கதிரின் குடும்பம் மட்டுமே, அந்த குல தெய்வ கோவிலின் முன் நின்றிருந்தது. இம்முறை தாமரை வரவே முடியாது என்று மறுத்து விட்டார். அதனால் தாமரையின் சார்பில், செந்திலும் முருகேசனும் தான் நிலாவின் இரு பக்கமும் நின்றிருந்தனர்.
செல்விக்கோ, இப்போது தாமரை சொல்லிய, “உம் புள்ள, உம்புள்ளன்னு சொல்லுவ. இப்போ நீயே அவ வாழ்க்கைய பாலுங் கிணத்துல தள்ளனும்னு முடிவு பண்ணிட்ட. எவளோ ஒருத்தி சாக கெடக்கா. அவளுக்கு ஒன்னுன்னா, இவென்னத்தேன் புடிச்சிட்டு போவாக. இன்னேரத்துல, எம்புள்ளைக்கும், அவனுக்கும் கல்யாணம்னு, பத்திரிக்க வைக்க என்னையவே கூப்பிடுற. அன்னிக்கு உமக்கு எம் புள்ளைய கொடுத்ததாவே இருந்துட்டு போகட்டும். இல்லன்னா, அன்னிக்கு எம்புள்ள செத்துட்டான்னு நினைச்சிக்கேன். நீ தாராளமா, இவள கூட்டிட்டு போ. ஆனா என்னை கூப்பிடாத" என்ற அவரின் வார்த்தைத் தான் மனதில் ஓடியது.
மனைவியின் மனதை அறிந்த முருகேசனோ, “இன்னும் உன் அக்கா பேசுனதையே யோசிட்டு இருக்கீயோ? உம் தம்பி மேல உமக்கு நம்பிக்க இருக்கா, இல்லையானு தெரியாது. ஆனா எம் மாப்பிள்ள மேல எமக்கு நம்பிக்க இருக்கு. அவென் நம்ம புள்ளய நல்லப்படியா பாத்துப்பான்" என்றார்.
அவருக்கு மட்டும் கதிரின் மேல் நம்பிக்கை இல்லையா? என்ன? இருக்கிறது தான். ஆனாலும் பெத்த தாய் இருந்தும், அவர் மொத்தமாய் ஒதுங்கிக் கொள்வது அவருக்கு உறுத்தியது. அங்கே நிலாவோ, அந்த அய்யனார் சாமி சிலையை அண்ணார்ந்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அதில், ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டவர், “நீ தான் சாமி. என் வூட்டு புள்ளைங்க வாழ்க்கைய பாத்துக்கனும்" என்று கடவுளின் மீது மொத்த பாரத்தையும் இறக்கிவிட்டு கல்யாண பத்திரிக்கையை சாமியின் காலடியில் தம்பதி சரிதமாக கொண்டு சென்று வைத்தனர். இப்போது சங்கரேயனின் அருகில் நின்றிருந்த கதிர் சற்று தள்ளி சென்று நிலாவிடம், “இங்க வா” என்று கண் காட்டினான்.
அதில் அவளும் வேகமாய் அவனின் அருகில் சென்று நிற்க, அவளை நொடிக்கும் குறைவாக மேலிருந்து கீழாக பார்த்தவன், “ஆத்தா, ஐயன் வரலன்னு வருத்தமா?” என்றான்.
“ம்ஹூம்” என்று அவள் தலையாட்ட, “இல்லையா. ஏன்?” என்று கதிர் குழப்பமாக கேட்டான்.
“அவுக வந்தா, உங்கள ஏதாச்சும் பேசிட்டேத்தான இருப்பாக. அத்தேன் சித்தி சித்தப்பா வந்திருக்காகளே” என்று அழுத்தம் திருத்தமான பதில் அவளிடமிருந்து வந்தது.
கேட்கும் கேள்விக்குத்தான் பதில் வரும். ஆனால் அந்தப் பதிலில் இருக்கும் தெளிவு, கதிரையே ஆச்சர்யப்படுத்தும். இப்போதும் அப்படித்தான் அவளின் பதிலில், அவளையே பார்த்திருந்தான்.
சில நொடி கழித்து “செரி போ” என்று அவன் சொல்ல, “ம்" என்று தலையாட்டியப்படி அங்கிருந்து சென்றாள். செல்பவளையே பார்த்தவனுக்கு, முகத்தில் புன்னகை குடிப் புகுந்தது.
