நிலாவுக்கு முழு ஆண்டு தேர்வு ஆரம்பமாகியிருந்தது. அதனால் வீடு, பள்ளி என்று மட்டுமே இருந்தாள். தாத்தா வீட்டுக்கும் அவள் செல்லவில்லை. அங்கே செல்வியோ, குமாரிடம், “ஏல குமாரு. இத்த, அக்கா வூட்டுல கொண்டு போய் கொடு" என்று டிபன் பாக்ஸை அவனிடம் நீட்டினார்.
“ஏன்மா? அப்படியே நீங்க கொடுத்ததும், அவுக வாங்கிடுவாகளா?” என்று கேட்டப்படி ராணி அங்கு வந்தார். “அடியே உம்ம கிட்ட சொன்ன சோழிய மட்டும் பாருடி. அத வுட்டுட்டு, எங்கன நின்னு என்ன பேசலாம்னு திரியிறவ” என்று தன் மனைவியை திட்டினான் குமார்.
அதில் ராணியின் முகம் வாடி விட, “என்னல பேச்சு இது? அவ என்கிட்டத்தேன்ன பேசுறா. உமக்கென்னல. அக்கா சாப்பிடாதுன்னு தெரியும். இதுல நிலாக்கு பிடிச்ச பிடி கொளுக்கட்ட இருக்கு. அவகிட்ட கொடுக்க சொன்னதா சொல்லி கொடுத்துடு" என்றார்.
அதில் குமாரும் தன் மனைவியை ஒரு முறை முறைத்து விட்டு அங்கிருந்து செல்ல, அவளோ கோவமாய் முகத்தை திருப்பிக் கொண்டாள்.
அதைப் பார்த்து சிரித்த செல்வி, “என்னடி, நானும் கொஞ்ச நாளா பாத்துட்டேத்தேன் இருக்கேன். எப்போ பாத்தாலும் முட்டிட்டே திரியிறீக. உனக்கும், அவெனுக்கும் ஏதும் பிரச்சனையா?” என்று கேட்டார்.
“ஆசை அறுபது நாளு, மோகம் முப்பது நாளுன்னு சும்மாவா சொல்லிருக்காக. அத்தேன், நம்ம என்னப் பண்ணாலும், அவுகளுக்கு ஆவுறதில்ல. எப்போ பாத்தாலும் சிடுசிடுன்னு வைஞ்சிட்டே இருக்காக" என்று கூறினாள் ராணி.
“அப்படி அவென் வையிற அளவுக்கு, நீ என்னடிப் பண்ண?” என்றார் செல்வி. “அத்தேன்னே, எல்லாரும், பொம்பளையத்தான் இளசா கை நீட்டி கேட்பாக. அந்த ஆம்பளைய ஆறாச்சும் கேட்கிறீகளா?” என்றாள் ராணி.
அதுவே அவர்களுக்குள் நடக்கும் ஊடலை வெளிச்சம் போட்டு காட்டியிருக்க, “ச் இப்போ நான் என்னத்த சொல்லிட்டேன்னு, இப்படி கொக்கறிக்கிறவ? புருஷன், பொண்டாட்டிக்குள்ள சண்ட வர்றதுலாம் சகஜம் தாண்டி. ஆனா இப்படி அத வளத்துட்டே போவ கூடாது. ஆறாச்சும் முடிக்கனுமா? இல்லையா? செரி நான் அவென்கிட்ட பேசுறேன்" என்றார் செல்வி.
“ஆ..ங் அத்தெல்லாம் வேணாம். அப்புறம் அந்த மனுஷன் என்னத்தேன் வைவாக. பொம்பளையா பொறந்துட்டேன்ல, அப்போ ஏச்சும், பேச்சும் வாங்கித்தேன்ன ஆகனும்" என்று சொல்லும் போதே ராணிக்கு கண்னீர் வந்திருந்தது.
அப்படி எல்லாம் சட்டென்று அழும் ரகம் இல்லை. அதிலேயே பிரச்சனை பெரிது என்று புரிய, குமாரிடம் இது குறித்து பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.
