தேன் – 30

கடந்த கால நினைவில் இருந்த கவியின் தலையில், மல்லிகைப் பூவை வைத்து விட்டான் வேந்தன். அதில், அவள் சட்டென்று இவ்வுலகம் வர, அதற்குள்ளாக, அவள் கன்னத்தில் அழுத்தி முத்தமிட்டிருந்தான்.

அதை சற்றும் எதிர்பார்க்காதவள், பட்டென்று அவன் பக்கம் திரும்ப, அவனோ, மீண்டும் அவளின் மறு கன்னத்தில் முத்தமிட நெருங்கினான். அவ்வளவுத்தான். அவளுடைய பொறுமை எல்லாம் காற்றில் பறக்க, “என்னப் பண்றீங்க” என்று கோவமாய் அடிக்க கை நீட்டியிருந்தாள்.

ஆனால் நொடியில் அவள் கையைப் தடுத்துப் பிடித்தவன், “எல்லா நேரமும் நீ அடிச்சா, நான் வாங்கிட்டே இருப்பேன்னு நினைக்காத” என்று அழுத்தம் திருத்தமாய் கூறினான்.

அவன் பிடித்திருந்த பிடியும், அவன் கண்ணில் மின்னிய கோவமும், அவளை சற்று அமைதிப்படுத்த, ஆனாலும், “அப்போ நீங்களும், உங்க லிமிட்டா கிராஸ் பண்ணாதீங்க” என்றாள்.

“இப்போ நான் என்ன பெரிய லிமிட்ட கிராஸ் பண்ணிட்டேன்?” என்று கோவமாய் கேட்டவன், அவள் கையை விடுவித்தான். அவன் இரும்பு பிடியில் இருந்து தன் கரம் விடுப்பட்டதும், அதை மெல்ல தேய்த்துக் கொண்டவள், “எதுக்கு இப்போ கிஸ் பண்ணீங்க?” என்றாள்.

“கிஸ் பண்ணனும்னு தோணுச்சு பண்ணேன்” என்று தோளைக் குலுக்கினான். அவனின் பேச்சில், “உங்களுக்கு தோணுனா போதும்மா? எனக்கு அது பிடிக்க வேண்டாமா?” என்று எரிச்சலாய் கேட்டாள்.

“சரி உனக்கு இந்த மாதிரி கிஸ் பண்ணா பிடிக்கலன்னா, நான் வேணும்னா வேற மாதிரி கிஸ் பண்றேன். பட், உனக்கு என்ன மாதிரி கிஸ் பண்ணா பிடிக்கும்னு எனக்கெப்டி தெரியும்? அதான் தெரிஞ்சிக்கிடுறேன்” என்றான்.

“என்னது?” என்றவள், அதிர்ச்சியும் கோவமுமாய் அவனை முறைக்க, அவனோ, அவள் தலையில் இருந்த பூவையும், அவள் நெற்றியில் இருந்த குங்குமத்தையும் ரசித்தான். அவளையே சில நொடி நின்று ரசித்தவன், “நான் உயிரோட இருக்கிற வரைக்கும், நீ இப்படித்தான் இருக்கனும் சரியா?” என்று அவன் கன்னம் தட்டி சொல்லிவிட்டு, அங்கிருந்த கட்டிலில் சென்று படுத்தான்.

இவள் தான் அவன் பேச்சிலும், தொடுகையிலும் அப்படியே அங்கேயே சில நொடிகள் நின்று விட, சில நொடிகளுக்குப் பின்னே, அவள் தலையில் இருந்த மல்லிகையின் மணம் அவள் நாசிக்குள் நுழைந்தது.

அதில் சற்று கோவத்தை தணித்து, அந்த மல்லிகை சரத்தை மெல்ல நுகர்ந்துப் பார்த்தவளுக்கு, அதில் வேந்தனுடைய வாசனைத்தான் அதிகமாய் வந்தது. அதில், உறங்கிக் கொண்டிருந்த வேந்தனைப் பார்த்தாள்.

“இன்னேரத்துல இவருக்கு எங்க இருந்து இவ்ளோ பூ கிடைச்சிச்சு?” என்று தனக்குள்ளே அவள் யோசிக்க, “உன் புருஷன் அரசியல்வாதிடி. நினைச்சத அடைஞ்சித்தான் பழக்கம். பூ என்ன? நான் நினைச்சா, பூகம்பத்தையே கூட ஒரு செகண்ட்ல வர வைப்பேன்” என்று கண்ணைக் கூட திறக்காது பதில் கூறினான்.