அதன் பின் சாமி கும்பிட்டு விட்டு அனைவரும் கிளம்ப, முருகேசன் கதிருடன் பைக்கில் வருவதாக கூறினான். அதனால், நிலா, செல்வி, சங்கரேயன் மூவரும் காரில் வீட்டுக்கு கிளம்பினர்.
கதிர் சொல்லியது போலவே, அத்தனைப் பேருக்கும் கல்யாண பத்திரிக்கை கொடுக்க ஆரம்பித்திருந்தனர். இரண்டு நாளிலேயே ஊர் மொத்தத்துக்கும், அவர்கள் வீட்டு கல்யாண பத்திரிக்கை சென்றிருந்தது. ஊருக்கு செல்வது போல், தாமரை வீட்டுக்கும் பத்திரிக்கை வந்து சேர்ந்தது. அதை பார்த்த செந்திலோ, அதை எடுத்து கிழித்து தூர வீசியிருந்தார்.
அன்று நிலாவின் பிறந்த நாள். வழக்கமாய், அவளுடைய பிறந்த நாளுக்கு, வித விதமான பலகாரங்கள், அடுப்பறையில் மணக்கும். ஆனால் இன்று பிரியாவின் வீட்டில் இருந்து பஞ்சாயத்து கூட்டியுள்ளனர். அதனால், பெரிய வீடு மொத்தமுமே ஒரு வித கலக்கத்தில் தான் இருந்தது. கதிர் பக்கம் பேசுவதற்காக, சொந்த காரர்கள் அனைவரும் வந்திருந்தனர்.
வீடு நிறைந்திருக்க, செல்வி அனைவருக்கும் காபி போட்டுக் கொடுக்கும் வேலையில் இருந்தார்.
நிலாவுக்குமே சற்று பயம் தான். காலையிலையே குளித்து முடித்து, கதிர் வாங்கிக் கொடுத்த புது புடவையை கையில் வைத்து பார்த்திருந்தாள். ஏனோ அதை அன்று கட்ட மனம் வரவில்லை. முக்கிய குறிப்பு அவளுக்கு புடவை கட்ட தெரியாது. செல்வித்தான் கட்டி விட வேண்டும். ஆனால் அவரோ வந்தவர்களை கவனித்துக் கொண்டிருக்க, அவரிடம் செல்ல மனம் வரவில்லை. அதனால் செல்வியும், முருகேசனும் எடுத்துக் கொடுத்த பட்டு தாவணியை கட்டிக் கொண்டாள்.
வீட்டில் இருக்கவே அவளுக்கு சற்று பதட்டமாக இருந்தது. அனைவரும் பஞ்சாயத்துக்கு கிளம்ப, நிலாவோ ராணியுடன் கோவிலுக்கு கிளம்பி வெளியில் வந்தாள்.
சரியாக அன்னேரம் தான் கதிர் தன்னுடைய பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்ப, அவளைப் பார்த்ததும் பைக்கை அவளின் அருகே நிறுத்தினான்.
சட்டென்று பைக் அருகில் வரவும், அவள் பின் எட்டு வைக்க, “எங்கத் தூரமா?” என்று ராணியைப் பார்த்துக் கேட்டான் கதிர்.
“நிலா கோவிலுக்கு போனும்னு சொல்லிச்சி. அத்தேன்" என்றாள் ராணி. அதில் பாவடை தாவணியில் நின்றிருந்த நிலாவைப் பார்த்தான். அவளோ, ஒரு வித பதட்டத்தோடு அவனைப் பார்த்தாள்.
“செல்விக்காவும் வூட்டுல இல்ல. அதனால் நீங்க வூட்ட பாத்துக்கோங்க. நான் நிலாவ கூட்டிப் போறேன்" என்றான் கதிர். அதைக் கேட்ட நிலா குழப்பமாய், கதிரைப் பார்க்க, ராணியோ சரி என்று சென்றிருந்தார்.
அவள் செல்லவும், “வண்டியில ஏறு" என்று அவன் சொல்ல, “பஞ்சாயத்து" என்று இழுத்தாள் நிலா. “என் கூட பைக்ல வர விருப்பமில்லையோ?” என்று அவன் கேட்க, அடுத்த நொடி அவன் பைக்கில் ஏறி அமர்ந்திருந்தாள்.
