தென்றல் – 48

பிரியாவின் அம்மா, கதிருடைய கையைப் பிடித்து கெஞ்சிக் கொண்டிருக்க, அன்னேரம் அங்கு வந்த தாமரை, “நானும் பேசலாங்களா?” என்று கேட்டார். அதில் இப்போது கதிரில் இருந்து அத்தனைப் பேரும் அவரின் பக்கம் திரும்பினர். அதுவரை அமைதியாய் இருந்த செல்வியோ, அக்காவின் அருகில் சென்று, “அக்கா, நீ ஏதும் பேசி பிரச்சனையாக்காத. நீ வூட்டுக்கு போ” என்று மெதுவாய் கூறினார்.

அதற்குள் இன்னொருவரோ, “பொண்ண பெத்தவக, பையன் வீட்டாளுக கிட்ட பேசிட்டு இருக்காக, இதுல நீங்க ஊடால வராதீக" என்று சத்தமாய் கூறினார். அவ்வளவுத்தான் தாமரைக்கு வந்தே கோவம்.

“நான் ஏன்ல வர கூடாது. என்னமோ, அந்தப் புள்ள சாவ கெடக்கு, அந்தப் புள்ள வாழ்க்கைன்னே பேசிட்டு இருக்கீக. அப்போ என் புள்ள வாழ்க்கைக்கு எல்லாரும் என்ன சொல்லப் போறீக? இங்க உட்கார்ந்திருக்க, அத்தன பெரிய மனுஷங்களும்தான, அன்னிக்கு என் வீடு தேடி வந்து, இவனுக்கு கட்டிக் கொடுங்கன்னு ஒத்தக் கால்ல நின்னீக. இப்போ என்னவோ? ஆறோ, ஏதோ பஞ்சாயத்து கூட்டுனாகன்னு, எல்லாரும் ஓவரா அவுகளுக்கு ஒத்தூதிட்டு இருக்கீக. அவுகளுக்கு, அவுக புள்ள முக்கியம்னா, எனக்கு என் புள்ள முக்கியம். என் புள்ள கழுத்தலத்தேன் எம் தம்பி தாலி கட்டுவான். அவுகள மாதிரி எல்லாம், நான் நின்னு கெஞ்ச வேண்டிய அவசியம் கிடையாது. எம் தம்பி மேல எனக்குத்தேன் உரிமை அதிகம். மூணாவதா வந்தவுகளுக்குலாம், நானோ, எம் புள்ளையோ எதையும் வுட்டுக் கொடுக்க முடியாது” என்று அழுத்தம் திருத்தமாய், அத்தனை சத்தமாய் கூறி முடித்திருந்தார் தாமரை.

அவருடைய பேச்சில், செல்வியில் ஆரம்பித்து, முருகேசன், கதிர் ஏன் சங்கரேயனே, தன் மகளை ஆச்சர்யமாய் பார்த்தார்.

“என்னத்தா பேசுற நீ? அன்னிக்கு என்னமோ, ஆகாதவனுக்கு புள்ளைய கட்டிக் கொடுக்க மாட்டேன்னு அந்த ஆட்டம் போட்ட, இப்போ என்னமோ எம் தம்பி, எம் தம்பின்னு உரிமை கொண்டாடுறவ" என்று கூட்டத்தில் இருந்த ஒருவர் கேட்டார்.

“அது எங்க குடும்ப விஷயம். நாங்க அடிச்சிப்போம். பிடிச்சிப்போம். அதுவும் போக, எமக்கும், எம் தம்பிக்கும் ஆயிரம் இருக்கும். அதுக்காக எல்லாம், பண்ண சம்பந்தம் இல்லன்னு ஆயிடாது. சொன்ன தேதிதியில, இந்த கல்யாணம் நடக்கும். அம்புட்டு பேரும் வந்து சாப்டு போங்க" என்று சொல்லிய தாமரை, கதிரையும், முருகேசனையும் பொதுவாய் ஒரு பார்வை பார்த்து, “ஊரைக் கூட்டி வந்து சம்பந்தம் கேட்க தெரிஞ்சிச்சுத்தான. இப்போ என்னவோ, ரெண்டு பேரும் இப்படி வாய மூடிட்டு நின்னுட்டு இருக்கீக. கல்யாண வேற எல்லாம் அம்புட்டு கெடக்கு. இப்படி நின்னுட்டு இருந்தா எப்படி? சீக்கிரம் முடிச்சுவுட்டுட்டு வேலைய பாக்க ஆரம்பிங்க" என்று அதிகாரமாகவே சொல்லிவிட்டு அங்கிருந்து நடந்தார்.

