கிட்டதட்ட இரவு ஒன்பதைக் கடந்திருக்க, ரைஸ்மில்லில், இரவு காவலாளியையும், கதிரையும் தவிர ஒருத்தரும் இல்லை. பொதுவாகவே எத்தனை வேலை இருந்தாலும், எட்டு மணிக்கு மேல், வேலைப் பார்ப்பவர்கள் எவரையும் வேலைக்கு அனுமதிக்க மாட்டான். அதற்கு முக்கிய காரணம், அவனுடைய ரைஸ்மில்லில் பெண்கள் அதிகமாய் வேலைப் பார்க்கிறார்கள். அதனால் அவர்களை விரைவில் அனுப்பி விட வேண்டும் என்பது கதிருடைய முக்கிய கட்டளை. முடிந்த அளவுக்கு ஆறு மணிக்கெல்லாம், வேலையை முடித்து அவர்களுக்கான சம்பளத்தையையும் கையில் கொடுத்தே அனுப்பி விடுவான். ஏனெனில் ஆண்களின் வேலை இங்கு பார்ப்பதோடு முடிந்து விடும். ஆனால் பெண்கள் அப்படி இல்லையே. இங்கேயும் வேலைப் பார்த்து விட்டு, வீட்டுக்கு சென்று வீட்டு வேலையையும் பாக்க வேண்டும். அதனால் மட்டுமே அந்த சலுகை. மற்றப் படி வேலை நேரத்தில் கதிரிடம் சிறு சலுகையை கூட எதிர்பார்த்திட முடியாது. சொன்ன நேரத்தில் முடித்திருக்க வேண்டும். இல்லை என்றால் கதிருடைய கோவ முகத்தை அங்கிருக்கும் அத்தனைப் பேரும் சந்திப்பார்கள். எத்தனை தன்மையாய் நடந்துக் கொள்வானோ? அதே அளவுக்கு சட்டென்று கோவமும் வந்து விடும்.
இப்போதும் அப்படித்தான் அத்தனைப் பேரும் சென்றிருக்க, உதவிக்கு வருகிறேன் என்று சொல்லிய சிவாவையும் வேண்டாம் என்று மறுத்து விட்டு தனியாளாய், அந்த கணக்கு நோட்டைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
கதிரைப் பொறுத்த வரை அதெல்லாம் ஒரு வேலையே கிடையாது. இருந்தாலும் பண விரயம் என்பதால் சற்று அதிக கவனம் அதில் கொடுப்பான். இப்போதும் அப்படித்தான் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அப்போது அங்கு மூச்சு வாங்க ஓடி வந்த குமார், “எண்ணே, உன்னை அக்கா, கையோட கூட்டி வர சொல்லிச்சு" என்று சிறு பதட்டத்தோடு கூறினான். அவனுடைய பதட்டத்திலும், அக்காவின் அழைப்பிலும் சட்டென்று கணக்கு புத்தகத்தை மூடி வைத்தவன், “என்னல? ஏதும் பிரச்சனையா?” என்று கேட்டப்படி கையில் இருந்த பணத்தை அங்கிருந்த கபோர்ட் ஒன்றில் வைத்து பூட்டினான்.
“ஆ..ங் உங்கள கூட்டியார சொன்னாங்கண்ணே” என்று அவன் அதையே சொல்ல, அதற்கு மேல் அவனிடம் கேட்டாலும் வேலைக்காகது என்பது புரிந்து, அந்த உள் அறையை பூட்டிவிட்டு குமாருடன் வெளியில் வந்தான்.
ஏனோ சட்டென்று கலங்கிய முகம் நினைவுக்கு வர, அதை மண்டையைக் குலுக்கி சரி செய்தவன், தன்னுடைய புல்லட்டில் ஏறி அடுத்த இருபதாவது நிமிடத்தில் அந்த பெரிய வீட்டின் முன் நின்றிருந்தான்.
ஏதோ வேகத்தில் புல்லட்டை நிறுத்தி விட்டு, அந்த வீட்டுக்குள் அடி எடுத்து வைக்க சென்றவன், பின் சட்டென்று பின் வைத்து, “அக்காள கூட்டியா” என்று திரும்பி நின்றுக் கொண்டான் கதிர்.
