இரவின் கலக்கம் தீர்ந்து அவள் மறு நாள் காலை கண் விழிக்கும் போது, கட்டிலில் படுத்திருந்தாள். அந்த அறையில், அவள் கலக்கத்துக்கு காரணமானவன் இல்லை. அதில் அவளின் மனமோ சற்று நிம்மதியை உணர்ந்தாலும், ஏனோ அவனைப் பார்க்காதது ஒரு வித வருத்தத்தையும் கொடுத்தது. பின் மணியைப் பார்த்தவள், எழுந்து குளித்து உடை மாற்றி கீழே வந்தாள்.
ஹாலில் அமர்ந்து காபி குடித்துக் கொண்டிருந்த விழியோ, “வாங்க அண்ணி. நல்ல தூக்கம் போல” என்று சீண்டலாய் கேட்டாள். அவள் சீண்டலுக்கு வெட்கப்படும் மன நிலையில் எல்லாம் அவள் இல்லை. ஆனாலும் அவளை முறைத்தப்படி, “அதிசயமா நீ எனக்கு முன்னாடி எந்திரிச்சிட்ட. அதனால என்ன கிண்டல் பண்றீயா?” என்றவள் கிச்சனுக்குள் செல்ல முயன்றாள்.
“ச் அங்க எங்கப் போற கவி? இங்க உட்காரு” என்றவள் செல்லம்மாவை அழைத்து, அவளுக்கும் காபியை வாங்கி நீட்டினாள். அவளும் விழியுடன் சேர்ந்தே, காபியை குடித்தாள். ஆனாலும் மனமோ வேந்தனைத்தான் யோசித்தது.
அதற்குள் விழியோ, “அப்புறம், என் கூட விளையாட சொன்னப்ப மட்டும் தூக்கம் வருதுன்னு சொன்ன. பட் அண்ணா கூட மட்டும் விடிய விடிய விளையாண்டிருக்க. ஆமா உனக்கு செஸ் விளையாடத் தெரியும்னு என்கிட்ட சொல்லவே இல்லையே” என்றாள்.
அவளின் கேள்வியில் திரு திருவென்று முழித்தவள், “ச் அதெல்லாம் இல்ல. சும்மா ஒரு கேம் தான். முழுசா கூட விளையாடல” என்று சமாளிக்க முயன்றாள்.
“அப்படியா?” என்று சிறு கேலியுடன் கேட்டவள், பின் “சரி கவி நீ அடுத்து என்னப் பண்ணலாம்னு இருக்க?” என்றாள்.
“அடுத்து என்ன? மதியத்துக்கு சமைக்கனும். உனக்கு என்ன வேணும்னு சொல்லு. அதையே பண்ணிடலாம்” என்றாள் கவி.
அதில் தன் தோழியை முறைத்தவளோ, “ஹேய், பக்கா ஹவுஸ் ஒயிப் மாதிரி பேசாத” என்று சொல்ல, அதில் கவியின் முகமோ சட்டென்று வாடியது. அவளுடைய ஆசை என்ன? அவள் வாழ்ந்த வாழ்க்கைத்தான் என்ன? ரெண்டுக்கும் சிறிதும் சம்பந்தம் கிடையாது.
இப்போது இங்கு கூட அவள் வேலைக்காரியாய் தான் இருக்கிறாள். இப்போதைக்கு, அவளுக்கு இந்த வீட்டில் இருந்து நிரந்தரமாய் சென்று விட வேண்டும். வேந்தன் வேறொரு திருமணம் செய்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுத்தான். அது குறித்து மட்டும் தான் யோசித்தாள்.
அவள் எதுவும் சொல்லாமல் அமைதியாய் இருக்கவும், “பேசாம மேல படிக்கிறீயா கவி?” என்று விழி கேட்க, “ம்ஹூம்” என்று வேகமாய் மறுத்தாள். “ஏன்? என் அண்ணாவ விட்டு பிரிஞ்சு இருக்க முடியாதுன்னு யோசிக்கிறீயா?” என்று சீண்டலாய் கேட்டாள்.
அதில் அவளை முறைத்தவளோ, “என்னோட லைப்ல படிப்புன்றது முடிஞ்சு போன ஒரு விஷயம். அத மறுபடியும் ஆரம்பிக்கிறதுல எனக்கு உடன்பாடு இல்ல” என்றாள்.