அதில் கதிரும், முருகேசனும் இன்னமுமே அதிர்ச்சியில் இருந்து வெளியில் வரவில்லை. அதற்குள் ஊர் தலைவர் தான், “ஏத்தா நில்லுத்தா. பஞ்சாயத்து பேசிட்டு, நீ வாட்டுக்கு போனா என்ன அர்த்தம். அவுகளும், அவுக புள்ளையும் பாதிக்கப்பட்டிருக்குல்ல" என்றார்.

அதில் அவரின் பக்கம் திரும்பிய தாமரையோ, “இப்போ என்ன என் புள்ளையும், விஷத்த குடிச்சிட்டு வந்து நிக்கனுமா? அப்படி நின்னாத்தான், உங்களுக்கு பரிதாபம் வருமோ” என்றுக் கேட்க, “அக்கா” என்று கோவமாய் கத்தினான் கதிர்.

அதில் தாமரை திரும்பி கதிரை தீயாய் முறைக்க, அதில் வேகமாய் ஊர் காரர்களைப் பார்த்து, “நான் நிலாவத்தான் கல்யாணம் பண்ணுவேன். உங்களால என்னப் பண்ண முடியுமோ பண்ணிக்கோங்க" என்று சொல்லிவிட்டு அவனும் அங்கிருந்து கிளம்ப முயன்றான்.

“ஏப்பா நில்லுப்பா. இப்படி ஆளாளுக்கு விறைச்சிட்டு போனா எப்புடி. ஆறாச்சும் விட்டுக் கொடுக்கனுமா? இல்லையா” என்று பொதுவாய் ஒருவர் கூறினார்.

“நாங்க ஏன் விட்டுக் கொடுக்கனும்? இல்ல இதுல எங்க மேல என்னத் தப்பு இருக்குன்னு சொல்லுங்க பாப்போம்” என்று முருகேசன் கோவமாய் கேட்டார்.

அதில் இப்போது கதிருடைய உறவினர்களும், கதிருக்கு ஆதரவாக பேச ஆரம்பிக்க, மீண்டும் பஞ்சாயத்தில் வாதம் சூடு பிடித்தது. ஒரு கட்டத்தில், “போதும் எல்லாரும் நிறுத்துங்க. இப்படி உங்க இஷ்டத்துக்கு சண்டைப் போட்டா, அப்புறம் நாங்க ஏன் இங்க உட்கார்ந்திருக்கனும்" என்று ஊர் பெரியவர் சத்தம் போட, அந்த இடம் அமைதியானது.

“இங்கப்பாருங்க. எங்க எல்லாருக்குமே தெரியும். இதுல கதிர் தம்பி பக்கம் எந்த தப்பும் கெடையாது. இருந்தும் நாங்க உங்களுக்காகவும், உங்க பொண்ணுக்காகவும் தான் யோசிச்சோம். ஆனா அந்த தம்பியே உங்க பொண்ண கட்டிக்க விருப்பம் இல்லன்னு சொன்னதுக்கப்புறம், எங்களால எதுவும் பண்ண முடியாது. அதுவும் போக, அவுக வூட்டு புள்ளையோட வாழ்க்கையும் அதுல இருக்கு. உங்க புள்ளைக்காக யோசிச்சு, அந்தப் புள்ள வாழ்க்கையையும் சிக்கலாக்க முடியாது. நாளைக்கு, அந்தப் புள்ள ஏதாச்சும் பண்ணிக்கிடுச்சின்னா, அதுக்கு ஆறு பொறுப்பாவா? நீங்கத்தேன்ன, இந்த கன்னாலம் வேணாம்னு முடிவு பண்ணீக. அப்பவே ஊரைக் கூட்டி, நடந்த நிச்சயத்த முறிச்சு விட்டிருக்கனும். இவ்வளவு தூரம் வந்திருக்காது.” என்று இருவரைப் பார்த்தும் சொல்லியவர், “கதிருக்கும், நிலாக்கும்த்தேன் கல்யாணம் நடக்கும். நீங்க உங்க பொண்ணு மனச மாத்த பாருங்க” என்று தீர்ப்பு வழங்கியிருந்தார்.

“அதெப்டிங்க நடக்கும்? எங்க பொண்ணு சாக கெடுக்கிறப்ப, இவன் கன்னாலத்த நாங்க நடக்க விட்டுடுவோம்மா?” என்று பிரியாவின் உறவினர் பிரச்சனை செய்தனர்.

“எங்க? பிரச்சன பண்ணித்தான் பாரேன். அமைதியா நின்னுட்டு இருக்கோம்னு பார்க்குறீகளோ?” என்று கதிர் எகிறிக் கொண்டு செல்ல, முருகேசன் தான் அவனைப் பிடித்து தடுத்தார்.