அந்த வீட்டுக்குள் அவன் செல்ல யாரும் தடை சொல்லவில்லைத்தான். ஆனால் செல்லக் கூடாது என்ற அவனுடைய வைராக்கியத்தை மற்றவர்களும் உடைக்க விரும்பவில்லை. அவனாய் மனம் வந்து வரட்டும் என்று செல்வியும் அவனை உள்ளே அழைப்பதில்லை.
இப்போது மீண்டும் உள்ளே சென்று வந்த குமாரோ, “எண்ணே, அக்கா உங்கள பின்னாடி வர சொன்னாக" என்றான்.
அதில் அவனும் எதையோ சிந்தித்தப்படி செல்ல, அருகில் செல்ல செல்ல நிலாவுடைய அழுகை சத்தம் செவியை நிறைத்தது. அதில் அதுவரை அமைதியாய் நடந்தவன், வேக எட்டில் அங்கு சென்றிருந்தான்.
சடங்கு கழிக்கும் வரை, எந்த ஆண் முகத்திலும் முழிக்க கூடாது. பெற்ற தகப்பனாகவே இருந்தாலும், ஒதுங்கித்தான் செல்ல வேண்டும் என்பது, அந்த ஊரின் வழக்கம். அதனாலையே, இவள் சடங்கான நாளில் இருந்து கிட்ட தட்ட பத்து நாள், கதிர் வீட்டுப் பக்கமே வருவதில்லை. ஏனெனில், அவன் தங்கியிருக்கும் தோட்டத்து வீட்டில் இருந்து, நிலா தங்கியிருக்கும் அந்த ஓலை குச்சல் நன்றாகவே தெரியும். அது நிச்சயமாய் தாமரைக்கு பிடிக்காது. அந்த ஒரு காரணம் தான். மற்றப்படி அவனின் மனதில் வேற எந்த நினைவும் இல்லை.
“என்னல? தம்பிட்ட சொன்னீயா? இல்லையா?” என்று கேட்டப்படி செல்வி பின் கட்டுக்கு அவசரமாய் வர, “என்னாச்சுக்கா? ஏன் அழுவுறா?” என்று பதட்டமாய் கேட்டான் கதிர்.
“ஏதோ கெட்ட கனா கண்டிருப்பா போல. விடாம அனத்துறா. இப்படியே வுட்டா காய்ச்ச கண்டுடும்" என்றார் செல்வி.
“வைத்தியச்சிய கூப்டு வரனுமாக்கா” என்று குழப்பமாய் கேட்டான் கதிர். “இல்லல்ல. அதெல்லாம் வேணாம். நம்ம கொல சாமி திருனூற மட்டும் கொஞ்சம் எடுத்துட்டு வாயா. இங்கன பூஜையறையில இருந்தத அப்பாருக்கு முடியலன்னு, அங்க வச்சிட்டேன். நீத்தேன், எப்பவும் வச்சிருப்பீயே. அதேன்" என்றார் செல்வி.
“சரிக்கா” என்று சொல்லியவன், விறுவிறுவென்று உள்ளே சென்று அதை எடுக்க சென்றான். பின் சட்டென்று ஏதோ நினைவு வர பின் பக்க கிணற்றுக்கு சென்று இரண்டு வாளி தண்ணீரை தலைக்கு ஊற்றி குளித்து விட்டு, வேறு உடை மாற்றி, அங்கிருந்த சிறு பூஜையறைக்குள் சென்றான். அங்கே அவனுடைய அம்மாவுடைய புகைப்படம் பெரிது செய்து மாட்டியிருந்தான். அதன் அருகிலேயே குல தெய்வத்தில் புகைப்படமும் இடம்பெற்றியிருந்தது. ஒரு நொடி தன் தாயின் புகைப்படம் முன் நின்று மனதார வேண்டியவன், அங்கிருந்த திருநீரை ஒரு பேப்பரில் எடுத்துக் கொண்டு வெளியில் வந்தான்.
கடவுள் நம்பிக்கைக்கும், கதிருக்கும் பல கிலோ மீட்டர் தூரம். ஆனாலும் குல தெய்வத்தின் மீது மட்டும் சிறு பிடிப்பு இருந்தது. அதற்கு அவனுடைய அன்னை மட்டுமே காரணம். ஏனோ அன்னையின் மறைவிற்கு பின், அதையாவது பின்பற்றுவோம் என்று பின்பற்றுகிறான். இப்போது சிறு பிள்ளைக்கு முடியவில்லை என்பது போல் நினைத்து தான், அதை எடுத்து வந்தான்.