“தூங்குறப்பையும், இதுல ஒன்னும் குறைச்சல் இல்ல” என்று சொல்லிவிட்டு சோபாவில் சென்று அமர்ந்தாள். ஏனோ சட்டென்று படுத்துக் கொள்ள மனம் வரவில்லை. அந்த மலர்ந்த மல்லிகையைப் பார்த்தாள். கசங்கிவிடுமோ என்று அதை நினைத்து பாவமாய் இருந்தது.

திகட்டாத வாசத்தையும், அளவில்லா சந்தோஷத்தையும் அள்ளி கொடுக்கும் இந்த மலரின் ஆயுட்காலம் ஏன் இத்தனை குறைவாய் இருக்கிறது? என்று அந்த மலருக்காய் வருத்தப்பட்டாள்.

“இப்போ என்ன அந்த பூ கசங்க கூடாது. அவ்வளவுத்தான்ன. நான் வேணும்னா, அது கசங்காம இருக்கிறதுக்கு வழி சொல்லட்டா?” என்று அவள் காதில், அவனின் குரல் விழ, திடுக்கிட்டு திரும்பினாள். வேந்தன் தான் அவளின் அருகில் அமர்ந்திருந்தான்.

வேகமாய் கட்டிலைப் பார்க்க, மனமோ, “இவரு எப்போ அங்க இருந்து, இங்க வந்தாரு?” என்றது.

அதற்குள் இவனோ, “ச் இப்போ நான் எப்படி வந்தேன்னு சொல்லிக் காட்டனுமா? இல்ல, இந்த பூவை எப்படி பாதுகாக்கிறதுன்னு சொல்லிக் கொடுக்கட்டுமா?” என்றான்.

“எப்படி வாடாம இருக்கும்? அதான் அந்த பூவ செடியில இருந்து பறிச்சிட்டாங்கத்தான” என்றவளுக்கு ஏனோ நொடி நேரத்தில், அவளின் வாழ்க்கையும், அந்த மலரின் வாழ்க்கையும் ஒன்று போல் தான் தோன்றியது.

அதை அவள் முகமே காட்டிக் கொடுக்க, “பறிக்காம விட்டிருந்தா மட்டும், அந்த பூ வாடாம அப்படியேவா இருந்திருக்கும்?” என்று புருவம் உயர்த்திக் கேட்டான்.

பதில் தெரியவில்லை அவள் அமைதியானாள். அவள் அமைதியில் இவனோ, மெல்ல அவள் தோளில் ஊர்ந்துக் கொண்டிருந்திருந்த அந்த மல்லிகை சரத்தை வருடினான்.

அவன் பூவைத்தான் வருடினான். ஆனால் இவள் முகம் வெட்கத்தில் மலர முயற்சித்தது.

“இங்கப்பாரு எல்லா பூவும் காயாகி, பழமாகும்னு சொல்ல முடியாது. அதே மாதிரி ஆரம்பம்னு ஒன்னு இருந்தா, முடிவுன்னு ஒன்னு எல்லா விஷயத்துக்கும் இருக்கும். அந்த பூ செடியில இருந்தாத்தான் பாதுகாப்பா இருக்கும்னு நீ நினைக்கிற. பட், அந்த பூவுக்கு அந்த செடிய பிடிக்காம கூட இருந்திருக்கலாம்ல. இல்லன்னா, அது இருந்த இடம் கூட பிடிக்காம இருந்திருக்கலாம்” என்றான்.

அவனின் வார்த்தையில் அவள் அவனைப் பார்க்க, “சோ, ஒரு விஷயம் நடக்குது அப்படின்னா, அதுல இருக்கிற நல்ல விஷயத்த மட்டும் தான் பார்க்கனும். இப்போ பாரு. இந்த பூ அந்த செடியிலையே இருந்திருந்தா, அது இவ்ளோ அழகான உன்னைப் பார்த்திருக்குமா? இல்ல உனக்கும், எனக்கும் நடுவுல இருக்கிற, உறவு என்னென்னு இந்த உலகத்துக்குத்தான் சொல்லியிருக்குமா?” என்று கேட்டு புருவம் உயர்த்தினான்.

அவனுடைய அசாத்தியமான பேச்சில் வழக்கம் போல் அவள் விழி விரிக்க, அவனோ, மெல்ல அந்த பூவை வருடி, குட்டியாய் அந்த மலரில் முத்தமிட்டான். ஏனோ இப்போது அவன் மீது கோவம் வரவில்லை. மாறாக, ஒரு பூவை அவன் கையாளும் விதம் அவளுக்குள் ஒரு வித பிரமிப்பைத்தான் ஏற்படுத்தியது.