“ச் என்ன புள்ள இது? எதுக்கு ஏச்சும். பேச்சும் வாங்கனும். புருஷன் மேலத்தேன் தப்புன்னா, தைரியமா எதிர்த்து பேசு. சும்மா இப்படி அழுதுட்டு இருக்க கூடாது." என்று அதட்டலாய் அவள் கண்ணீரை துடைத்து விட்டவர், “செரி நீ போய் வேலைய பாரு" என்று அனுப்பியிருந்தார்.
இங்கே கதிருக்கோ, வயலிலும், ரைஸ்மில்லிலும் அதீத வேலை. அதுவும் போக, புதிதாய் வேறு, டவுனில் ஒரு இடத்தை வாங்கியிருந்தான். அதில் சில பிரச்சனைகள் இருக்க, மதுரைக்கும், ஊருக்கும் தான் மாறி மாறி செல்ல வேண்டியிருந்தது. அதனால், ஓய்வே இல்லாமல் தான் ஓடிக் கொண்டிருந்தான். அதில், உண்மையாகவே அவனுக்கு பிரியாவிடம் பேச நேரம் கிடைக்காமல் போனது. அவன் வேலை முடிந்து ஓய்வாக படுக்கும் நேரம் நள்ளிரவை நெருங்கி விடும். அன்னேரத்தில் எப்படி அழைப்பது என்று, அவனும் தயங்கி அழைக்காமலே விட்டிருந்தான். அதிலேயே அவனுடைய நாட்கள் ஓடியது.
அன்று வீட்டில் சங்கரேயன் ஜோசியர் ஒருவரை அழைத்திருந்தார். செல்வி அவருக்கு குடிக்க தண்ணீரைக் கொடுத்தார். அதை வாங்கிக் குடித்தவர், தன் முன்னே இருந்த கதிரின் ஜாதக புத்தகத்தை கையில் எடுத்தார்.
இதற்கு முன் கூட ஜாதகம் பார்க்க வேண்டும் என்று அவருக்கு தோன்றவில்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் குல தெய்வ கோவில் போக வேண்டும் என்று சொல்லி, சொல்லி அது நடக்காமல் போகவும் அவருக்கு மனம் சற்று பதட்டப்பட்டது.
இருவரின் ஜாதகத்தையும், அந்த ஜோசியர் பூதக் கண்ணாடி வைத்துப் பார்க்க, சங்கரேயனோ, “ஜாதகத்துல எந்த பிரச்சனையும் இல்லையே. அப்படியே ஏதாச்சும்னாலும், கன்னாலத்துக்கு முன்னாடியே பரிகாரம் பண்ணிக்கலாமான்னு பாத்து சொல்லுங்க. அப்படியே குல தெய்வ கோவிலுக்கு போறதுக்கு ஒரு நல்ல நாளா சொல்லுங்க" என்று சங்கரேயன் கூறினார்.
அதில் அந்த ஜோசியரோ, “ஐயா. அம்மா கிட்ட சொல்லிருந்தேன்னே. அவுக உங்க கிட்ட சொல்லலையா?” என்று சிறு தயக்கத்தோடு செல்வியைப் பார்த்தார்.
அதிலேயே ஏதோ விஷயம் இருக்கு என்று அறிந்த சங்கரேயன், செல்வியிடம், “என்னத்தா? ஜோசியரு என்னத்த மென்னு முழுங்குறாரு?” என்று கேட்டார்.
“அது ஒன்னும் இல்லங்கப்பா” என்ற செல்வியும் சற்று தயங்க, அவரோ மீண்டும் ஜோசியர் பக்கம் திரும்பி, “என்னென்னு நேரா சொல்லுங்க. ஏதும் பெரிய பிரச்சனையா?" என்றார்.
“ஐயா. பிரச்சனை எல்லாம் பெருசு இல்லங்கையா. ஆனா தம்பிக்கு இப்போதைக்கு மாலைப் பொருத்தம் இல்ல. இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சுத்தான்யா, தம்பிக்கு கல்யாணம் நடக்கும். அதுக்கு முன்னாடி, நம்ம பண்ணாலும், நல்லா இருக்காதுன்னு" என்று ஜோசியர் தயங்கியப்படி இழுத்தார்.
