தேன் – 37

கடந்த கால சிந்தனையில் இருந்தவனின் மொபைல் அடிக்க எடுத்துப் பார்த்தான். அதில் தெரிந்த எண்ணைப் பார்த்ததும், வேகமாய் அட்டண்ட் செய்து, “யாருன்னு தெரிஞ்சிதா?” என்று அத்தனை குரோதமாய் கேட்டான்.

அந்தப் பக்கம் என்ன சொன்னார்களோ? இவனுடைய முகம் கற்பாறை போல் இறுகியது.

“எனக்கு தெரியாது. அவங்க யாரு, என்னென்னு எனக்கு  உடனே தெரிஞ்சாகனும்” என்று அத்தனை கோவமாய் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.

ஏனோ நினைவின் தாக்கமும், வலியும் மிச்சமிருக்க, “அன்னிக்கு நான் அவள விட்டுட்டு போயிருக்க கூடாதோ? அவளே மறுத்திருந்தாலும், அவள நான் தூக்கிட்டு வந்திருக்கனுமோ?” என்று மனம் மீண்டும் மீண்டும் நச்சரிக்க, அவனின் மீதே அவனுக்கு கோவமாய் வந்தது.

“சிட்” என்று கோவமாய், அந்த ஸ்டீயரிங் வீலில் குத்தினான். அன்று அவனே நினைத்திருந்தாலும், அதை செய்திருக்க முடியுமா? என்று தெரியாது. ஏனெனில் இப்போது அவனுக்கு இருக்கும், பலம், பவர் இதெல்லாம் அப்போது அவனிடம் இல்லை. அன்று வேந்தன் ஒரு சராசரியான குடும்ப பையன். தங்கை, அம்மா, அப்பாவின் வார்த்தையும், வாழ்க்கையுமே பெரிதாய் தெரிய, அங்கிருந்து சென்று விட்டான்.

அவன் அங்கிருந்து செல்லும் போது அவள் கண்ணில் தெரிந்த அந்த வலி. அதை இப்போது நினைத்தாலும், அவனுக்கு வலித்தது.

“இல்ல இல்ல. இதுக்கு மேல என் தேன்ன நான் கஷ்டப்பட விட மாட்டேன். இதுக்கு முன்னாடி அவ வாழ்க்கையில என்ன வேணும்னாலும் நடந்திருக்கட்டும். இதுக்கப்புறம் அவளுக்கு நான் தான் எல்லாம். அவள என்னை விட்டு யாராலும் பிரிக்க முடியாது” என்று தனக்குள் அத்தனை அழுத்தமாய் கத்தினான்.

அதே நேரம் இங்கே டைனிங் டேபிளில் அமர்ந்திருந்த விழியோ, “ஹேய் கவி. இன்னும் அந்த பூவ வச்சிக்கிட்டு என்னப் பண்ற நீ?” என்று கத்தி அழைத்தாள்.

“ச் இப்போ எதுக்கு கத்துற. நில்லு வரேன்” என்றவள், சாமிக்கு பூவை போட்டு விட்டு, மீதி தலைக்கு வைக்கும் அளவுக்கு பூவோடு அங்கு வந்தாள்.

“ஏன் கவி? அண்ணா வாங்கி கொடுத்த பூவுன்னா அவ்ளோ ஸ்பெஷலா? சாப்பிடுறப்ப கூட அத தூக்கிட்டே வர்ற” என்றாள்.

அதில் அவள் தலையில் கொட்டியவளோ, “இது உனக்குத்தான். நீ வச்சுக்கோ” என்று நீட்ட, “எதே? நைட் தூங்குறப்ப பூ வைக்கனுமா? அதெல்லாம் எனக்கு பிடிக்கவே பிடிக்காது. ஒழுங்கு மரியாதையா உன் தலையில வச்சுக்கோ. இல்லையா, பிரிட்ஜ்ல கொண்டு போய் வை. காலையில வேலைக்காரங்க யாருக்காச்சும் கொடுக்கலாம்” என்றாள்.

“என்ன?” என்றவளுக்கு வேந்தன் வாங்கி கொடுத்த பூவை மற்றவர்களுக்கு கொடுக்க எல்லாம் சுத்தமாய் எண்ணம் இல்லை. அது அவள் முகத்திலேயே தெரிந்தது.

