ஊர் திருவிழா எல்லாம் முடிந்து அவரவர் தங்கள் வாழ்க்கையைப் பார்க்க ஆரம்பித்திருந்தனர். வெளியூரில் இருந்த வந்தவர்கள், எல்லாம் அவரவர் வேலைப் பார்க்கும் இடம் திரும்பியிருக்க, கிராமம் வழக்கம் போல் தன் இயல்புக்கு திரும்பியிருந்தது. நாளும், கிழமையும் யாருக்கும் நிற்காது என்பது போல், அடுத்தடுத்த நாட்கள் மின்னலென ஓடியது. முப்பதாவது நாள், நிலாவுக்கு சடங்கு செய்ய, அந்த வீட்டில் ஏற்பாடு கோலாகலமாக நடந்துக் கொண்டிருந்தது.
தண்ணி ஊற்றில் நடந்தது போல் அல்லாமல், இம்முறை தாமரை அமைதியாகவே அதில் கலந்துக் கொண்டார்.
ஏனெனில் ஊர் கட்டுப்பாடு என்று தாய்மாமன் செய்ய வேண்டிய கடமையை அவர் தடுக்கவில்லை. அதே நேரம் அவர் அதை ஏற்கவும் இல்லை. செந்தில் எல்லாம் மூன்றாம் மனிதர் போல் தான் அந்த விழாவில் கலந்துக் கொண்டார். முழுக்க, முழுக்க அந்த விழாவினை செல்வியும், முருகேசனும் தான் முன் நின்று எடுத்து நடத்தினர்.
“பிள்ளைய பெத்தா மட்டும் போதும்மா? அதுகளுக்கு செய்யவும் கொடுத்து வச்சிருக்கனும். அதெல்லாம் நம்ம சொன்னா, ஆகாதவுகன்னு நம்மளையும் வெட்டி முறிச்சு பேசுவா. நமக்கெதுக்கு" என்று தாமரையைப் பார்த்து ஜாடை மாடையாக பேசிவிட்டு தான் சென்றனர்.
ஆனால் அவருக்கு தங்கள் இடத்தில், தன் தங்கையும், கொளுந்தனும் நிற்பதில் மகிழ்ச்சித்தான். ஆனால் கதிர் என்ற ஒருவன் தான் முள் வேலியாய் அங்கே அவரை நெருங்க விடாமல் தடை செய்திருந்தான்.
“மானூத்து மந்தையில,
மான் குட்டி பெத்த மயிலே
பொட்ட புள்ள பொறந்ததுன்னு
பொலிகாட்டில் கூவும் குயிலே”
வீட்டில் கட்டியிருந்த மைக் செட்டில் தாய்மாமன் சீர் வரிசைப் பாடல்கள் வரிசையாய் ஒலிக்க ஆரம்பிக்க, உள்ளே இருந்தவர்கள் கூட வேகமாய் வெளியில் வந்தனர்.
“தாய் மாமன் சீர் சுமந்து வாராண்டி
அவன் தங்க கொலுசு கொண்டு தராண்டி"
ஊர் மெச்ச மட்டும் அல்ல, ஊர் சனமே வியந்து பார்க்கும் அளவுக்கு சீர் வரிசைகளை அடுக்கியிருந்தான். அது அத்தனையும், அவனுடைய சொந்த உழைப்பினால் வந்த பணம். அதைத்தான் காலையில் இருந்தே சங்கரேயன் அத்தனைப் பெருமையாய் அனைவரிடமும் பேசிக் கொண்டிருந்தார்.
பத்து பவுன் ஆரம், ஆறு பவுன் டாலர் செயின், ஐந்து பவுன் வளையல், ரெண்டு பவுன் கம்மல் அதோடு சேர்த்து, இன்னொன்றையும் வாங்கியிருந்தான். ஆனால் அதை அவன் சீர் தட்டில் வைக்கவில்லை. ஏன் அதை நிலாவுக்கு கொடுக்கும் எண்ணமும் இல்லை. அவன் அம்மாவுடைய ஆசை. அதற்காக வாங்கியிருந்தான். அதனால், அதை மட்டும் தனியே தன்னுடைய கபோர்டில் வைத்து பூட்டியிருந்தான்.
ஐம்பதாயிரத்துக்கு பட்டுப்புடவையும் எடுத்திருக்க, அத்தனைப் பேரின் கண்ணும், அந்த புடவையைத்தான் மொய்த்தது.