மீண்டும் அந்த இடத்தில் ஒரு கை கலப்பாக, “நிறுத்துங்கப்பா” என்று ஊர் பெரியவர் கத்தினார். அதில் கதிர் முறைத்துக் கொண்டு நிற்க, “என்ன? நாங்களும் பஞ்சாயத்த நம்பி வந்திருக்கீகன்னு, கொஞ்சம் விட்டுக் கொடுத்து பேசுனா, மரியாதை இல்லாம போறீங்க. அவுக ஒன்னும் நீங்க நினைக்கிற மாதிரி சாதாரண தலைக்கட்டு கிடையாது. ஊரு மொத்தமும் அவெங்க சொந்தம்த்தேன். இப்போ அவுக அமைதியா நிக்கிறது, ஊருக்கு மரியாதைக் கொடுத்து. இவ்வளவு தூரம் ஆனதுக்கப்புறம், அவுக வூட்டு கல்யாணத்துல பிரச்சன பண்ணிடுவீகளோ? அத நாங்களாம் பாத்துட்டு சும்மா இருப்போம்னு நினைச்சீகளோ. தேவை இல்லாம அலம்பல் பண்ணீங்கன்னா, அம்புட்டு பேரையும் ஊரை விட்டு ஒதுக்கி வைக்க வேண்டிக் கெடக்கும். பஞ்சாயத்து சொன்னதுத்தேன் முடிவு. அத மீறி ஆறு என்னப் பண்ணாலும், அதுக்கு இந்த ஊரு துணையா வராது" என்று முடிவாய் சொல்லி முடிக்க, அங்கே அப்படி ஒரு அமைதி.

கடைசியில், பிரியாவின் அம்மா, தாமரையைப் பார்த்து, “எம் புள்ள வாழ்க்கைய பறிச்சு, உம் புள்ள நல்லா வாழ்ந்திடுவாளா?” என்று ஆதங்கமாய் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றிருந்தார்.

அதில் தாமரை அப்படியே அதிர்ந்து நிற்க, செல்வியோ, “அக்கா” என்று கட்டிக் கொண்டார்.

கதிருக்கும், முருகேசனுக்கும், இன்னும் கூட தாமரை பேசியதை நம்பவே முடியவில்லை. இப்போதும் கதிரைப் பார்க்கும் போது, அவருடைய கண்ணில் பகை அப்பட்டமாய் தெரிந்தது.

செல்வியை விலக்கிய தாமரை, எதுவும் சொல்லாமல், அங்கிருந்து வந்த வேகத்தில் கிளம்பினார். மனம் மொத்தமும் சற்று முன், நிலா வந்து அவரின் கையைப் பிடித்து கண்ணீரோடு பேசியது மட்டுமே ஓடியது.

“எமக்கு அவென்ன பிடிக்காது. இப்போ இல்ல எப்பவுமே, அவென்ன நான் மன்னிக்க மாட்டேன். அவென் உமக்கு வேணாம். எவளோ ஒருத்திய கட்டிக்கிட்டு, அவன் எக்கேடோ கெட்டுப் போகட்டும். நீ நல்லதாப் போச்சுன்னு, வூட்டுக்கு கிளம்பி வா” என்று நிலாவை அழைத்தார் தாமரை.

அவளோ, எதுவும் சொல்லாமல் அமைதியாய் நின்றவள், அடுத்த நொடி, “எனக்கு மாமாவ பிடிச்சிருக்கு. நான் மாமாவ மட்டும் தான் கல்யாணம் பண்ணிப்பேன்" என்று அழுத்தம் திருத்தமாக கூறினாள் நிலா.

அதைக் கேட்ட தாமரை கோவமாய், “என்னடி கிறுக்கச்சி மாதிரி பேசிட்டு இருக்க. அவென் ஒரு கொலைக்காரன். உங்கப்பன்னையே கொலைப் பண்ண வந்தவன்டி. அதுவும் போக, இப்போ உனக்கென்னடி வயசாகிடுச்சி? பிடிச்சிருக்காம்மே. செவுட்டுல ஒன்னு விட்டேன்னா, அம்புட்டு பித்தமும் இறங்கிடும்" என்று அவள் கரத்தைப் பிடித்திழுத்தார் தாமரை.

“அப்புறம் நானும், அந்தக்கா மாதிரி எதையாச்சும் குடிச்சிடுவேன்" என்று தெளிவாய் கூறினாள் நிலா. அதைக் கேட்டு ஒரு நொடி அதிர்ந்தாலும், “சாகுறேன்னு சொல்றவ எவளும், சாக மாட்டாடி. வா” என்று அவள் கரத்தைப் பிடித்திழுக்க, அவரின் கையை உதறியவள், அங்கிருந்து பின் பக்க கிணற்றுக்கு ஓடினாள்.

