கவியிடம் கோவப்பட்டு, விறுவிறுவென்று, வேந்தன் அவர்கள் அறைக்குச் சென்று விட்டான். அவளோ அங்கேயே சில நிமிடங்கள் அப்படியே அமர்ந்து விட்டாள். பழைய கவியாக இருந்திருந்தால், பெயருக்காவது அவனிடம் மன்னிப்பைக் கேட்டிருப்பாள். ஆனால் இப்போது அவளுக்கோ, அவன் பிடிவாதத்தின் மீது கோவம் தான் வந்தது.
அன்றைய தினம் முழுவதும் வேந்தன் அவளிடம் முகம் கொடுத்தே பேசவில்லை. அவளும் அதை எல்லாம் கண்டுக் கொள்ளாது, அவனுக்கான வேலையை மட்டும் செய்துக் கொடுத்தாள். அதில் வேந்தனுக்கோ இன்னும் கோவம் தான் வந்தது.
பொறுத்து பொறுத்துப் பார்த்தவன், அடுத்த நாள் காலையில், அவள் காபியை கொண்டு வந்து வைக்கும் போது, “என் பொண்டாட்டியா செய்றதா இருந்தா மட்டும் இத நீ செய். இல்லன்னா எனக்கொன்னும் தேவை கிடையாது” என்றான்.
“என்னைப் பொறுத்தவரைக்கும், இந்த வீட்டுல நான் ஒரு வேலைக்காரி மட்டும் தான். என்னோட வேலை இத கொண்டு வந்து வைக்கிறது. அத குடிக்கிறதும், குடிக்காததும் உங்களோட விருப்பம்” என்று வெடுக்கென்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றிருந்தாள்.
அவளின் பேச்சில், “திமிரு திமிரு. சரியான ராங்கிப் பிடிச்சவ. கொஞ்சம் கூட மனுசன பத்தி யோசிக்கவே மாட்டா. இவள போயி கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்தேன்ல. எனக்கு இதுவும் வேணும். இன்னமும் வேணும்” என்று கடுப்பாய், அங்கிருந்த காபியை கூட எடுத்துக் கொள்ளாது அமர்ந்து விட்டான்.
இங்கே கிச்சனுக்குள் வந்த கவியோ, “இவர யாரு தேவையில்லாம என் கழுத்துல வந்து தாலிய கட்ட சொன்னது. இல்ல, என்ன இதுக்கு இங்க கூட்டிட்டு வந்து, என் நிம்மதிய மட்டும் இல்லாம, அவர் நிம்மதியையும் சேர்ந்து கெடுத்துக்க சொன்னது. பண்ண தப்பெல்லாம் அவர் பண்ணிட்டு, என் மேல கோவமா இருக்காராம். இருக்கட்டுமே. இப்போ அவர் கோவமா இருந்தா, நான் போய் வெட்கத்த விட்டுட்டு அவர்ட்ட கெஞ்சனுமா? குடிச்சா குடிக்கட்டும். இல்லன்னா எப்படியோ போகட்டும்” என்று கடுப்பாய் சொல்லியவள், தன்னுடைய ஆத்திரத்தை எல்லாம் அங்கிருந்த பாத்திரத்தில் காட்டிவிட்டு வழக்கம் போல் அவளுடைய நூலக அறைக்குள் சென்று விட்டாள்.
வழக்கமாய் அதற்குள் சென்று விட்டாள் என்றால் மதியம் சாப்பிட கூட வராது நேரே மாலைத்தான் வெளியில் வருவாள். இன்று ஏனோ அங்கேயும் சில நொடிகள் இருக்க முடியவில்லை. கோவமாய் வந்தது. அவளுக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்க வேண்டும்? என்று பல்லாயிரம் கோடி தடவைக்கு மேலாக யோசித்து விட்டாள். ஆனால் பதில் தான் கிடைக்கவே இல்லை.
அதற்குள் ஏதோ சத்தம் கேட்க, நிமிர்ந்துப் பார்த்தாள். அந்த அறைக்கு எதிர் அறையில் தான், வேந்தனுடைய அலுவலக அறை. அங்குத்தான் அவனும் போனில் யாருடனோ எதையோ மும்முரமாய் பேசிக் கொண்டிருந்தான்.