“அப்படி உன் வீட்டுக்காரர் வாங்கி கொடுத்த பூ மேல அம்புட்டு அக்கற இருந்தா, நீயே ரூமுக்கு போறப்ப வச்சிக்கோ. இப்போ அத இங்க கொடு” என்று அவள் கையில் இருந்த பூவை வாங்கி ஓரமாய் வைத்து விட்டு அவளை தன்னருகில் அமர்த்தினாள்.

கவியோ அப்படியே இருக்க, “ஹேய், சாப்பிடுற ஐடியா இருக்கா? இல்லையா?” என்று கேட்க, அவசரமாய் விழியின் தட்டில் உணவை எடுத்து வைத்தாள்.

“எனக்கு சொல்லல கவி. உனக்கு கேட்டேன்” என்றப்படி விழியும் கவிக்கு உணவை எடுத்து வைத்தால். ஆனால் கவியோ சாப்பிடாது வெளியிலேயே பார்க்க, “ஹேய் என்ன?” என்றாள்.

“உன் அண்ணாவ என்ன இன்னும் காணும்?” என்று கவி கேட்க, “உன் கூடத்தான வந்தாரு. என்கிட்ட கேட்கிற” என்றாள் விழி.

“ச் நீயும் தான கூட இருந்த” என்று கவி கேட்க, “ம் நான் தான் உங்களுக்கு பிரைவசி கொடுத்துட்டு வந்துட்டேன்னே” என்று நக்கலாய் விழி சொல்லும் போதே வேந்தன் வந்தான்.

அவனைப் பார்த்ததும், “அண்ணா சாப்பிட வாங்க” என்று விழி அழைக்க, அவனோ, “இல்லடாம்மா. நீங்க சாப்பிடுங்க. எனக்கு பசிக்கல” என்று சொல்லியப்படி மேலே சென்றான்.

அதில் கவிக்கும் சாப்பிட மனம் இல்லாமல் போக, “ச் இப்போ உன் அண்ணாக்கு என்ன பிரச்சனையாம்? எதுக்கு சாப்பிடாம போறாரு” என்றாள்.

“ஹேய் எல்லாத்தையும் என்கிட்டையே கேட்டா, எனக்கெப்டி தெரியும்? அவர் கிட்ட போயி கேளு. இல்லையா, நீயும் என்ன மாதிரி அமைதியா உட்கார்ந்து சாப்பிடு” என்றாள் விழி.

“ச் உனக்கு உன் அண்ணா மேல கொஞ்சம் கூட அக்கற இல்ல. அவர் சாப்பிடாம போறாரு. நீ சாப்பிட்டுக்கிட்டு இருக்க” என்று கோவமாய் கூறினாள் கவி.

“ம் உனக்கு அவ்வளவு அக்கற இருந்தா, நீ போயி அவரை சாப்பிட வை. அவர் என்ன சின்னப் பிள்ளையா? அதுவும் போக அண்ணா எல்லாம், உன்ன மாதிரி சாப்பாட்டுல கோவத்தையோ, வருத்தத்தையோ காமிக்கிற ஆள் கிடையாது. உண்மையாவே அவருக்கு பசி இல்லையோ என்னவோ?” என்றாள் விழி.

அதில் அவளை முறைத்தப்படி அவள் பாதி சாப்பாட்டில் எழப் போக, “ஹேய் ஒழுங்கு மரியாதையா உட்கார்ந்து சாப்பிடு. இல்லன்னா நானும் சாப்பிட மாட்டேன்” என்று வற்புறுத்தி கவியை சாப்பிட வைத்துத்தான் அவள் கிளம்பினாள்

அதில் இவளோ, “நான் மட்டும் என்ன சின்னப் புள்ளையா?” என்று கோவமாய் கேட்க, “ம், உன்ன சாப்பிட வைக்க வேண்டியது என்னோட உரிமை. என் அண்ணாவ சாப்பிட வைக்க வேண்டியது உன்னோட பொறுப்பு. சோ நான் என் பிரண்ட சாப்பிட வச்சிட்டேன். நீ உன் வீட்டுக்காரர பாத்துக்கோ” என்றப்படி அவள் அறைக்குள் சென்று கதவை மூடினாள்.

இங்கே கீழே நின்றிருந்த கவியோ மேஜையில் இருந்த பூவை மீண்டும் சாமிக்கே போட நினைத்து பின், அதை செய்யாது, அதை எடுத்துக் கொண்டு அவர்கள் அறைக்கு சென்றாள்.