அவள் அவனையே பார்த்திருக்க, “என்ன? இந்த பூவோட ஆயுள் இப்படியே முடியக் கூடாதுன்னு நீ ஆசைப்படுறீயா?” என்றான்.

அவனால் எப்படி இது முடியும்? என்று அவளுக்குத் தெரியவில்லை. ஆனாலும் வேகமாய், “ம்” என்று தலையாட்டினாள்.

“அப்போ அதுக்கு நீ ஒரு விஷயம் பண்ணனும்மே” என்றான். “என்ன?” என்று அவள் கேட்க, “ரொம்ப சிம்பிள் என்னை ஹக் பண்ணிக்கோ” என்றான்.

“என்ன?” என்று அவள் கோவமாய் மூக்கு விடைக்க அவனைப் பார்க்க, “உனக்கு அந்த பூ மேல அக்கறை இருந்தா, நான் சொன்னத செய். இல்லன்னா விடு நான் போய் தூங்குறேன்” என்றவன் அங்கிருந்து எழுந்தான்.

“ச் விளையாடுறீங்களா நீங்க? உங்கள ஹக் பண்ணா மட்டும், அந்த பூ வாடாதா?” என்று கேட்டாள் கவி. “இங்கப்பாரு. எனக்கு எதையும் சொல்லி மட்டுமே பழக்கம் கிடையாது. செயல்ல காமிச்சித்தான் பழக்கம். நீ நான் சொன்னத செஞ்சா, நான் உன் ஆசைய நிறைவேத்துறேன். அவ்வளவுத்தான்” என்று சொல்லிவிட்டு கட்டிலில் சென்று படுத்தான்.

ஒரு நொடி எதையோ யோசித்தவள், அடுத்த நொடி, “சரி” என்றாள். அதில் கண்ணை மட்டும் திறந்து, “என்ன சரி?” என்றான்.

“ஆ.ங் அத் அது” என்றவள் தடுமாறி பின், “அது, ஹக் பண்றேன்” என்றாள்.

அதில் வெளிவர துடித்த புன்னகையை தனக்குள்ளே மறைத்து, “ஹக் பண்றேன்னு அங்கேயே இருந்தா எப்படி?” என்று புருவம் உயர்த்தி அவளைப் பார்த்தான். 

அவன் அருகில் வந்து “இப்படி எப்படி ஹக் பன்றது?” என்று உதட்டை சுழிக்க, பட்டென்று அவன் கையைப் பிடித்து இழுத்து தன் அணைப்புக்குள் அவளை படுக்க வைத்திருந்தான் வேந்தன்.

நொடியில் நடந்துவிட்ட நிகழ்வில், அவள் விழிக்க, அவனோ, “இப்படியே தூங்கு. உன் பூவுக்கும் ஒன்னும் ஆகாது. உனக்கும் ஒன்னும் ஆகாது” என்று அவளை அணைத்தப்படி கண் மூடினான்.

அவனின் நெருக்கத்தில், அவளின் இதயம் பலமாய் துடிக்க, ஆனாலும் அவன் இரும்பு கரத்தை அவளால் அசைக்க கூட முடியவில்லை. இங்கே இவளோ, “கடைசியில, உங்க அரசியல்ல என்கிட்டையே காமிச்சிட்டீங்கத்தான? அத இத பேசி, என்னை இப்படி படுக்க வச்சீட்டீங்கத்தான” என்று திட்டினாள்.

“ச் தொன தொனன்னு ஏதாச்சும் பேசிட்டே இருக்காம தூங்குடி. காலையில எக்கசக்கமான வேல இருக்கு” என்றவன் அவளை மேலும் அணைத்துக் கொண்டு உறக்கத்தை தொடர்ந்தான்.

சில நொடி, அவளுக்கு தவிப்பாய் இருக்க, அவன் எந்த சீண்டலும் செய்யாமல் இருக்க, அது ஒரு வித அரவணைப்பையும், பாதுகாப்பையும் கொடுக்க, அந்த மலரோடு சேர்ந்து அவளும் அவனுக்குள் அடைக்கலமானாள்.

