தென்றல் – 35

நிலாவுக்கும், கதிருக்கும் ஊர் முன்னிலையில் உறுதி பேசப்பட்டு, அன்றுடன் ஒரு வாரம் நிறைவடைந்திருந்தது. நிலாவிடம் இதைப் பற்றி தெளிவாய் விளக்கி சொல்ல எவரும் இல்லை. தாமரை எல்லாம், எதையோ பறிக்கொடுத்தவர் போல் தான், தன்னுடைய பேச்சை மொத்தமும் குறைத்திருந்தார். செந்திலோ, மொத்தமாய் வெளி வேலையைப் பார்க்கிறேன் என்று வீட்டுக்கே வருவதில்லை.

சங்கரேஸ்வரி ஜாடை மாடையாய், நிலாவுக்கு சொல்லியும் அவளுக்கு எதுவும் புரியவில்லை. பள்ளிக்கூடத்துக்கும் ஒரு வாரமாய் நிலா சென்றிருக்கவில்லை. பாட்டி வீட்டுக்கும் அவள் செல்லவில்லை. செல்வியும் அவளை வந்து பார்க்கவில்லை. ஆனால் தினம் காலையில், பெரிய வீட்டு தோட்டத்தில் பூத்த, பூச்சரம் மட்டும், அவளைத் தேடி வந்து விடும்.

தாமரைக்கோ அதை அள்ளி எடுத்து வீசும் ஆத்திரம் தான். ஆனால் ஊர் கூடி எடுத்த முடிவு. அதை மாற்ற அவரால் முடியாதே. அதிலும், ஜோசியர் சொல்லிய விசயம் வேறு அவரை வேறு மாதிரியாக பயமுறுத்திக் கொண்டிருந்தது.

கதிர் ரைஸ்மில், தோட்டம் என்று அங்கேயே அடைந்துக் கொண்டான். ஏனோ முருகேசன் அவனுடைய வாயை அடைத்திருந்தாலும், அக்கா மகளை, தன்னவளாய் பார்க்க மனம் வரவே இல்லை. ஒரு வித குழப்பத்தோடே அவன் வீட்டுக்கும் செல்ல வில்லை.

“இன்னும் எத்தன நாளைக்கு, இப்படியே வீட்டுக்குள்ளையே வச்சிருக்க முடியும். நடக்கிறது நடக்கட்டும்" என்று யோசித்த தாமரை, அவிழ்ந்த முடியை கொண்டை போட்டப்படி எழுந்தார்.

நிலாவோ வீட்டில் நடக்கும், இந்த புதிரான அமைதிக்கு என்ன காரணம் என்று தெரியாமல் கட்டிலில் அமர்ந்திருந்தாள்.

அதற்குள் அங்கு வந்த தாமரையோ, “இன்னும் எத்தன நேரத்துக்கு அங்கனையே உட்கார்ந்திருக்க போறவ? பள்ளிக்கூடம் போகனும்ன்ற நினப்பு இருக்கா? இல்ல மொத்தமா வூட்டுல இருந்திடலாம்னு நினைக்கிறீயா?” என்று யார் மேலோ இருக்கும் கடுப்பை அவளிடம் கொட்டினார்.

நிலாவோ, பயந்து தன் அன்னையைப் பார்க்க, “போடி, போய் அந்த எண்னெய்யையும் சீப்பையும் எடுத்துட்டு வா. தலை வாரி விடுறேன்" என்று கத்த, அவளும் சமத்தாய் அவர் சொல்லியதை செய்தாள். கிட்ட தட்ட ஒரு வாரம் கழித்து நிலா பள்ளிக்கூடம் வந்து சேர்ந்தாள்.

ஊருக்கே தெரியும். அவளுடன் படிக்கும் சக மாணவிகள், கூட அவளிடம், “என்ன நிலா? பள்ளிக்கூடத்துக்கெல்லாம் நீ இனி வர மாட்டேன்னு என் ஆத்தா சொல்லிச்சு” என்று சீண்டலாய் கேட்டனர்.

அவளுக்கோ குழப்பம், அந்த குழப்பத்தை தீர்க்க என்றே, அந்த வகுப்பிற்குள் நுழைந்தாள் மலர்.

உள்ளே நுழைந்த மலரின் பார்வை மொத்தமும், நிலாவின் மீது தான். ஏனோ ஆதங்கமாய் இருந்தது. அன்று தன்னுடைய அப்பாவை அவர்கள் வீட்டில் இருந்து அழைத்திருக்கவும், சம்பந்தம் பேசத்தான் என்று பகல் கனவு கண்டிருந்தாள்.