அவள் படிப்பை மட்டும் சொன்னாளா? இல்லை அவள் வாழ்க்கையையும் சேர்த்து சொன்னாளா? என்பதை அவள் மட்டுமே அறிவாள்.
தோழியைப் பற்றி தெரியும் என்பதால், அதற்கு மேல் விழி எதுவும் சொல்லவில்லை. அதன் பின் வேறு விஷயங்களுக்கு இருவரும் சென்றிருக்க, அன்றைய தினம் வேந்தன் வரும் முன்னே கவியை அவனுடைய அறையில் விட்டிருந்தாள் விழி.
அவன் வரும் போது அவள் சோபாவில் உறங்கியிருக்க, அவனோ வழக்கம் போல், அவளை தூக்கி கட்டிலில் படுக்க வைத்து விட்டு, அவன் சென்று பால்கனியில் படுத்துக் கொண்டான். இப்படியாகத்தான் அடுத்தடுத்த நாட்கள் சென்றது.
அதன் பின்னான ஒரு நாளில், விழியிடம் வந்த வேந்தனோ, “உனக்கும், உன் பிரண்ட்க்கும், நம்ம சர்வேஷ் கம்பெனியில வேலைக்கு சொல்லியிருக்கேன். நாளைக்கு நீயும், அவளும் போயி பாருங்க” என்றான்.
அப்போது அங்கு வந்த கவியோ, “இல்ல நான் போகல” என்று வேகமாய் சொல்ல, அவனோ இப்போது மனைவியை முறைத்தான். அதற்குள் விழியோ, “ஆமாண்ணா. எனக்கும் போக விருப்பம் இல்ல” என்றாள்.
அதில் கவியோ இப்போது விழியை முறைக்க, “என்ன? நீ உன் விருப்பத்த சொல்றப்ப, நான் என் விருப்பத்த சொல்லக் கூடாதா?” என்றாள்.
“ச் எனக்காக நீ உன் விருப்பத்த மாத்திக்கிடுறது எனக்கு சுத்தமா பிடிக்கல விழி. உன் அண்ணாத்தான உனக்காக வேலை பார்த்திருக்காரு. அத போய் பண்றதுல உனக்கென்ன பிரச்சனை?” என்றாள்.
“ம் உன் வீட்டுக்காரும் தான், உனக்காக பாத்துட்டு வந்திருக்காரு” என்று அவளும் விடாது பேச, அதற்கு கவியோ இப்போது வேந்தனை முறைத்தாள்.
ஆனால் அவனோ, “சரிடா குட்டிமா. அங்க வேலைக்கு போக பிடிக்கலன்னா, நான் வேற கம்பெனி பாக்குறேன்” என்று சொல்லி சென்றவன், அதன் பின் கிட்ட தட்ட ஒரு ஐந்தாறு கம்பெனிகளில் வேலைக்கு பேசியிருந்தான்.
ஆனால் விழியோ அனைத்தையும் மறுத்துக் கொண்டே இருக்க, வேந்தனுமே, “சரிடா, உனக்கு பிடிச்ச மாதிரி பாக்குறேன்” என்று அவள் தலையை வருடி விட்டு, எழுந்தான்.
இப்போது கடுப்பான கவியோ, “நில்லுங்க” என்று சொல்லியப்படி வேந்தனின் அருகில் வந்து நின்றாள்.
அதில் அவனோ கவியை கேள்வியாய் கேட்க, “உங்க தங்கச்சிக்கு செல்லம் கொடுக்கிறது சரி தான். ஆனா அதுக்காக, அவ என்ன சொன்னாலும் இப்படி சரின்னு தலை ஆட்டுறது கொஞ்சம் கூட சரி இல்ல” என்று கோவமாய் கூறினாள்.
“ஆமா அண்ணா. அண்ணி சொல்றதும் சரி தான். இனிமே அண்ணி சொல்றத மட்டும் நீங்க கேளுங்க” என்று கவியின் கழுத்தை கட்டிக் கொண்டு கூறினாள் விழி.