அவன் முகத்தில் தெரிந்த அந்த கடுப்பே, ஏதோ பிரச்சனை என்பதை இவளுக்கு காட்டிக் கொடுத்தது. முதலில் கண்டுக் கொள்ளாமல், தன் கவனத்தை கையில் வைத்திருந்த புத்தகத்தில் திருப்பினாள். சில நொடிகளில் எதார்த்தமாய் அவள் நிமிர்ந்துப் பார்க்க, அவனோ சோர்வாய், அப்படியே அங்கிருந்த மேஜையில் தலை சாய்த்து படுத்திருந்தான். ஏனோ அவனை அப்படிப் பார்க்க அவளால் முடியவில்லை. அவளையும் மீறி எழ நினைத்தவள், பின் மீண்டும் தன் மனதை இரும்பாக்கிக் கொண்டு, “அவர் என்னவோ பண்ணிட்டு போகட்டும். எனக்கென்ன வந்திச்சு, நீ ஒரு மனிதாபிமானத்துல ஏதாச்சும் செஞ்சேன்னா கூட, அதுலையும் அவரு காரியம் சாதிக்கத்தான் பார்ப்பாரு. இல்லன்னா, உன் மனசுல இல்லாத விஷயத்த, நடக்கவே முடியாத விஷயத்த எல்லாம், உன்ன ஒத்துக்க சொல்லுவாரு. இதெல்லாம் உனக்குத் தேவையா?” என்று அவளின் மூளை கேள்விக் கேட்க, அமைதியாய் அமர்ந்து விட்டாள்.
ஆனாலும் அவன் என்ன செய்கிறான்? என்று அவ்வப்போது நிமிர்ந்துப் பார்க்கத்தான் செய்தாள். அவனோ எப்படி இருந்தானோ? அப்படியேத்தான் இருந்தான்.
“ச் நம்ம பார்க்கனும்னே, இங்க வந்து உட்கார்ந்திட்டு இருப்பாரா இருக்கும்?” என்றவள், புக்கை மூடிவிட்டு அங்கிருந்து இறங்கி கீழே சென்று விட்டாள். அவளோ தெரியாமல் கூட அவனை நெருங்கி விட கூடாது என்பதில் தெளிவாய் இருந்தாள்.
கிட்ட தட்ட இரவு வரையிலும் கூட, அவன் இறங்கி வர வில்லை. செல்லம்மாவோ வழக்கம் போல், “அம்மா, தம்பி இன்னும் சாப்பிட வரவே இல்ல” என்றார்.
அவளுக்கும் அது தெரியும். அவன் வருவானா? என்றுத்தானே நொடிக்கு நொடி, அவளும் மேலே பார்த்துக் கொண்டிருந்தாள். அவனோ வரவே இல்லை. இப்போது செல்லம்மா சொல்லவும் ஏனோ அவனின் மீதான கோவத்தை இப்போது இவரின் மீது காட்டினாள்.
“அதுக்கு நான் என்னப் பண்ணட்டும்? இந்த வீட்டுல நீங்க எப்படியோ? நானும் அப்படித்தான். என்ன உங்களுக்கு சம்பளம்னு ஒன்னு கொடுக்கிறாங்க. எனக்கு அதுவும் கிடையாது. உங்களுக்கு அவ்வளவு அக்கறை இருந்தா? நீங்களே போயி என்னென்னு பாருங்க” என்று கடுப்பாய் சொல்லிவிட்டு அங்கிருந்து வெளி தோட்டத்துக்கு சென்று விட்டாள்.
அவ்வப்போது அவள் அங்கு வருவது வழக்கம் தான். ஏனோ வீட்டுக்குள்ளே இருப்பது ஒரு வித கடுப்பைக் கொடுக்க, அங்கே இருந்த பெஞ்சில் அமர்ந்து விட்டாள்.
இவள் செல்லம்மாவிடம் சொல்லிய விஷயத்தை கேட்ட வேந்தனுக்கோ அப்படி ஒரு கோவம். சரியாக அன்னேரம் தான் அவன் மாடியில் இருந்து கீழே வந்திருந்தான். அவன் வந்ததை அவளும் கவனிக்கத்தான் செய்தாள். எப்படியும் அங்கு நின்றால், தேவை இல்லாமல் ஏதாவது பேசுவான் என்றுத்தான், அப்படியே வெளியில் வந்திருந்தாள்.
கீழே வந்த வேந்தனோ, “அவ கிட்ட எதுவும் சொல்லாதீங்க. பேசாதீங்கன்னு சொல்லிருக்கேன் தான” என்று அழுத்தம் திருத்தமாய் கேட்டான். அவனுடைய கேள்வியே அத்தனை மிரட்டலாய் இருக்க, “மன்னிச்சிடுங்க தம்பி” என்றார்.