ஆனால் அது இல்லை என்று ஆனதும், அவளுக்குள் பெரிய ஏமாற்றம். “அப்படி என்ன இந்த சிறு பெண்ணை விட தான் குறைந்துப் போய் விட்டோம்" என்று சிறிதாய் நிலாவின் மீது கோவமும் முளைத்திருந்தது.

ஏனோ மலருடைய பார்வையே நிலாவை பயமுறுத்த, அவளோ ஒதுங்கிப் போய் அமர்ந்துக் கொண்டாள் வேண்டுமென்றே, நிலாவை எழுப்பி, நேற்று அவள் நடத்திய பாடத்தில் இருந்து கேள்வி கேட்டாள்.

அவள் தான் ஒரு வாரமாய் பள்ளிக்கூடத்துக்கு வரவே இல்லையே. அதனால் அவளுக்கு பதில் தெரியவில்லை. அதில், “ஒரு சின்ன கேள்விக்கு கூட பதில் தெரியல. அப்புறம் எப்படி நீ எல்லாம் பப்ளீக் எக்ஸாம்ல பாஸ் பண்ணுவ” என்றாள்.

அதில் நிலாவுக்கு கண் கலங்கி விட, “இல்ல. நா..ன். அது" என்றவளுக்கு தான் வரவில்லை என்று கூட சொல்ல முடியவில்லை. அதற்குள் அருகில் அமர்ந்திருந்தவளோ, “டீச்சர் அவ ஒரு வாரம் லீவ். அதான் அவளுக்கு தெரியல” என்றாள்.

அதில் இப்போது மலர் கோவமாய் அந்த மாணவியைப் பார்த்து, “ஏன் அத மேடம் சொல்ல மாட்டாங்களோ? அவங்களுக்கு ஒரு ஆள் தனியா போட்டிருக்கோ. லீவ்னா, ஸ்கூலுக்கு வர்றப்ப, என்ன நடத்துனாங்க? ஏது நடத்துனாங்கன்னு கேட்க வேணாமா? நாளைக்கு பப்ளீக் எக்ஸாமல இந்த கேள்வி வந்தா, அவ அன்னிக்கு லீவுன்னா எழுதி வைப்பா? படிக்கனும்னு அக்கற இருந்தாத்தான. கன்னாலம் பண்ணிட்டு ஊர் சுத்தனும்னு நினைச்சா படிப்பு எப்படி மண்டையில ஏறும்" என்று தன்னுடைய உள் வன்மத்தை எல்லாம் அப்படியே அந்த சிறு பெண் மீது கொட்டியிருந்தாள்.

மலருடைய பேச்சில், சில மாணவர்கள் நிலாவைப் பாவமாய் பார்க்க, சில பேர் கேலியாய் பார்க்க, அவளுக்கோ ஏன் தன்னை திட்டுகிறார்கள் என்ற நிலைத்தான்.

“படிக்கனும்ன்ற நினப்பு இருந்தா மட்டும் ஸ்கூலுக்கு வா. இல்லன்னா, அப்படியே டிசிய வாங்கிட்டு போயிடு. உட்காரு" என்று கடுப்பாய் சொல்லிவிட்டு மலர் பாடம் எடுக்க ஆரம்பித்தாள். நிலாவோ கண்ணீரோடையே அமர்ந்திருக்க, அப்போதும் வேண்டுமென்றே நிலாவைத் தான் அவள் சீண்டிக் கொண்டே இருந்தாள்.

இப்படியேத்தான் அந்த ஒரு வாரமும் சென்றது. தேவையே இல்லாமல், நிலாவிடம் கேள்வி கேட்டு கேட்டு, பாடாய்படுத்தி விட்டாள். அன்றும் அப்படித்தான், நிலா எல்லா கேள்விக்கும் பதில் சொல்லியும், அவளை வகுப்பின் வெளியிலேயே நிறுத்தி விட்டாள்.

அதைப் பார்த்த இன்னொரு ஆசிரியர் மலரிடம், “டீச்சர் நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. நீங்க உங்களோட தனிப்பட்ட கோவத்த, படிக்கிற புள்ள மேல காட்டுறது கொஞ்சமும் சரி கிடையாது" என்றார்.