“ரெண்டு பேருக்கும் பொருத்தம் இருக்கா? இல்லையா?” என்று சங்கரேயன் கேட்க, “அதெல்லாம் பத்துக்கு, எட்டு பொருத்தம் பொருந்தியிருக்குய்யா. அதுல எல்லாம் எந்த தப்பும் இல்ல. ஆனா தம்பி ஜாதகத்துலத்தேன், கல்யாண யோகம் இப்போதைக்கு இல்ல" என்றார்.
இதைப் பற்றி செல்வியிடம் ஏற்கனவே ஜோசியர் சொல்லியிருந்தார் தான். ஆனாலும் இந்த சம்பந்தம் முடிவான நாளில் இருந்து சங்கரேயன் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சியை அவர் கெடுக்க விரும்பவில்லை. அதனால் தான் அதை சொல்லாமல் விட்டிருந்தார்.
சில நிமிடங்கள், அங்கே ஒரு வித அமைதி நிலவியது. அதன் பின், “குல தெய்வ கோவில் போறதுக்கு நல்ல நாளா பாத்து சொல்லுங்க" என்று சங்கரேயன் சற்று அழுத்தம் திருத்தமாய் கூறினார்.
அதுவே இந்த கல்யாணத்தை நான் நடத்திக் காட்டுவேன் என்று சொல்லாமல் சொல்லியது. அதற்கு மேல் ஜோசியரும் எதுவும் சொல்லாமல், “சரிங்கையா” என்றவர் அந்த வார இறுதியில் ஒரு நாளை குறித்துக் கொடுத்தார்.
இங்கே வீட்டில் இப்படி சென்றுக் கொண்டிருக்க, அன்று கதிர் ஒரு இடம் முடித்துக் கொடுப்பதற்காக, பிரசிடண்ட் உடன் ரிஜிஸ்டர் ஆபிஸ் வந்திருந்தான்.
“ரொம்ப நல்லதுய்யா. நீ வந்ததால வேலை இன்னிக்கே முடிஞ்சிருச்சு. இல்லன்னா, இன்னும் ஒரு வாரம், அந்த ப்ரோக்கர் இழுத்திருப்பான்” என்று பிரசிடண்ட் கூறினார்.
“இதுல என்னய்யா இருக்கு? நம்ம ஊருக்கு நல்லது நடக்கனும்னு நீங்க ஒன்னு செய்றீக. அதுல என்னோட பங்கும் இருந்தது எனக்கு சந்தோஷம்த்தேன்” என்றான் கதிர்.
அப்படி அவரிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே அவனுடைய மொபைலுக்கு அழைப்பு வந்தது.
“ஒரு நிமிஷம்யா” என்றவன் மொபைலை எடுத்துப் பார்க்க, “பிரியா காலிங்" என்று அவன் மொபைலில் மின்னியது.
அதில் புருவத்தை சுருக்கியவனுக்கு, ஏதும் பிரச்சனையோ என்று தான் முதலில் தோன்றியது. அதே நேரம் தனக்கு பார்த்திருக்கும் பெண்ணிடம் இருந்து வரும் முதல் அழைப்பு, அதில் சிறு ஆர்வமும் அவனுக்கு இருக்கத்தான் செய்தது.
அவனின் முன்னே நின்றிருந்த பிரசிடண்டோ, “நீ பேசிட்டு வாயா. நான் அப்படி ஓரமா இருக்கேன்" என்று சொல்லிவிட்டு தள்ளி சென்றார்.
அவர் சென்றதும், கால்லை அட்டண்ட் செய்து, “ஹலோ” என்றான் கதிர். அவன் குரலில், அந்தப் பக்கம் ஒரு பலத்த அமைதி. அதில் அழைப்பு எதுவும் கட்டாகி விட்டதோ? என்று சிந்தித்தப்படி மொபைலைப் பார்த்தான்.
அழைப்பு அப்படியே இருக்கவும், “பிரியா” என்று கேள்வியாய் இழுத்தான். “பரவாயில்லையே, என்னோட நம்பர் கூட வச்சிருக்கீங்க போல?” என்று கேலியாய் அந்தப் பக்கம் இருந்து பதில் வந்தது.
அதில் சட்டென்று இவன் முகத்தில் புன்னகை விரிந்தது. “சொல்லுங்க" என்றான் கதிர்.