“இன்னொரு தடவ சொல்லிட்டு இருக்க மாட்டேன். வேலைய விட்டு அனுப்பிடுவேன்” என்று முதலும் கடைசியுமாய் சொல்லியவன் அங்கிருந்து வெளியில் வந்தான். வந்தவனை நோக்கி ட்ரைவர் வர, அவரிடம் இருந்த கார் சாவியை வெடுக்கென்று பிடுங்கி, தானே காரை எடுத்துக் கொண்டு கிளம்பியிருந்தான்.
கார் சத்தம் கேட்டு அவள் நிமிர்ந்துப் பார்க்க, இன்னும் அவனின் மீது கோவம் தான் வந்தது. இன்னும் கூட அவனுக்கு வயிற்றில் காயம் ஆறவில்லை என்று மருத்துவர் காலையில் தான் சொல்லிவிட்டு சென்றார்.
“அப்படி என்னத்தான் பிடிவாதமோ? எல்லாம் அவர் தங்கச்சிய சொல்லனும். ஏதோ குச்சி மிட்டாய் கேட்ட மாதிரி, அவ என்ன கேட்டிருக்கா, இவரும் அப்படியே வாங்கி கொடுக்கிறாரு” என்று விழியையும் சேர்த்து திட்டியவளுக்கு, கோவம் எரிச்சல் தான் வந்தது.
“ச் இவருக்கு இருக்கிற பாசத்துல, ஒரு பாதியாச்சும் அவளுக்கு இருந்திருந்தா, அண்ணன் வாழ்க்கைய கெடுத்திருப்பாளா? அவத்தான் சொன்னான்னா, இவராச்சும் கொஞ்சமாச்சும் யோசிச்சு பார்க்க வேண்டாம்?” என்றவள் முற்றும் முழுதாய் தன்னுடைய ஆருயிர் தோழியையும், ஆயுட் கால கணவனையும் திட்டியப்படி அப்படியே அமர்ந்து விட்டாள்.
செல்லம்மாவோ, அதன் பின் வேந்தனைப் பற்றி கவியிடம் பேசவில்லை. ஆனால் அவளை சாப்பிட அழைக்க வந்தார். அவர் முகமே வேந்தனிடம் நன்றாக வாங்கி கட்டியுள்ளார் என்பதை சொல்லியது.
இப்போது ஏனோ, தன்னால் அவர் திட்டு வாங்கியது சற்று கவலையாகவும் இருந்தது. “நீங்க சாப்டீங்களா?” என்றாள். அவரோ, “உங்களுக்கு சாப்பாடு எடுத்து வச்சிருக்கேன்மா. அங்க வந்து சாப்பிடுறீங்களா? இல்ல இங்க கொண்டு வந்து கொடுக்கட்டுமாம்மா” என்றார்.
அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாது, அவருடைய கடமைக்கென பேசியதே அவருடைய மன நிலையை இவளுக்கு சொல்லியது. அதில் இவளுக்கு கவலையாகிப் போனது.
சிறு வயதில் இருந்தே தெரியாமல் கூட யாரிடமும் கோவத்தை காட்டியதில்லை. அவளுக்கு கெட்டது செய்பவர்களிடம் கூட முகம் வாடா புன்னகையுடன் தான் பதிலளித்துள்ளாள்.
அவன் வலுக்கட்டாயமாய் கட்டிய அந்த தாலி அவளுடைய குணத்தையே மாற்றியிருந்தது. மொத்தமாய் மாறிப் போயிருந்தாள்.
இப்போது அவள் சாப்பிடவில்லை என்றால், அதற்கும் அவர் தான் திட்டு வாங்குவார். இல்லை என்றால், அவரும் சாப்பிடாமல் இருப்பார் என்பதால் எதுவும் சொல்லாது, “இங்க எடுத்துட்டு வறீங்களா?” என்றாள்.
“சரிங்கம்மா” என்று சொல்லியவர் அடுத்த சில நொடிகளில் அவள் சாப்பாட்டை எடுத்து வந்து கொடுத்தார். “நீங்க போய் சாப்பிடுங்க” என்றாள் கவி.
