தென்றல் – 14

அதென்னவோ பெண்களுக்கு வீட்டில் எத்தனை நகை தங்கத்திலேயே வாங்கிக் கொடுத்தாலும், திருவிழா கடைகளில் வாங்குவது என்றால் தனி மகிழ்ச்சித்தான். கோவிலுக்குள் இருந்த கூட்டத்தை விட, திருவிழா கடைகளில் நின்றிருந்த கூட்டம் தான் அதிகம். சிறுவர்களில் இருந்து பெரியவர்கள் வரை அவரவர்களுக்கு பிடித்த கடைக்குள் நின்றிருந்தனர். ஒரு பக்கம் பக்தர்கள் கோவிலில் உருண்டுக் கொடுக்கும் நேர்ச்சை நடந்துக் கொண்டிருக்க, மறு பக்கம் அன்னதானம் நடந்துக் கொண்டிருந்தது.

எங்குப் பார்த்தாலும், மக்கள் வெள்ளம் அலை மோதியது. வெளியூரில் வேலைப் பார்ப்பவர்கள் கூட, கடைசி நாள் திருவிழாவுக்கு விடுமுறை எடுத்து வந்திருந்தனர். ஒரு பக்கம் கபடி போட்டி நடக்க விருப்பதால், அங்கேயும் கனிசமான மக்கள் கூட்டம் நிறைந்திருந்தது.

மைக்கில் வேறு சத்தமாய் அம்மன் பாடல் ஒலித்துக் கொண்டிருக்க, இடை இடையே, அவனை மறித்து சொந்தக்காரர்கள் பேசிக் கொண்டிருந்தனர். இப்படி அத்தனைப் பேரையும் கடந்து வளையல் கடை அருகே வந்து நின்றான் கதிர்.

அங்கேயும் அவனுடைய முறைப் பெண்களின் கூட்டம் நின்றிருக்க, முதலில் அங்கிருந்து செல்ல முயற்சித்தான். அதன் பின் நிலாவின் நினைவு வரவும், சில நொடி தயங்கி நின்றான்.

அதற்குள், “அங்க பாரேன். வளையல் கடை பக்கமா நிக்கிறது நம்ம கதிர் மச்சான் தானே” என்று ஒருவள் பார்த்திருக்க, “அட ஆமா” என்ற மற்ற பெண்களும் அவனை சுற்றி வளைத்திருந்தனர்.

சட்டென்று அவர்கள் சுற்றி வளைக்கவும், “உங்களுக்குலாம் வூட்டுல வேலையே இல்லையாக்கும். போயி ஆத்தாக்கு ஏதாச்சும் உதவி பண்ண வேண்டியதுத்தேன்ன” என்றான் கதிர்.

“அதெல்லாம் அவுக பாத்துப்பாங்க மச்சான், இப்போ நீங்க வாங்க வந்து எனக்கு வளையல் வாங்கிக் கொடுங்க" என்று ஒருவள் அவனைப் பிடித்திழுக்க, இன்னொருவளோ, “அடியே, முறையில மட்டும் இல்ல வயசுல மூத்தவ நான்த்தேன். என் அத்தான் எனக்குத்தேன் வாங்கிக் கொடுப்பாக" என்றாள் இன்னொருவள்.

“அதெல்லாமில்ல. எனக்குத்தேன்" என்று இன்னொருவள் சண்டைக்கு வர, அதற்குள் கதிரை கடந்து சென்ற பெரியவரோ, “என்னலே கதிரு? முறைப் பொண்ணுங்கத்தேன் இத்தன இருக்குல்ல, இதுல ஒன்னா பார்த்து கட்டிக்க வேண்டியதுத்தேன்ன" என்றார்.

“அட ஏன் சித்தப்பூ?” என்று கதிர் அவரைப் பார்க்க, “அப்படி சொல்லு மாமோய். நாங்க இத்தனைப் பேரு இருக்க. இவுக அக்கா எங்கள எல்லாம் வேண்டாம்னுட்டு, அசலூர்ல போயி பொண்ணு பார்த்துட்டு இருக்காக” என்றாள் ஒருவள்.

“அவுக பொண்ணுப் பார்க்குறாகன்னு உங்களுக்கே தெரியுதுல்ல. நீங்களாம் பொண்ணாடி. என் மகனுக்கு, ராணி மாதிரி ஒரு பொண்ணு வருவாளாக்கும்” என்று ஒரு நடுத்தர வயது பெண்மனி ஒருவர் கூறினார்.

“ஆமா ஆமா, அப்படி எல்லாம் எங்க மாமா பாத்திருந்தா, உமக்கெல்லாம் கன்னாலம் ஆகியிருக்குமா?” என்று அவர்களும் விடாமல் வம்பு பேசினர். கதிரோ அங்கிருந்து செல்ல முயற்சித்தான்.