“நான் தான் மரியாதைக் கொடுக்கனும்" என்றாள் பிரியா. “சரி கொடுங்க" என்று அவனும் பதில் கொடுத்தான்.
“நாளைக்கு நேர்ல என்னைப் பார்க்க வர்றப்ப கொடுக்கிறேன்" என்று அவள் சொல்ல, ஒரு நொடி புரியாது குழம்பி, “நாளைக்கு நான் உங்கள பாக்க வறேன்னு, அக்கா ஏதும் சொன்னாகளா?” என்று கேட்டான்.
அதில் கலகலவென்று சிரித்தவள், “ஆமான்னு சொன்னாத்தான், அப்போ என்னைப் பார்க்க வருவீங்களா?” என்று கேட்டாள் பிரியா. அவள் பேச்சிலேயே பிரச்சனை இல்லை என்பது புரிந்திருக்க, அதன் பின்னே சற்று இளகுக்கு திரும்பியிருந்தான்.
அவன் எதுவும் சொல்லாமல் இருக்கவும், “என்ன? என்னைப் பார்க்க வருவீங்கத்தான?” என்று கேட்டாள் பிரியா.
“அதான் சொல்லிட்டீங்களே. அப்படியே எங்க வரனும்னு சொன்னீங்கனா, அங்க வந்துடுறலாம்" என்றான் கதிர்.
“அதையும் நானேத்தான் சொல்லனுமா? நிச்சயம் பண்ன பொண்ணு கூட, உங்களுக்கு எங்க போகனும்னு தோணுதோ, அங்க போகலாம்” என்றாள் பிரியா.
இப்போது செல்வி சொல்லியது அவனுக்கு புரிந்தது. “அவ பேசுனா கேட்டுட்டே இருக்கலாம்டா. கன்னாலத்துக்கு அப்புறம் உன்னை எல்லாம் பேசவே விட மாட்டா” என்று செல்வி சொல்லிய கிண்டல் வார்த்தைகள் புரிந்தது.
அதில் அவனுக்கு சிரிப்புத்தான் வந்தது. “சரி அப்போ நாளைக்கு மீனாட்சி அம்மன் கோவில் வந்துடுறீங்களா?” என்று கேட்டான் கதிர்.
“அங்கையும் வந்து, இப்படி நீங்க, வாங்கன்னு சொல்றதா இருந்தா நான் வரலப்பா” என்று சீண்டலாய் கூறினாள் பிரியா.
“வந்ததுக்கப்புறம், நான் ஏன் நீங்க வாங்கன்னு சொல்லப் போறேன்" என்று அவனும் கிண்டலாய் திருப்பிக் கேட்டான்.
“என்னது?” என்று ஒரு நொடி புரியாமல், அடுத்த நொடி, “பரவாயில்லையே, மில்லுக்காரருக்கு ஜோக் எல்லாம் பண்ணத் தெரியும் போலையே. அப்போ ஒகேத்தான்” என்று மேலும் சீண்டினாள் பிரியா.
இப்போது நன்றாகவே சிரித்தவன், “எனக்கு என்னத் தெரியும்னு வந்து சொல்றேன். இப்போ போன்ன வைக்கட்டா?” என்றான் கதிர். ஏனெனில் அவனுக்குமே வேலை இருந்தது.
“ஆ..ங் ஒரு நிமிஷம்" என்றாள் பிரியா. “என்ன?” என்று கதிர் கேட்க, “அது. என் போட்டோவாச்சும் பார்த்தீங்களா? இல்ல அக்கா சொன்னாங்கன்னு, அதையும் பார்க்காமலே தலை ஆட்டிட்டீங்களா?” என்றாள் பிரியா.
“அதான் நேர்ல நாளைக்கு பார்க்கப் போறேன் தான" என்று அவனும் சீண்டலாய் கூறினான் கதிர்.
“அதான் எனக்கு பயமே. அப்புறம் நேர்ல பார்த்து, பயந்து நீங்க ஓடிட்டா. உங்க மொபைலுக்கு ரெண்டு போட்டோ என்னோடது அனுப்பியிருக்கேன். எதுக்கும், இப்பவே பாத்துட்டு, மனச திடப்படுத்திட்டு, என்னைப் பார்க்க வாங்க. பாய்" என்று சொல்லி கால்லை கட் செய்திருந்தாள் பிரியா.