அதைப் பார்த்து அதிர்ந்தவர், “அடியே நிலா. நில்லுடி" என்று அவரும் அவளின் பின்னே ஓட, அவளோ கிணற்றில் குதிக்க சென்றாள். கடைசி நொடியில், அவளைப் பிடித்திழுத்தவர், அவள் கன்னத்திலேயே ஓங்கி அடித்தார்.

அதில் சட்டென்று கண்ணெல்லாம் கலங்கி அழ ஆரம்பித்தவள், “எனக்கு மாமா வேணும்மா” என்று தாயைக் கட்டிக் கொண்டு சிறுமியாய் அழுதாள் நிலா.

தன் மகளின் மனதில், தன் தம்பி இத்தனை தூரம் பதிந்திருப்பான் என்று அவர் நினைக்கவே இல்லை. அதில் அவருடைய கோவத்தை விட, தாய் பாசமே பெரிதாய் தெரிந்தது. அதனால் தான் பஞ்சாயத்துக்கு வந்திருந்தார்.

இவ்வளவு பெரிய வேலையை அசராமல் பார்த்து விட்டு, அதற்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போல், அமைதியாய் அமர்ந்து கதிர் கொடுத்து கிப்ட் பாக்ஸை பிரித்துக் கொண்டிருந்தாள்.

அதைப் பிரித்துப் பார்க்க, உள்ளே ஒரு அழகான கைக் கடிகாரம் இருந்தது. அதைப் பார்த்ததும் உடனே அதை எடுத்து கையில் கட்டிப் பார்த்தாள். அவளுக்கு அத்தனை அழகாக இருந்தது. வீட்டுக்கு வந்த செல்வியிடம் ஓடி சென்று, “சித்தி, இந்த வாட்ச் எப்படி இருக்கு?” என்று சிறுமியாய் கேட்டாள்.

அங்கே சங்கரேயனுக்கும், முருகேசனுக்கும், சிறு பிள்ளைத் தனமாய் அது தெரிய, செல்விக்கோ சற்று கவலையாக இருந்தது. என்னத்தான் சிறு பெண் என்று அவர்கள் நினைத்தாலும், இத்தனைப் பெரிய பிரச்சனை சென்றுக் கொண்டிருக்க, அவள் அதைப் பற்றி என்ன நடந்தது என்று கூட கேட்காமல், இப்படி வாட்சைப் பற்றி கேட்பது, அவர்களின் எதிர்காலத்தின் மீது சிறு அச்சத்தைக் கொடுத்தது.

“சித்தி" என்று அவள் மீண்டும் அழைக்க, அவரோ “ம் நல்லா இருக்குடா” என்று சொல்ல, அதற்குள் முருகேசனோ, “புது வாட்சா? சித்தப்பாக்கிட்டலாம் கேட்க மாட்டீயா?” என்றார்.

உடனே ஓடி சென்று அவனிடமும், தன் தாத்தாவிடமும் காட்டினாள். “எம் பேத்திக்கு எது போட்டாலும் அழகாத்தேன் இருக்கும்" என்றார்.

“ஆமா. ஆறு வாங்கிக் கொடுத்தா?” என்று முருகேசன் கேட்க, அப்போதே செல்விக்கும், அந்த கேள்வி தோன்ற, அனைவரும் நிலாவைப் பார்த்தனர்.

அவளோ, “கதிர் மாமாத்தான் என் பொறந்த நாளுக்கு வாங்கிக் கொடுத்தாரு" என்றாள் நிலா.

“என்ன? எப்போ கொடுத்தான்?” என்று சங்கரேயன் கேட்க, “கோவிலுக்கு போனப்ப" என்றாள் நிலா.

“குல தெய்வ கோவில் போறப்பையா?” என்று முருகேசன் கேட்க, “ம் இல்ல. இன்னிக்கு, நம்மூரு கோவிலுக்கு போறப்ப” என்றாள் நிலா.

“இன்னிக்கா?” என்று இப்போது அத்தனைப் பேரும், அதிர்ச்சியாய் அவளைப் பார்த்தனர். நிலாவோ எதுவும் புரியாமல், அவர்களைப் பார்க்க, அதற்குள் வாசலில் இருந்து, “நிலா” என்று சத்தமாய் அழைத்தான் கதிர்.

(க்கும் என்னமோ நல்லா இருந்தா சரி. சரி அடுத்து என்னென்னு அடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

தென்றல் தீண்டுமா?

Comments   0

*** தென்றல் – 48 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***