“என்ன மச்சான்? அப்படி எல்லாம் எங்கள ஏமாத்திட்டு போ முடியாது. வாங்க வந்து வாங்கிக் கொடுங்க" என்று சட்டையைப் பிடிக்காத குறையாக சுற்றி நின்றனர். 

“ஏல கதிரு. முறைப் பொண்ணுங்கத்தேன் கேட்குதுல கூட்டிட்டு போயி வாங்கிக் கொடு" என்றார் கதிரின் சித்தப்பா முறையில் இருந்த ஒருவர்.

“அட ஏன் சித்தப்பா நீ வேற?” என்றவன், “ஓ அதேன் இம்புட்டு நேரம், அங்க உமா சித்திக்கு என்னவோ வாங்கி கொடுத்திட்டு இருந்தீகளோ? ஏன் சித்தி, உமக்கு இவரு ஏதாச்சும் வாங்கிக் கொடுத்தாரா?” என்று அவரை அழகாய் அவரிடம் சிக்க வைத்தான் கதிர்.

“என்ன? அந்த சிறுக்கியும் வந்திருக்காளா? அதேன், வழக்கமா, நான் ராத்திரிக்கு கூப்டாலும் கோவிலுக்கு வராத மனுஷன், இன்னிக்கு விடியங்காட்டியும் அழைச்சிட்டு வந்திருக்காரேன்னு நினைச்சேன். இதான்னா சேதி. வூட்டுக்கு வாங்க உங்களுக்கு இருக்கு" என்று அவர் சொல்லிவிட்டு அவர் செல்ல,

“அட என்ன மகன, இப்புடி மாத்திவுட்டுட்ட" என்றவரும் மனைவியின் பின்னே சென்றார்.

அதைப் பார்த்து சிரித்தவன், சுற்றி நின்றவர்களிடம், பையில் இருந்த பணத்தை எடுத்துக் கொடுத்து, “என்ன வேணுமோ போயி வாங்கிக்கோங்க. பத்தலன்னா, என் பேரை சொல்லுங்க போங்க" என்றான்.

“மச்சான்னா மச்சாத்தேன்" என்று அவன் கன்னம் கிள்ளி ஒருவள் கொஞ்சப் போக, அவளை முறைப்பாலையே எட்டி நிறுத்தியவன், “பிடிச்சத வாங்குனோம்மா. செத்த நேரம் சுத்திட்டு வூட்டுக்கு போனோம்மானு இருக்கனும். சும்மா அங்க இங்கன்னு, நின்னு பிரச்சனையில மாட்டிக்க கூடாது" என்று எச்சரித்து விட்டே அங்கிருந்து நகர்ந்தான் கதிர்.

அவன் வளையல் கடையை நெருங்கும் போதே, அவனிடம் ஓடி வந்த ஒருவன், “எண்ணே நம்ம பசங்கள அடிச்சிட்டானுங்கண்ணே” என்றான்.

அதில், “எவென்ல? எதுக்குல்ல அடிச்சான்?” என்று கதிர் கேட்க, “அங்க கபடி கிரவுண்ட்லண்ணே” என்று அவன் சொல்ல, அதில் வேகமாய் அங்கு சென்றான் கதிர். 

கதிரைப் பார்த்ததும் அவனிடம் வந்த சிவா, “வேணும்னே பிரச்சன பண்றாணுங்கண்ணே” என்றான்.

“யாருல?” என்று கதிர் கேட்க, “அவனுங்கத்தேன்" என்று கபடி சீருடையில் நின்றிருந்தவர்களை கை காட்டினான்.

“எத்தன ரவுண்ட்ல முடிஞ்சிருக்கு?” என்று கதிர் கேட்க, “ஒன்னுத்தான்னே முடிஞ்சிருக்கு. அதுக்குள்ள நம்ம பசங்க ரெண்டு பேர் கைய உடைச்சி விட்டுட்டாங்கண்ணே” என்றான் சிவா.

அதில் அவனை முறைத்தவன், அவர்கள் டீம்மின் பக்கம் திரும்பி, “அவனுங்க அடிச்சானுங்கன்னா, உங்க கை என்ன புளியங்காயாலே பறிச்சிட்டு இருந்திச்சு?” என்று கோவமாக கேட்டான் கதிர்.