அங்கே அவனோ, கட்டிலில் சாய்ந்தமர்ந்து எதையோ மும்முரமாய் யோசித்துக் கொண்டிருந்தான். அதைப் பார்த்தவளோ, “இப்போ இவருக்கு என்னாச்சு?” என்று தனக்குத் தானே கேட்டப்படி அவனின் அருகில் சென்றாள்.

உண்மையில், அவளுக்கு கோவிலில் வைத்து அவள் பேசிய எதுவுமே இப்போது மனதில் இல்லை. அந்த விஷயத்தையே மறந்திருந்தாள்.

“சாப்பிட வாங்க சார்” என்று கவி அழைக்க, அதில் நிமிர்ந்து அவனைப் பார்த்தவன், “சாப்டீயா?” என்றான். அதில் அவனை முறைத்தவளோ, “உங்கள சாப்பிட கூப்டேன்” என்றாள்.

“எனக்கு பசிக்கல” என்றவன் தலையனையை எடுத்து வைத்து படுக்க சென்றான். அதற்குள்ளாக அவன் கையில் இருந்த தலையனையை பிடுங்கியவள், “சாப்பிடாம படுக்காதீங்க சார். தூக்கம் வராது” என்றாள்.

“ச் அதெல்லாம் வரும். முதல்ல அத கொடு” என்று அவன் பிடுங்க முயற்சிக்க, “ம்ஹூம், சும்மா ரெண்டு வாயாச்சும் சாப்பிடுங்க” என்றாள்.

அதில் சட்டென்று அவள் உதட்டைப் பார்த்தவனோ, “ஒரு வாய்த்தான இருக்கு” என்று கிண்டலாய் சொல்ல, “என்ன?” என்றவள் ஒரு நொடி புரியாது, அடுத்த நொடி புரிந்து அவனை முறைத்தாள்.

அவனோ சற்று சிரித்தப்படி, “என்ன? என்கிட்ட ஒரு வாய்தான் இருக்கு. வேணும்னா உன் வாயையும் சேர்த்து கொடுத்தா” என்றவன் வரைமுறை இல்லாமல் பேச, “ஐயோ போதும். உங்கள போயி சாப்பிட கூப்டேன் பாருங்க. என்ன சொல்லனும். என்னமோ பண்ணுங்க. எனக்கு தூக்கம் வருது” என்று சொல்லியவள், சோபாவில் சென்று படுத்தாள்.

அவளின் செயலில் மெல்ல புன்னகைத்தவன், “சாப்பிடாம படுத்தா தூக்கம் வராதுன்னு சொன்ன” என்றான். “ம் அதெல்லாம் மனுஷங்களுக்குத்தான் சார். உங்கள மாதிரி தியாகிங்களுக்கும், தலைவர்களுக்கும் கிடையாது” என்று உதட்டை சுழித்து விட்டு, திரும்பி படுத்துக் கொண்டாள்.

அதில் அவள் தலையில் இருந்த மல்லிகை சரம் அவன் கண்ணில் பட்டது. தலை நிறைய மல்லிகைப் பூவை அவள் வைத்திருக்க, அதைப் பார்த்தவனுக்கு, அது வரை இருந்த இறுக்கம் எல்லாம் மறைந்து, மனதிற்குள் இதம் படர்ந்தது.

“அவ என் பொண்டாட்டி” என்று யாரோ உறுதி செய்தது போல் தோன்ற, அந்த பூவைப் பார்த்தப்படியே இருந்தான். அவன் பார்வையில் குறுகுறுப்பில், அவள் சட்டென்று திரும்ப, அவனோ அப்போதும் அவளையேத்தான் பார்த்தான்.

அதில் ஒரு நொடி அவள் தடுமாறி, அடுத்த நொடி எழுந்தமர்ந்தாள். அவனோ அப்போதும் பார்வையை திருப்பாது அவளையே பார்த்திருக்க, “ச் என்னப் பண்ணிட்டிருக்கீங்க?” என்று சிறு கோவத்துடன் கேட்டாள்.