அதை எல்லாம் பார்த்த ஊர்காரர்களே, “என்னய்யா, கல்யாண சீரை விட விமர்சையால்ல இருக்கு. சங்கரேயன் ஐயா வாரிசுன்றத நிரூபிச்சிட்டையா” என்று கதிரைப் பாராட்டினர். ஆனால் அவனுக்கோ, அப்படி ஒன்றும் பெரிதாய் தோன்றவில்லை. என்றைக்காக இருந்தாலும், அதை அவன் தான் செய்ய வேண்டும். அது தான் அவனுக்கும், அவனுடைய அக்காவுக்கும் இடையில் இருக்கும் ஒரே ஒரு பாலம். அதை அவன் பிடித்து வைத்துக் கொள்ளவெல்லாம் நினைக்கவில்லைத்தான். ஆனாலும் கண் முன்னே அது உடைந்து விடக் கூடாது என்ற ஐயமும் இருந்தது.
உறவு முறை பெண்களோ, “அடியாத்தி. அக்கா மவளுக்கே, இத்தன அடுக்கியிருக்கீகளே, அப்போ உங்கள கன்னாலம் பண்ணப் போறப் பொண்ணுக்கு என்னெல்லாம் பண்ணுவீக?” என்று வாயில் கையை வைத்துக் கேட்டாள்.
“என் தம்பி, எல்லாம் பண்ணுவாண்டி, சும்மா அங்கன நின்னு வாய் அளக்காம, இங்கன வந்து ஆராத்தி கரைக்கிற வேலைய பாருங்க" என்று குரல் கொடுத்தார் செல்வி.
அதில் கூட்டம் கலைந்து ஆராத்தி தட்டுடன் நிற்க, இப்போது மீண்டும், “அக்கா மவளுக்கு செஞ்சதுல பாதியாச்சும் தட்டுல வைக்கனும் மச்சான். அப்பத்தேன் உள்ள விடுவோம்" என்று கேலியை ஆரம்பித்திருந்தனர்.
“ஏத்தா, அவுக என்னா கன்னாலம் கட்டவா வந்திருக்காக, வழிய விடுங்கத்தா. அதெல்லாம், உங்க மச்சான் கன்னாலத்துல வச்சுக்கோங்க" என்று பெரியவர்கள் சொல்ல, “ஆஹான். அதெல்லாம் ஆகாது அக்கா மவ மட்டும் உசத்தி. அத்த மவ நாங்க மட்டும் ஏமாந்தவகளா” என்று அவர்களும் சரிக்கு சமம் நின்றனர்.
அதற்குள் அங்கு வந்த செல்வி, “அடியே, உங்கள கரைச்சித்தானடி வைக்க சொன்னேன். ஆளுக்கு முத ஆளா தூக்கிட்டு வந்து நிக்கிறவள்க. கொடுடி" என்றவர் வாங்கி தன் தம்பிக்கு ஆரத்தி எடுத்தார். அவனோ ஒரு வித தயக்கத்துடன் சற்று தள்ளி அமர்ந்திருந்த தாமரையைப் பார்த்தான்.
“அங்கன என்ன மாப்பிள்ள பார்வை. இது எம் புள்ள விசேசம். முற செய்ய என் மாப்பிள்ள வந்திருக்க. உள்ள கெத்தா வாய்யா” என்று முருகேசனும் செல்வியின் அருகில் வந்து கூறினார்.
அதில் மெல்லிய புன்னகையுடன் அவன் உள்ளே செல்ல, தாமரையோ தெரியாமல் கூட தம்பியின் பக்கம் முகம் திருப்பவில்லை. அவனுக்கோ எதுவும் கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணாமல் இருப்பதே நல்லது என்று தோன்றியது.
“வாயா. வந்து புள்ளைக்கு மாலைய போட்டு, உன் கையால தாய் மாமன் சேலைய கொடு. உம் மனசு மாதிரியே, அவ வாழ்க்கையும் சீரும் சிறப்புமா இருக்கனும்" என்று சங்கரேஸ்வரி அழைக்க, தாமரைக்கெல்லாம் வாய் வரை வார்த்தை வந்தது. இருந்து பல்லைக் கடித்துக் கொண்டு அமர்ந்திருந்தார்.
அதில் அவனும், அவனுக்கு அடுத்திருந்த பங்காலிமார்களும் உள்ளே செல்ல, அவனோ அப்போதும் கூட நிலாவை நிமிர்ந்துப் பார்க்கவே இல்லை. ஆனால் அவளோ அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
கடைசியாய், செல்வியிடம் வளையலைக் கொடுக்கும் போது ஓலை இடைவெளி வழியே அவனைப் பார்த்திருந்தாள். அதன் பின் அவன் அந்த வீட்டின் பக்கமே வரவில்லை. முழுதாய் பதினைந்து நாட்கள் கழித்து இப்போது தான் பார்க்கிறாள். அவளின் பார்வை அன்னிட்சையாய் அவனுடைய இடைக்கும், கைக்கும் தான் சென்றது. அவளுடைய உயரத்துக்கு, அவளால் நிச்சயம் அவன் முகத்தை பார்த்திருக்க முடியாது என்பது வேறு கதை.
