வேந்தனோ, அவளை அவள் கூட்டில் இருந்து வெளியில் இழுத்து வர எவ்வளவோ முயற்சித்தான். ஆனால் அவளோ, இறகை இறந்த பறவைப் போல் ஒதுங்கியே இருந்தாள். வெளியில் மக்கள் பிரச்சனையை வெகு இலகுவாய் கையாண்டவனுக்கு, இவளை கையாள முடியவே இல்லை. அவன் ஒரு பக்கம் இழுத்தால், அவளோ மொத்தமாய் வேறு ஒரு பக்கம் ஓடினாள். இவனுக்கு பொறுமை இல்லை. அவளுக்கோ இவனைப் புரிந்துக் கொள்ளும் நிலைமை இல்லை.
ஆனாலும் சில விஷயங்களில் அவளிடம் அவன் இளக்கம் பார்க்கவே இல்லை. பிடித்தோ, பிடிக்காமலோ, அவனுடைய வேலைகளை, அவள் தான் செய்தாள். அவளுக்காக கூட இன்று வரை அவள் கிச்சன் செல்லவில்லை. ஆனால் அவனுக்காக ஒரு நாளில் பத்து முறையாவது கிச்சனுக்கு செல்வாள்.
காலையில், அவன் எழும் முன், இவள் எழுந்து காபியை நீட்டவில்லை என்றால், சற்றும் யோசிக்காது அவளை தூக்கிக் கொண்டு நீச்சல் குளத்தில் குதித்து விடுவான். அதனாலையே இப்போதெல்லாம் அவன் எப்போது தூங்குவான்? எப்போது முழிப்பான்? என்று தெரிந்து வைத்துக் கொண்டாள்.
ஒரே வீட்டில், ஒரே அறையில் இருக்கிறார்கள் என்றுத்தான் பெயர். ஆனால், மனதால் ஒரு அடி கூட இருவரும் நெருங்கியிருக்கவில்லை. கிட்ட தட்ட அடுத்த இரண்டு வாரங்கள் இப்படியேத்தான் ஓடியது. அன்றும் அப்படித்தான். ஏதோ கட்சி வேலைக்காக, அறக்க பறக்க கிளம்பிக் கொண்டிருந்தான்.
இவளோ கடமையே கண் என்பது போல், அவனுக்கான உடையை எடுத்து வைத்து விட்டு, கீழே சென்று அவனுக்காக சாப்பாட்டை டைனிங் டேபிளில் எடுத்து வைத்தாள். ஆனால் அவனோ, போன் பேசியப்படியே சப்பிடாது சென்று விட, இவளோ அதைப் பற்றிய கவலை இன்றி அவன் சென்றதும் அந்த அறைக்குள் சென்று புகுந்துக் கொண்டாள்.
மதியம் போல் அவளுக்கு சாப்பாடு கொண்டு வந்த செல்லம்மாவோ, “அம்மா தம்பி இன்னும் சாப்பிட கூட வரலம்மா” என்றார்.
அதில் அவளோ அதை ஏன் என்னிடம் சொல்கிறாய்? என்பது போல் ஒரு பார்வை பார்க்க, அவரும் அதற்கு மேல் எதுவும் சொல்லாது, அங்கிருந்து சென்று விட்டார். இவளுக்கோ அந்த வீட்டில் அவன் இல்லை என்றால் தான், சற்று மூச்சே வரும். இப்போதும் அவன் இல்லாததை நிம்மதியாகத்தான் உணர்ந்தாள். அதனால் செல்லம்மா சொல்லியதை அவள் காதில் கூட வாங்கிக் கொள்ள முடியவில்லை.
அன்றிரவும், அவன் வந்திருக்கவில்லை. அது அவளுக்கு ஒன்றும் வித்தியாசமாக தெரியவில்லை. ஏனெனில் அவன் அடிக்கடி வராமல் இருப்பான் தான். ஆனால் செல்லம்மாத்தான் இம்முறை அவளிடம், “ஏம்மா தம்பிக்கு என்னாச்சுன்னே தெரியல. இன்னும் வரலம்மா” என்று பதறினார்.
அடுத்த நாள் மதியமும் செல்லம்மா அதையே சொல்ல, இவளுக்கோ எரிச்சல் கூடியது. “ச் அத எதுக்கு எண்ட்ட வந்து சொல்றீங்க?” என்று சொல்லியவள் பாதி சாப்பாட்டில் எழுந்துக் கொண்டாள்.