“என் பொண்டாட்டிய பாத்துட்டு இருக்கேன்” என்று அவன் அசராது பதில் சொல்ல, “ச் இங்கப்பாருங்க. நான் ஒன்னும் உங்க” என்று அவள் சொல்லி முடிக்கும் முன்னே, “நான் கட்டுன தாலி உன் கழுத்துலத்தான இருக்கு. சோ அப்போ நான் தான் உன் ஹஸ்பண்ட். நீ தான் என் பொண்டாட்டி” என்றான்.

“ச் நடு ராத்திரியில ஏன் என்னைப் போட்டு தொல்லைப் பண்றீங்க? ஒரு வாரம் நிம்மதியா தூங்குனேன்” என்றாள்.

“அப்படியா? நான் இல்லாம நிம்மதியா தூங்குனீயா? அது ரொம்ப தப்பாச்சே. சரி விடு இதுக்கப்புறம் ஒரு நாள் கூட உன்ன விட்டு போக மாட்டேன்” என்று படு நக்கலாய் கூறினான்.

அதில் அவனை முறைத்தவளோ, பிளாஸ்கில் கொண்டு வந்திருந்த பால்லை எடுத்து கிளாஸில் ஊற்றினாள்.

அதைப் பார்த்தவனோ, “என்ன? என்கிட்ட பேசவே உனக்கு எனர்ஜி தேவைப்படுதா?” என்று தலைக்கு கைக் கொடுத்து படுத்தப்படி கேட்டான்.

அவளோ அவனை முறைத்தப்படியே அவனிடம் அதை நீட்ட, “என்ன? இதுல தூக்க மாத்திர எதுவும் கலந்திருக்கீயா? இல்ல அத விட பெருசா பாய்சன், அப்படி இப்படின்னு” என்று அவன் சீண்டினான்.

அதில் கடுப்பானவளோ, அவனின் அருகில் அமர்ந்து அவனை அதற்கு மேல் பேச விடாது, அந்த பால்லை குடிக்க வைத்தாள். அவளின் செயலில், அவனுக்கு சிரிப்பு எட்டிப் பார்த்தது.

ஆனாலும் அதை காட்டிக் கொள்ளாது, “ச் நான் ஒரு அரசியல் வாதி. அந்த பயம் இருக்கா உனக்கு?” என்று கோவமாய் கேட்டான்.

“ஆமா பெரிய அரசியல்வாதி. இதுக்கப்புறமாச்சும் அமைதியா தூங்குங்க” என்றப்படி எழ முயற்சித்தாள். அதற்குள்ளாக அவள் கரத்தைப் பிடித்து அங்கேயே அமர வைத்தவன், அவள் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டான்.

அவனின் செயலில், அவள் இதயம் படபடக்க, வேகமாய், “ச் என்னப் பண்றீங்க” என்று விலக்கி தள்ள முயற்சித்தாள்.

அதற்குள்ளாக, அவள் கையை மேலும் அழுத்தம் கொடுத்துப் பிடித்து, “நீ வேனும்னா இங்க நிம்மதியா தூங்கியிருக்கலாம். ஆனா ஒரு வாரமா, உன்ன பார்க்காம, எனக்கு தூக்கமே இல்ல. இன்னிக்காச்சும் தூங்கிக்கிறேண்டி” என்றப்படி விழி மூடினான்.

ஏனோ அவனின் வார்த்தையில், இவளுக்கோ என்ன சொல்ல என்றே தெரியவில்லை. அப்படி ஒரு தடுமாற்றம். அதற்கு மேல் அவள் மடியில் படுத்திருந்தவனை எழுப்ப மனம் வரவில்லை.

அவளின் கரம் வேறு அன்னிட்சையாய் அவன் முடியை கோதிக் கொடுக்க, அவனோ சிறு புன்னகையுடன் அவள் வயிற்றில் முகம் புதைத்து தூங்கினான்.

இங்கே இவளுக்குத்தான், அவனின் செயல் மூச்சடைக்க வைத்தது. மனம் ஒரு பக்கமும், மூளை ஒரு பக்கமும் அவளை பந்தாட, அவளோ முடிவெடுக்க முடியாது தடுமாறினாள். ஆனால் அவளின் முடிவையும், சேர்த்து வேறொருவன் ஏற்கனவே எடுத்திருந்தான். 

(க்கும் கடைசி வரைக்கும், அப்போ இந்த கவி புள்ள அவ முடிவ எடுக்க மாட்டா போல. சரி அடுத்து என்னாகப் போதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

  • தித்திக்குமா?..

 

Comments   1

*** தேன் – 37 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***