“இல்லன்னே, இங்கன பிரச்சன வேணாம்னு சொன்னதால" என்று சிவா சொல்ல, “பிரச்சன வேணாம்னு தான்ல சொன்னேன். அதுக்காக பிரச்சன பண்றவனுங்கள பார்த்துட்டு சும்மா நிக்க சொல்லல. நான் இருக்கேன். நீங்க இறங்குங்க. எவென் நம்ம பசங்க மேல கை வச்சாலும், உங்களுக்கும் கை இருக்குல்ல? திருப்பிக் கொடுங்க" என்று மீசையை நீவியப்படி கூறினான் கதிர்.

“பிரச்சன ஆயிட்டா?” என்று சிவா கேட்க, “ஆகட்டும், இப்போ என்னாச்சு. வெளயாட்டுல அடி படுறது சாதாரணம்த்தான?” என்ற கதிரின் பார்வை மொத்தமும், அங்கே கூட்டமாய் நின்றிருந்தவர்களின் மேல் தான் படிந்து மீண்டது.

பின் இவர்கள் பக்கம் திரும்பி, “என்ன? நீங்க இறங்குறீகளா? இல்ல நான் இறங்கட்டுமா?” என்றவன் சட்டையைக் கழட்டப் போக, “நீ இருண்ணே. உன் தம்பி நாங்க எதுக்கு இருக்கோம். நாங்க எப்படி வெளையாடுறோம்னு, நீ நின்னு பாருண்ணே” என்று ஒருவன் சொல்லியப்படி முன்னே நடக்க மற்றவர்களும் பின்னே சென்றனர்.

அவர்கள் சென்றதும், “முதல்ல அடிப்பட்டவனுங்கள, ஹாஸ்பிடல் கூட்டி போக சொல்லு” என்று சிவாவிடம் சொல்ல, அதற்குள் அடுத்த கட்ட கபடி போட்டி ஆரம்பமாகியிருந்தது.

இம்முறையும் அவர்கள் வேண்டுமென்றே இவர்களுடைய அணியை தாக்க, இம்முறை அவர்கள் சும்மாவெல்லாம் இல்லை திருப்பிக் கொடுக்க ஆரம்பித்தனர்.

அதை எல்லாம் சற்று தள்ளி நின்று பார்த்த பாண்டி, “என்னல? இவென் இறங்குவான்னு பார்த்தா, இறங்காம நிக்கான்" என்றான்.

“போன தடவையே, அவென் அக்கா விளையாடக் கூடாதுன்னு சொல்லிச்சில்ல” என்று ஒருவன் சொல்ல, “நம்ம பசங்க கிட்ட சொல்லி, அவென்ன இறங்க வைக்க முடியும்மான்னு பாரு" என்றான் பாண்டி.

“அவசரப்படாதேண்ணே. இப்போ என்ன? எப்படியும் ஊர்க்காரங்க முன்னாடி, நம்மளால பெருசா எதுவும் பண்ண முடியாது. மொழப்பாரி கெழம்பட்டும். அப்புறம் பார்த்துக்கலாம்" என்று கூறினான் ஒருவன். அவனுக்கும் அதுவே சரி என்று தோண்ற, “உமக்கு என் கையாலத்தேன்ல சாவு" என்று சொல்லியப்படி அங்கிருந்து பாண்டி கிளம்பியிருந்தான்.

இங்கே கதிருடைய அணி, எதிரணியை வெளுத்து வாங்கியிருக்க, கதிர் அங்கிருந்த சேரில் அமர்ந்து அதை சிரிப்புடன் பார்த்திருந்தான்.

“வழக்கம் போல, நம்ம கதிர் டீம் தான் இந்த வாட்டியும் ஜெயிச்சிருக்கு" என்று மைக்கில் சொல்ல, அங்கிருந்த பெண்கள் எல்லாம் கை தட்டி விசிலடித்தனர்.

அதில் தோற்ற அணியினை சேர்ந்த ஒருவன், அங்கிருந்த பெண்ணின் தாவணியை சட்டென்று இழுத்து விட, இருக்கையில் இருந்து எழுந்த கதிர், அடுத்த நொடி, இழுத்தவனை தரையில் எட்டி மிதித்திருந்தான்.

சட்டென்று கூட்டம் கூட, அந்தப் பெண்ணையும், மற்றப் பெண்களையும் அங்கிருந்து கண்ணாலையே நகர சொல்ல, அவர்களும் அங்கிருந்து சென்றிருந்தனர்.

அவர்கள் சென்றதும் தரையில் கிடந்தவனின் நெஞ்சில் கால்லை அழுத்திப் பதித்தவன், “ஆம்பிளைன்னா, வீரத்த எங்க காட்டனுமோ? அங்க காட்டனும். சிவா” என்று கோவமாய் அழைத்தான்.