அதில் அவள் கையை தட்டி விட்டவளோ, “ச் என்னடி உன் மனசுல நினைச்சிட்டு இருக்க. அவருக்கென்ன வேற வேலை இல்லையா? உனக்காக தினமும் ஒரு கம்பெனிக்கிட்ட அவர் பேசிட்டே சுத்தனுமா? உனக்கு வேலைக்கு போக பிடிக்கலன்னா, அதையாச்சும் சொல்ல வேண்டியதுத்தான. அத விட்டுட்டு, எதுக்கு இப்படி, அவரை தேவையில்லாம வேல வாங்குற நீ” என்று சிறு கோவத்துடன் கேட்டாள்.
“அதுக்குன்னு பிடிக்காத வேலைய எப்படி பார்க்க முடியும்?” என்று விழி விடாது கேட்க, “அதான் நானும் உன் கூட வரேன்னு சொல்லிட்டேன் தான. இன்னும் எதுக்கு நீ இப்படி பண்ணிட்டிருக்க? அப்படி உனக்கு என்ன மாதிரித்தான் வேலை வேணும். அதையாச்சும் உன் அண்ணாக்கிட்ட சொல்ல வேண்டியதுத்தான. சும்மா சின்னப் பையன கடைக்கு அனுப்புற மாதிரி, மாத்தி மாத்தி அனுப்பிட்டு இருக்க” என்று அவனின் மனைவியாய் நின்று பேசினாள்.
விழிக்கோ மனதில் அத்தனை சந்தோஷமாய் இருந்தது. ஆனாலும் அதை வெளிக்காட்டாது, “எனக்கு பிடிச்ச வேலைத்தான் உனக்கு பிடிக்காதே” என்று விழி விடாது கூறினாள்.
“ச் இப்போ எனக்கு பிடிக்கலன்னு சொன்னேன்னா? நீ எங்கப் போறீயோ? அங்க நானும் வந்து ஜாயின் பண்றேன். நான் முடியாதுன்னு சொன்னா மட்டும், நீயும், உன் அண்ணாவும் விடவா போறீங்க?” என்று கடுப்பாய் கேட்டாள்.
“அப்போ நான் எங்க வேலைக்கு போறேன்னு சொன்னாலும், நீயும் என் கூட வேலைக்கு வருவ அப்படித்தான?” என்று விழி கேட்க, “ச் வரேன்” என்று சலிப்பாய் கூறினாள்.
“இங்கப்பாரு கவி. இப்போ இப்படி சொல்லிட்டு அப்புறம் மாத்தி பேசக் கூடாது” என்றவள் அழகாய் வலை விரிக்க, “ஸ்ப்பா பேசல. வேணும்னா உன் மேல சத்தியம் பண்ணட்டா?” என்று எரிச்சலாய் கேட்டாள்.
“என் மேல வேண்டாம். அண்ணா மேல மட்டும் சத்தியம் பண்ணு” என்று அவள் சொல்ல, “சரி உன் அண்ணா மேல சத்தியம். நீ எங்க வேலைக்கு போகனும்னு ஆசைப்பட்டாலும் நானும் அங்க வரேன்” என்று ஒரு வேகத்தில் சொல்லிவிட்டாள்.
“அப்புறம் என்ன அண்ணா? அதான் அண்ணியே சொல்லிட்டாங்களே, நாளையில இருந்து நானும், அண்ணியும் உன் கட்சி ஆபிஸுக்கே வேலைக்கு வந்திடுறோம்” என்று அசராது விழி சொல்ல, கவியோ, “என்ன?” என்று அதிர்ந்து விழித்தாள்.
வேந்தனுமே விழி அப்படி சொல்வாள் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. “குட்டிமா” என்று அவன் ஏதோ சொல்ல முயற்சிக்க, “அண்ணா, உங்களுக்கே தெரியும்த்தான. எனக்கும், கவிக்கும் பொலிடிகல் ஜர்னலிசம் பண்ணத்தான் ஆசை. அப்போ எங்களுக்கு, உங்க ஆபிஸ் தான கரெக்டா இருக்கும்” என்றாள் விழி.
அதில் கவியோ, “ச் என்னப் பேசுற நீ? இதுக்குத்தான் நீ லண்டன் போய் படிச்சிட்டு வந்தீயா?” என்று எரிச்சலாய் கேட்டாள். “ஹேய் நான் படிக்கப் போன கோர்ஸே, பொலிடிகல் ரிலேட்டட் தான்” என்றாள்.