“சரில, சோழியா இருந்தீயா? தொந்தரவு பண்ணிட்டேன்னா? சாப்டீயா?” என்று செல்வி சிறு தயக்கத்தோடு கேட்டார்.
“ச் என்ன அப்புறமா நலம் விசாரிக்கலாம். முதல்ல போயி அந்தப் புள்ளைய பாரு. டாக்டர் ஏதும் வர சொல்லனும்னாலும் அழைச்சிட்டு வரேன்" என்றான் கதிர்.
“ஆம மச்சான், இதுக்காக டாக்டரு, கலெக்டரு, எல்லாத்தையும் வர சொல்லுவாக. உங்க அக்கா மவளுக்கு, உம்ம கை திருநீரே போதுமாக்கும்" என்று சொல்லியப்படி நிலாவுக்கு துணைக்கு இருந்த, கதிரின் முறைப் பெண் துளசி கேலியாக உதட்டை சுழித்தாள்.
அவனோ, “இன்னேரத்துல, இங்கன என்னத்த பண்ணிட்டு இருக்கிறவ?” என்று சற்று கோவமாய் கேட்டான்.
“அடியாத்தே, இவுக அக்கா மவளுக்கு துணைக்கு வந்தா, மச்சான் என்னமோ, அவுகள கழவாடிட்டு போறது மாறில்ல முறைக்கிறாக" என்று அவள் தாடையை தோள்பட்டையை இடித்து சிலுப்பிக் கொண்டாள்.
“ஆறு நீரு, அவளுக்கு துணைக்கா. நீ ஒருத்திப் போதும் அவள பயமுறுத்துறதுக்கு" என்றான் கதிர்.
“அடேங்கப்பா. அப்படி ரொம்பத்தேன் அக்கறைன்னா, நீங்க இருந்து, உங்க அக்கா மவளுக்கு காவல் இருக்கிறது. என்னமோ நாங்கத்தேன், உங்க வூட்டுப் புள்ளைய அப்படியே கரைச்சி குடிக்கிற மாதிரியில பேசுறீக" என்று அவளும் சரிக்கு சரி வாய் அளந்தாள்.
அதற்குள் செல்வி அங்கே வந்திருக்க, “ஏண்டி, எம்ம தம்பிக்கிட்ட வம்பு வளத்துட்டு இருக்கிறவ. போடி புள்ள தனியா இருக்கு.” என்று அவர் பங்கிற்கு நிலாவுக்கு ஆதரவு கரம் தூக்கினார்.
“ஆத்தாடி ஆத்தா. நானும் பாத்தாலும் பாத்தேன், இந்த வூட்டுக்காரக மாதிரி ரவுச நான் பார்த்ததில்லைத்தா. புள்ளையாம்லாம் புள்ள. அவ சமைஞ்சிட்டா, அத மனசுல வச்சுக்கோங்க. இன்னமும் இடுப்புல தூக்கி சாப்பாடு ஊட்டாம இருந்தா சரி" என்று கேலியாய் சொல்லிவிட்டு நிலாவை தேடி சென்றாள் துளசி.
“பாத்துடி, ரொம்ப கோணிக்காத, அப்புறம் வாய் அப்படியே கோணிக்கப் போது" என்று சொல்லிய செல்வி, கதிரிடம், “என்னல இது? எத்தன தடம் சொல்லிருக்கேன். இப்படி ராத்திரி நேரம் தலைக்கு தண்ணி ஊத்தாதன்னு" என்று சொல்லியப்படி தன் முந்தானையால் தன் தம்பியின் ஈரத்தலையை துடைத்து விட்டார்.
அதில் ஒரு நொடி அக்கா அன்னையாகியிருக்க, அக்காவையே விழி எடுக்காது பார்த்தான்.
“ம் என்னைப் பாத்ததும் போதும். அவ சரியாகிட்டாளா? ஒன்னும் பிரச்சன இல்லையே” என்று கேட்டான் கதிர்.