அதற்கு மேல் அவர் அவளிடம் எதுவுமே சொல்லவில்லை. ஏனெனில், அவன் வராமல் இருப்பதெல்லாம் புதிதில்லைத்தான். சில மாதங்கள் கூட வெளியில் தங்குவான். ஆனால் இவள் வந்த நாளில் இருந்து, ஒரு வேளை தவறாது எல்லா வேளையும், எங்கு இருந்தாலும் செல்லம்மாவுக்கு கால் செய்து அவளைப் பற்றி விசாரித்து விடுவான். ஆனால் இம்முறை அவன் கால் கூட செய்யவில்லை என்பது தான் சிறு பயத்தை கொடுத்திருந்தது.
அதை அறியாத கவியோ, “என்ன கடத்திட்டு வந்து அடிமையாக்கி ஒருத்தன் வச்சிருக்கான். அப்படிப்பட்டவன பத்தி நான் ஏன் யோசிக்கனும்?” என்று தனக்குள்ளே சொல்லியவளுக்கு, அந்த ஒருவனின் மீது கட்டுங்கடங்காத கோவம் தான் வந்தது.
அடுத்த மூன்று நாளும் கூட அவன் வந்திருக்கவில்லை. அதைப் பற்றி எல்லாம் அவள் கவலைப்படவும் இல்லை. ஆனால் வீட்டுக்குள்ளே இருப்பது அவளுக்கு மூச்சு முட்டுவது போல் இருந்தது. அவன் தான் வீட்டில் இல்லையே வெளியிலாவது சென்று வரலாம் என்று அவள் யோசிக்க, அவள் நினைவை பொய்யாக்குவது போல், ஐந்து நாட்களுக்கு பிறகு அவனுடைய கார் வீட்டுக்குள் நுழைந்தது.
அதை பால்கனியில் நின்று பார்த்தவளுக்கு அவன் ஏன் வந்தான்? என்ற கேள்வி மட்டுமே மனதில் ஓடியது. கார் கதவை சென்று ட்ரைவர் திறக்க, கையிலும், நெற்றியிலும் கட்டோடுத்தான் இறங்கினான்.
ஒரு நொடி என்னவோ? என்று யோசித்தவள் அடுத்த நொடியே, அவனுக்கு என்னவா இருந்தா எனக்கென்ன? என்று அசட்டையாய் சொல்லியவள் அறைக்குள் சென்று விட்டாள்.
அவன் கீழே நின்றிருந்தாலும், அவள் பார்த்தது, அவள் முகத்தில் தோன்றிய அலட்சியம் அது எல்லாம் அவனுக்கு நன்றாகவே தெரிந்தது. அதில் இவனோ அதை எதிர்பார்த்தது போல் அசட்டையாய் தோளைக் குலுக்கிக் கொண்டான்.
கையில் கட்டுடன் உள்ளே வந்தவனைப் பார்த்த செல்லம்மாத்தான், “அச்சோ என்னாச்சு தம்பி?” என்று அத்தனை பதட்டமாய் கேட்டார். அதில் அவனோ, “ஒன்னும் இல்ல. நீங்க போயி உங்க வேலைய பாருங்க” என்று சொல்லிவிட்டு தன்னுடைய ஆட்களின் பக்கம் திரும்பினான்.
அவர்களும் அவனிடம் தலையாட்டிவிட்டு, அங்கிருந்த சோபாவில் சில நிமிடம் அப்படியே அமர்ந்தான். எப்படியும் அவள் வரமாட்டாள் என்று தெரியும். ஆனால் இப்போது உள்ளே சென்றால் என்ன பேச வேண்டும் என்பதை, முடிந்த மட்டும் மீட்டுக் கொண்டிருந்தான்.
அவளுக்கு எப்படியோ? அவனுக்கு அவளைப் பார்க்காத இந்த ஐந்து நாட்கள் கஷ்டமாகத்தான் இருந்தது. அவளைப் பற்றி தெரிந்துக் கொள்ள கூட முடியாத நிலையில் இருந்தான். இப்போது, அந்த கனம் மனதில் இருந்து குறைந்திருக்க, எழுந்து மேலே சென்றான்.