“எனக்கு என்ன அவ மேல கோவம் இருக்கப் போது. அப்படின்னு அவ வந்து சொன்னாளா? அதுவும் போக, உங்க கிளாஸ் விஷயத்துல நான் தலையிட்டிருக்கேன்னா? இல்லத்தான. அப்போ நீங்களும் இதுல தலையிடாதீங்க" என்றிருந்தாள் மலர்.

இதை, சிவாவின் மனைவி கங்கா கேட்டிருக்க, அதை அப்படியே சிவாவிடம் ஒப்பித்துவிட்டாள்.

அன்று தோட்டத்தில், கதிர் சிவாவிடம், வரவு செலவு விவரத்தைக் கேட்க வந்திருக்க, அவனோ, “பேசாம அண்ணே கிட்ட சொல்லுவோமா? வேணாம்மா?” என்று யோசனையில் நின்றிருந்தான்.

“ஏல. சிவா” என்று அவன் தோளை கதிர் தட்ட, “ஆ..ங் ணே” என்றான். “என்னல யோசிச்சிட்டு இருக்க? இங்க உர மூட்ட வாங்குன கணக்கையே காணும்" என்று கதிர் கேட்டான்.

“ஆ..ங் இருக்கேண்ணே” என்று சிவா சொல்ல, “எங்கள்ள இருக்கு. எத்தன வாட்டி சொல்றேன். உன் கை காசு போட்டு எதையும் செலவு பண்ணாதன்னு. அப்படியே போட்டாலும் எழுதி வைக்க மாட்டீயா நீ” என்று திட்டியவன், தான் கொண்டு வந்த பணத்தை சிவாவின் கையில் கொடுத்தான். 

“இதுல எண்ணண்ணே இருக்கு. இன்னிக்கு இல்லன்னா பொறவு வாங்கிக்கிறேன்” என்று சிவா சொல்ல, “வேலை விஷயத்துல அப்படி எல்லாம் இருக்க கூடாதுல. கணக்கு பாத்து வாங்கிக்கோ” என்று சொல்லிய கதிர் மீதி விவரங்களையும் பேசிவிட்டு கிளம்பினான்.

“எண்ணே” என்று சிவா அழைக்க, அதில் வண்டியை எடுக்காமல், அவன் பக்கம் திரும்பி, “சொல்லுடா” என்றான் கதிர்.

“கங்கா, ஒன்னு சொல்லிச்சு" என்று இழுத்தான். “என்னல தஙக்ச்சி கூட ஏதும் சண்டையா?” என்று கேட்டான் கதிர். “ஐயோ அதெல்லாம் இல்லண்ணே, நம்ம நிலா இருக்குள்ள" என்றான் சிவா.

நிலா என்ற பெயரில், கதிருடைய உடல் ஒரு வித அதிர்வை உணர்ந்தது. இப்போதிருந்து அல்ல, இந்த இரண்டு வாரமாகவே, அவன் சிந்தையில், நிலாவைப் பற்றிய யோசனைத்தானே. இப்போது சிவா நிலா என்று சொல்லவும், பைக்கை ஒரங்கட்டி நிறுத்தி விட்டு சிவாவின் அருகில் வந்தான்.

“அது நம்ம கங்கா, நிலா புள்ள படிக்கிற ஸ்கூல்லத்தான வேலைப் பாக்குது" என்று சிவா சொல்ல, “நிலாக்கு என்ன?” என்பது தான் கதிருடைய ஒரே கேள்வியாய் இருந்தது.

“அதொன்னும் இல்லண்ணே, இந்த மலரு புள்ள, ஏதோ நம்ம நிலாவ உரசிட்டே இருக்கு போல. பெருசாலாம் இல்ல. உங்கள கட்டிக்கப் போறதால ஏதோ வருத்தம் போல தெரியுது. உங்க கிட்ட சொல்லவா? வேணாமான்னு தெரியாம, நானும் ரெண்டு நாளா குழம்பிட்டே இருந்தேன்” என்றான் சிவா.

“என்ன நடந்திச்சு?” என்று கதிர் கோவமாய் கேட்க, சிவா நடந்தவற்றை சொல்ல, கதிருடைய முகம் கோவத்தில் சிவந்தது. “இத முன்னாடியே சொல்ல மாட்டீயா?” என்று சிவாவையும் திட்டி விட்டு பைக்கை எடுத்துக் கொண்டு நேரே பள்ளிக்கூடத்துக்குத்தான் சென்றான்.