அதில் மெலிதாய் சிரித்தவன், அவளை அழைத்துக் கொண்டு, அருகில் இருந்த மாரியம்மன் கோவிலுக்கு சென்றான். மொத்த வீடும், உறவும் அவனுக்காக, பஞ்சாயத்தில் காத்துக் கொண்டிருக்க, அவனோ, நிலா கோவில் பிரகாரத்தை சுற்றி வரும் வரை, பொறுமையாய் அவளுடன் நடந்தான்.
ஒரு வித பதட்டத்துடன் சாமியிடம் மனம் உருகி வேண்டிக் கொண்டிருந்தவளை, ஒரு வித ஆர்வத்துடன் பார்த்தான் கதிர். சாமி கும்பிட்டு அவள் கண் திறக்க, “ஹாப்பி பர்த்டே” என்று ஒரு கிப்ட் பாக்ஸை அவள் கரத்தில் கொடுத்தான்.
அதில் அவள் புரியாமல் பார்க்க, “வீட்டுலப் போயி பிரிச்சுப் பாரு. இப்போ கிளம்புவோம்மா?” என்றான் கதிர்.
“ம்" என்று தலையாட்டியவள், பின் சட்டென்று திரும்பி, அவனிடம் கையை நீட்டினாள். அதில் அவன் “என்ன?” என்று புருவம் உயர்த்திக் கேட்டான்.
அவன் கரத்திற்குள் தன் கரத்தைப் புகுத்தி, “தேங்க்ஸ்" என்று அவன் விழிப் பார்த்து கூறினாள். அவள் விழியில் தெரிந்த அவனின் பிம்பத்தை ஒரு நொடி பார்த்தவன், அடுத்த நொடி, “என்கிட்ட ஏதாச்சும் கேட்கனுமா?” என்று கேட்டான்.
“ம்ஹூம்" என்று தலையாட்டியவள், கையில் இருந்த திருநீறை எக்கி அவன் நெற்றியில் வைத்து விட்டு, “உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது" என்றாள்.
ஏனோ சட்டென்று அவனுடைய அம்மாவின் முகம் மின்னலென வந்து மனதை நிறைத்தது. அதில் அவள் கரத்தை ஒரு நொடி அழுத்திப் பிடித்தவன், அடுத்த நொடி அவளை அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான். வீட்டில் அவளை இறக்கி விட்டவன், அதன் பின்னே கிளம்பி பஞ்சாயத்துக்கு சென்றான்.
ஆனால் அங்கே அவன் செல்லும் முன்னே, “எம் பொண்ணு கட்டுனா கதிரத்தான் கட்டுவேன்னு சொல்றா. ஊர் கூட்டி நிச்சயம் பண்ணிருக்கோம். அப்போ இருந்த சூழ்நிலையில, நாங்க கல்யாணத்த கொஞ்ச நாள் கழிச்சு பண்ணலாம்னு தான் நினைச்சிருந்தோம். அதுக்குள்ள, அவருக்கு வேற பொண்ணோட கல்யாணம் முடிவு பண்ணுவாங்கன்னு நாங்க நினைக்கல" என்று பிரியாவின் அப்பா அப்படியே மாற்றி பேசினார்.
அதைக் கேட்ட முருகேசனோ, “என்ன நினைக்கல நீங்க? அன்னிக்கு எம் மாப்புள்ள அடிப்பட்டு ஹாஸ்பிட்டல்ல கெடந்தப்ப, ஒரு வார்த்த அவென் எப்படி இருக்கான்னு கூட கேட்காம, கல்யாணத்த நிறுத்த சொன்னவரு தான நீங்க. இப்போ என்னவோ, நாங்க ஏமாத்துன மாதிரி பேசுறீக?” என்று கோவமாய் பதிலளித்தான்.
“நாங்க நிறுத்தலாம் சொல்லல" என்று அவர் பேசி மலுப்ப, “அப்போ நடத்த சொன்னீகளோ?” என்று கேட்டப்படி, அங்கு வந்தான் கதிர்.
அவனைப் பார்த்ததும், முருகேசன் சற்று அமைதியாகிவிட, “இங்கப்பாருங்க மாப்புள்ள, நடந்தது நடந்திருச்சி. நாங்க அன்னிக்கு பண்ணது தப்பாவே இருந்துட்டு போகட்டும். இப்போ எங்க பொண்ணோட வாழ்க்கை உங்க கையிலத்தான் இருக்கு. அவள நீங்க கட்டிக்கோங்க" என்று பிரியாவின் உறவினர் கூறினார்.