“நல்ல நேரம் முடியிறதுக்குள்ள மாலைய போடுய்யா” என்று பெரியவர் ஒருவர் சொல்ல, அவனும் தட்டில் கொண்டு வந்த மாலையை கையில் எடுத்தான். அவளோ, அவனுடைய கரத்தில் இன்னும் தழும்பு எதுவும் இருக்கிறதா என்று தேடினாள்.
அவனுடைய கரம் மெலிதாய் அவளுடைய தாடையை உரச, அவள் கழுத்தில் கனமான மாலை ஒன்று விழுந்திருந்தது. அப்போதே கஷ்டப்பட்டு நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்தாள்.
குறை ஏதும் சொல்ல முடியாத மாசற்ற முகம், ஆண்மையின் அம்சமாய், முகத்தில் இருந்த மீசை, அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவ்வளவுத்தான் மற்றப்படி பட்டாம் பூச்சி பறக்கும் எண்ணம் எல்லாம் அவளுக்கு இல்லை. அவளுக்கு அதெல்லாம் என்ன என்று கூட தெரியாது என்பது வேறு.
“நிலா மாமன் கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்குமா” என்று உறவுக்காரப் பெண் ஒருவர் சொல்ல, அவளும் அவர்கள் சொல்லியப்படி அவன் காலில் விழ சென்றாள். அதற்குள், அவளை காலில் விழ விடாமல் தடுத்தவன், அங்கிருந்து கிளம்பினான்.
அதற்குள் புகைப்படம் எடுப்பவர், “எண்ணே, போட்டோ எடுக்கனும்னே, பாப்பாவோட சேர்ந்து நில்லுங்க" என்றார்.
அதில், வேறு வழியின்றி அவளருகில் அவன் நிற்க, “கொஞ்சம் கிட்ட வாங்கண்ணே. அப்பத்தேன் சீர் வரிசை தட்டெல்லாம் தெரியும்" என்றார் புகைப்பட கலைஞர். அப்போதும் அவள் பக்கம் திரும்பாமல், அவள் பக்கம் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டு வெளியில் வந்திருந்தான். அவனைத் தொடர்ந்து மற்ற மாமன் முறையில் இருந்தவர்கள், மாமன் மகன்கள் எல்லாரும் மாலை அணிவித்து சென்றனர்.
“செரி செரி. புள்ளைக்கு சீக்கிரம் மாமன் எடுத்துட்டு வந்த சீலைய கட்டி மேடைக்கு அழைச்சிட்டு வாங்க. இல்லன்னா இவ ஆத்தாக்கு எப்போ எந்த கிறுக்கு பிடிக்கும்னு தெரியாது. எதையாச்சும் ஏழரைய இழுக்கிறதுக்குள்ள முடிங்க" என்று சங்கரேஸ்வரி சத்தம் கொடுக்க, கதிர் அங்கிருந்து வெளியில் போடப்பட்டிருந்த பந்தலுக்கு வந்திருந்தான்.
வந்திருந்தவனிடம், உறவுக்காரர்கள் எல்லாம் பேச, அவனும் சிரித்து பேசிக் கொண்டிருந்தான். அங்கே அவனைப் பார்த்த அத்தை முறையில் இருந்த ஒருவரோ, “ஆத்தா, இது நம்ம சங்கரேயன் அண்ணன் மகனா?” என்று கேட்டார்.
“என்னடி இப்புடி கேட்டுட்ட. வெளியூர்ல கட்டிக் கொடுத்தா, அத்தனையும் மறந்துடுவீயா? அவரோட ஒத்தக்கோர் வாரிசுடி" என்று அழுத்தி சொன்னார்.
அதில் அவருடைய முகத்தில் சிந்தனைக் கோடு ஓட, “இங்க ஏதும் அவருக்கு பொண்ணு எதுவும் பேசி வச்சிருக்காகளா?” என்று கேட்டார்.
ஏனெனில் அக்கா மவளுக்கு சீர் வரிசை இப்படி செய்யவும் ஒரு வேளை கதிருக்கும், நிலாவுக்கும் எதுவும் பேசி வைத்திருக்குமோ என்று நினைத்து தான் அப்படி கேட்டார். ஏனெனில் ஊர் வழக்கப்படி ஒருத்தருக்கு பேசி வைத்திருக்கும் பட்சத்தில் வேறு சம்பந்தம் பத்தி பேசுவதே மிகப்பெரிய தப்பு.