“ஆ..ங் இப்போ பரவால்லடா. அது தனியாவே படுத்து பழக்கம் இல்லையா. என்னத்தேன் அவ ஆத்தா திட்டி அடிச்சாலும், ஒத்தப் புள்ளைன்னு, கைக்குள்ளையே வச்சி படுத்து பழகிட்டா. அதான் புள்ளைக்கு பயம்" என்றார் செல்வி.
“க்கும் இல்லன்னாலும், உன் அக்கா மவ எதுக்குமே பயப்பட மாட்டா பாரு" என்று சொல்லியவன் பின் அவனே, “அதேன் அவ பயப்படுவான்னு தெரியும்ல. அப்புறேம் நீயோ? இல்ல அவளையோ வந்து கூட படுக்க சொல்ல வேண்டியதுத்தேன. நான் என்ன, இங்கனையா இருக்கேன். அவுக இங்க வர மாட்டேன்னு அடம்பிடிக்க" என்றவனுக்கு, இப்போது கூட தாமரை ஒதுங்கி நிற்பது அத்தனை ஆதங்கமாய் இருந்தது.
“அது கண்ட தண்ணி ஊத்துன அண்ணிக்கு, மாமா அடிச்சு கூட்டிட்டு போனாக இல்ல, அப்போ இருந்து ரெண்டு பேருக்கும் ஏதோ உரசல் போல, அதேன் அக்காவும், வெள்ளன வந்து பார்த்து கொடுத்துட்டு போயிடுறா” என்றார் செல்வி.
“எல்லாம் அந்த பாண்டி பயலாள” என்று தனக்குள்ளே சொல்லியவனுக்கு, அத்தனைக் கோவம் வந்தது.
“சரி நீயாச்சும் அவெ கூட படுத்துக்க வேண்டியது தான?” என்ற கதிருக்கு, நிலாவின் பயம் மட்டுமே அப்போது மிகப்பெரிய பிரச்சனையாய் இருந்தது.
“அதத்தேன் இனி பண்னனும்" என்று செல்வி சொல்ல, இங்கே கதிரோ மீண்டும் ஒரு முறை அந்த ஓலை இடைவெளியின் வழியே உள்ளே பார்த்தான். நிலா தெரியவில்லை. ஆனால் சிறு பெண், கை, கால்களை குறுக்கி படுத்திருப்பது மட்டும் தெரிந்தது.
“சரிக்கா. நீ பாரு” என்று சொல்லியவன் அங்கிருந்து நகர, “என்னல? மறுபடியும் ரைஸ்மில் போறீயா?” என்றார் செல்வி.
“ஆ..ங் இல்லக்கா, நாளைக்கு வெள்ளன எந்திரிச்சுத்தான் போனும். ஏதாச்சும்னா கூப்டு, இங்கனத்தான் இருப்பேன்" என்று சொல்லியப்படி அவன் தங்கும் வீட்டுக்கு சென்றான். ஏனோ உள்ளே செல்ல மனம் வரவில்லை.
சட்டென்று துளசி சொல்லிய, “அம்புட்டு அக்கறை இருந்தா, உங்க அக்கா மவளுக்கு நீங்க காவல் இருக்கிறது" என்ற வார்த்தைகள் நினைவுக்கு வந்தது. அதில் மீண்டும், அந்த குச்சிலைப் பார்த்தான். அதன் பின் என்ன நினைத்தானோ, அங்கிருந்த கயிற்று கட்டிலை எடுத்து வெளியில் போட்டவன், அப்படியே அதிலேயே படுத்துக் கொண்டான்.
மனமோ, “பொம்பள புள்ள கொஞ்சமாச்சும் தைரியமா இருக்க வேண்டாமா? இவ ஏன் இப்படி பயந்து சாவுறா?” என்று யோசித்தவனுக்கு இரவெல்லாம் நிலாவைப் பற்றிய சிந்தனைத்தான்.
காரணமேயின்றி, அந்த நிலாப்பெண் இவன் மனதை நிரப்பினாள்.
(அவ இன்னும் ஒரு வார்த்த பேசல. அதுக்குள்ளையே இப்படி? சரி அடுத்து என்னத்தான் நடக்கப் போதுன்னு அடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்னிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)
தென்றல் தீண்டுமா?
0 Comments
No comments yet.