ஆனால் கண் மூடி இருந்தவனுக்குத்தான். அவளை அணைத்துக் கொண்டு அமைதியாய் இருப்பது அக்னிக்குள் மூழ்கி முத்தெடுப்பது போல் இருந்தது. அதிலும் அவள் கார்கூந்தலில் இருந்து வரும் அந்த வாசனை அவன் மதியை மயக்கத்தான் போராடியது.

இருந்தும் தன் உணர்வுகளை கஷ்டப்பட்டு அடக்கி, அந்த நிமிடத்தை சுகமாய் அனுபவித்தான். ஏனோ இப்படியே அவளுடன் வாழ்நாள் முழுவதும் இருக்க சொல்லி மனம் ஏங்கியது.

அவளுமே நீண்ட நாட்களுக்கு பின் ஒரு நிம்மதியான தூக்கத்தை தொடர்ந்தாள். அடுத்த நாள் காலையில் அவள் எழும் போது நன்றாக விடிந்திருந்தது. அவள் கண்ணைக் கசக்கி சுற்றிப் பார்க்க, அருகில் அவன் இல்லை. மணியைப் பார்த்தாள். அதுவே அவன் சென்றிருப்பான் என்பதை சொல்லியது.

“என்ன மேடம் நல்ல தூக்கமா?” என்று காபியுடன் அறை வாசலில் நின்று கேட்டாள் விழி. அவளைப் பார்த்ததும், வேந்தனுக்கும், அவளுக்கும் நடந்த பேச்சு வார்த்தை எல்லாம், மறந்து, “கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன். நில்லு வரேன்” என்றவள், குளியலறைக்குள் சென்றாள்.

அங்கிருந்த கண்ணாடியில் தன் முகத்தைப் பார்க்க, அவள் நெற்றியில் இருந்த குங்குமம், இன்னுமே அழியாமல் அப்படியே இருந்தது. அதில் அதையே சில நொடி பார்த்தவள், பின் அன்னிட்சையாய், தன் தலையில் இருந்த பூவைத் தேடினாள்.

ஆனால் ஒரு சில மொட்டுகள் ஆங்காங்கே அவள் தலையில் ஒட்டியிருக்க, மீதி பூவைக் காணவில்லை. அந்த மொட்டுக்களுமே வாடியிருக்க, இப்போது அவளோ வேந்தனை நினைத்து முறைத்தாள்.

“ச் பூன்னா வாடத்தான செய்யும். அவர் தான் சொன்னாருன்னா? உனக்கெங்க போச்சு அறிவு. இதுக்காக அவர ஹக் பண்ணிட்டு வேற தூங்கியிருக்க. வர வர உனக்கு சுத்தமா மூளை வேலை செய்றதே இல்ல. இதுல அந்த பூவையும் தூக்கிட்டு போயிருக்காரு. இன்னிக்கு வரட்டும்” என்று தன்னைத் தானே திட்டியவள் குளித்து முடித்து வெளியில் வந்தாள்.

இங்கே விழியோ, “கவி இன்னிக்கு நம்ம கோவிலுக்கு போவோம்மா? எப்படியும், இன்னும் அடுத்த வாரத்துல இருந்து ஆபிஸ் போகனும்” என்றாள்.

“கோவிலுக்கா?” என்ற கவி ஒரு நொடி தயங்கினாலும், அடுத்த நொடியே வேந்தன் சொல்லிய வார்த்தைகள் நினைவில் வர, கரம் அன்னிட்சையாய், அவள் தாலியை வருடியது.

அதனால், “சரி” என்றாள். “ஹேய் சூப்பர். நில்லு அண்ணாவையும் வர சொல்றேன்” என்றவள் மொபைலில் வேந்தனை அழைக்க, அவனுக்கோ சென்னை போக வேண்டிய நிலை. அதனால் வர ஒரு வாரமாகும் என்று தெரிவித்திருந்தான்.

இதை கவியிடம் சொல்ல, ஏனோ இப்போது வேந்தனின் மீது இன்னும் கோவம் வந்தது.

ஒரு வித எரிச்சலுடன், “கோவிலுக்குலாம் வேண்டாம். வேணும்னா வேர எங்கையாச்சும் போயிட்டு வரலாம்” என்று முடித்திருந்தாள் கவி.

(ஏன்மா? எங்க சுடர் கூடத்தான் கோவிலுக்கு போவீயா? செரி அது உன் விருப்பம். இப்போ நான் ஏதாச்சும் சொன்னா, நீ என்னை திட்டுவ. எனக்கெதுக்கு வம்பு? அடுத்து என்னென்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

தித்திக்குமா?..

Comments   2

*** தேன் – 30 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***