அதில் இப்போது கவியோ வேந்தனிடம், “நீங்க எதுக்கு இப்படி நிக்குறீங்க? உங்க தங்கச்சிக்கு, பாலிடிக்ஸ் சுத்தமா பிடிக்காது. எனக்கு பிடிக்கும்ன்றதுக்காக அப்படி சொல்றா. அவ கெரியர ஸ்பாயில் பண்ணாதீங்க. நீங்க முன்னாடி சொன்ன மாதிரி, அந்த சர்வேஷ் ப்ரோ கம்பெனியில சேர்த்து விடுங்க” என்றாள்.
“நோ நோ அண்ணா. எனக்கு விருப்பம் இருக்கிற வேலையிலத்தான் நீ சேர்த்து விடனும்” என்றாள் விழி. அதில் கவியோ, “ஏன் விழி இப்படி பண்ற? சொன்னா புரிஞ்சுக்கோ. அதெல்லாம் செட்டாகாது” என்று கோவமாய் கூறினாள்.
“ஏன்? அங்கப் போனா, உன் வீட்டுக்காரர நீ சைட் அடிக்கிறத நான் கிண்டல் பண்ணுவேன்னு சொல்லி பயப்படுறீயா?” என்று விடாது கேட்டாள்.
“ஹே லூசு மாதிரி பேசாத விழி” என்று கவி சொல்ல, “ம்ஹூம் நான் முடிவு பண்ணிட்டேன். நீயும், நானும் இனிமே அண்ணா கூடத்தான் வேலைப் பார்க்கப் போறோம்” என்று உறுதியாய் கூறினாள் விழி.
“உன் அண்ணா என்ன? கார்ப்பரேட் கம்பெனியா வச்சி நடத்திட்டு இருக்காரு. பாலிடிக்ஸ்ல இருக்காரு விழி” என்று எரிச்சலாய் கவி சொல்ல, “கார்பரேட் கம்பெனிய விடவா, அண்ணன் கம்பெனியில பாலிடிக்ஸ் பண்றாங்க?” என்று நக்கலாய் கேட்டாள் விழி.
வேந்தனோ எதுவுமே சொல்லாமல் அமைதியாய் நிற்க, கவியோ, “இங்கப்பாருங்க சுடர். இப்போ மட்டும் நீங்க என் பேச்ச கேட்காம, அவ பேச்ச கேட்டீங்கன்னா, அதுக்கப்புறம் நான் என்னப் பண்ணுவேன்னே தெரியாது” என்று கோவமாய் தன் உரிமையை காட்டினாள் கவி.
“என்னப் பண்ணுவ? அன்னிக்கு கொடுத்த முத்தத்த இன்னிக்கும் ரிட்டன் கொடுப்பீயா?” என்று விழி சீண்டலாய் கேட்க, “ச் நான் என் சுடருக்கு முத்தத்த கொடுக்கிறேன். இல்ல மிச்சத்த கொடுக்கிறேன். உனக்கென்னடி. ஒழுங்கு மரியாதையா, அவர் சொன்ன ஆபிஸுக்கு கிளம்புற வழிய பாரு” என்று கோவத்தில் தன்னை மீறி ஏதோ பேசினாள் கவி.
அத்தோடு விடாது, அவனின் பக்கமும் திரும்பி, “என்ன? நான் சொன்னது புரியுதா? இல்லையா?” என்று அவன் சட்டையைப் பிடித்திழுத்து, புருவத்தை உயர்த்திக் கேட்டாள் கவி.
அதில் மொத்தமும் மயங்கியவன், “மிச்ச முத்தத்த எப்போ கொடுப்ப?” என்று அவள் இதழோடு இதழ் தொடும் தூரம் நெருங்கி, சிறு மோகத்துடன் கேட்டான் வேந்தன்.
(க்கும். ஏன்ப்பா. அவளே எப்பயாச்சும் தான் ஒரு ப்ளோல பேசுறா. அதுக்கும் இப்படி செக் வச்சேன்னா, அவளும் என்னத்தேன் பண்ணுவா? சரி அடுத்து என்னாகப் போதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)
தித்திக்குமா?..
Shree Ram
hero romance ku readya💞💞💕💕💕💞💞💞💕