அதில் சிவாவும், மற்ற ஆட்களும் வர, “இவென் கையை உடைச்சு வூருக்கு வெளிய தூக்கிப் போடுங்க" என்று கதிர் சொல்ல, “வேண்டாம்னே தெரியாம பண்ணிட்டான். விட்டுடுங்கண்ணே” என்று அவனுடன் வந்தவர்கள் கூறினர்.

“இப்போ இவன விட்டா, நாளைக்கு மத்தவனுக்கும் இந்த புத்தித்தேன் வரும். பொண்ணு மேல கைய வைக்கிறவன் எல்லாம், மண்ணுக்குத்தேன்ல போயி சேரனும்" என்று ஓங்கி மிதித்து விட்டு அங்கிருந்து சென்றான் கதிர்.

கபடி மைதானத்தில் நடந்த பிரச்சனை காட்டுத்தீயாய் பரவி செல்வியிடம் துளசி “எல்லாம் உம்ம சொல்லனும் மதினி. நீரு மட்டும் மச்சான்னா கபடி ஆடக்கூடாதுன்னு சொல்லாம இருந்திருந்தா, இன்னேரம் அவனுங்க கூட்டத்துல ஒருத்தனும், முழுசா வூடு போயி சேர்ந்திருக்க மாட்டானுங்க" என்று சொல்லிக் கொண்டிருந்தாள். நிலாவோ செல்வியின் மடியில் படுத்திருந்தாள்.

“போதும்த்தா. இந்த ஊருக்காக, எந்தம்பி பட்ட கஷ்டமெல்லாம் போதும்” என்று செல்வி சொல்ல, “ஊரால எங்க பட்டாக, இவ ஆத்தா, ஐயன்னாலத்தேன்ன மச்சானுக்கு அத்தன கஷ்டமும்" என்று நிலாவைக் கைக் காட்டி கூறினாள் துளசி.

அதில் நிலா பட்டென்று செல்வியின் மடியில் இருந்து எழுந்துவிட, “அடியே எவடி இவ. சின்னப் புள்ள முன்னாடி என்னத்த பேசுறதுன்னு தெரியாம. போடி திருவிழாக்கு போனும்னு சொன்னத்தான. கிளம்பு" என்றார் செல்வி.

“அதேன்ன, இவள ஒன்னு சொல்லிடக் கூடாதே. உடனே என்னை விரட்டிடுவீகளே, ஆயிரம்ந்தேன் சொன்னாலும், இவ ஆறு வீட்டுக்கோ வாழப் போற புள்ள. நாந்தேன் கடைசி வரை உங்க கூட இருப்பேன்னாக்கும்" என்று சிலுப்பிக் கொண்டு சென்றாள் துளசி.

இங்கே நிலாவோ, அவள் சொல்லிச் சென்றதின் அர்த்தம் விளங்காமல், “ஏன் சித்தி? என்னை ஆறு வீட்டுக்கோ அனுப்பி வச்சிடுவீகளா?” என்று பயந்துப் போய் கேட்டாள்.

“என் ராசாத்திய அப்படி எல்லாம் அனுப்புவோம்மா நாங்க. அவ கெடக்கா. நீ தூங்குடா” என்று தன் மடியில் அவளைப் படுக்க வைத்து அவள் முதுகை தட்டிக் கொடுத்தார்.

சில நொடிகளில் அவள் உறங்கி விட செல்விக்குத்தான், துளசி சொல்லி சென்ற வார்த்தை நிதர்சனத்தை முகத்தில் அடித்து சொல்லியது.

சரிதானே வயதுக்கு வரும் வரைத்தானே பெண் பிள்ளைகள் பிறந்த வீட்டுக்கு சொந்தம். அதன் பின், புகுந்த வீடுத்தானே அவளுக்கு எல்லாம்.

“ச் நான் ஏன் இப்பவே இதையெல்லாம் யோசிக்கேன். அவ சின்னப் புள்ள" என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டார் செல்வி.

அங்கே மொளப்பாரி ஊர்வலம் ஆரம்பிக்கப் போக, அத்தனைப் பேரும் கோவிலுக்குள் இருந்தனர். அதனால் கதிர் வளையல் கடைப்பக்கம் வந்திருந்தான். அவன் அங்கிருந்த ஒரு கல்யாண வளையலை கையில் எடுத்துப் பார்த்தான்.

(க்கும் அங்க என்னென்னா சின்னப்புள்ளன்னு சொல்றாக. நீ என்னென்னா கல்யாண வளையல கையில எடுக்குற. சரி அடுத்து என்னத்தான் ஆகப் போதுன்னு அடுத்த எபிசோட்ல பார்க்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

தென்றல் தீண்டுமா?

Comments   0

*** தென்றல் – 14 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***