பைக்கில் அவன் வந்த வேகமே, அவனுடைய கோவத்தை பரிசாற்றியது. பள்ளி இன்னும் விட்டிருக்கவில்லை. அதனால், பைக்கை ஓரமாய் அங்கிருந்த மரத்தடியில் நிறுத்தினான். பள்ளி மணி அடிக்க, பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் டியூசன் இருந்தது. அதனால் மற்ற மாணவர்கள், எல்லாம் வெளியேற, அவனோ பொறுமையாய் பைக்கில் சாய்ந்து நின்றிருந்தான். யோசனை எல்லாம் நிலாவைப் பற்றித் தான் இருந்தது.

அடுத்த ஒரு மணி நேரத்தில், மீதி மாணவர்கள் எல்லாம் வெளியில் வர, நிலா மட்டும் வராமல் இருந்தாள். அதில் புருவத்தை சுழித்தவன், நிலாவுடன் படிக்கும் மாணவி ஒருவளை அழைத்து, “நிலா எங்க?” என்றான்.

“அத் அது. அவளுக்கு டீச்சர் பனிஷ்மெண்ட் கொடுத்திருக்காங்க" என்று அவளுக்கு தெரிந்த விவரத்தை சொல்ல, அதைக் கேட்டவனுடைய கண்கள், கோவத்தில் சிவந்தது.

“இப்போ நிலா எங்க இருக்கா?” என்று கதிர் கேட்க, “கிரவுண்ட்ல" என்றாள் அந்த மாணவி.

அடுத்த நொடி விறுவிறுவென்று அங்கு சென்றவன் பார்த்த காட்சி, கண்ணில் நீரோடு, அங்கிருந்த குப்பைகளை எடுத்துக் கொண்டிருந்த நிலாவைத்தான்.

அதில் கோவமாய், “நிலா” என்றப்படி அங்கு விரைந்தான் கதிர். அவனின் குரலில், அவள் சட்டென்று திரும்ப, அங்கே கதிரை அவள் எதிர்பார்க்கவே இல்லை. அதில் மேலும் பயந்து, அவள் கையில் இருந்ததை தவற விட்டாள்.

“இங்கன என்னப் பண்ணிட்டு இருக்க?” என்று கதிர் அத்தனை அழுத்தமாய் கேட்க, “அத் அது" என்றவளுக்கு ஏனோ இப்போது கோவம் இவனின் மீது திரும்பியது. பின்னே இவன் அன்று மலரை அடித்ததால் தானே, இன்று மலர் அவளை தினமும் திட்டி அடித்துக் கொண்டிருக்கிறாள். அவளுடைய மூளைக்கு எட்டியது அவ்வளவுத்தான்.

அதனால் எதுவும் சொல்லாமல், அவள் மீண்டும் அங்கிருந்த குப்பையை எடுக்கப் போக, “உன்னத்தான கேட்கிறேன். இங்கன என்னப் பண்ற?” என்று அவள் கரத்தைப் பிடித்திழுத்தான் கதிர்.

“ஸ்.. அம்மா” என்று அவள் கத்த, அப்போதே பிடித்திருந்த அவள் கரத்தைப் பார்த்தான். அவளுடைய கை அத்தனை இரத்தமாய் சிவந்திருக்க, வேகமாய் அவள் மறு கரத்தைப் பிடித்துப் பார்த்தான். கரம் மொத்தமும் யாரோ முறுக்கி திருகியது போல், வளையல் போட்டிருந்த இடம் மொத்தமும் சிவந்திருக்க, உள்ளங்கையில் பிரம்பால் அடித்த தடம் அப்படியே இருந்தது.

“யாரு அடிச்சா?” என்று அவன் கோவமாய் கேட்க, அவளோ அவன் கரத்தில் இருந்து தன் பிடியை உறுவ முயற்சித்தாள்.

“சொல்லு. யாரு அடிச்சா?” என்று மீண்டும் அவன் கோவமாய் கத்த, “மலர் டீச்சர் தான், நிலாவ அடிச்சாங்க" என்று அங்கிருந்த இன்னொரு மாணவி கூறினாள்.

(ரைட்டு, இப்போ ஆப்பு மலருக்கா? இல்ல நிலாவுக்கா? சரி அடுத்து என்னத்தான் நடக்கப் போதுன்னு அடுத்த எபிசோட்ல பார்க்கலாம். அதுக்கு முன்னாடி, இன்னிக்கு எபிசோட் எப்படி இருந்திச்சின்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

தென்றல் தீண்டுமா?

Comments   3

*** தென்றல் – 35 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***