“நான் ஏன் உங்க பொண்ண கல்யாணம் பண்ணிக்கனும்? இன்னும் ஒரு வாரத்துல எனக்கு கல்யாணம். குடும்பத்த்தோட வந்து சாப்டுப் போங்க. நீங்க வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி, எங்க வீட்டு சார்புல பத்திரிக்கை உங்க வீட்டுல இருக்கும்" என்றான் கதிர்.
அதில், “என் பொண்ணு, உன்னாலத்தான் விஷத்த குடிச்சிருக்கா” என்று கோவமாய் கூறினார் பிரியாவின் அப்பா.
“நான் ஒன்னும் குடிக்க சொல்லலையே” என்று அசராமல் கதிர் சொல்ல, “என்னப்பா? இப்படி பேசுனா எப்படி? அவுகளும் பொண்ணு வாழ்க்கைக்காகத்தான நம்மூர் பஞ்சாயத்துக்கு வந்திருக்காக. பொண்ணு ஆசைப்படுது. உனக்காக உசுர விடவே துணிஞ்சிருக்கா. அதுக்காகனாலும் யோசிக்கனும்ல" என்றார் ஒருவர்.
“இதுல நாங்க யோசிக்க என்ன இருக்கு? இந்த கன்னாலம் வேணாம்னு முடிவு பண்ணது அவுக. அதுக்காக, என் மாப்புள்ள கன்னாலம் பண்ணாமலே சுத்துவான்னா? சும்மா தேவையில்லாம பிரச்சன பண்ணாதீங்க. ஏதோ ஊர் பெரியவுகளுக்கு மரியாத கொடுத்துத்தான், இங்க வந்து நின்னுட்டு இருக்கோம்” என்றான் முருகேசன்.
“நிச்சயம் பண்ணியிருக்குல்லப்பா” என்று மீண்டும் ஒருவர் ஆரம்பிக்க, “ஆமா நிச்சயம் பண்ணிருக்கு. அவர் பொண்ணோட இல்ல. என் அக்கா மகளுக்கும், எனக்கும் உங்க தலைமையிலத்தான நிச்சயம் நடந்திச்சு. நீங்க எல்லாரும்ந்தேன்ன சாட்சியா நின்னீங்க. சும்மா, அந்தப் பொண்ணுக்கு பிடிச்சிருக்கு, பிடிச்சிருக்குன்னா, அதுக்கு நான் என்னப் பண்ண முடியும். அவுக கிட்டையும், அவுக மக கிட்டையும், நான் ரெண்டு வருஷத்துக்கு முன்னமே தெளிவா, சொல்லிட்டேன். இதுக்கு மேல சொல்றதுக்கு எதுவும் இல்ல" என்றான் கதிர்.
“ஆனாலும் பொண்ணு வாழ்க்க” என்று வேண்டுமென்றே சிலர் பேச, மீண்டும் பஞ்சாயத்து சூடு பிடிக்க ஆரம்பித்தது. பாண்டித்தான் அவனுடைய ஆட்களை அனுப்பி, கதிருக்கு எதிராய் பேச சொல்லியிருந்தான்.
கடைசியில் பிரியாவின் அம்மாவோ, “இங்கப்பாருப்பா. உன் மேல தப்பே இல்லத்தான். நாங்கத்தான் தப்பு பண்ணோம். உன் கைய காலா நினைச்சி கேட்கிறேன். எம் புள்ள எங்களுக்கு வேணும். அவள கட்டிக்கோப்பா” என்று கண் கலங்கி அவனின் கையைப் பிடித்தார்.
அதில் சங்கரேயவோ தன் மகனை ஒரு நொடி ஆராய்ச்சியாய் பார்த்தார். எங்கே மகன் இறங்கி விடுவானோ என்று. இப்போது அத்தனைப் பேரும் கதிரைத்தான் பார்த்திருந்தனர். தாமரையோ அப்போது தான், அங்கு வந்தார். அதில் இப்போது தாமரையை அத்தனைப் பேரும் பார்க்க, “நான் கொஞ்சம் பேசனும்" என்றார்.
(ஐயோ இப்போ இந்தக்கா வேற என்ன குழப்பி விடப் போதுன்னு தெரியலையே. சரி அடுத்து என்னென்னு அடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)
தென்றல் தீண்டுமா?
0 Comments
No comments yet.