“நீங்க சாப்டுங்கம்மா. தட்டெல்லாம் எடுத்துட்டு போறேன்” என்று சொல்ல, எப்படியும் அவள் சாப்பிட்டாளா? இல்லையா? என்பதை அவன் கேட்பான். அதனாலையே செல்லாது நின்றார். இவளும் அவருக்காக சாப்பிட்டு முடிக்க, அவர் தட்டை எடுத்துக் கொண்டு சென்றார்.
சாப்பிட்டதும் அப்படியே அமர்ந்திருக்க, அவளுக்கு எப்படியோ இருந்தது. அதனால் அந்த தோட்டத்தில் இங்கும், அங்கும் என நடக்க ஆரம்பித்தாள். மனம் எதை எதையோ யோசித்தது. எதற்கும் பதிலும் இல்லை. தீர்வும் இல்லை.
கழுத்தில் கிடந்த அந்த தாலி அத்தனை கனமாய் தோன்றியது. “பேசாம இத கழட்டி வச்சிட்டு எங்கையாச்சு போயிடலாமா?” என்று யோசித்தாள்.
“அவர் உன்ன கண்டுப்பிடிக்க முடியாத ஒரு இடம். உனக்கு முதல்ல தெரியுமா?” என்று மனம் நக்கலாய் கேட்டது.
“ச் நான் உயிரோட இருக்கிற வர, யாருக்கும் நிம்மதி கிடைக்கப் போறதே இல்ல. பேசாம” என்றவள் உயிரை விட யோசிக்க, விழிக்கு செய்துக் கொடுத்த சத்தியம் கண் முன்னே வந்து இம்சித்தது.
“இங்கப்பாரு கவி. உன் வாழ்க்கையில என்ன நடந்தாலும், நீ எப்பவும் கோழைத்தனமான எந்த முடிவையும் எடுக்க கூடாது. அதுக்கு மேல நீ ஏதாச்சும் பண்னிக்கிட்டேன்னா, நானும் உயிரோட இருக்க மாட்டேன். லவ்க்காக மட்டும் இல்ல, நட்புக்காக கூட, இந்த விழி அவ உயிரைக் கொடுப்பா. அத மறந்துடாத” என்ற விழியின் குரல் இப்போதும் கேட்க, அந்த முடிவை தற்காலிகமாய் கை விட்டாள்.
இன்றோ, நேற்றோ அல்ல, கிட்ட தட்ட பல வருடங்களாய், அந்த ஒரு சத்தியம் தான் இவளை இன்றளவும் உயிருடன் வைத்திருக்கிறது. அதை எல்லாம் யோசித்தவள் நேரம் சென்றதே தெரியாது அப்படியே அமர்ந்திருந்தாள். குளிர் காற்று அவள் தேகத்தை சுடும் போதுத்தான், நேரமானதையே உணர்ந்தாள். எப்படியும் மணி நள்ளிரவைத் தொட்டிருக்கும். அப்போதுத்தான் வேந்தன் இன்னும் வரவில்லை என்பதே அவளுக்கு தோன்றியது. வேகமாய் வாசலைப் பார்த்தாள். அவன் கார் அங்கு இல்லை.
“இன்னும் வராம என்னப் பண்றாரு?” என்றவளுக்கு இப்போது மெல்லியப் பயம் எட்டிப் பார்த்தது. ஆனால் அதற்குள்ளாக, அவனுடைய கார் அசுர வேகத்தில் உள்ளே வந்தது.
“ச் இவ்ளோ ஸ்பீடாத்தான் அந்த காரை ஓட்டனுமா?” என்று இவள் சொல்ல, அங்கே அவனோ காரைத் திறந்து தள்ளாடியப்படி இறங்கினான்.
முதலில் காயத்தால் அப்படி நடக்கிறானோ? என்று நினைத்து அவள் வேகமாய் அவனை நெருங்கப் பொக, சில நொடிகளிலேயே அவன் முழுதாய் குடித்து விட்டு வந்திருப்பது தெரிந்தது. அதில் அவளோ அடுத்த அடி எடுத்து வைக்காது அப்படியே நின்றிருந்தாள்.
(ம் ரொம்ப சந்தோஷம் கவி. அவனையும் குடிகாரனாக்கிட்ட. அடுத்து இன்னும் என்னெல்லாம் ஆக்கப் போறன்னு நானும் பாக்குறேன். அடுத்து என்னாகப் போதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமென்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)
தித்திக்குமா?..
Shree Ram
நல்ல இருந்த பையனா குடிகாரனா ஆக்கிடேயே கவி😭😭😭💝💝💞💞💞💝