அவருடைய எண்ணம் அறிந்தவரோ, “அடியே அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல. அவென் அக்காக்காரிக்கு, இவென்னாலே ஆகாது. பொறவு எப்படி பொண்ணுலாம் கட்டிக் கொடுக்க நினைப்பா. நீ உன் மனசுல என்ன நினைக்கன்னு சொல்லு. நான் வேணும்னா பேசுறேன்" என்றார் அந்த பாட்டி.
“இல்ல ஆத்தா, நம்ம பிரியாக்கு பாக்கலாம்னு யோசிச்சேன்" என்றார் அவர். “நம்ம பிரியாக்கா. அவ பட்டணத்துல வளர்ந்தவளாச்சேடி, நம்மூருக்கு வாக்கப்பட சம்மதிப்பாளா?” என்று கேட்டார் பாட்டி.
“ஏன் வாக்கப்பட மாட்டா? நான் எல்லாம், இங்கன பொறந்து அங்க போயி வாழலையா? அதுவும் போக என்னத்தேன் சொன்னாலும், நம்மூர் மாதிரி வருமா? பையனும் பாக்க அம்சமா இருக்கான். சொத்துக்கும் பஞ்சமில்லை. ஊரே அவனை மெச்சுது. அப்புறம் என்ன, எம்புள்ள ராணியா இருக்க மாட்டா” என்றார் அவர்.
அது தாமரையின் காதிலும் தெளிவாய் விழுந்தது. பட்டென்று “வெளக்கமாருக்கு பட்டு கட்டுன மாதிரித்தேன்" என்று சத்தமாகவே கூறியிருந்தார்.
ஆனால் அதற்குள், மேள சத்தம் கேட்க, தாமரை பேசியது யாருக்கும் கேட்கவில்லை. அவருமே, மேடை ஏறி வந்த தன் மகளைப் பார்க்க பார்வையை திருப்பியிருந்தார். கதிர் எடுத்து வந்திருந்த புடவையில், தேவதையாய் மின்னிய பெண்ணவளின் மீது தான் ஊர் காரர்கள் அத்தனைப் பேரின் கண்ணும் இருந்தது.
“பாக்க சின்னப்புள்ளக்கணக்கா இருப்பா. ஆனா புடவைக் கட்டுனதும் பாக்க பெரிய பொண்ணுக்கணக்கா தெரியிறா பாருங்களேன்" என்று யாரோ உறவுக்காரப் பெண் சொல்லும் போதே கதிர் எதார்த்தமாய் திரும்பி மேடையைப் பார்த்தான். ஒரு நொடி தன் அக்கா மகளின் அழகில் திகைத்துத்தான் நின்றிருந்தான். முழுதாய் முப்பது நாட்களுக்கு பின் அவளின் முகம் பார்க்கிறான். இப்போதும் அதே சிறு பெண் தோற்றம் தான்.
மற்றவர்கள் போல் அவளை அந்த நொடியிலும் பெரிய பெண்ணாக பார்க்கவெல்லாம் அவனுக்கு சத்தியமாய் தோன்றவில்லை.
“புடவை கொஞ்சம் லேசானதா வாங்கிட்டு வந்திருக்கனுமோ, கடையில தூக்குறப்பையே அத்தன கனமா இருந்திச்சு. கனமான பொடவைய எப்படி அவ தாங்குவா? " என்ற யோசனைத்தான் இப்போது கதிருக்கு ஓடிக் கொண்டிருந்தது. அதற்கு ஏற்றாற் போல் நிலாவும், “ரொம்ப கனமா இருக்கு சித்தி" என்று மாலையையும் புடவையையும் பிடித்தப்படி முகத்தை சுருக்கினாள் நிலா.
(ஸ்ப்பா, ஐயா ராசா நீ அவள சின்ன புள்ளையாவே பாரு. ஆனாலும், நீ பண்றதெல்லாம் ரொம்ப ஓவரு. சேலை கனத்த தாங்க மாட்டாளா அவ? இதுக்கே அசந்துட்டா இன்னும் எவ்வளவு பாக்க வேண்டி கெடக்கு? சரி அடுத்து என்னென்னு அடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட் எப்படி இருந்திச்சுன்னு கண்டிப்பா நீங்க கமெண்டல சொல்லியே ஆகனும். அப்படியே மறக்காம ரேட்டிங்-ம் கொடுத்திடுங்க. ரொம்ப பிடிச்சிருந்தா உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணிக்கோங்க)
தென்றல் தீண்டுமா?
0 Comments
No comments yet.