செல்லும் நொடி செல்லம்மாவிடம், “சாப்டாளா?” என்று கேட்க, அவருக்கு ஏனோ இப்போது கவியின் மீது சிறு கோவம் எட்டிப் பார்த்தது. “அவங்களுக்கென்ன தம்பி. நேரத்துக்கு சாப்டு நல்லாத்தான் இருக்காங்க” என்று பொசுக்கென்று சொல்லிவிட அவனோ, சிறு கண்டிப்போடு அவரைப் பார்த்தான்.
வயதில் மூத்தவர் என்பதால், கோவத்தை நேரடியாய் காட்டவில்லை. ஆனாலும், “அவள நல்லப்படியா பாத்துக்கத்தான் நீங்க இங்க இருக்கீங்க. அது ஞாபகம் இருக்கட்டும்” என்று சிறு அழுத்தம் கூட்டி சொல்லியிருந்தான்.
அவன் குரலில் தெரிந்த அழுத்தமே, அவளைப் பற்றி ஒரு வார்த்தை பேசக் கூடாது என்பதை சொல்லாமல் சொல்லியது.
அதில் அவருமே, “மன்னிச்சிடுங்க தம்பி. ஏதோ தெரியாம பேசிட்டேன். அவங்க சாப்டாங்க” என்றார்.
அவனும், “தெரியாம கூட இனி பேசக் கூடாது” என்று சொல்லிவிட்டு படியேறி சென்றான்.
செல்பவனையே பார்த்த செல்லம்மாவுக்கு இன்று வரையிலும் கூட, அந்த பெண் இவனுக்கு என்ன வேண்டும் என்று தெரியாது. அந்தப் பெண்ணின் கழுத்தில் இருக்கும் தாலியும், இவனின் அறைக்குள் இருக்கும் உரிமையும் மட்டுமே, அவளை, அவனின் மனைவியாக இருக்குமோ என்று பார்க்க சொல்லியது.
அதுவும் கூட வேந்தனின் மீது அவருக்கிருக்கும் நம்பிக்கையின் விளைவு. இப்படி எந்த பெண்ணையும் அவன் வீட்டுக்கு கொண்டு வந்து நிறுத்தியதில்லை. ஆனால், கவியைப் பார்க்கும் போது, வேறொருவனின் மனைவியை இவன் என்னவோ கட்டாயப்படுத்தி இழுத்து வந்திருப்பது போல் தான் தோன்றும்.
ஆனால் இதை எல்லாம் இருவரிடமும் கேட்டு தெரிந்துக் கொள்ள முடியாது. அப்படி நடந்தால், அவருடைய வேலை பறிபோகும். பெரிய இடத்தில் நமக்கு கொடுக்கப்படும் மரியாதையை வைத்துக் கொண்டு தன் வேலையை மட்டும் பார்ப்பதே நல்லது என்று அவரும் அதற்கு மேல் அதை யோசிக்கவில்லை.
இங்கே அறைக்குள் நுழைந்தவனின் பார்வை அன்னிட்சையாய், அவளைத் தேட, அவளோ வழக்கமாய் அவள் அமர்ந்திருக்கும் சோபாவில் தான் இருந்தாள்.
“என்ன? நான் இல்லாம ரொம்ப நிம்மதியா இருந்தப் போல” என்று சிறு புன்னகையுடன் கேட்டப்படி சற்று கஷ்டப்பட்டு நடந்து வந்து அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தான்.
அவன் வரும் முன்னே அவனின் வாசனை அவள் நாசியை தழுவியிருக்க, அவன் வந்ததை பார்க்காமலே அறிந்துத்தான் இருந்தாள்.
இப்போது அவளோ, “உங்களுக்கே தெரிஞ்சிருக்கே” என்று பட்டென்று சொல்லிவிட்டு அங்கிருந்து எழுந்தாள்.
“சந்தோஷப்பட்டுடாத. அப்படி எல்லாம், இந்த வேந்தன் உன்ன விட்டுட்டு செத்துட மாட்டான்” என்று நக்கலாய் உதட்டை சுழித்துக் கூறினான்.
ஏனோ இறப்பு என்ற ஒரு சொல், அவள் உடலை அதிர செய்தது. ஆனால் அவள் மனதின் உணர்வுகள் எல்லாம் எப்போதோ செத்து மடிந்திருக்க, எதுவும் சொல்லாது அங்கிருந்து வெளியில் செல்ல முயன்றாள்.