அவளின் பேச்சு அவனுக்கு பிடித்திருந்தது என்பது முற்றிலும் உண்மை. அவள் சொல்லியது போல் அடுத்த நொடியே அவளுடைய புகைப்படத்தையும் அனுப்பியிருந்தாள். அதை அவன் ஓபன் செய்யும் முன்னே, அவனுக்கு தெரிந்தவர் ஒருவர், “கதிரு" என்று அங்கு அவனிடம் விரைந்திருக்க, அவன் மொபைலை பாக்கெட்டில் வைத்தான்.
அதன் பின், அவனுடைய இதர வேலைகள் அவனை இழுத்துக் கொள்ள, வழக்கம் போல நள்ளிரவுத்தான், மீண்டும் பிரியாவின் நினைவு வந்தது.
அதில் படுக்கையில் படுத்தப்படி தன்னுடைய மொபைலை எடுத்து நெட்டை ஆன் செய்ய, கடகடவென்று ஒரு பத்து குறுஞ்செய்தி பிரியாவிடம் இருந்து வந்தது.
அதைப் பார்த்ததுமே மனதில் இருந்த சோர்வு நீங்கியிருக்க, அதை திறந்து பார்க்காமலே, நோட்டிபிகேசனில் அதை படித்தான்.
“போட்டோ அனுப்பியும் பார்க்கலத்தான. சரி விடுங்க. இதுக்காகவே நான் நேர்ல எப்படி இருந்தாலும், நீங்க சரி சொல்லிட்டு தான் ஆகனும்" என்று அனுப்பியிருந்தாள். அதைத் தொடர்ந்து, சாப்டீங்களா? என்னப் பண்ணிட்டு இருக்கீங்க? நான் எதுவும் டிஸ்டர்ப் பண்ணிட்டேன்னா? என்று அவளே கேள்வியும் கேட்டுவிட்டு, அவளே “இவ்வளவு நேரமா சாப்பிடாம இருக்கப் போறீங்க. கண்டிப்பா வேலைத்தான் பார்த்துட்டு இருந்திருப்பீங்க. அதனால நான் டிஸ்டர்ப் தான் பண்றேன். ஆனாலும் பண்ணுவேன். எப்படியும் என்னோட தொல்லைய எல்லாம் நீங்க பழகித்தான் ஆகனும்” என்று பதிலையும் அனுப்பியிருந்தாள்.
கடைசியாய் “குட் நைட்" என்றும் அனுப்பி வைத்திருந்தாள். அதைப் பார்த்தவனுக்கு புன்னகை நிரம்பியது. அப்படியே மொபைலை வைத்து விட்டு உறங்கியிருந்தான்.
அடுத்த நாள், பிரியாவை பார்க்க கதிர் மதுரைக்கு தன்னுடைய வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினான். ஊரைக் கடந்து மெயின் ரோட்டுக்கு வண்டியை திருப்ப, அழுதப்படி நின்றிருந்த நிலாவைப் பார்த்து புல்லட்டை சடன் பிரேக் போட்டு நிறுத்தினான்.
(ஸ்ப்பா. இவ ஒருத்தி எப்போ பார்த்தாலும் அழுதுக்கிட்டு. இப்போ எதுக்கு அழுகுறான்னு வேற தெரியல. அவனுக்கு ஒரு லவ் சீன் கொடுக்க விட மாட்றாளே. சரி அடுத்து என்னென்னு அடுத்த எபிசோட்ல பார்க்கலாம். அதுக்கு முன்னாடி, நிலா கதிருக்கு ஜோடியான்னு கேட்டிருந்தீங்க. அத நீங்கத்தான் படிச்சுப் பார்த்து சொல்லனும். சோ கதிருக்கு, பிரியாவா? இல்ல நிலாவா? உங்க சப்போர்ட் யாருக்குன்னு கமெண்ட்ல சொல்லிடுங்க. அப்படியே லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணிடுங்க)
தென்றல் தீண்டுமா?
0 Comments
No comments yet.