்வாக" என்று கோவமாய் கத்தினார்.

“இப்போ நான் என்னத்த செஞ்சிப்புட்டேன்னு, இப்படி சண்டைக் கோழியா வந்து சிலுக்கிறவ?” என்று தன் ஈர கரத்தை தன் சேலையில் துடைத்தப்படி எழுந்து நின்றார் தாமரை.

(ஏன் தாமரை மேடம்? நீங்க என்னப் பண்ணீகன்னு உமக்கு தெரியாதா? நாங்க வேற தனியா சொல்லனுமா? சரி அடுத்து என்ன? அங்க மலர் வூட்டுல என்னாகப் போது? இங்க என்னாகப் போதுன்னு அடுத்த எபிசோட்ல பார்க்கலாம். அதுக்கு முன்னாடி, நம்ம கதிர் நிலாவ பத்தி நீங்க என்ன நினைக்கிறீகன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே உங்களுக்கு எந்த சீன் பிடிச்சிருந்திச்சுன்னும் சொல்லலாம். இந்த கத உங்களுக்கு பிடிச்சிருந்தா, லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

தென்றல் தீண்டுமா?

Comments   0

*** தென்றல் – 5 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***