அவனோ எக்கி அவள் கையை பிடிக்க முயற்சிக்க, காலில் இருந்த காயம் சுள்ளென்ற வலியைக் கொடுக்க, “ஸ்” என்றான். அதில் அவன் பக்கம் திரும்பியவளோ, அவனின் கட்டுகளை ஒரு நொடி ஆராய்ச்சியாய் பார்த்தாள். அதில் நிச்சயம் ஒரு பரிதாப பார்வைக் கூட இல்லை.
“என்ன? சைட் அடிக்கிறீயா?” என்று அவன் நக்கலாய் கேட்க, “எல்லாத்தையும் பிடிக்கனும், அடையனும்னு நினைச்சா, இப்படி அடிவாங்கிட்டுத்தான் கெடக்கனும்” என்று இகழ்ச்சியாய் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றிருந்தாள்.
அவளின் வார்த்தையில், இங்கே இவனுடைய கோவம் கடகடவென்று கூடியது. தெரியும். எப்படியும் அவள் இப்படி எல்லாம் பேசுவாள் என்று எதிர்பார்த்துத்தான் உள்ளே வந்தான். ஆனாலும் கூட நொடிக்கும் குறைவாய் அவன் மனதின் ஓரத்தில், சிறிய பரிதாப பார்வையாவது அவளிடம் இருக்கும் என்று எதிர்பார்த்திருந்தான். ஆனால் அதுவும் இல்லாமல் போனதோடு, அவனின் இந்த நிலமை அவனுக்கு தேவைத்தான் என்று பேசியது அவனுக்குள் சுள்ளென்று தைத்தது.
காலில் மட்டும் அல்லாது வயிற்றிலுமே காயம் ஆழமாய் இருக்க, சட்டென்று அவனால் எழுந்துக் கொள்ள முடியவில்லை. இல்லை என்றால் அவள் பேசிய வார்த்தைக்கு, அப்போதே அவளை இழுத்துப் பிடித்து அவளுக்கான தண்டனையை கொடுத்திருப்பான். இப்போது அதையும் செய்ய முடியாதது, அவனுக்கு கடுப்பைக் கொடுக்க, “என் உடம்பு சரியாகட்டும். அதுக்கப்புறம், நீ பேசுன ஒவ்வொரு வார்த்தைக்கும், இந்த வேந்தன் பதிலடி கொடுப்பான்” என்று சொல்லியப்படி சட்டையை கழட்ட முயன்றான்.
அவனால் அது கூட முடியவில்லை. மருத்துவமனையில் இருந்து கிளம்பும் போதே அவனின் உதவிக்கு செவிலியர் ஒருவரை அனுப்புவதாகத்தான் மருத்துவர் கூறினார். ஆனால் இவன் தான் அதை மறுத்து விட்டு வந்திருக்க, இப்போது ஒரு வித எரிச்சலைக் கொடுத்தது.
அதில் அவனுடைய அஸிஸ்டெண்ட் அருளுக்கு அழைத்து கத்தினான்.
அவன் தான் வேலையை முடித்து விட்டு வர சொன்னான். இப்போது உடனே போன்னை போட்டு கத்தவும், “சரி சார் நான் வரேன்” என்றான்.
“ஒரு டேஷும் தேவ இல்ல. நீ இங்க வந்தன்னா, அப்புறம் நான் சொன்ன வேலைய யாரு உன் அப்பா பாப்பாரா?” என்றவன் அவனை மட்டும் அல்லாது அவன் அப்பாவையும் சேர்த்து திட்டினான்.
“ரைட்டு சாரு ரொம்ப நல்ல மூட்ல இருக்காரு போல. நம்ம வாயை கொடுக்காம வாங்கிப்போம்” என்றவன் எப்போதும் போல் அவன் திட்டை வாங்கிக் கொள்ள, இங்கே, வேந்தனோ, கவியிடம் காட்ட முடியாத அத்தனை கோவத்தையும், கடுப்பையும் அவனிடம் கொட்டி விட்டு கால்லை கட் செய்தான்.
பின் சட்டையை கழட்டாமலே கட்டிலில் படுத்துக் கொண்டான். இங்கே கவியோ ஒரு வித எரிச்சலோடு, அந்த நூலக அறையிலேயே புத்தகம் ஒன்றை எடுத்துக் கொண்டு அதில் மூழ்கிவிட்டாள்.
(இப்போ நான் யாருக்கு சப்போர்டா பேசுறது? செரி அடுத்து என்னாகப் போதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுஙக். அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)
தித்திக்குமா?..
Shree Ram
kavi😡